கவிதை

Wednesday, October 19, 2011




இல்லாத எல்லைக்குள்
சொல்லாத சொல்லைத்
தேடும் யாத்ரீகனின்
கைவிளக்கு

எண்ண ஊடல்களின்
சொற்கூடல்

கடக்கும் காலனின் நிழல்

கனவுக் கடலை
கடக்கும் தோனி

சிந்தனை நிலங்களடியில்
கணக்கற்ற கனிகளின்
எதிர்காலம் தேக்கியிருக்கும்
ஒற்றை விதை

வாழ்வின் அர்த்தம் வேண்டும்
வார்த்தை யாகம்

கவிஞனின் இருப்பின் சாட்சி

அனைத்துமளித்த அகிலத்துக்கு
அவனது நினைவுப் பரிசு

ஒரு வாழ்க்கையில்
ஓராயிரம் வாழ்வை
வாழத் துடிக்குமவன்
பேராவலின் நீட்சி.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(17.10.11)
இணைய இதழுக்கு உளம் கனிந்த நன்றி.

முத்தத் தத்துவம்

Wednesday, October 12, 2011




உனதிருப்பையும் எனதிருப்பையும்
துறந்து வேரற்று அந்தரத்தில்
உதடுகள் மட்டும் அருகருகே
அவைகளுக்கிடையில் ஒடுங்கும் உலகனைத்தும்
அவைகளே ஓர் உலகமாயும்...
காமத்தின் வாசமறியும் கணங்களில்
மனம் பிளந்து எழுகின்றது
விலங்கறுத்த விலங்கு ஒன்று
உதடுகளில் முளைத்த கண்களனைத்திற்கும்
இணையைத் தவிர வேறேதும் தெரியவில்லை.
இடையிடையே அரவமாய் நாவுகள் அவ்வப்போது
நிலத்தினை நனைத்திட...
நிசி அகவும் பொழுதில்
தூரமிழக்கும் இரு உலகங்களிடையே
காத்திருக்கிறது ஒரு பிரளயம்.
சிற்றின்பத்தில் மதி தொலைக்காதே
மானிடப் பதரே...
கதறும் போதகனின் குரல் கடக்கிறது
செவிகளற்ற உலகத்தினை.
தன்னைத் தொலைக்க கற்றுத் தருகிறது தியானம்
எது செய்கிறாயோ
அதுவாய் இருவென்கிறது சென்.
கவலை கொள்ளாய் இணையே
நாம் தவணை முறையில்
ஞானிகளாகிக் கொண்டிருக்கிறோம்.