என் பார்வையில் திரை விமர்சன வடிவம்

Saturday, July 13, 2013









என் பார்வையில் திரை விமர்சன வடிவம்

நாள்தோறும் நமக்கு வாசிக்கக் கிடைக்கும் இணையப் படைப்புகளில் எப்பொதும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரு விடயம் திரைப்பட விமர்சனங்கள். விமர்சனங்கள் என எழுதப்படும் பல பிரதிகள் திரைப்படத்தின் கதையை வார்த்தையால் மறுபிரதியெடுக்கும் வேலையையே செய்கின்றன. படைப்பைக் குறித்த ஆழமான பார்வை அவற்றில் இருப்பது மிக அரிதான ஒன்று. 

இதற்கு ஒரு காரணம் வாசக மனநிலையாகக் கூட இருக்கலாம். நம்மில் பெரும்பாலனோர் வெளியான புதிய திரைப்பமொன்றை குறித்த பிரதிகளையே வாசிக்க முற்படுகிறோம். அதன் முழு நோக்கமும் கதையைத் தெரிந்து கொண்டு, அப்படைப்பை பார்க்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கும் பொருட்டே வாசிக்கப் படுகிறது. அதனால் ஒரு வேளை எழுதுபவரும் அந்தத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்ற விதத்தில் தனது பிரதியை படைக்கிறார்.

என் வாசிப்பில் பல சிறந்த படைப்புகளை கருத்தூன்றி அலசி, எழுதப்பட்ட அற்புதமான விமர்சனங்களையும் திரைப்பட அறிமுகக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவ்வலைப் பக்கங்களை மிகக் குறைந்த வாசகரே வாசிக்கின்றனர். மசாலா கலந்து எழுதப்படும் சனரஞ்சக எழுத்துக்களே அதிகம் விரும்பப்படுகின்றன.   

பொதுவாக நான் வாசித்த வரையிலும் குறும்பட மற்றும் சினிமா
விமர்சனங்களுக்கு என்று ஒரு விமர்சன வடிவம் உள்ளதை உணர்கிறேன். அவைகள் முறையே

01.   குறும்பட/திரைப்படத்தின் கதையை விவரித்தல்; அதன் வழியாக
வாசகர்களுக்கு அப்படைப்பை பார்த்ததை ஒத்த ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தல்.

02. அக்கதை ஒரு காட்சி ஊடகத்தின் வழியே சொல்லப்பட்டுள்ளதால் அதன் காட்சி வடிவமைப்பு, பிண்ணனி இசையின் பங்கு, காமிரா கோணங்கள், கதாப்பாத்திர உருவாக்கம் மற்றும் அதன் வழியாக இயக்குனரின் கதையாடல் என்பன போன்ற விடயங்களை விவரித்தல்.

03. பொதுப்பார்வையில் கடந்து போக வாய்ப்பிருக்கக்கூடிய காட்சிகளின்
நுண்மைகளை வாசகருக்கு எடுத்துக்காட்டி அதன் வழியே திரைப்படங்கள்
பார்ப்பது குறித்தான சில புரிதலகளை உருவாக்கல்.

04. கதையோட்டத்தில் இடபெற்றிருக்கும் கருத்தியலை தர்க்க ரீதியாகவோ,
தத்துவ ரீதியிலோ, அழகியல் பார்வை வழியோ, குறிப்பிட்ட- படைப்பை பொறுத்த வரையில் பொருந்தி வரக்கூடிய-  இன்னம் ஏனைய வழிகளிலோ அப்படைப்பின் வழி இயக்குனர் இந்த சமூகத்தோடு நிகழ்த்தும் உரையாடலை எடுத்துக் காட்டி அப்படைப்பை முறையாக நோக்கமானது வாசிக்கும் வாசகர்களை கண்டடைவதற்கான சாத்தியங்களை உருவாக்குதல்.

05. அந்த படைப்பு குறித்த ஏனைய தகவல்கள், பின்புலங்கள், இயக்குனர்
குறித்த குறிப்புகள், அவரது பிற படைப்பை குறித்த தகவல்கள் என்பன போன்ற கட்டுரையின் மையமாக எடுத்துக் கொள்ளப்பட்ட படைப்பின் இதர தகவல்களை தருதல்

06. இவைகளின் வழியே ஒரு கலைப் படைப்பை அதன் சகல பரிமாணங்களுடன் (இயன்ற அளவிற்கு) புரிந்து கொண்டு அதன் முழுமையான அனுபவத்தை வாசகர் பெற்று கொள்ள வகை செய்தல்.



