மன்மதலீலை

Friday, September 3, 2010



கடவுளுக்கு தெரிந்திருக்கிறது
ஆடவரின் ஆணவமடக்க
சாட்டைகள் தேவையில்லை
சடைகளே போதுமென்பது

காமத்தை மெழுகாக்கி
ஊற்றினால் தானே
யாக்கைத் திரி செய்து
அதில் காதல் சுடரை
ஏற்ற முடிகிறது

இது ஏதெனத்
தெரிந்து கொள்வதில்
எத்துணை ஆர்வமும்
தேடலும் !

நிற,இன,மொழி பேதங்களைத்
தாண்டி யுகயுகமாய்
மனிதகுலத்தை சுண்டியிழுத்து
வசீகரிக்கிறது காமம்

வெறும் இனவிருத்திக்காய்
உருவானது
அழகழகாய் ஆட பல மாற்றி
வேடம் பல பூண்டு
ஒய்யாரமாய் நடை பயில்கிறது

சுரப்பிகளின் சூட்சுமமென
தெரிந்திடினும்
காளையரையும் பெண்டிரையும்
கட்டியாள்கிறது.

ஒவ்வொருவர் வாழ்விலும்
தென்றலாய் பூத்து
புயலாய் அடித்து
பதியன் போடுகிறது
அடுத்த தலைமுறைக்கான
விதைகளை.

ஒரு வேளை
காமத்தைத்தான் மனிதன்
நாகரிகத்தில் தொய்த்தெடுத்து
காதலென கொண்டாடுகிறானோ?

இருக்கலாம்... ஒரு வேளை
எதற்கும் என் காதலியிடம்
கேட்டுவிட்டுச் சொல்கிறேன் !

1 comment:

அப்பாதுரை said...

சுவையான வரிகள்

Post a Comment