சே III – களம் கண்ட மதக்களிறு

Friday, April 29, 2011

பெற்றோரை சரிக்கட்டியாயிற்று, மருத்துவப் பட்டத்தை பெற்றதன் மூலம். ஆனால் ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஆம். சே மற்றுமொரு பயணத்திற்குத் தயரானார். ஜூலை 7, 1953 அன்று பயணம் துவங்கியது. பயணத்தின் முடிவில், கௌதமாலாவிற்கு செல்லும் முன்னர் சே தனது அத்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தில் [10.12.1953], யுனைட்டட் பழக் கம்பெனியின் (அது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்) செயல்பாடுகள் வாயிலாக ஏகாதிபத்திய முதலைகளைப் பற்றி தெரிந்து கொண்டதாகவும், இவர்களைப் போன்றவர்களை ஒழிக்கும் வரை தான் ஓயப் போவதில்லையெனவும் எழுதியிருந்தார். அனேகமாக தனது குடும்பத்தினரிடம், தனது நிலைப்பாடுகள் குறித்து பகிரங்கமாக அவர் தெரிவித்தது இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.




அம்மாத இறுதியில் அவர் கௌதமாலாவை அடைந்த போது அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன் நில சீர்திருத்தத்தில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். அதன் மூலம் அவர் நாட்டின் பயிரிடப்படாத நிலங்கள் யாவும் பொதுவுடமையாக்கப்பட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிலத்தின் பெரும் பகுதியை கைக்குள் வைத்திருந்த யுனைட்டட் பழக் கம்பெனி, இதனால் பலத்த அடி வாங்கியது. சே மகிழ்ச்சியானார். நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அவருக்கு ஆனந்தம். அங்கெயே தங்கி தன்னைக்- ஒரு புரட்சியாளனாக, போராளியாக- கூர் தீட்டிக் கொள்ளவும் தீர்மானித்தார்.

அங்குதான் -இடதுசாரி எண்ணமுடைய- அமெரிக்க எதிர்ப்பு புரட்சி கூட்டணியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பெரு நாட்டினரான ஹில்டா காடியாவை முதலில் சந்தித்தார். அவர்கள் வாயிலாகத்தான் சே அர்பென்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளோடு அறிமுகமானார். மேலும் தனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நபராகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். சாண்டியாகோ நகரில் இருந்த “ மான்கடா இராணுவக் குடியிருப்பு தாக்கப்படது [ஜூலை26,1953]. இத்தாக்குதலின் போது சேவின் அசாத்திய துணிச்சலையும், திறமையையும் கண்டு சகாக்கள் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். புரட்சிகர எண்ணம் இருப்பினும் ஒரு உயர்குடியில் பிறந்த ஒரு மருத்துவர் எந்த அளவிற்கு யுத்த களத்தில் செயல்படுவார் என்ற நினைப்பு அவர்களிடையே இருந்தது. ஆனால் சேவின் வீரத்தைக் கண்டு அவர்கள் வாயடைத்துத் தான் போயினர். “ சே” எனும் அடைமொழி எர்னஸ்டோவோடு ஒட்டிக் கொண்டது அப்போது தான்.




ஒரு நாடு நல்ல முறையில் இருப்பது அமெரிக்காவுக்கு எப்படி பிடிக்கும்? அதுவும் தனது கம்பெனிகளை வெளியே துரத்தி தனது லாபத்தைக் குறைத்த ஒரு தேசத்தை... நல்லபடியாக அர்பென்ஸின் தலைமையிலான அரசுக்கு கம்யூனிஸ செக் நாட்டிலிருந்து வந்த இராணுவ தளவாடங்கள் குறித்து அறிந்ததுமே, சி.ஐ.ஏ- வுக்கு மூக்கு வேர்த்து விட்டது.
உடனே சகல உதவிகளையும் செய்து கார்லோஸ் அர்மாஸ் தலைமையில் ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நிறுவியது. வழியின்றி அர்பென்ஸ் மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சமடைந்தார். சேவோ அவருக்கு ஆதரவாக போராட ஆவலாயிருந்தார். அவ்வளவு நாள் அமேரிக்காவின் கவனத்தில் இல்லாத சே அதற்கு ஒரு புதிய தலைவலியானார். அமெரிக்காவுக்குத் தான் எதிரிகள் என்றாலே பிடிக்காதே. தனக்கு கட்டம் கட்டப்படுவதை அறிந்து கொண்ட அவர், சமயோசிதமாக அர்ஜெண்டின தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். ஹில்டா கைது செய்யப்பட்டார். [1955ல் சே ஹில்டாவை மணந்தார்]

