திரைவிமர்சனங்களின் மீதான ஒரு விமர்சனம்

Thursday, June 30, 2011
எத்துறை சிறப்படையவும் அதன் நிலையினின்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும் விமர்சனம் இன்றியமையாதது. அவ்விமர்சனத்தின் தரமும் அதனை எழுதும் விமர்சகனின் பொறுப்புணர்வும் அத்துறையை மென்மேலும் வலுப்படுத்தும். நான் சரியாக ஒரு வருடத்திற்கு முன்னரே பதிவுலகினுள் காலடியெடுத்து வைத்தேன். எனது ஆர்வம் கவிதைகளில் மையம் கொண்டிருந்த போதிலும் அவ்வப்போது நான் மற்றவற்றையும் வாசித்ததுண்டு. அதில் பெரும்பான்மையாக நான் வாசித்திட முற்பட்டது சினிமா விமர்சனங்களெ. அது எனக்கு சினிமா எனும் கலைவடிவின் மீதிருந்த அதீதக் காதலால் வந்த உந்துதல். ஆனால் எனது கழிந்த வருட வாசிப்பனுபவத்தில், நான் வாசித்த நேர்த்தியான சினிமா விமர்சனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அரிதாக வாசிக்கக் கிடைத்த சில விமர்சனங்களை எழுதிய பதிவர்களின் வலைப்பூக்கள் பலரால் பார்க்கப் படாமலேயே விடுபட்டிருப்பது கவலை அளிப்பதாகவே இருந்தது.

ஒரு சினிமாவை உள்வாங்கிட அவகாசம் ஒரு தீவிர பார்வையாளனுக்கு அவசியம் தேவை. ஆனால் நான் கண்ட பல பதிவர்கள் முதல் ஆளாய் விமர்சனம் எழுதுவதில் காட்டிய தீவிரத்தையும் கவனத்தையும், எழுதப்படுகின்ற விமர்சனத்தின் உள்ளடக்கத்தில் நேர்த்தியைக் கொண்டுவருவதில் காட்டியதாகத் தெரியவில்லை. மற்ற எந்த கலைப் படைப்பை விடவும் சினிமாவுக்கே அதிக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஒரு நேர்த்தியான விமர்சனம் என்பது ஒருவர் கண்டு களித்த திரைப்படத்தின் மொத்தக் கதையையும் தமது சொந்த வார்த்தைகளால் சொல்வது அல்ல. அது கதை சொல்லலே. மாறாக அது விமர்சனமாகாது. சிலரோ தாங்கள் பார்த்த படைப்பில் தங்களைக் கவர்ந்த வசனங்களை தங்கள் விமர்சனப் பிரதிகளில்(!) நிரப்புகின்றனர். அது அப்பதிவை எழுதுகின்ற ஒரு தனி நபரின் ரசனையின் பேரிலான பகிர்வு. அதனையும் பலர் விமர்சனமாக கருதுகின்றனர்.

சினிமா என்பது ஒரு கலை வடிவம். கலை எந்த வடிவில் இருப்பினும் அதன் மையம் ஒரு கருத்தியலை முன்வைப்பதே[ சினிமாவில் சில வேளைகளில் அழகியல் பார்வையிலும், வடிவ ரீதியிலான சோதனை முயற்சிகளின் அடிப்படையிலும் அமைகையில் அப்படைப்பில் கருத்து இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை]. சொல்ல விழையும் கருத்தினை மையப்படுத்தியே அந்தந்த கலைவடிவிற்கு ஏற்றார் போல அதன் வடிவம் கட்டமைக்கப் படுகிறது. உதாரணமாக சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் (Visual Medium). எனவே ஒரு இயக்குனன் தான் சமூகத்தின் பார்வைக்கு வைத்திட விரும்பும் கருத்தினை ஒரு கதையின் வழியாக முன் வைக்கிறான். அக்கதையாடலை காட்சிகளாக முன் வைக்கிறான். அதற்கு திரைக்கதை ஒரு சட்டம்(Framework) போல உதவுகிறது. திரைமொழி தனித்துவமானது. அதன் கூறுகளை, தனித்துவத்தை, சிறப்பியல்புகளை புரிந்து கொள்ளாமலேயே பலர் விமர்சகனின் தொப்பிகளை தலையில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஒரு படைப்பாளன் ஒரு சினிமாவை எடுத்து முடிக்கும் வரையில் மட்டுமே அதன் மீது உரிமை கொண்டாடிட முடியும். அதனை முழுமை செய்து சமூகத்தின் பார்வைக்கு வைத்த கணத்திலிருந்து அந்த தனியுரிமையை இழக்கிறான்[ இதைத்தான் இலக்கியத்தில் ”Author is dead” எனும் கருத்தக்கத்தில் சொல்வார்கள்]. இப்போது அது எல்லொருக்கும் பொதுவான படைப்பாகிறது. அதனை விமர்சிக்கும் உரிமை அகலருக்கும் உள்ளது. இது எந்த கலைப் படப்பிற்கும் பொருந்துகின்ற பொது அம்சம்.

