அட்சய பாத்திரம்

Thursday, March 31, 2011



நீளும் இரவுகள்
முடிவற்ற வானம் போல
என் நித்திரை வானில் கோடிகோடி
கனவு நட்சத்திரங்கள்.

அருகாமையில் குளுமை நிலவாய்
உனைச் சுமக்கும் கனவுகள்

ஒவ்வொரு இரவும்
இமைகள் மூடி விழிகள்
திறந்து வைப்பேன் – என்
கனவு தேசத்திலுன் வரவிற்காய்.

நீண்டதொரு தியானம் போல
இரவுகளெல்லாம் கனவுகள்
கருக்கொள்வேன்.

முடிவற்ற இரவை
விடியல் கொண்டு கழுவும் தருணம்
இமைகள் திறந்தென்
விழிகளை பத்திரம் செய்வேன்.

அதையும் தா !

Monday, March 28, 2011



காய்ந்த சருகு இதழ்களை
ஈரம் தேடி வருடும் நாவுகள்
கவனியா காலத்தினுள் தேய்ந்திட்ட
குறை மதி ஊன்
ஒன்றுமில்லையென பொய்த் தெம்பூட்டுகிறாய்
குழரும் வார்த்தைகளால்
முகில் துறந்து நிலம் அமரும்
மழையின் பெருவாஞ்சை போல
பேரன்பு திரட்டி அணைத்திறுக்கும்
நடுங்கும் விரல்கள்
அணியாத அணியாய்
கண்களையும் காதுகளையும் இணைத்திடும்
திரவப் பாலம் அவ்வப்போது
அதற்கிணையாய் ஊற்றெடுக்கும்
என் விழியோரம் ஒரு நீரோடை
மொழியுதிர்கால வார்த்தைக் காட்டில்
ஆதரவு வார்த்தை பறிக்க
அலைந்து தோற்று
அயற்சியே விஞ்சுகிறது.
எனக்கெல்லாம் தந்த எந்தையே
நின் நிலை தாங்கும் மனமொன்றைத்
தருமந்த வரமொன்றையும் தா !


உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
தற்போது தேறி வரும் என் தகப்பனுக்கு சமர்ப்பணம்...

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (27.03.11)
இணைய இதழுக்கு நன்றி.

எல்லாம் நிறைந்த வெறுமை

Saturday, March 26, 2011



நீண்ட நேரமாகிவிட்டது
எழுதுகோலின் விழிகள்
முன்னிருக்கும் தாளினை
இன்னும் வெறித்தபடி

ஏனிப்படி?
உதிர்ப்பதற்கு வார்த்தைகள் இல்லையோ?
ஒய்யாரமாய் விரலிடையினில்
சாய்ந்து ஆனந்த சயனமோ- ஒரு வேளை?

தற்செயலாய் படிந்தது
பார்வையின் கவனம் அப்பளுக்கற்ற
தாளின் வெண்மை மீது.

இப்பரிசுத்ததிற்கு நிகராய்
நானென்ன எழுதிவிடப் போகிறேனேன்ற
தொனியில் இன்னமும் சாய்ந்தபடியே
எழுதுகோல்.

தாளின் கீழ் வலது மூலையில்
ஒரேயொரு கரும்புள்ளி
வரைந்தது திருஷ்டிப் பொட்டாய்

நான் அதை என் புத்தகமொன்றில்
பத்திரம் செய்வேன்.

பிரிவோம் சந்திப்போம்

Wednesday, March 23, 2011



தூரத்தில் புள்ளியாய் நம்மில்லம்
தெரிய ஆரம்பித்ததுமே, இராணுவ
மிடுக்கு நடை விடைபெற்றென்னுள்
தூங்கும் குழந்தை துள்ளியோடும்.

திறந்த கதவின் நிலை பற்றி
சிலையாய் சமைந்து நிற்பாய்- உன்
விழிகளில் வழியும் சேமித்த காதலுடன்.

என்னைக் கண்டதும் ஒரு கணம்
குழைந்து, பின் மலர்ந்து
குதித்தோடி வருவாய்.

வளைகரங்களை என்
கழுத்தில் மலையாக்கி- தந்தையைக்
கண்ட சிறுமி போல தாவியேறுவாய்.

என் கைக் கிளைகள் உன்னிடைக்
கொடி பற்றும்.
உச்சி முகர்ந்து நீ தரும்
முத்தத்தின் முடிவில் என் புருவங்களில்
பட்டுத் தெறிக்குமுன் ஒரு துளி கண்ணீர்.