விடியலுக்கு தயாராவோம்

Saturday, July 6, 2013





 எந்த ஒரு கலையும், கலைப் படைப்பும்- அதன் வழியாக கலைஞனும்- நிலைக்க அதனை ரசிப்பவர்கள் முக்கியமான காரண கர்த்தாவாகின்றனர். கலையின் சிரஞ்சீவிதம் சாத்தியப்பட அக்கலையை முறையாய் புரிந்து கொள்வதே முதற் படியாகிறது. புதிதாய் தோன்றும் எக்கலைக்கும் கவர்ச்சி அதிகமே. அது புதிது எனும் கவர்ச்சியே அது. புதிதாய் இருக்கின்ற யாதொன்றின் மீதும் ஈர்ப்பு அதிகமாவது இயல்பே. ஆனால் அக்கலை நம்மிடையே நீடித்து நிலைத்து நம் வாழ்வியலோடு கலக்க அத்துவக்கக் கவர்ச்சி மட்டுமே போதுமானாதாய் இருப்பதில்லை. முறையாகப் புரிந்து கொள்ளப்படாத யாதொரு கலையும் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்படும்.

இவ்விடத்தில் நான் முறையாக புரிந்து கொள்ளுதல் எனும் பதத்தை பயன்படுத்தியிருப்பது காரணத்தோடுத்தான். ஒரு கலையோ, கலை வடிவமோ அழிவது வருத்ததிற்கு உரியதே. எனினும் அதைக் காட்டிலும் அக்கலை தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது இன்னும் அபாயகரமானது. அழிந்து போன ஒரு கலை ஒரு சமுதாயத்திற்கு இழப்பு தான். ஆனால் அதனைக் காட்டிலும் வீடியம் மிக்க அபாயகரமான எதிர்விழைவை அக்கலையை தவறாகப் புரிந்து கொள்வது உருவாக்கும். அது அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அதன் கலாச்சார, நாகரிக கருத்தாக்கங்களையும் விழுமியங்களையும் பாதிக்கக் கூடிய வல்லமை படைத்தது.

இப்படித்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் எனும் வாதத்தோடு மோசமான திரைப்படங்கள் நம்மிடையே உலா வருகின்றனவா அல்லது வேறு காரணங்கள் இதன் பிண்ணனியில் உள்ளதா? நல்ல சினிமாவின் வரவு , ரசிகனின் புரிதல் மற்றும் கலாரசனை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன? ஒரு நல்ல சினிமா ரசிகனின் புரிதலை ஆழப்படுத்தி அவனை மேன்மேலும்
பண்படுத்துகிறதா அல்லது நல்ல சினிமா என்பது விசாலப்பட்ட பார்வையுடைய , அறிவார்ந்த , அதிரசனை கொண்ட  ஒரு ரசிகக் குழுவினிடையே மட்டுமே தன் இருப்பிற்கான சாத்தியப்பாட்டை கண்டு கொள்ள முடிகிறதா?

மேற்கண்ட இரு வகையான சிந்தனை ஓட்டங்களில் எது உண்மையானதென ஆரய்ந்தால் ஒரு வகையில் இரண்டுமே சரிதான், அதற்கேயுண்டான் சூழல் கனிகிறபோது. சினிமா ஒரு கலை வடிவம். கொழுதுபோக்கும் கூட. இதனை ஒட்டியே நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். முதலாலித்துவ பார்வையில் இது ஒரு லாமம் ஈட்டிட்ட சாத்தியங்கள் நிறைந்த இன்னுமொரு தொழிற்துறை.

ஒரு கலையானது எப்போது ஒரு தொழிற்துறையாய் பரிணமிக்கிறதோ அப்போதே அது தனது கலாப்பூட்வமான இயல்புகளை முழுமையாய் தக்க வைத்துக் கொள்வது இயலாத ஒன்றாகிறது. அது சமரசங்களுக்கு உட்படுகிறது. அதன் மற்ற அம்சங்கள் ஓரங்கட்டப்பட்டு பொழுதுபோக்கு எனும் ஒற்றை அம்சமெ பிராதானப்படுத்தப்படுகிறது. ஏனெனில் வியாபாரச் சந்தைக்கு வரும் கலை பொழுது போக்குக்காகவே பெரும்பான்மையானோர்களால் நுகரப்படுகிறது.