இந்நிகழ்வின் மூலம் அமெரிக்கா சாதாரணமாக எடை போட்டிருந்த சேவை சரியாகப் புரிந்து கொண்டது. சேவும் அமேரிக்கா தனது நலனிற்காக எந்த அளவிற்கும் இறங்கும் எனும் நிசத்தையும் அவர் கண்கூடாகக் கண்டுகொண்டார்.






மெக்ஸிகொ வந்த சே, திருமணத்திற்கு முன் சிறிது காலம் தனது மருத்துவப் ப்ணியை செய்தார். ஒடுக்கப்பட்ட வறியவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை அவரது மனதை வெகுவாக பாதித்தது. சிறிது காலத்தில் ஜூன் 1955 வாக்கில், பழைய கௌதமாலா நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் வாயிலாக, சே ரால்ப் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவர் பிடலின் சகோதரர் (இன்று கியூப அதிபர் இவரே). அப்போது “ஜூலை26” என்ற புரட்சி இயக்கத்தை நடத்தி வந்தார். ஒரு இரவில் நிகழ்ந்தது பிடலுடனான சேவின் சந்திப்பு. நீண்டதொரு உரையாடலுக்குப் பின்னர், தனது எண்ண அலைவரிசை பிடலோடு மிகவும் ஒன்றிப் போவதை பார்த்து, தனது எஞ்சிய வாழ்க்கை பிடலுடன் தான் என முடிவே செய்து விட்டார்.



படங்கள் : 01. ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன்
02. ஹில்டாவுடன் தேனிலவில் சே
03. ரால்ப் காஸ்ட்ரோவுடன் சே.

சே II - பயணங்களின் காதலன்

Tuesday, April 26, 2011


சே மருத்துவத்தை தேர்வு செய்ததற்கான காரணங்கள் புறவியலாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அத்துறையின் பால் ஒரு உள்ளார்ந்த தேடலால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. 1948 ஆம் ஆண்டு சே பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்திற்குள் மருத்துவம் பயில காலடி எடுத்து வைத்தார். அவர் ஒரு பயணப் பிரியர். ஒரு இடத்தில் இருப்பதென்பது அவருக்குப் பிடித்தமில்லாத ஒன்று. பயணங்களால் நிறைந்தது சேவின் வாழ்க்கை. அவரது மனதில் கனன்று கொண்டிருந்த தீராத தேடல் அவரை பயணங்களின் காதலன் ஆக்கியது. தனது மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் இரு பெரும் பயணங்களை மேற்கொண்டார்.



1950ல் தன்னந்தனியாக முதலாவதாக பயணம் ஒரு மோட்டர் பொருத்திய மிதிவண்டியில். அது ஒரு 4500 கிலோ மீட்டர் பயணம். அதற்கு அடுத்த வருடத்திலேயே அவ்ர் தனது நண்பர் ஆல்பெர்டோ கிரானடோ (அவர் இந்த வருடம் தான் இறந்தார்.) ஏறக்குறைய தென்னமேரிக்க கண்டம் முழுவதையும் கடக்கும் ஒரு மாபெரும் 8000 கிலோ மீட்டர் பயணமாக அது அமைந்தது.



சே எனும் 24 வயது இளைஞனின் பார்வையை மொத்தமாக புரட்டிப் போட்டது இப்பயணமே. இப்பயணத்தின் வழியில் பார்த்த எல்லா லத்தீன் அமெரிக்க தேசத்திலும் ஒரு விசயம் பொதுவானதாக இருந்தது. அது உழைக்கும் வர்க்கம் அடிமைச் சூழலில் சிக்கித் தவித்தது. வழியெங்கும் அவர் விவசாயிகள் நிலக்கிழார்களுக்கு அடிமைகளாகவும், பாட்டாளிகள் பெருமுதலாளிகளுக்கு கீழே உரிமைகள் தொலைத்த கூட்டமாகவும் இருப்பதை கண்கூடாகக் கண்டார். தன் கண்ணெதிரே ஏகாதிபத்தியம் எனும் திமிங்கலம் லத்தீன் அமேரிக்காவை அப்படியே முழுவதுமாக மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கொதித்துப் போனார் சே. ஒருங்கிணைந்த- லத்தீன பாரம்பரியத்தை கொண்ட- ஒரு “ஹிஸ்பானிக் அமெரிக்கா”, எனும் பெரும் கனவு சேவின் மனதை வியாபிக்க ஆரம்பித்தது அந்த தருணத்தில் இருந்து தான்.

