Showing posts with label மோக புத்ரி. Show all posts
Showing posts with label மோக புத்ரி. Show all posts

வெம்மையிலுருகும் நமதிந்த பிரியங்கள்

Sunday, September 23, 2012


சூழலின் குளுமையில் நடுங்கும் விரல்கள்
தேடுகிறது வெம்மையினை எங்கெங்கோ
அருகிலிருக்கும் உனதிருப்பை மறந்து
அவ்வப்போது எதேச்சையாய்
நமதிந்த நெருக்கத்தில் ஸ்பரிசிக்கின்றன
கரங்களில் குத்திட்ட ரோமங்கள்
நமக்கும் முன்னே
வெம்மை நுகரத் துடிக்கும் மறத்த விரல்கள்
கரையத் தவிக்குமுன் கழுத்து வளைவின்
ரோமக் காட்டில்
மௌனத்தில் கரைத்து நம்மிருப்பில்
உரைந்து உருகிக்கொண்டிருக்கட்டும்
நமதிந்த பிரியங்கள் இப்படியே….


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை( 21-09-12)
இணைய இதழுக்கு நன்றி.

ஆலிவ் இலைகள்

Wednesday, June 6, 2012







ஒற்றை மஞ்ச கிரகத்தின்
ஒரே மானுட இணையாய்
சூரிய நட்சத்திரங்களோடு
ஆதிக் குடிபோல் மறைப்பின்றிக்
கிடக்கிறோம் ரகசியங்களற்று
அன்றலர்ந்த மலர் போன்ற
நின் வளைகரங்களின்
தீண்டல்களில்
பற்றிக் கொள்கிறது
கற்பூரக் காமம்
தேகமெங்கும்
என் விரல் புரவிகளின்
ஓட்டத்தால் செம்புழுதியப்பிய நிலமாய்
செந்நிறம் விரவும்
உன் வெண்தோல் போர்த்திய
சோலையெங்கும்
தோள் தாங்குமுன் பரிதிகளின்
இடை சுரக்கும் நீர்ச்சுனையில்
நீந்திடப் பேராவலுடன்
வீழுமென் நா அரவம்.
ஊன் மேகத்தில்
உயிர் பிரவாகிக்கும்
வெண் மழையோ கீழிருந்து
மேலெழும்பும்
முக்தி யாசிக்கும்
ஆன்மச் சுடர் போல
துடிக்கும் நம் உடல்களோ
வேர்களற்ற ஓர் ஆலிவ் கிளையின்
இரண்டே இலைகளாய்
எதிரெதிரே வளைந்தபடி.

இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை மின்னிதழுக்கு (04-06-12) நன்றி.

ஓர் இரவின் கதை

Wednesday, May 30, 2012





முத்தத்தைத் தேடி
முத்தத்தில் தொலையும்படியாக
ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது
அவ்விரவு
பனியின் குளிர் போக்கி
கதகதப்பாக்கிடும்
கனப்பு அடுப்பைப் போல
இளவெப்பம் கூட்டும்
ஆடை நெகிழ்த்தி
நேர்த்தியாய் விரவும் விரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர் தந்து
பறித்து
குடித்துக் களிக்கும்படியாக
கொடுக்கப்பட்டபோதே
பெறப்பட்டுமிருந்த அந்த
முத்தங்களாலேயே எழுதப்பட்டது
அவ்விரவின் கதை.



மழை நூல்

Thursday, January 26, 2012




தூறலூசி கோர்த்து
மழை நூல் தைத்த
ஈர உடையுடுத்தி மினுக்குகிறது
யாருமற்ற சாலை.
நகர மறுத்த வாகனம் விடுத்து
நடைபயின்றோம்.
தலை முதல் பாதம் வரை
நனைத்து நழுவுகிறது நீராய்
புகை மேகம்.
இறுகும் கைகளை பற்றிச் சுருளும்
சாரல் கொடியொன்று இறுக்குகிறது
கரங்களோடு இதயங்களையும்
முழுக்க நனைந்தும் முக்காடிட்டபடி
உடன் வருகிறாய்.
பொக்கிஷங்களைக் காக்கும் கர்வமின்றி
ஈரக் காற்றில் இழந்தாடிடும்
நீர் சொட்டுமுன் ஆடைகள்
வீடடைந்து உள்ளுறைந்து
உடை மாற்றி மஞ்சம் சேர்கிறோம்
நிமிடங்களில்
குளிர் நானேற்றிய வில்லினின்று
புறப்பட தயாராகின்றன
இரு காம அம்புகள்.
அமர்ந்துண்ணும் அவசியங்களற்று
படுத்தே உண்ணும்
பரவசப் பலகாரங்களாய்
துடிக்கும் நம் தேகங்கள் அருகருகே.

