தடயமின்றி

Sunday, October 14, 2012


ஊடலால் பிரியத்துடிக்கிற
தம்பதியராய் தண்டவாளங்கள் அருகருகே

கிடைத்த உலோகத் துண்டை
காந்தமாக்கும் ஆர்வத்தில் சேரிச் சிறுவன்

ஒற்றை தண்டவாளத்தில்
நாற்காலியிலமரும் முதலாளியாய்
அமர்கிறது உலோகத் துண்டு
காலடியில் எடுபிடி போல் சிறுவனின்
ஆவலையும் காத்திருப்பையும்
அருகருகே அமர்த்திக் கொண்டு

தூரத்துச் சீழ்க்கையொலியில்
பரபரக்கும் பிஞ்சு மனதின் ஏக்கமறியாது
அனைத்தின் மீதும் ஏறியிறங்கிக்
கடக்கிறது ஓர் புகைவண்டி.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(12-10-12)
மின்னிதழுக்கு நன்றி.
பட உதவி: http://www.thehindu.com/multimedia/dynamic/01114/SA15_TRAIN_GID534V_1114343e.jpg

ஒளியால் செய்த சிறை

Monday, October 8, 2012
ஒளியின் விளிம்பில்
தொக்கி நிற்கிறது இருள்
பரவிட தயார் நிலையில்

காரிருள் வென்று என்
பார்வையைப் பறிபதற்கு முன்னரே
என் பிரியங்களை பொறுக்கிச் சேர்த்திட
எத்தனித்து பரபரக்கிறேன்.

எனது அவசரங்கள் ஏதுமே
புரியாதது போல் இயல்பாக
இருக்கிறாய் நீ

நினைவுகளின் மீது படரும் கருமையை
தூசென நினைத்து ஊதிட விழைகிறேன்
புன்னகை சிந்தியபடி
வெறும் சாட்சியாய் அருகே நீ

இறுதியாய் என்னையும்
கருமையில் கரையும் என் பிரியங்களையும்
ஒரு புகைப்படத்தினுள் அடைக்கிறாய்
ஒற்றை மின்னல் மின்னிய இடைவேளையில்.  

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(08-10-12)
இணைய இதழுக்கு நன்றி.