அவரவர் மழை

Monday, October 21, 2013


சாம்பல் நிறத்து மழை
செயற்கையின் புழுதி கழுவி
இயற்கையை குளிப்பாட்டுகிறது
புகை போல கிளர்ந்து நெளிந்து
அந்தரத்தில் நீரின் நடனம்
காற்றின் இசைக்கேற்ப
பிஞ்சுக் கரங்களில் விழுந்து அவிழும்
நீர்த்திவலைகள் முகத்தில் ஓவியம் தீட்டுமாறு
சாரலை ரசிக்கும் மகள் மனத்திரையில் வருகிறாள்
அவரவர்கேயான அவசரங்கள், காரணங்கள் சுமந்து
மழை கோட்டுக்குள் மறைந்து கொள்ளும் முகங்களை
சுமக்கும் வாகன நேரிசலுக்கு மத்தியில்
தற்செயலாய் தொடர்கிறது பார்வை
சிமெண்ட் குழாயினுள் ஒண்டும்
தெருவோர சிறுமியொருத்தியை
ஒரு மகளுக்கு இசைவான மழை
இன்னொரு மகளுக்கு வதையாவது புரிகிறது
முகத்தில் வழியும் துளிகள் கனக்க

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட இறக்கை
இதழுக்கு நன்றி. 

அதிநுட்பவியல்

Wednesday, October 16, 2013காதற் காலங்கள்
அதிநுட்பமானவை என்பதால்
நுட்பமான வரைவுகளுக்குள்ளே கூட
அவையடங்கி விடுவதில்லை
முழுமையாய் பறப்பதாய் கருதிப் பறக்கும்
பறவையொன்றின் சிறகு துறந்து
இலக்கற்று அலையும் உதிர்ந்த
ஒற்றையிறகைப் போல
முழுமையாய் மொழிபெயர்த்திட்டதாய்
எண்ணியெழுதி முடித்த
ஒவ்வொரு கவிதையின் வார்த்தைகளுக்கு
வெளியேயும் அலைந்து கொண்டிருக்கின்றன இன்னமும்
சில தவறவிட்ட கணங்களும்
சில கண்ணீர் துளிகளும்
.குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட இறக்கை இதழுக்கு
நன்றி

காலச்சித்திரம்

Wednesday, October 9, 2013

நாபியினின்று புறப்பட்டு
உயிர்வளிப் பிளிறலாய்
துவங்குகிறது அகத்தின் ஓலம்
காலமெனும் கண்ணாடியின்
பின்னும் முன்னும்
இறப்பும் எதிர்பார்ப்பும் விரிய
பிம்பமாய் மத்தியில் உறையும் இக்கணம்
இருப்பின் மையம் குறித்த தேடலே
இருத்தலின் மையமான பின்னே
புரிதலின் மலர் அவிழும் பொழுதில்
அதீதத்தின் ருசி நாவுகளில் தித்திப்பாய்
சில மிடறு ஞானப் பாலுக்கு இணையாக
என்னையே கேட்ட காலன்
கையளித்த சகலமும் குழைத்து
வரைகிறான் சித்திரமொன்றை
சிரஞ்சீவித இருளின் சாயலில்
அவடிவ தூரிகை கொண்டு
.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட இறக்கை 
இதழுக்கு நன்றி.பந்தயப் புரவிகள் - பகுதி - VI

Tuesday, September 3, 2013ஒரு திரைப் பிரதியின் நம்பகத்தன்மையை  யதார்தத்தை புனைவின் வழியே தொட்டுப் பார்க்கும் அதன் மெனக்கெடல்களின் மூலமாக கொண்டு வர இயலும். இதனை இப்படைப்பின் இயக்குனர் பில்லி ஒயில்டர் திறம்பட செய்திருந்தார். 