ஆனால் நாம் முன்வைக்கின்ற விமர்சனம் அதன் மையம் குறித்த அலசலாக, அதன் கருத்தியல் குறித்த விசாரணையாக இருத்தல் அவசியம். அதுவே அப்படைப்பை தரமான முறையில் ஆய்வு செய்து அதன் வாயிலாக வாசகருக்கு படைப்பினை ஒட்டிய சிலவற்றை முன்வைத்து, அவர்களும் அறிந்து கொள்ள உதவிடுவதாக அமையும்.

ஆனால் நான் வாசித்த 95%க்கும் அதிகமான விமர்சனங்களில் அந்த சினிமா முன்வைக்கிற கருத்தியல் அலசப்படவே இல்லை. ஏன் அவற்றை தொடக்கூட இல்லை. நான் வாசித்ததில் எனக்கு கவலை அளித்த விமர்சனங்களில் இன்றளவும் மனதில் இருப்பது யுத்தம் செய், நடுநிசி நாய்கள் போன்ற படங்களின் விமர்சனங்களே. சமீபத்தில் ஒரு நண்பரின் ’ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் விமர்சனமும் எனக்கு வருத்தமளிப்பதாகவே இருந்தது.

ஒரு பதிவர் யுத்தம் செய் படம் கொரியப் படங்களின் வாந்தி என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற சித்ரவதைக் காட்சிகளை,இயக்குனர் மிஷ்கின், பல கொரிய சினிமாக்களின் காட்சிகளைப் பார்த்து அப்பட்டமாய் பிரதியெடுத்திருந்தார் என்பதே அவரது பதிவின் சாராமசம். அதற்கு நானளித்த பின்னூட்டத்தை இங்கு மீள்பதிவு செய்கின்றேன்

“நண்பா... ஒரு படத்தை பிரதி எடுப்பதற்கும் பாதிப்பில் உருவாக்குவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இப்படித்தான் முன்பு புதுப்பேட்டையை City of God என்றார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. இப்போது ஏதாவதொரு gangster சினிமாவை Godfather சாயலின்றி, அதன் நினைவு பார்வையாளனுக்கு வராதவாறு எடுக்க முடியுமா? சினிமாவில் ஒரு இயக்குனன் முன் வைக்கிற கருத்து எவ்வளவு முக்கியம் என்பதை விமர்சனம் எழுதுகிறவர்கள் 90% பேர் விவாதத்துக்கே எடுத்துக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளி சித்ரவதை காட்சியொன்றை தனது கற்பனா சக்தியை விரயம் செய்து எடுக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு இயக்குனனிடமும் அவனது படைப்பிடமும் அதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

சொல்கிறேன் என்று வருத்தம் வேண்டாம். நானும் கவனித்திருக்கிறேன். விமர்சனம் எழுதுகிற பலர் இப்படம் இந்த மொழி படத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்டது என சொல்லும் போது, அதன் மூலமாக தாங்கள் இத்தகைய அயல் சினிமாக்களை பார்க்கும் அளவிற்கு ரசனை அதிகமுள்ளவர்கள் என பறைசாற்றிக் கொள்வதான தொனியிலேயே எழுதுவதாக தோன்றுகிறது. தங்களின் மனம் நோக சொல்லியிருந்தால் வருந்துகிறேன்.”

யுத்தம் செய் படைப்பின் மையமாக நீங்கள் எதனை நினைக்கிறீர்கள்? அதனை எவ்வாறு அணுகுகிறீர்கள்? அது இன்னுமொரு Thriller சினிமா என்றா?! அக்கதையின் வாயிலாக அப்படைப்பு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. பணம் கொழுத்த மேட்டுக்குடியினர், தமது வக்கிரத்திற்குத் -அப்பாவியாக,கொட்டக் கொட்டக் குனிந்து கொண்டிருக்கும், அதீத அறிவு வாய்க்கப் பெற்ற- நடுத்தர வர்க்கத்தினரை இரையாகின்றதைப் பதிவு செய்கின்றது. அதோடு நில்லாமல் ஒரு வேளை குனிந்து கொண்டுருப்பவர்கள் நிமிர்ந்தால், நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டு ஓடும் அவர்கள் நின்று திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறது. அதுவே அப்படைப்பின் அடிநாதம். அதனைப் பிரதிநிதிப்படுத்தும் விதமாக, இயக்குனர் ஒரு மருத்துவரின் குடும்பத்தின் கதையினை, அவர்கள் அனுபவித்த கொடுந்துயரை, அதனால் வெகுண்டு அந்த சாதுக்கள் மிரள்வதையும் அதனை மனித விலங்குகள் மலிந்த இந்நகரக் காடு கொள்ளாததையும் முன்வைக்கின்றார்.