ஒரு நீள்கனவின் சாலை

Wednesday, January 11, 2012




இதுகாறும் அனுமதியாத தேவதை
அருகமர இடம் தருகிறாள்
தன் சிறகுகள் ஒடுக்கி
பேச நகைக்க வருட தீண்ட
அனுமதித்து சுகித்து சுகமளிக்கிறாள்.
விரல்கள் ஸ்பரிசித்த விரல்களிப்போது
மலைகள் ஏற எத்தணிக்கையில்
முகடுகள் தொடச் சொல்கிறாள் கண்கள் செருகி
மலைகளின் ரம்யத்தையும் மெதுமையையும்
வெம்மையையும் குளுமையையும் ஒரு சேர
வாசிக்கின்றன விரல்கள் வரிவரியாய்
மலைகள் குறித்த மிகப் பிரம்மாண்டமான
ஒரு ஈரக் கனவு உலரத் துவங்குகிறது
இறுக்கம் கூடும் விரல்களுக்கிடையே.
கொண்டையூசி வளைவுகளில் இளைப்பாறி
மென்நாணல்கள் மண்டிய புதர்களின்
புதிரவிழ்க்க விரியும் விரல்களை மட்டும்
விரைந்து பற்றி வேண்டாமென்கிறாள்
விழிமீன்களுள் விண்மீன்களையும்
இதழ்களில் ஆரஞ்சுச் சூரியனின்
இரு சுளைகளையும் ஏந்தியபடி.
பின்வாங்கிடும் விரல்களின் பயணமோ
மற்றுமொரு நீள்கனவின்
இருள் கவிந்த சாலைகளினின்று...

முத்தத் தத்துவம்

Wednesday, October 12, 2011




உனதிருப்பையும் எனதிருப்பையும்
துறந்து வேரற்று அந்தரத்தில்
உதடுகள் மட்டும் அருகருகே
அவைகளுக்கிடையில் ஒடுங்கும் உலகனைத்தும்
அவைகளே ஓர் உலகமாயும்...
காமத்தின் வாசமறியும் கணங்களில்
மனம் பிளந்து எழுகின்றது
விலங்கறுத்த விலங்கு ஒன்று
உதடுகளில் முளைத்த கண்களனைத்திற்கும்
இணையைத் தவிர வேறேதும் தெரியவில்லை.
இடையிடையே அரவமாய் நாவுகள் அவ்வப்போது
நிலத்தினை நனைத்திட...
நிசி அகவும் பொழுதில்
தூரமிழக்கும் இரு உலகங்களிடையே
காத்திருக்கிறது ஒரு பிரளயம்.
சிற்றின்பத்தில் மதி தொலைக்காதே
மானிடப் பதரே...
கதறும் போதகனின் குரல் கடக்கிறது
செவிகளற்ற உலகத்தினை.
தன்னைத் தொலைக்க கற்றுத் தருகிறது தியானம்
எது செய்கிறாயோ
அதுவாய் இருவென்கிறது சென்.
கவலை கொள்ளாய் இணையே
நாம் தவணை முறையில்
ஞானிகளாகிக் கொண்டிருக்கிறோம்.

ஈதல்

Thursday, August 18, 2011



பிரபஞ்ச ரகசியங்களை
தன் அதரங்களில் ஒளித்து வைத்து
நிபுணி போல் வகுப்பெடுக்கிறாள்
தனக்கே தெரியாமல்...

தோள்கள் குறுக்கிய விலங்கின்
ரோமங்கள் நெகிழ்த்தி
சிறகுகள் மறந்த பறவையொன்றின்
இறகுகள் நீவுகிறாள் இதமாக,
பறத்தலுக்கான ஆயத்தமாய்

இடை யிடையே உறங்கிடும்
மகரந்தங்களை துயிலெழுப்பும்
சூட்சுமங்கள் கைகூடுமவளுக்கு
அனாயசமாக
முன்தயாரிப்புகள் ஏதுமிலாமலேயே

இந்த ரகசியங்களை
அவள் செவிமடல் வருடும்
இடைவேளைகளில் சொன்னால்
அப்படியாவென ஆச்சரியம் கூட்டுகிறாள்
கரங்கள் குவித்து வாய்பொத்தி
தேனடை காக்கும் சிறுவெண் மதிற் பற்கள்
மறைத்தும்
கன்ன மேட்டில் வெட்க வெளிச்சம்
படர விளக்குகள் ஏற்றியும்

கணங்கள் யுகங்களாகும் ரசவாதத்தின்
ஆதி நொடியில்
கரைகள் குறித்த கவலைகள் துறந்து
திசையறியா யாத்திரையில் என்னுடல்
காமப் பெரும்புனலின் இசைவிற்கேற்ப.


