கண்ணால் காண்பது

Friday, July 30, 2010



தடாகத்து
நீரலைகளில்
மிதந்தபடி பால் நிலா

உயிரினமே வாழ
வழியில்லை நிலவில்
இப்போதைக்கு
ஆய்ந்து சொல்கிறார்கள்

மிதந்து அசைவாடும்
நிலவிற்குள்
துள்ளி விளையாடுகின்றன
வெள்ளி மீன்கள்

அமர்வு

Wednesday, July 28, 2010



உன்னை யாரென்றே நீ
எதிரிருக்கையில் உன் தாயோடு
அமரும் வரை தெரியாது
இப்போதும்...

முன்பின் பரிச்சயமில்லை
ஆயினும் விழிகள்
பரிச்சயமாகிக் கொள்கின்றன

சன்னலோர வேடிக்கைகளின்
ஊடே யதார்த்தமாய்
பார்ப்பது போல் உனைத்
தேடும் கண்கள்

நீயோ தாயின் பின்னாலிருந்து
உன் பார்வையை மட்டும்
படரவிடுகிறாய்

ஒருவர் செய்வதையே மற்றவரும்
செய்து கவனத்தைக்
கவர்வதிலேயே குறியாக

அருகிலிருக்கும் பெரியவரொருவர்
எல்லாம் வயசு என்பது போல்
குறுநகை புரிகிறார்
நம்மைப் பார்த்து

நீ என் தோழியுமில்லை
என்னவளுமில்லை
உனக்கும் நான் அப்படியே
இருப்பினும் எனக்கு நீ
பரிச்சயம் இப்போது

வார்த்தை பேசாது
நம் அமர்வுக்கு
வெறும் சாட்சிகளாய்
மட்டுமிருந்தோம்
இறுதிவரை.

அழியாத கோலங்கள்

Tuesday, July 27, 2010



சதை போதையில்
சிக்கிச் சிதைகின்றன
சில இச்சை இரவுகள்

நோய் வருத்திய
உடலசதியில்
மயங்கிக் கரைகின்றன
சில

கடந்த கால
நினைவுகளை அசைபோட
இம்சிக்கின்றன சில
தூண்டில் இரவுகள்

வரும் நாட்களைக் குறித்த
கேள்விக் கணைகள்
நெஞ்சில் தைக்க
விட்டத்தை வெறித்தபடி துயிலாது
துடிக்கின்றன பல இரவுகள்


அழியாத கோலங்களாய்
இருள் படர்ந்த இரவுகளோ
என்றும் போல் இயல்பாய்
எதிர்நோக்குகின்றன விடியல்களை.

உண்பவனே உணவாக

Sunday, July 25, 2010



இருள் போர்த்திய அறைக்குள்
தீக்குச்சி உரச
பரவியிருந்த இருளை
உண்டு சிரித்தது தீச்சுடர்
கணப்பொழுதில்
இருள் தீச்சுடரை
விழுங்கிச் செரித்து
மௌனமாய் பரவியது
மீண்டும்
ஒளியென்பது இருளுக்கு இடையே
விடப்படும் இடைவேளை.

சிறகில்லா தேவதைகள்

Friday, July 23, 2010



வியாபாரம் அற்றுப்போன
நெருக்கடி நேரத்திலும்
அநாதைச் சிறுமியின்
பசியாற்றும்
பழக்காரக் கிழவி

துணைவியில்லா
தனிமை தருணங்களில்
அன்பாய் அன்னமிடும்
அடுத்த வீட்டுப் பெண்

பேருந்தில்
தன்னை உரசித் தொலைத்திருப்பினும்
அவன் தவறி விழுந்து
உயிர் மாய்கையில்
கண் கலங்கும்
பணி செல்லும் யுவதி

வசைபாடும் மாமியார்
நலமடைய விரதமிருக்கும்
மாட்டுப் பெண்கள்

இறந்து விட்ட
கணவனையே இன்னும்
நினைத்து பத்தினியாய் வாழும்
பல்லாயிரம் பெண்டிர்

வையத்தில்
முதுகில் சிறகுகள்
முளைக்காத தேவதைகள்
இன்றும் வாழ்ந்தபடி
பல இடங்களில்.

