தனிமை

Sunday, August 28, 2011




போவதாய் பலமுறை சொல்லி
கடைசியாய் விடைபெற்றுச் செல்வேன்
உனக்கு மட்டுமே தெரியுமாறு
மாய பிம்பமாய் என்னை விடுத்து

வீடு சேர்ந்து
சகலரும் துயிலும் வரை காத்திருப்பேன்.

உன்னைப் போன்றதொரு மாய பிம்பத்திற்கான
தேடல் துவங்கும்...
அலைந்து கலைத்த விழிகளும், இருளினுள்
அலசிக் கலைத்த விரல்களும் ஒரு சேர
அமிழ்த்திடுமென்னை மஞ்சத்திலே
வீழ்ந்த மறுகணமே ஓடிவந்து அள்ளும் என்
த னி மை!

நாம் தயாரிக்கும் முகங்கள்

Tuesday, August 23, 2011




தனி மனிதன் தோப்பாக முடியாது. பிடிக்கிறதோ இல்லையோ உயிர்கள் அனைத்தும் ஒன்றாக வாழ்வது வாழ்வியல் தேவையின் நிர்பந்தம். நமது வாழ்வின் அன்றாடங்களில் எத்தனையோ பேரை கடந்து செல்கிறோம். வீட்டிற்குள், அண்டை வீடுகளில், பணியிடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். நம் நேரத்தின் பெரும் பகுதியினை யாராவது ஒருவருடனேயே செலவிடுகிறோம். தனிமையை, பெரும்பான்மையான மனிதர்கள், தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மட்டுமே இருத்தல் வேண்டுமேன விரும்புகின்றனர்.தேடிக் கொண்ட தனிமையின் ருசி அலாதியானது. ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட தனிமையெனும் விடத்தின் வீரியம் அதனை அனுபவித்தவருக்கு மட்டுமே தெரியும்.

சக மனிதர்களிடம் பழகிய வெகு சில நாட்களிலேயே, அவர்கள் பழகும் விதத்தை வைத்து அவர்களுக்கென ஒரு பிம்பத்தை நம் மனம் தயாரித்து விடுகிறது. அப்பிம்பம், அவர்கள் பழகிய விதத்தை வைத்து,அது குறித்த நமது புரிதலின் அடிப்படையில், நம்முடைய சில அனுமானங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பே. அது அம்மனிதர்கள் குறித்த உண்மைகள் மற்றும் (அவர்கள் குறித்த) நமது ஒரு சில புனைவுகளின் கலவையே என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம். மனித மனம் தனது புத்திக்கு உட்பட்ட அளவுகோல்களை வைத்துக் கொண்டே சக மனிதரை நல்லவர் எனவும், கெட்டவர் எனவும் தரம் பிரித்து அவர்களுக்கான முகங்களை தயாரிக்கிறது.


நாள்தோறும் நாம் மனிதர்களைப் பார்த்து அவர்களுடன் பழகுவதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் நம் மனக்கண்ணால் பார்ப்பது அவர்களுக்கென நாம் பிரத்தியேகமாக தயாரித்த முகமூடிகளையே! இம்முகமூடிகளே அவர்களது விலாசமாகிறது, நமக்கு. இவ்வகையில், எல்லோரையும் ஒருவித பொதுவான அணுகுமுறையுடனேயே நம் மனம் கையாள்கிறது. யாரையும் இதிலிருந்து மனம் விதிவிலக்காக அறிவதில்லை, ஒரு சிலரைத் தவிர. அந்த வெகு சிலரின் மீது நமக்குள்ள பிரியமே அதற்கு காரணம். ஆனால் இந்த விதிவிலக்குகளுக்கான இடங்கள் கூட எப்போதும் தற்காலிகமானவையே. நிரந்தரம் என்று இங்கு எதுவுமில்லை.

எல்லா மனிதர்களும் சூழ்நிலைக் கைதிகள். உணர்வுகள் மேலோங்கிய தருணங்களில் தமது சுய அறிவை, சுயநிலையை இழப்பவர்கள். இது பொதுவான மானுட வாழ்வியல் உண்மை. ஞானிகள், மகான்கள் என நாம் சொல்பவர்களைத் தவிர இது நம் அனைவருக்கும் பொருந்தக் கூடியதே. ஒருவர் ஏதோ ஒரு இக்கட்டான தருணத்தில் நமக்கு இணக்கமாக இருக்கவில்லை என்பதற்காகவும், நமக்கெதிராய் செயல்பட்டு விட்டனர் என்பதற்காகவும், இவர் நமக்கெதிரானவர் என்ற முத்திரையை அவர் மீது குத்தி விடுகிறோம். அதன் அடிப்படையில் இவர் எனக்குப் பிடிக்காதவர் அல்லது இவர் கெட்டவர் என்ற முகமூடியை உடனடியாக தயாரித்து விடுகிறோம். பெரும்பாலும் நாம் உற்பத்தி செய்த இத்தகைய பிம்பங்களை நாம் மறுபரிசீலனைகளுக்கு உட்படுத்துவதே இல்லை. எடுத்த முடிவுகள் முற்றிலும் சரியானவையே என்ற கருத்தில் நமது அளவுகோல்களை இறுக்கிக் கொள்கிறோம்.

