துயிலா கைபேசி

Wednesday, January 2, 2013

அகால வேளைகளில்
நானுப்பிய குறுஞ்செய்திகள்
காத்துக் கிடக்கின்றன
உன்னருகே உறங்கா
உன் கைபேசியினுள்…
நிறைமாத கர்ப்பிணியின்
பேறுகாலப் பரபரப்பையொத்த
மனநிலையுடன் மஞ்சத்தில்
புரண்டபடி நான்.

யாருமற்ற ஒரு தனியிரவு
துணையில்லா கணங்களின்
வர்ணங்களை வரிந்து கொண்டு
மெல்லப் பரவத் துவங்குகிறது இரவு
அறை முழுமையும்
உறைந்த வெம்மையாய்
வெளியில் சிலுசிலுக்கும் குளிர்
யன்னலிடம் மன்றாடுகிறது
உள்ளே வர அனுமதி வேண்டி
மௌன மரத்தின் கால்கள் உலுப்பி
ஓசைப் பூக்களை உதிர்த்திட
பிரயத்தனப்படுகிறது வாத்திய இசையை
உமிழ்ந்திடும் குறுந்தகடு
தளர்ந்த உடல் நாற்காலியில் நிறைந்திட
தளராத பார்வையோ படர்கின்றது
அறை முழுவதும்
ஏழெழுபது முறையாக
படர்ந்த பார்வை படிகின்றது
ஓசையாய்ப் போன
கணப்பு அடுப்பில் கிளர்ந்து நெளியும்
தீயின் நிழலில்.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை  (23-11-12)
இணைய இதழுக்கு நன்றி.