வறுமையாலும், பசியாலும் அல்லல்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதல் சேவிற்கு ஏற்பட இப்பயணம் துவக்கப் புள்ளியாக இருந்தது. இப்பயணத்தின் போதுதான், சே தானே பிரியப்பட்டு பெரு நாட்டிலுள்ள தொழுநோயாளிகள் காலனியில் சிறிது காலம் தங்கி அவர்களுக்கு சேவை செய்தார். அவரது பயணக் குறிப்புகள் பின்னாளில் “ The Motorcycle Diaries” என புத்தகமாக வெளிவந்தது. இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் 2004ல் ஸ்பானியத் திரைப்படமாகவும் வெளிவந்தது.



சேவின் சமூகவியல் ரீதியான, அரசியல் ரீதியான பார்வை மாற்றத்திற்கு அப்பயணத்தின் ஊடே அவர் சந்தித்த சில மனிதர்களும் அவர்களுடைய நிலைப்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பயணத்தின் முடிவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிய சே விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார். 1953 ஆண்டு படிப்பை முடித்து டாக்டர். எர்னஸ்டோ ஆனார், சே.



குறிப்பு: படங்கள் அனைத்தும் பிற இணைய தளங்களினின்று பெறப்பட்டது.

சே எனும் விதை- I

Saturday, April 23, 2011



ஒரு மனிதன் தலைவனாக மாறுவது எல்லா சமூகங்களிலும் இயல்பாக நடக்கின்ற ஒன்று. ஆனால் ஒரு மனிதன் ஒரு உணர்வாக மாறுகிற தருணம் மகத்தானது. ஒரு மனிதனே புரட்சி எனும் சொல்லின், அந்த மனோநிலையின் குறியீடாக மாறியிருக்கும் கதையிது.

தேசப் பற்றாளார்களை நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் தமது மக்களுக்காக, தமது தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தந்துள்ளார்கள். நமது பாரதம் உட்பட அனைத்து தேசத்திலும் அதற்கு உதாரண புருஷர்களை நம்மால் எடுத்துக் காட்டிட முடியும். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களுக்காக உழைத்து, ஏகாதிபத்தியத்தை தன் கடைசி மூச்சு வரை எதிர்த்து, அனைத்துலக மக்களின் சமத்துவத்திற்காக தனதுயிரை இத்தரணியில் விதைத்துச் சென்றவன் ஒருவன் உண்டு. அவனது கதை இது.

“ சே!” என்னும் ஒற்றைச் சொல் இன்று ஒரு ஓரெழுத்து மந்திரமாயிருக்கிறது.




அர்ஜெண்டினாவின் ரொசாரொயோ நகரில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி , குவாரா லின்ஞ் மற்றும் செலியா டி லா செர்னா ஒய் லோசா தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தார், எர்னஸ்டோ குவாரா ( இப்பெயரோடு டி லா செர்னா எனவும் சேர்த்து அழைக்கப்படுகிறார்). அவருடைய தகப்பனார் ஸ்பானிய-ஐரிஷ் பூர்வீகம் உடையவர். தாயும் தனித்துவமான பாரம்பரியம் மிக்க ஒரு மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்தவர் தான். பணத்துக்குக் குறைவில்லை. மற்றவரிடமிருந்து தனித்துவமானவர் செலியா. மேட்டுக்குடியில் பிறந்த போதும், அவர் ஒரு இடது சாரி நம்பிக்கைகள் மிக்க ஒரு சோசியலிஸ்டாக, மதஎதிர்ப்புணர்வுள்ள ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். சேவின் பல்வேறு கருத்தியல்களும், பார்வைகளும் உருவாவதில் செலியாவின் பங்கு மகத்தானது. சேவின் தந்தை துவங்கிய தொழில்கள் பலவற்றில் சோபிக்க முடியாமல் நஷ்டத்திலேயே முடிந்தது. எனினும் செலியாவிடம் இருந்த அவரது குடும்ப சொத்து அக்குடும்பத்தின் ஜீவனத்திற்கு ஆனது.