இங்கு நான் இப்படத்தை ஒரு உதாரணத்திற்கே எடுத்துக் காட்டியுள்ளேன்.இது போல எண்ணற்ற எடுத்துக்கட்டுக்களை என்னால் சுட்ட முடியும். சிந்தனை செய்வோம். வரும் காலங்களில் அர்த்தமுள்ள விமர்சன உரங்கள் விழுந்து நமது ரசனை நிலங்கள் பண்பட்டும்.


குறிப்பு : இப்பதிவின் நோக்கம் எந்த தனி மனிதரையும் புண்படுத்துவதற்காக அல்ல. மாறாக நமது பார்வை ஆழமாக வேண்டும், விசாலப்பட வேண்டுமென்ற ஒரு ஆவலின் விழைவே.

சமன் விதி

Sunday, June 26, 2011பிடிகள் தேடி கைகளும்
ஆதாரங்கள் தேடி கால்களும்
அலையும்
உயிர்வளிக்காய் பிதற்றும்
நுரையீரல்கள்...
வெள்ளி மறைந்து
நாளை குறித்த ஐயங்கள்
முளைக்கையில்
எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி
தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும்.
பெருவேதனைக்குப் பின்னே
பிரசவித்த மகவு கண்டு
வலி மறந்து
புன்முறுவல் பூப்பாள்
சில நொடிகளுக்கு
முன் பிறந்த அன்னை.

உண்மையான நான்

Sunday, June 19, 2011தினமும் உடை மாற்றிடும்
துணிக்கடை பொம்மை போல
வாழ்க்கை அன்றாடம் எனக்கு
முகங்களை மாட்டி விடுகிறது
எனது அனுமதியின்றி
சில நேரம் அழகாயும்
பல சமயம் விகாரமாயும் முகங்கள்.
ஒவ்வொரு மனதிலும்
ஒவ்வொரு கோட்டோவியமாய்
படிகின்றதென் சுயம்.
இதில் எது உண்மயான நான்?

கணமேனும்

Wednesday, June 15, 2011குழந்தைகள் பற்றிய
எந்த கவிதையையும்
நினைக்கையிலும் வாசிக்கையிலும்
வரிகளினூடே திரிகின்றனர்
எண்ணற்ற குழந்தைகள்.
நமது குழந்தையோ
நண்பரின் குழந்தையோ
எதிர் வீட்டுச் சிறுமியோ
பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ...
நினைவுகளில் புதையுண்டு
கனவுகளில் பிறப்பெடுக்கும்
தொலைந்த நம் பால்யமோ...
அலங்காரங்கள் அவசியப்படாத
எந்த குழந்தையைப் பற்றிய
கவிதையையும் சுகிக்கையிலும்
எழுதுகிற நானும்
வாசிக்கிற நாமும்
மீண்டும் மழலைகளாகிறோம்
கணமேனும்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(12-06-11)
இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றி.

மதராசப் பட்டிணம்

Saturday, June 11, 2011ஒரு சராசரி தமிழனின் கனவு மூட்டைக்குள் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொன் முட்டை. கனவுகள் பலவிதம். திரை நட்சத்திரமாக வேண்டுமெனவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலொச்சி லட்சங்களில் சம்பாதிக்கும் ஆசைகளுடனும் ஒரு கூட்டம் ஒரு புறம். அன்றாட வாழ்வின் தேவைகளை இப்பெருநகருள் பூர்த்தி செய்து கொள்ள திண்டாடும் ஒரு பெருங்கூட்டம், மறுபுறம். உயர் நடுத்தர நண்பனொருவனின் அழைப்பின் பேரில் பல ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு வந்துள்ளேன்.


பேருந்து நிறுத்தங்களில் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு இளைஞனின் மனோநிலையுடன் இருக்கும் போது, காரில் பயண்ம் செய்வதென்பது சற்று தர்மசங்கடமான தருணமாகவே எனக்கு இருந்தது. பின் மாலைப் பொழுதுகளில் தோழனுடன் வெளியே செல்கையில், தெருவெல்லாம் நிறைந்திருக்கின்றன முகங்கள். கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்திடும் முகங்கள். பணிச்சுமை மூடை மூடையாய் ஏற்றி வைத்த அசதி படர்ந்த முகத்துடன் எண்ணற்ற ஆத்துமாக்கள். சொகுசு வாகனத்தின் வெளியே இருப்பவனின் மனோநிலையில் இருந்து கொண்டு குளிரும் வாகனத்தின் உள்ளே கசியும் இசையினூடே அமர்ந்தபடி அவனயே பார்ப்பது மிகவும் இக்கட்டான சூழல் கொண்ட ஒரு அனுபவமாக இருந்தது.

