சொல்லவியலாதது

Saturday, June 26, 2010எனக்கு அருகிலேயே நீயிருந்தும்
உன்னை சந்திக்கமுடியாத சூழலில்
ஏதோ சொல்லவியலா காரணத்தால்
தன் கூட்டை அண்டாத பறவையின்
நிம்மதியின்மையை ஒத்த ஒன்று
பற்றிக் கொள்ளும் இருதயத்தை
கூடவே வந்து சேரும்
ஈன்ற குட்டியை மறுகணமே பிரிந்திடும்
தாய் நாயின் வருத்தங்களை ஒத்ததொரு
வெறுமை.

மீட்சி

Wednesday, June 23, 2010பிரவாகமெடுக்கும் எனது
உணர்ச்ச்சித் துளிகளுக்கிடையே
நனைந்து விடாது சர்வ ஜாக்கிரதையாய்
என்னுள் வருகிறாய் என்னை மீட்டெடுக்க

எதனனின்று மீட்கப்போகிறாய் என்னை?

ஒரு வாழ்க்கையிலேயே
கோடி வாழ்க்கை வாழும் நான்
ஒன்றிலிருந்து மீண்டு என்னுமொன்றிற்கு

ஒவ்வொரு அந்தியிலும்
அடங்கும் ஆதவனின் பொற்கரங்கள்
என்னை உட்புகுந்த வாழ்வோடு அள்ளும்

மீட்டெடுக்க முயலாதே

உனக்கெங்கே புரியப்போகிறதென்
கற்பிதங்கள்
சில வேளைகளில்
எனக்கே புரியாத போது...

பதில்

Tuesday, June 22, 2010

புலால் உண்ணாத
புலன்கள் யாசித்தேன்
செத்துப்போ
என்றான் இறைவன்.

சமர்ப்பணம்

Saturday, June 19, 2010
கசையால் அடிக்கிறதென்னை காலம்
தன் நீட்சியால்

இருகை குவித்தள்ளிய குளத்துநீர்
விரலிடுக்கில் நழுவுதல் போல
கரைகிறதென் உயிர்
தேயும் ஊனுக்குள்ளே

கனவுகள் எல்லாம் தருகிறென்
மரணமே
ஆரத்தழுவியெனக்கு
ஒரு முத்தம் கொடு .

இப்போதெல்லாம்

Monday, June 14, 2010
என் கவிதைகள்
உன்னிலிருந்து தான்
ஜனித்துக் கொண்டிருந்தன.
இப்போதுன் மௌனத்தினின்றும்
அருகிலிருக்கும் தூரத்தினின்றும்
அனுபவித்துணராத உன் ஸ்பரிசங்களினின்றும்
நிச்சயிக்கப்பட்ட விடுபடல்களினின்றும்
முன்தயாரிப்புள்ள விலகல்களினின்றும்
மற்றவரறியா உன் தயக்கங்களினின்றும் ...

குழப்பம்

Friday, June 11, 2010

என்னை வெளியேறச் சொல்லும்
நம் சூழ்நிலைகளின் நிர்பந்தங்கள்
இருக்க சொல்லி யாசிக்கும்
உன் விழிகள்
என் முடிவுகளும் நிலைப்பாடுகளும்
இதில் எதை சார்திருத்தல் வேண்டும் ?

மழை ஓய்ந்தது

Saturday, June 5, 2010
ஸர்ப்பமொன்று பாலை மணலில்
ஊர்ந்து உழுத தடம் போல
கலைந்து கிடக்கிறது செந்நிற மேகம்
திட்டுத் திட்டாய்

பந்தயத்தில் கடைசியாய் வழிகின்ற
துளியை அந்தரத்திலேயே உறிஞ்சுகிறது
தூக்கணாங் குருவியொன்று

இலைகளுதிர்த்த மொட்டை மரமொன்று
பூத்து குலுங்குகிறது நீர்த்துளிகளால்
அவ்வப்போது சில பூக்களையுதிர்த்தபடி

புணர்தலுக்கு முந்தைய முத்தத்தையிடுகின்றது
சேற்றைச் சேரும் நீர்த்துளியொன்று
புணர்தலுக்கு பிந்தைய முத்தத்தையிடும்
நீரையுள்வாங்கிய சேறு .

அடுத்தது நானோ?

Wednesday, June 2, 2010

உனக்கு முன்னே எனக்கு அறிமுகமானது
உன் பெயர்தான் என்றேன்

கண்கள் கூர்தீட்டி உதடுகள் சுழித்து
அதன்பின் நான்தானே என்றாய்

இல்லை யில்லை உன் கூந்தற்கொடியேறிய
மல்லிகையின் மணமென்றேன்

கைகளுக்கிடையில் கன்ன மேடுகள்
தாங்கி பிறகாவது நானா என்றாய்

அப்பொது மில்லை உன்னை வெயில் வருடி
தரையில் வரைந்த நிழற்படமென்றேன்

பொய்ச் சோம்பல் முறித்து காதுமடல் வருடியபடி
கேட்கிறாய் ;பிறகாவது நானா?

ம்... பிறகு நீதான் என்றென்

கண்களால் ஆயுதம் செய்யும்
சூத்திரமறிந்த நீ புரியாதது போல
பிறகாவது நானாவெனச் சிணுங்கிய
ஒவ்வொரு முறையும் என்னை
இழக்கவாரம்பித்திருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.