சே எனும் பெயர் எர்னஸ்ட்டோவிற்கு இடையில் தான் ஒட்டிக் கொண்டது. குவாரா எனும் குடும்பப் பெயரொடு இணைத்து ’எர்னஸ்டோ குவாரா’ என்பதே அவரது இயற்பெயர். நமது ஊரில் கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சகா என்று அழைத்துக் கொள்வார்களே, அது போல அர்த்தம் தொனிக்கும் ஒரு பேச்சு வழக்குச் சொல்லே ’சே’ .

வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் சே. அவர் குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அவரை ஒரு சாராசரி லத்தீன் அமெரிக்கனுக்கு இருக்கும் அறிவாளித்தனத்தையும் மிஞ்சிய அறீவுஜீவி சே என வர்ணிக்கிறது. இளமையிலிருந்தே புத்தகங்களாலே நிறைந்த வீட்டில் இருந்து, ஒரு முற்போக்குவாதியான தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததால் இதில் ஆச்சரியங்கள் பெரிதும் இல்லை என்றே கொள்ளலாம்.


துறுதுறு குழந்தையாக இருந்த ’சே’வை அவருடைய இரண்டாவது வயதில் தாக்கிய தீவிர ஆஸ்மா அவரை முடக்கி ஒரு ஓரமாய் சுருட்டிப் போட்டது. தனது வாழ்வின் கடைசிக் கணம் வரைக்கும் பிடிக்காத தோழனாய், அழையா விருந்தினனாய் ஆஸ்மா தன்னுடனே தங்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் தனது தாய் அளித்த நம்பிக்கையினாலும் அவரது கனிவான ஆதரவினாலும், அதனை அப்பாலகன் எதிர்கொண்டான்.
நோயின் தாக்கம் காரணமாக சேவால் எல்லா குழந்தைகளைப் போல தொடர்ச்சியாக பள்ளி செல்ல முடியவில்லை. ஆனால் அவரது தாய் அதனை ஈடு செய்தார். 1930ல் அர்ஜெண்டின தேசத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நாட்டின் அரசியல் நிலை சிக்கலான சூழ்நிலைக்குள்ளானது. சேவின் பள்ளிப் பருவம் முழுவதும் அந்த சூழல் அப்படியேதான் இருந்தது. ஆஸ்மாவை எதிர்த்து போராடி போராடி அசாதாரணமான மன வலிமையை வளர்த்துக் கொண்ட சே, பின்னாட்களில் அதனயே தனது ஆளுமையின் ஒரு மகத்தான கூறாகக் கொண்டார்.




பள்ளிப் படிப்பை முடிக்கிற தருவாயில் சேவின் பாட்டி மரணமடைந்தார். எதிர் காலம் குறித்து பெரிதும் முடிவுகள் ஏதும் எடுக்காத சே மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததற்கு இந்நிகழ்வு முக்கியமானதாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் அவரது தாயார் மார்பகப் புற்று நோயால் அவதியுற்றதும் இன்னொரு முக்கிய காரணமாக முன் வைக்கப்படுகிறது. அவருடைய குடும்பமும் அவ்வேளையில், தலைநகர் பியூனஸ் அயர்ஸிற்கு குடிபெயர்ந்திருந்தது.

சேவின் கல்லூரி வாழ்க்கை அடுத்த பதிவில்...

படங்கள் உதவி: 1. http://www.hey-che.com/quotes-from-che-guevara.html
2. விக்கிபீடியா இணையதளம் [ படத்தில் இடது ஓரத்தில் சே]
3. விக்கிபீடியா இணையதளம் [ 22 வயதில் சே]


கடற்கன்னியுடன் கதைத்தவை

Monday, April 18, 2011




கடல் அழகானது. இரவில் கடல் இன்னும் அழகானது. பணியின் சுமையால் இயந்தரத்தனமான மனித வாழ்க்கையில், நின்று நிதானித்து சுற்றியுள்ள இயற்கையின் எழிலை ரசித்திடவும் பொழுதில்லை, நம்மில் பலருக்கு. அளவற்ற மகிழ்ச்சியை இலவசமாகவே அள்ளித் தரும் இயற்கை அன்னையின் அரவணக்கும் கரங்களை உதறி விட்டு, மிணுக்கும் போலித்தனமான செயற்கைத்தனங்களின் முந்தானைப் பற்றி அதன் பின்னே போகும் மதிகெட்ட பிறவியாக மனித இனம் மாறிப் போனது வருத்தமே.