காசு வைத்திருப்பவனுக்கு மட்டுமே ஆனந்தம் அருளும் மெட்ரோ நகரங்களுக்கு சென்னை ஒன்றும் விதிவிலக்கல்ல. வயிற்றின் பசி கண்களில் தெரியும் ஆத்மாக்கள் வாழும் இதே நிலத்தில், நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் வலியச் சென்று சிக்கி அதன் அத்தனை பரிமாணங்களையும் ருசித்திடத் துடிக்கும் ஆத்மாக்களும் வாழ்கின்றனர். கடக்கின்ற யுவதிகளில் பெரும்பான்மையோர் அயற்சியால் தளர்ந்த நடையுடன் யாருடனோ அலைபேசியில் கதைத்தபடி. மனிதர்கள் (கிட்டத்தட்ட) அனைவருமே யந்திரர் போல நடமாடுகின்றனர். மனிதமும், சக மனித வாஞ்சையும் தளும்பும் முகங்கள் கிடைத்தற்கரியவை இந்நகரத்தில். பார்வைகள் இரண்டு விதம். ஒன்று ஏக்கப் பார்வை. இதனைச் பெரும்பான்மையாய் பார்க்கலாம். மற்றது பெருமிதப் பார்வை. இப்பார்வையைச் சுமக்கும் முகங்களில் கொஞ்சம் கூட தெரிவதில்லை, அவர்கள் அப்பெருமிதத்தை தங்கள் நிம்மதியை அடகு வைத்தே அடைந்தனர் எனும் உண்மையின் நிழல். ஒரு வேளை அவர்களே அதனை மறக்க முயல்கின்றனரோ?

அண்ணா சாலையின் உயரமான வியாபார மையங்களை கடக்கிறது எங்கள் வாகனம். ”நண்பா, எக்ஸ்பிரஸ் அவென்யு போயிருக்கியா?” என தோழனின் குரல். இல்லை என நான் தலையை இடமும் வலமும் அசைக்க, சொன்னான், “ நாளைக்குப் போகலாண்டா”... சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தின் ஒரு வசனத்தை அனிச்சையாய் முணுமுணுத்தது உதடுகள்... “என்ன வாழ்க்கடா இது?!”

அவனது அன்றாடம்

Friday, June 10, 2011ஒரே உடுப்பு
ஒரு அழுக்கு மூட்டை
இவனை தரிசிக்காமல்
கடவுளைப் பார்ப்பது இயலாதது.
உண்டு பார்த்தாரில்லை
கொஞ்சம் தேநீர்
சில விள்ளல் பிரசாதம்
பணமிருந்தால் மாலையில் கஞ்சா
அல்லது பீடி
பிரகாரம் நோக்கி மறந்தும்
திரும்பியதில்லை விழிகள்.
ஆட்கள் கடக்கையில் ’சாமி’என்பான்.
அதிக சில்லரை தருபவரிடம் சிரிப்பான்
நிகோடின் பற்கள் தெரிய.

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

Tuesday, June 7, 2011
அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள
உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை
வெண்புகை குடை விரித்த
மலைச் சிகரத்தினுச்சியில்
காற்றில் தவழ்ந்த பெயரோ
நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி
அடர் பச்சை ஊசியிலை மரங்களின்
இலைகளின் கைகுலுக்கி
நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது.
மலையின் மடியில் வீசிய
நெற்பயிரின் தலை கோதி
நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி
கரைகின்றது காற்றில்
இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட
இனியெனக்குச் சொந்தமில்லை.
அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்பட்டது.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.06.11)
இணைய தளத்திற்கு நன்றி

பரிமாற்றங்களின் முடிவிலியில்

Saturday, June 4, 2011

பேரண்டத்தின் பெருமௌனத்தினூடே
மோதிக் கொண்டோம் நாமிருவரும்
மோதலின் மீட்சியில்
உன்னுடையவைகள் எல்லாம்
என்னுடையவைகளாகவும்
எனதுடையவைகளெல்லாம்
உனதுடையவைகளாகவும்...
உனது பிடிவாதம் எனதானது
எனது கர்வம் உனதானது
உனது கருணை எனதானது
எனது பொறுமை உனதானது
உனது கோபம் எனதானது
எனது காமம் உனதானது
உனது காதல் எனதானது
எனது வாஞ்சை உனதானது
பரிமாற்றங்களின் முடிவிலியில்
நீ சூரியனானாய்
நான் சந்திரனானேன்.