தனிமையின் கீர்த்தனைகள்

Tuesday, April 10, 2012



தனிமையின் கீர்த்தனைகளை
நீங்கள் கேட்டதுண்டா ?
அறையின் சுவர்களில் மோதி
மென் அதிர்வுகளால் தமதிருப்பைப்
பறை சாற்றியபடி அனுதினமும்
கசிந்தபடி இருக்கும்.

முயன்றதனைக் கற்க வேண்டி
நிர்ப்பந்திக்காது
கல்லாமலேயே தம்மை நம்முள்
ஸ்தாபிக்க வல்லவை அவை.

பின் மாலை கழிந்து முன்னிரவாகுகையில்
குரல்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும்.

முன்னிரவு கரைந்து பின்னிரவாகுகையில்
வெறும் விசும்பல்கள் மட்டும் மிஞ்சும்.

களைத்துறங்கும் உடலதனைக்
கேட்டிருக்க வாய்ப்பில்லை.
ஆனால்
துஞ்சாது அரற்றும் மனம்… ?


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (07.04.12)
மின்னிதழுக்கு நன்றி.