கவலையால் துவண்ட மனதினை மெல்லிய தென்றலால் துவட்டி புத்தியிரூட்டி மகிழ்ச்சி பொங்க அலைக் கரம் அசைத்து வழியனுப்பி வைக்கும் இலவச மருத்துவ சாலை கடற்கரை. நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான் மனிதனுக்கு பொறுமையில்லை. கரையில் நின்றபடி கால்களை வருடிட காதலோடு வரும் அலைகளை ரசிப்பது ஒரு கலை. இரவின் நிசப்தத்தில், சித்ரா பௌர்ணமியன்று அமைதியான கடல் வீட்டின் முற்றத்தில் தஞ்சம் புகுந்தேன். மனதை மயக்கும் மெல்லிசையாய் அலை ஓசை. போட்டிருந்த கதராடையை நெகிழ்த்தி நெகிழ்த்தி விளையாடியது மென்காற்று. வெளிச்சப் பூக்களை அசைவாடும் நீர் பரப்பில் அள்ளி வீசி அமைதியாய் முழுமதி. தாழ்வதும் எழுவதுமாய் தண்ணீர்; உடைந்த கண்ணாடிச் சில்லுகளைப் போல மின்னிக் கொண்டிருந்தது.

நாடி வருகின்ற யாவருகும் பராபட்சமின்றி நிம்மதி அமிழ்தம் ஊட்டுகின்றாள் இயற்கை அன்னை. அவளின் மகவுகளான நாம் மட்டும் இனத்தால், மொழியால், மதத்தால், நிறத்தால், நாமே வகுத்துக் கொண்ட இல்லாத எல்லைகளால் பிரிந்து தீவுக் கூட்டங்களாய் கிடப்பது முரணே.

அதிகபட்சம் ஒரு இருபது நிமிடங்களே நின்றிருப்பேன் இரவின் மடியில், கடலின் கரையில். அதற்குள் ஒரு வார பணிக் களைப்பை, மனதின் கவலைகளை துரத்தி விட்டது அக்கணம். ஏமாற்றங்களால் அயர்ந்திருந்த இதயத்தின் ரணப்பட்ட துவாரங்களை தனது வசீகரத்தால் அடைத்து, காயம்பட்ட இதயத்தினை மயிற்பீலிகள் கொண்டு வருடுதல் போல நீவி விட்டு இதமளித்தது கடல். மென்மையாய் பாதத்தினை அலையின் இதழ் முத்தமிட, மனமின்றி விடை பெற்றேன். தன்னை விட்டுப் போகும் எனக்கு வாழ்வின் ரகசியங்களையும் தவறவிட்ட அதன் சிறு சிறு அழகுகளையும் காதோரம் முணுமுணுத்து தோள் தட்டி வழியனுப்பி வைத்தது தென்றல்.

பந்தயம்

Sunday, April 17, 2011

வாசிப்பு அனுபவத்தை குறித்து கடந்த பதிவில் நாம் அவதானித்தோம். ஒவ்வொரு முறையும் வாசிப்பைப் பற்றிய சிந்தனை எனது மனதை ஆக்கிரமிக்கும் போது, தவறாமல் கூடவே ஆண்டன் செகாவின் “The Bet” என்ற சிறுகதை நினைவுக்கு வரும்.


ஆண்டன் செகாவ் ( Anton Chekhov, 1860-1904) மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்களுள் ஒருவர். ஒரு மருத்துவராக இருந்த போதும்
படைப்பாக்க உந்துதலால் ஒரு சிறந்த நாடக ஆசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும் மிளிர்ந்தவர் செகாவ். தனது தாய்மொழியிலேயே எழுதி வந்த செகாவை, கான்ஸ்டன்ஸ் கார்னட் (Constance Garnet ) என்பாரது ஆங்கில மொழிபெயர்ப்பின் (1916-1922) வ்ழியாக உலகம் கண்டு கொண்டது. இன்றளவும் இலக்கிய உலகில் சிறுகதை வடிவில் ஒப்புமை கூறமுடியாத அளவிற்கு செகாவின் எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றது. உலகின் சகல மொழிகளிலுமாக சேர்த்துப் பார்க்கையில் ஆண்டன் செக்காவ் எனும் இலக்கிய ஆளுமை, ஆகச் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவராகவே இருக்கிறார்.