நடிகை குளோரியா ஸ்வான்சன் (1928)


படத்தின் மையமான நோர்மா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை குளோரியா ஸ்வான்சன் நிஜத்தில் ஒரு பிரபல மௌனப் பட நடிகையே. 1920களில் துவங்கிய அவரது திரைப்பயணம் பேசும் பட யுகம் சந்தையை வியாபித்த 1930 வரை தொடர்ந்தது. அக்கால கட்டத்தில் நிஜ வாழ்வில் அவர் சன்செட் பொலிவார்ட் பகுதியிலெயே ஒரு பெரிய மாளிகையில்  வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேசும் படங்களுக்கு ஏற்ப தான் மாற முடியா இயலாமையை ஏற்றுக் கொண்டு நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்து முதலில் வானொலியிலும் பின்னர் தொலைகாட்சியிலும் பணிபுரிந்து கொண்டிருந்தார். உண்மையிலேயே இப்படம் அவரது மறுபிரவேசமே. இப்படி உண்மைக்கும் திரைப் புனைவு வெளிக்கும் இருந்த இந்த அபூர்வமான ஒற்றுமை ஒரு தனித்துவத்தை படைப்பிற்குத்  தந்தது என்றே சொல்லலாம்.  

படத்தின் ஒரு காட்சியில் நோர்மா தன் கடந்த கால திரை நண்பர்களோடு சீட்டு விளையாடுவதாக வரும் காட்சியில் உண்மையான மௌனப் பட கலைஞர்களே கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். அதில் சாப்ளினுக்கு சமகாலத்தவரான நடிகர் பஸ்டட் கீட்டனும் ஒருவர். மிக முக்கியமான நகைச்சுவை நடிகரான அவர் அதிகம் கண்டு கொள்ளப்படாமலேயே  போனது துரதிஷ்டவசமானதே.

மேலும் நோர்மா சந்திக்கும் இயக்குனர் சிசில் பி.டிமிலி(Cecil B. De Mille),உண்மையில் ஒரு பிரபலமான இயக்குனரே. பல வணிக ரீதியிலான படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் இயக்குனராக 80 படங்கள் இயக்கியிருப்பினும் அவரது இயக்கத்தில் 1956ல் வெளிவந்த ‘The Ten Commandments’ திரைப்படமெ அவரை உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களிடம் அவரைக் கொண்டு போய் சேர்த்தது .  அவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாது ஒரு தயாரிப்பாளராகவும் (88 படங்கள்) வலம் வந்தவர். ஹாலிவிட்டில் ஸ்டுடியோ நடைமுறையை சாத்தியப்படுத்திய ஆளுமைகளுள் இவரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்த ஸ்டுடியோ முறையே ஹாலிவுட்டின் வணிகரீதியிலான பெரு வீச்சுக்கு அடிகோலியது. 


இயக்குனர் பில்லி ஒயில்டர்இயக்குனர் பில்லியின் கலா நேர்த்தி இத்திரைப்பிரதியின் பல இடங்களில் தெரியும். டிமிலியை சந்திக்க படப்பிடிப்புத் தளத்தில் காத்திருக்கும் நோர்மாவின் பின்னால் ஒரு மைக் அது போகிற போக்கில் அவளது தொப்பியில் உள்ள இறகை இடறும். அதனை மிகுந்த அலட்சியத்தோடு நோர்மா தட்டி விடுவாள். அந்த சிறிய காட்சி அக்கதாபாத்திரத்தின் மொத்த மனப் போக்கினையும் அழுத்தமாக பதிவு செய்யும். அந்த இடத்தில் நகரும் மைக் பேசும் படங்களின் ஒட்டு மொத்த குறியீடாகவும், நோர்மாவின் முற்றான புறக்கணிப்பு மௌனப்பட உலகின் கலைஞர்களுக்கு பேசும் படங்களின் இருந்த புதுமைக்கேற்ப தங்களை மீட்டுருவாக்க முடியா இயலாமையின் வெளிபாடாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இத்திரைப்படம் திரைக்கதை ஆள்கையிலும், உளவியல் பார்வையிலும் மிக முக்கியமான ஃபிலிம் நோயர் (Film Noir) பிரதியாகவும் கொண்டாடப்படுகிறது. இப்பிரதி கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாகவும், அழகியல் ரீதியிலும் மிக முக்கியமான  படைப்பாக கருதப்பட்டதால் அமெரிக்க தேசிய திரை ஆவணக் காப்பகத்தில் (National Film Registry) 1989ல் பாதுகாக்க தேர்வு செய்த முதல் பட்டியலில் இப்படம் இடம் பெற்றது. இப்படம் பதினோரு ஆஸ்கர் அகதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, மூன்று அகதமி விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு : இக்கட்டுரையினை வெளியிட்ட பேசாமொழி இணைய
இதழுக்கு (சூன் இதழ்) நன்றி.