இந்த நிலைக்குப் பிறகு அம்மனிதரைக் குறித்த நமது அபிப்ராயங்கள் பெரும்பாலும் அவரது அப்போதைய செயல்பாடுகளை அடிப்படையாகக் கொள்வதைவிட, முன்னரே நாம் அவருக்காய் தயாரித்திருந்த முகமூடி தரும் சாயலைப் பொருத்தே அமைந்து விடுகின்றன. பல சமயங்களில் பிறர் குறித்த நமது தீர்ப்புகள் இதனடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு வேளை- கால ஓட்டத்தில்- நாம் கெட்டவர் எனக் கருதியவர் உண்மையாகவே தன் பிழையுணர்ந்து திருந்தியிருப்பதர்கான சாத்தியங்கள் இருக்கும் போதும், அதனை நம் மனம் நம்பி ஏற்க மறுக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள பல மனிதர்கள் குறித்த, இனக் குழுக்களைக் குறித்த, குறிப்பிட்ட சமூகத்தினைரைப் பற்றிய, நாட்டவரைக் குறித்த கருத்தியல்கள் இதன் அடிப்படையிலேயே நாம் உருவகித்துக் கொள்கிறோம். நாளடைவில் இந்த உருவகங்களே ஆழமான கொள்கைகளாக, அசைக்க முடியாமல் ஆழமாய் வேறூன்றிய நம்பிக்கைகளாக ஆகிவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்த அனைவரும் முரடர்கள், இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள்... இது போன்ற உண்மைக்குப் புறம்பான எண்ணற்ற கருத்தியல்களை உதாரணங்களாக நாம் கூறலாம். இது நமது உலகியல் பார்வையை எவ்வளவு குறுகலாக வழி செய்கிறது என தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். உலகின் பெரும்பான்மையான சண்டைகளும் பிரச்சனைக்கும் (அது இரு தனி மனிதருக்காயினும் அல்லது இரு நாடுகளுக்காயினும்) ஊற்றுக்கண்ணாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர புரிதல் இல்லாமையினாலேயே. அதற்கு காரணம் சில நேரங்களில் நாம் தயாரிக்கும் இந்த முகங்களாகவும் இருக்கலாமே! சிந்தனை செய் மனமே!

ஈதல்

Thursday, August 18, 2011



பிரபஞ்ச ரகசியங்களை
தன் அதரங்களில் ஒளித்து வைத்து
நிபுணி போல் வகுப்பெடுக்கிறாள்
தனக்கே தெரியாமல்...

தோள்கள் குறுக்கிய விலங்கின்
ரோமங்கள் நெகிழ்த்தி
சிறகுகள் மறந்த பறவையொன்றின்
இறகுகள் நீவுகிறாள் இதமாக,
பறத்தலுக்கான ஆயத்தமாய்

இடை யிடையே உறங்கிடும்
மகரந்தங்களை துயிலெழுப்பும்
சூட்சுமங்கள் கைகூடுமவளுக்கு
அனாயசமாக
முன்தயாரிப்புகள் ஏதுமிலாமலேயே

இந்த ரகசியங்களை
அவள் செவிமடல் வருடும்
இடைவேளைகளில் சொன்னால்
அப்படியாவென ஆச்சரியம் கூட்டுகிறாள்
கரங்கள் குவித்து வாய்பொத்தி
தேனடை காக்கும் சிறுவெண் மதிற் பற்கள்
மறைத்தும்
கன்ன மேட்டில் வெட்க வெளிச்சம்
படர விளக்குகள் ஏற்றியும்

கணங்கள் யுகங்களாகும் ரசவாதத்தின்
ஆதி நொடியில்
கரைகள் குறித்த கவலைகள் துறந்து
திசையறியா யாத்திரையில் என்னுடல்
காமப் பெரும்புனலின் இசைவிற்கேற்ப.


யாதுமாகிய நீ

Saturday, August 13, 2011



நாட்டியக்காரியின் சலங்கையின் பரல்களில்
நர்த்தனமாடும் ஒலியாய் நீ வெளிவருகிறாய்
பாடகனின் குரலோடு குழைந்து வந்து
செவி சேர்கிறாய்.
ஓவியனின் தூரிகையில் வண்ணமாய் வழிந்து
அப்படைப்பின் உயிர் நாதமாகிறாய்
வீணையின் நரம்பில் இன்னிசையாய்
தெறித்து செவிகள் வருடுகிறாய்.
மலர்களின் மணமாய் நாசிகள் நிறைகிறாய்
யாதுமாயிருக்கும் நீ என்னுள்
எப்படியிருப்பாய்?
என் உணர்வுகளெல்லாம் திரட்டினேன்
அவ்விடத்தே நீயிருந்தாய்.


பகற் கனா

Monday, August 8, 2011




மோன நிலையோ யோக நிலையோ
நானறியேன்.
இமை விரித்துப் பார்க்கையிலே
தடாகமொன்றின் கரைதனிலே
தலைகுப்புற நான் கிடந்தேன் தனியனாய்
என் விழி நீர்க் கண்ணாடியின்
பிம்பத்தை வருடிச் செல்கிறது
அதன் ஒரு ஜோடி விழிகளுக்குள்
உறைந்த நிழற்படம் போல நீ...
தங்க மீன்கள் என் விழிகளுக்குள்
துள்ளிக் குதிக்கின்றன.
உன்னையவை உண்ண எத்தனிக்கையில்
என் கைகளுயர்த்தி கண்ணாடியை நானுடைக்க
நீ நீரோடு கரைந்து என் மீது
தெரித்துச் சிதறினாய்.
பிம்பமாய் கிடந்த நீ மீண்டுமொருமுறை
வழிந்து என் மீதே உறையத் தொடங்குகிறாய்.