ஒரு சிறந்த வியாபாரி சமுதாயத்தில் நிலவுகிற தேவையை பூர்த்தி செய்கின்ற விதத்தில் மட்டும் வர்த்தகம் செய்ய மாட்டான். மாறாக இல்லாத ஒரு தேவையை தனது தந்திரத்தால் உருவாக்கம் செய்து அதன் வாயிலாக ஒரு புதிய சந்தையை உண்டாக்கி பொருள் ஈட்டுவான். தொழில்மயமாகிப் போன சினிமாவிலும் இதுவே நடந்தேறுகிறது. இதுவே ரசிகர்களால் இவையிவையே ரசிக்கப்படும் என கற்பித்துக் கொண்ட உற்பத்திகளே நம்மிடையே அதிகமாய் கடை பரப்பப்படுகின்றன. இதற்கு வெகுசன ரசனை என ஒரு முத்திரையும் குத்தி விடுகின்றனர். உண்மையில் ஒரு உன்னதப் படைப்பானது முறையாக சேர்க்கப்படும் பொழுது அப்படைப்பு ரசிகனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் தூண்டு கோலாக அமையும். அதே வேளையில் இன்னொமொரு கோணத்தில் மேம்பட்ட ரசிப்புத் தன்மை கொண்ட ஒரு ரசிகர் கூட்டம் படைப்பை அடுத்த நிலைக்கு உந்தித் தள்ளி அதனை இன்னும் மேம்பட்டதொரு நிலையை அடைந்திட ஒரு ஆக்கப்பூர்வமான நிர்பந்தத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனிக்க தவற கூடாது. அறுபதுகளில் பிரான்சில் “புதிய அலை சினிமா (FERNCH NEW WAVE) அப்படித்தான் கருக்கொண்டு வளர்ந்தது.

நம்மிடையே தொன்றுதொட்டு பல கலைகள் இருந்து வருகின்றன. ஓவியம், இசை, நாடகம், நடனம், நாடிப்புற கலைகள் இப்படி பல. பெரும்பாலும் இவை நம் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்து விட்டவை. மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியோடு கூடவே இக்கலைகளும் தம்மைப் புதுப்பித்த வன்ணம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுள்ளன. இன்றும் இவை ஒரு படைப்பாளியின் சிந்தனை மேம்பாட்டால். பார்வையாளனின் ரசனை வளர்ச்சியால் புதிய பரிமாணாங்களைக் கண்டு கொண்டு தான் இருக்கின்றன. பெரும்பாலான இக்கலைகளின் கலை வரலாறு நமக்கு தெரியாத அளவிற்கு அவை தொன்மையானவையாய் இருக்கின்றன.

ஒரு கலையின் வரலாறு நமக்கு அதன் ஆதிப் புள்ளியிலிருந்து தெரியுமென்றால் அது சினிமாவாக மட்டுமே இருக்க முடியும். அதன் பிறப்பிலிருந்து, அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் இன்று வரலாறு. ஆனால் வருந்தத்தக்க செய்தி நாம் சினிமாவை ஒரு கலையாக அங்கீகரிக்கத் தயங்குவது தான். இருப்பினும் இந்நிலைக்கு மக்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப் படவில்லை என்பதே உண்மை. பாடமே நடத்தாமல் கேள்வி கேட்டு, பதிலளிக்கத் திணறும் மாணவனைப் பார்த்து ,நீ முட்டாள்என் சொல்வது முறையல்லவே.

தற்கால சூழலில் நமக்கு கல்வியே கலைகளை அறிமுகம் செய்கிறது. இலகியத்தையும், இன்னும் பிற கலைகளையும் நமக்கு பள்ளிப் பருவத்திலேயே நமக்கு அறுமுகம் செய்திடும் பாடத்திட்டம், சினிமாவை பட்டும் புறக்கணிக்கிறது. இளைய தலைமுறையினர் வைதவறிப் போவதற்கு தலையாய காரணங்களுள் ஒன்றாக சுட்டப்படுவது சினிமா. எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து சொல்லி தரும் பெற்றோர் கூட முறையாக சினிமா குறித்த முறையான அறிமுகத்தை, புரிதலை குஅந்தைகளிடம் உருவாக்கிட முனைவதில்லை. பின்னர் வேறு வழிகளில் தவறான அறிமுகம் கிடைக்கப் பெற்று வழிதவறும் இளைய சமுதாயம் குறித்து புலம்பிப் பிரயோசனமில்லை. பெற்றோருக்கே இது குறித்து ஞானம் இல்லாத போது அவர்களையும் கடிந்து கொள்வதில் அர்த்தமில்லை.

நீண்ட நாட்களாகவே என்னை ஆட்கொண்ட சினிமா கலை குறித்து  இயன்ற அளவிற்கு உயிர்ப்போடு  எழுத வேண்டும் என்ற நீண்ட நா கனவினை நினைவாக்கிப் பார்க்கும் ஆசை இப்போது புறக்கணிக்கமுடியாத அளவிற்கு ஆக்கிரமித்துக் கொண்டு உந்துகிறது. நான் கற்றுக் கொண்ட சினிமா குறித்து அனுபவப் பாடங்களை வரும் நாட்களில் பகிர நினைத்துள்ளேன்.

புதையல்கள் எப்போதும் மனிதனைத் தேடுவதில்லை. மாறாக மனிதனே புதியலைத் தேடுகிறான். தேவையுள்ளவரே தேடுதலைத் துவக்க வேண்டும். தேடத் துவங்குவோம்.