உன்னோடிருக்கும் சில நாட்கள்
வாழும் போதே சொர்க்கமாய்...

பகலவன் பக்கமிருக்கும் பகற் பொழுதுகளில்
வகை வகையாய் பரிமாறுவாய்
வாழையிலையில்.

நிலா நடை பயிலும் முன்னிரவில்
உன்னையே பரிமாறுவாய்
மஞ்ச இலையில்

நாம் களித்திருப்பது சகியாது
வருமந்த அழைப்புத் தந்தி
பட்டாளத்தினின்று...

மீண்டுமொருமுறை உன் – கண்ணீர்
சுனைகளாய்ப் போன- கண்களைக்
காணச் சகியாது
உன் இதழ் பதித்த முத்தத்துடன்
விடைபெறுவேன்.

என்னை உன்னிடத்தே விடுத்து
உன்னை என்னோடு
எடுத்துச் சென்றபடி.


எத்தேசத்தவராயினும் குடிமக்கள் நிம்மதியாய் வாழ, தம் நிம்மதி தொலைக்கும்
இராணுவ வீரர் கணக்கற்றோர். தம் இணையைப் பிரிந்து நமக்காய் எல்லையில்
சேவையாற்றும் எனது ஒவ்வொரு சகோதரனுக்கும் இவ்வரிகள் சமர்ப்பணம்.

தடம்

Monday, March 21, 2011



தன்னுள் தண்ணீர்
சுமக்கும் சாதாரண குவளை
இடம் பெயரும் போது
நீரால் தடம் வரைந்து செல்லும்.

எண்ணற்ற குவளைகளால்
அளந்தாலும் குறையா அன்பைச்
சுரக்கும் இறையை
மனதில் சுமக்கும் நான் ?!

முழுமை

Friday, March 18, 2011



முழுமையானது எது?

நானா?
இல்லை. என்னிடம் குறைகள்
பல உண்டு.
விசாரித்ததில் அடுத்தவரிடமும்.

நிலவோ?
ஆனால் அது தேய்ந்து தேய்ந்து
வளர்கிறதே!

சூரியனோ?
ஒரு நாள் அதுவும் மரிக்குமென்கிறான்
மெத்தப் படித்த விஞ்ஞானி.

எல்லையில்லா பேரண்டத்தில்
முழுமையானதொன்று உண்டு.
ம்...


சூன்யம் !

கூட்டுப்புழு

Wednesday, March 16, 2011



என் கோப மின்னல்களை
இலாவகமாய் பிடித்து
உன் தூரிகையாக்கிக் கொள்கிறாய்.
உன் மரங்களின் நம்பிக்கை விழுதுகளைப்
பற்றியபடி இப்போதுதான் நடை பயில்கிறேன்.

என்னுலகில் வாசம் செய்திருந்தேன்
தனியனாய்...
உன்னால் அது தலைகீழானது.

நாட்கள் பல பழகியும் மாற்றங்கள்
ஏதுமின்றி அப்படியே யிருக்கிறாய் நீ.
உன்னோடு அன்பைப் பகிர ஆரம்பித்த
கணம் தொட்டு நான் மட்டும்
அன்றாடம் மாறியபடி...

கவிதை மாதிரி-5

Monday, March 14, 2011



உன் கூந்தல் அலை
நானிருக்கும் திசை நோக்கி
வீசும் போதும்...
உன் கேசக் காட்டினுள்
என் முகம் புதைக்கும் போதும்...
உன் சிகைப் போர்வையினுள்
துயிலும் போதும்...
எனக்குள் போதையேறும்
ரசாயன மாற்றம்.

அப்படியேன்ன
வாசனைத் தொழிற்சாலை
வைத்திருக்கிறாய்
உன் சிரத்தில்!

இப்போது புரிகிறது
ஈசனும் நக்கீரனும்
எதற்காக அடித்துக்
கொண்டார்களென !

கவிதை மாதிரி-4

Saturday, March 12, 2011



உனக்குப் பிடித்த நிறம்
அது எனக்கும் பிடிக்கும்.

எனக்குப் பிடித்த மணம்
அது உனக்கும் பிடிக்கும்.

உனக்கு என்னைப் பிடித்திருப்பதும்
எனக்கு உன்னைப் பிடித்திருப்பதும்
யாருக்கோ பிடிக்கவில்லை போலும்!
நாம் சேரவேயில்லை...

ஆயினும் ஒன்று மட்டும்
நிஜம்....
நிரந்தரம்...
அது நமக்கு நம்மைப் பிடித்திருத்தல் !