நிலையாக

Wednesday, July 21, 2010



மரங்களினின்று இலைகள் உதிர்ந்து
பறைசாற்றுகின்றன
காலங்கள் மாறியதை

அருகிருந்த காற்றில் கலந்திருந்த
உன் வசீகரிக்கும் வாசனை
கரைந்தே போய்விட்டது முற்றிலுமாய்

நான் அமர்ந்திருக்கும் இருக்கையின்
கைப்பிடிகளை இறுகப் பற்றியபடி
பார்த்த வண்ணமிருக்கிறேன்
என் எதிர் இருக்கையை
நீ இடம் பெயர்ந்து
சென்ற பின்பும்.

சிறகுகள் விற்பவன்

Sunday, July 18, 2010



குலமரம் செழிக்க நீர்தேடும்
வேராய் அந்நிய தேசம் படர்ந்தேன்
விலை பேசப்பட்டன என் சிறகுகள்
இப்போது
அயலான் என் சிறகுகளால்
காது குடைந்து சுகிக்கிறான்
அழகிய சீமாட்டிகள் தத்தமது
தொப்பிகளை அலங்கரித்துக் கொள்கின்றனர்
இறகுகள் ஒவ்வொன்றாய் பறிபோக
சிறகுகள் இழந்தேன்
கிடைத்த கூலியில் உயரமான மரங்களில்
கூடுகளமைத்தேன் என் குலப் பறவைகள்
களித்திருக்க
தூர தேசத்தில் சிறகுகளிழந்த நான்
மடிந்து போவேன் ஒரு நாள்
எம் கொடிகள் இங்கே தழைக்க.

மென்விரல் கரைகள்

Friday, July 16, 2010



காற்றினில் மிதந்தாடும்
காகிதங்கள் பறக்காதிருக்க
இரு முனைகளையும்
இறுகப் பிடிக்கின்றாய் உன்
சுண்டு விரலாலும்
சுட்டு விரலாலும்
உன் மென்விரல் கரைகளுக்கு
மத்தியில் அசைவாடுகின்றன இக்கணத்தில்
என் கவிதைகளும்,புனைவுகளும்
கூடவே நானும்.

அகப்பிறப்பு

Wednesday, July 14, 2010



கோவிலுக்குள் சென்று
கடமையெனக் கருதி
மந்திரங்கள் ஓதி
பிரகாரம் சுற்றி
வேண்டுதல் நிறைவேற்றும்
பொழுதெல்லாம் ஏதும்
தெரியவில்லை வித்தியாசமாய்

தான் சுயம் துறந்து
யாசித்துப் பெற்ற ஒரு கவளத்தில்
பாதியை தெருவோர நாய்க்கு
பங்கிட்டுக் கொடுத்த யாசகர்
மீது பார்வை படிந்தது தற்செயலாய்

தூரத்து கருவறையில்
சுடர்ந்த ஒளிக்கவிதை
காற்றினில் அசைவாடியது

அதன் அன்பெனும் சோதி
இளகிக் கிடந்த
இதயப் பள்ளத்தை
நிறைக்கத் தொடங்கியது

முதன் முறையாய் விழித்தது அகம்

எனக்குள் முழுதாய் நான்
மீண்டும் பிறந்தேன்.