நீட்சி

Sunday, July 31, 2011




நீண்ட பரிசீலனைகளுக்குப்
பின்னர் பரிச்சயமாகிக்
கொள்கின்றன நம் விரல்கள்
நடைபயிலும் சிறு மழலை போல
இறுகப் பற்றியபடி

துவக்கத்திலிருந்த கணநேரத்
தயக்கங்களினின்று விடுபட்டு
உன்னுடையதும் என்னுடையதுமான
விரல்கள் மெல்ல இதழ் சேர்கின்றன.

இடைவெளிகள் துறந்து
கைகள் ஸ்பரிசித்த கணம் தொட்டு
கவிதையாக உருமாறுகிறது
மிகச்சாதாரணமாக
ஆரம்பித்த அப்பயணம்...

கரங்கள் பிரிந்தும்
நீட்சியுருகின்றதது
ஒரு கனவின் நிழலாய்.

பெண்ணில் வீழ்கின்ற நொடிகள்

Tuesday, July 26, 2011




நகக்கண்ணின் நுனியினின்று
புறப்படுமந்த குறுந்தீண்டல்
ஆதவனின் முகம் மறைக்கும்
முகிலினத்தால் தரையில் படரும்
மங்கலான வெயிலினைப் போல

நீர்தேடும் வேராக தேடிடும்
நகப்பூச்சுக் கால்கள்
இணை கால்களை

வேனிற் காலங்களில் கவிழும்
நிழல் போல பரவுமந்த
விழியின் மௌன மொழிகள்

அருகிலிருக்கும் பொழுதுகள்
அவ்வப்போது வாய்த்திடினும்
பெண்ணில் வீழ்கின்ற நொடிகள்
எப்போதாவதுதான் வாய்க்கின்றன
அனுமானங்களுக்குள் அகப்படாமல்
வழக்கம் போலவே.

கவிதை மாதிரி-5

Monday, March 14, 2011



உன் கூந்தல் அலை
நானிருக்கும் திசை நோக்கி
வீசும் போதும்...
உன் கேசக் காட்டினுள்
என் முகம் புதைக்கும் போதும்...
உன் சிகைப் போர்வையினுள்
துயிலும் போதும்...
எனக்குள் போதையேறும்
ரசாயன மாற்றம்.

அப்படியேன்ன
வாசனைத் தொழிற்சாலை
வைத்திருக்கிறாய்
உன் சிரத்தில்!

இப்போது புரிகிறது
ஈசனும் நக்கீரனும்
எதற்காக அடித்துக்
கொண்டார்களென !

கவிதை மாதிரி-3

Thursday, March 10, 2011



என் மேல் எனக்கிருந்த
நம்பிக்கை குறைகிறது
என் விழி தாண்டி
எதையோ நீ தேடுகையில்...

எங்கே கற்றுக்கொண்டாய்
விழிகளாலேயே
உயிர் தீண்டிப் பார்க்கும்
அந்த வித்தையை !?

சுகமாய் தானிருக்கிறது
படபடக்கும் உன்
பட்டாம்பூச்சி விழிகளைப்
பார்க்கையில்!

ஆனால் நீ பார்ப்பதால்
எனக்குள் துளிர்க்கும் மாற்றத்தை
அது பிரதிபலிப்பதெப்படி?

மடி வீழ்தல்

Thursday, December 9, 2010



பெண்ணால் அழிந்த ராஜ்ஜியங்கள்
குறித்த சரித்திர உண்மைகள் புரிகிறது
உன் மடி வீழ்தலின் போது
மர்மம் தளும்பும் உன் அக உலகங்களின்
தாழ் திறந்து கதைக்கிறாய்
ஓசைகளில்லா விழி மொழியில்.
என் பிரம்மச்சரியப் பயணத்தின்
வேகத் தடைகளை சுமந்தவாறு
பின்புறம் கைகளூன்றி அமர்ந்திருக்கிறாய் நீ.
காது மடல்களில் வெம்மைகூட்டும் உன்
நாசிகளைத் தொடர்ந்து
ஈரமான குளிர் நாவின் தீண்டல்கள்
சிருஷ்டிக்கின்றன என் பிரபஞ்சத்தில்
எண்ணவியலா நட்சத்திரங்களை
கணப்பொழுதில்.
இயற்பியல் விதிகளை உடைத்தெறிகிறாய்
பனி முத்தங்களால் என்னை
சூடேற்றும் ஒவ்வொரு முறையும்.
கடந்தமுறை தவறவிட்ட
சொர்க்கத்திற்கு வழி காட்டும்
நகக்குறி வரைபடங்களை
மீண்டும் வரையத் துவங்குகிறாய்.
நானோ சிறகு விரித்து
தயாராகிறேன்
இன்னுமொரு பெரும் பயணத்திற்கு.