கவிதை மாதிரி-3

Thursday, March 10, 2011



என் மேல் எனக்கிருந்த
நம்பிக்கை குறைகிறது
என் விழி தாண்டி
எதையோ நீ தேடுகையில்...

எங்கே கற்றுக்கொண்டாய்
விழிகளாலேயே
உயிர் தீண்டிப் பார்க்கும்
அந்த வித்தையை !?

சுகமாய் தானிருக்கிறது
படபடக்கும் உன்
பட்டாம்பூச்சி விழிகளைப்
பார்க்கையில்!

ஆனால் நீ பார்ப்பதால்
எனக்குள் துளிர்க்கும் மாற்றத்தை
அது பிரதிபலிப்பதெப்படி?

இரவல் இரவுகள்

Tuesday, March 8, 2011



தினம் தினம்
போராட முடியவில்லை
எம் இரவுகளோடு

பற்கள் முளைத்த
கோரப் பசி காமுகர்
கையில் சித்ரவதைகள்
அன்றாடம்.

நிம்மதியாய் மூச்சு விட்டு
ஆயிற்று நாட்கள் பல.
மீளும் வழியும் தெரியவில்லை
இப்புதைகுழியினின்று.

சீவி சிங்காரிக்கப்பட்டு
காட்சிப் பொருளாய் நிற்கிறேன்,
கடந்து செல்லும் பார்வைகள்
என்னைப் பலவாறாய்
கழுவிச் செல்ல...

மோகப் பார்வைகள் சில;
அருவருத்து நகரும்
குடும்பப் பெண்டிரின்
வசவுகளுடன் சேர்த்தே
இன்னும் சில...

மிருகங்களுக்காய்
காத்துக் கிடக்கும்
இரை நான்.

நித்தமும் தேடுகிறேன்
ஏதோ ஓர் இமையோரம்
கசிந்து வரும்
இரக்கப் பார்வையை...

தொடர்கிறது தேடல்...

முடியவில்லை என்னால் !

யாராகிலும் கைகொடுங்கள்
இந்நரகத்தினின்று மீள
ஆவலாயுள்ளது.

அது சங்கடமாயிருப்பின்
உங்கள் இரவுகளையாகிலும்
இரவல் கொடுங்கள்

இம்சைகளினின்று தற்காலிக
விடுதலையாகினும் கிட்டட்டும்
குறைந்தபட்சம்...


மகளிர் தினத்தில் நாம் நம் தோழியருடன், சகோதரிகளுடன் வாழ்த்து பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் விளிம்பு நிலையில் உழலும் இது போன்ற கணக்கற்ற மகளிரை நாம் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே, ஒரு உடலை விற்கும் பெண்ணின் கண்ணீர் துளிகள் தங்களின் கவனம் கோரி நிற்கின்றது சில வரிகளாய் இங்கு...இந்த சிறப்பான நாளில் !

கவிதை மாதிரி- 2

Monday, March 7, 2011



அது எப்படி?
ஒரு கொடியில் எப்போதும்
இரண்டே கனிகள்!
உன்னில்தான் என் ஐயங்கள்
ஆரம்பமாகின்றன.

எல்லாமே இருண்டு போய்தான் கிடக்கிறது
உன் கார்குழலுக்குள் விழிகள்
சிறைப்பட்டதால்...

என்னை என்ன செய்தாய்?
இன்னும் எதனை மிச்சம் வைத்திருக்கிறாய்?
என்ன ஆனேன் என்பது
எனக்கும் புரியவில்லை
என்ன செய்தாயென்பது
உனக்கும் தெரியவில்லை !

ஒரு வேளை...
நாம் நமக்கே
புரியாத புதிரோ !?

கவிதை மாதிரி - I

Thursday, March 3, 2011



யதார்த்தமாய்தான் இருக்கும் உன் பார்வை
மற்றவர் பார்வைக்கு...
எனக்கு மட்டுமே தெரியும் அதனாழம்.

உன் பார்வைக்குள் என்னை
கரைத்து விடுகிறாய்!
எதற்கும் கலங்காத என் திடமனது
உன் முன் தன் சுயத்தை இழக்கிறது!?

என் சுகதுக்கங்களில் பங்கெடுக்கும்
ஒரு மௌனமான பங்களிப்பாகவும்,
பகிர்வாகவும் – உன் பார்வை.

என் ஆழ்நித்திரைக் கனவுகளில்
வந்து செல்கிறது....
சில வேளைகளில் எனக்கு உயிரளிப்பதும்
சில வேளைகளில் என் உயிரழிப்பதுமான
உனது அதே கண்கள்!