தொடர் பாடல்

Monday, July 12, 2010



முடிவில்லததொரு தொடர்பாடலைப்
பாடியபடி பிறை நிலாக்களை
நறுக்கி நறுக்கி நீயுன்
விரல்களின் உயரத்தைக் குறைத்தபடியிருக்கிறாய்
நானோ ஒரு மாளிகையின் பலகணியில்
பழகிய உதடுகளுடனும் பழகாத முத்தங்களுடனும்
நீ வருவாயென எதிர்பார்திருக்கும்
ஒவ்வொரு காத்திருப்பையும் சட்டமிட்டு என் மாளிகையின்
சுவர்களில் தொங்கவிட்டபடியிருக்கிறேன்
தூரத்தில் தெரியும் உன் நிழலுருவை வருந்தியழைக்கும்
என் அழைப்புகள்
தவழ்ந்து மேகமாகி உன் மேலே நிலைக்கின்றன
நீயோ மழையாய்ப் பொழியும் என் விண்ணப்பங்களில்
நனையாது கால்களைச் சுற்றிக் குழையும் செல்ல
நாயொன்றை வாரியணைத்து முத்தமிடுகிறாய்.
பகலும் இரவும், இரவும் பகலும் கடந்திட்ட பின்னரும்
சுவர்களில் மோதி மோதி எதிரொலிக்கிறது
உன்னுடைய தொடர் பாடல்.

பிரசவ வலி

Saturday, July 10, 2010



மண்ணை நனைத்து ஓய்ந்து விட்ட
மழையின் தூரல் மிச்சமிருந்த
நடுநிசி

குளிர் பரிசைக்
கொண்டாடியபடி ஊரெ
கனவுகளின் தேசத்தில்

நித்திரையுடன் ஊடல் கொண்டு
நான் மட்டும் மஞ்சத்தில்
புரண்ட வண்ணம்
மனச்சமவெளியில்
தெரித்து விழுந்த
வார்த்தை துணுக்குகளை
சேகரித்தபடி

வார்த்தை நரம்பெடுத்துப்
பின்னிய சிந்தனை வலையில்
சிக்கித் தவித்தது
ஞாபக சிலந்தி

பிரசவிக்க வேண்டிய அவசரம்

இமை விரித்து
வெளிச்சம் செய்து
வேகவேகமாய் சரணடைந்தேன்
காகிதப் படுக்கையில்

பேனா மருத்துவர்
பிரசவம் பார்க்க கையூட்டு
கேட்கவில்லை நல்லவேளையாய்

சுகப்பிரசவம்.

பிம்ப தேவதை

Thursday, July 8, 2010




நானுனக்கு பரிசளித்த தேவதையை
உடனெடுத்துச் செல்வாயா என்ற
என் ஐயத்தை
வார்த்தைப் புறாக்கள் வாயிலாக
தூது அனுப்பினேன்
இல்லையென்ற பதிலைக் கட்டி
திருப்பியனுப்பினாய்
அதன் பிஞ்சு கால்களில்
நீ கண்ணுராது உன்
வரவேற்பறையை அலங்கரித்திடும்
அத்தேவதையின் பிம்பம்
என் மன வீட்டின் இருளினுள்
அசைவாடிக் கொண்டிருக்கிறது
தொட்டு வருடிய உன் சில நொடி
ஸ்பரிசத்தின் சிலாகிப்புகளை
அசைபோட்டபடி...

உடலின் வெளியிருக்கும் உயிர்

Sunday, July 4, 2010




என் கவிதைகளின் அர்த்தங்களை
அதன் வார்த்தை கோர்வைக்குள்
தேடாதே

பல அவயங்களில் அவையுனக்கு
வெறுமையாய்த் தெரியலாம்
அர்த்தமற்றது போல்

சில பொழுதுகளில்

நான் சொல்ல எத்தனிப்பவை
கால வெளிக்கு
வெளியே வாசம் செய்பவை.

சேகரித்த வார்த்தைகள்

Thursday, July 1, 2010




உனக்காய் என்னுள் உதித்த வார்த்தைகளையெல்லாம்
இரகசிய பெட்டகங்களில் சேமிக்கின்றேன்
நீயோ உன் மௌனத்திற்குள்
ஆழக் குழிதோண்டி சேமிக்கின்றாய்
எனக்கான வார்த்தைகளை
வார்த்தைகள் பெருத்து என் பெட்டகங்களின்
விரிசல்களினூடே கசிகின்றன - உன்
மௌன நிலத்தில் மண்டிய வார்த்தைகளோ
சிருஷ்டிக்கின்றன ஒரு விசித்திர கானகத்தை
உடைந்து சிதறட்டுமென் சுவர்கள்
வெந்து தணியட்டும் உன் காடு.