இனி கதை.




ஒரு வங்கி அதிகாரி தனது சகாக்களுக்கு ஒரு இலையுதிர்கால மாலையில் அளித்த விருந்தினைக் குறித்து அவர் அசை போடுவதில் ஆரம்பிக்கிறது கதையின் துவக்கப் புள்ளி. அந்த அந்திப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டவர்களில் பலர் பத்திரிக்கையாளர்களாகவும், அறிவு ஜீவுகளாகவும் இருந்தபடியால் பலவற்றை பற்றிய விவாதங்களும் கருத்துக்களும் அந்த சபையில் துவங்குகிறது. அவர்கள் முன்னர் ஒரு விவாதப் பொருளை வைக்கிறார் அதிகாரி. அது மரண தண்டனையை குறித்தது. பலரும் தங்களது கருத்தை அதற்கு எதிராகவே பதிவு செய்கின்றனர். சிலரோ, உலகெங்கும் மரண தண்டனையானது, ஆயுள் முழுமைக்குமான சிறை தண்டனையாக மாற்றியமைக்கப்பட வேண்டுமெனும் கருதுகின்றனர். ஆனால் இவருடைய வாதமோ முற்றிலும் இவர்களது கோணத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது. அவர் அணு அணுவாக ஒருவனை அன்றாடம் கொல்லும் ஆயுள் தண்டனையைக் காட்டிலும் உடனடியாக ஒருவனைக் ஒரு முறை கொல்லும் மரண தண்டனை சிறந்ததே என வாதிடுகிறார்.

இன்னும் சிலரோ, இரண்டுமே நியாயமற்றவை எனவும், ஒரு மனித உயிரை வாங்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு என்கின்றனர். அக்கூட்டத்தில் 25 வயதான ஒரு இளம் வழக்கறிஞனும் இருக்கிறான். இவனது கருத்தை கூறும் முறை வந்ததும் அவன், இரண்டுமே மோசமானதே; ஆயினும் இதில் ஏதெனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிர்பந்தம் ஏற்படின் தான் சிறை வாசத்தை ஏற்பேன் என்கிறான். சாவதை விடவும் எந்த நிலையாயினும் வாழ்வதென்பது சிறந்ததே என்பது அவனது கருத்தாக இருக்கிறது.

இக்கூற்று முற்றிலும் உண்மையற்றது என்று எதிர்க்கும் அதிகாரி சபையினர் முன்னிலையில் ஒரு பந்தயத்திற்கு அவனை அழைப்பு விடுக்கிறார். அதன் படி ஒரு வேளை இவன் 5 வருடங்கள் கடுமையான சிறை தண்டனையை அனுபவித்தால் தான் அவன் இழந்த வருடங்களுக்கு ஈடாக இரண்டு மில்லியன் பணம் தருவதாகவும் அறிவிக்கிறார். அவனோ அதிகாரி சொல்வது மெய்யானால் தன் 5 வருடங்கள் அல்ல 15 வருடங்கள் தனிமைச் சிறையில் இருக்கத் தயார் என்கிறான்.
அவரும் ஒப்புக்கொள்கிறார். அதிகாரி பணத்தையும், இளைஞன் மீண்டும் பெறமுடியாத தனது 15 வருட வாழ்க்கையயும் பந்தயமாக வைக்கின்றனர்.

பணம் படைத்த அதிகாரியோ, தனக்கு இப்பந்தயப் பணம் ஒன்றுமே இல்லையுனவும், ஆனால் அவனுக்கோ அவனது பணயம் வைத்திருப்பது திரும்பப் பெறவியலாத இளமைக் காலமெனவும் கோடிட்டுக் காட்டுகிறார். பந்தய காலத்தில் அவன் எப்போது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம் எனவும், ஆனால் அவன் அவ்வாறு வெளியேறினால் அதுவரை அவன் இழந்த காலம் அவனுக்கு வீணானதே என்றும் தெளிவு படுத்துகிறார். அவனோ எதற்கும் பின் வாங்குவதாக இல்லை. நவம்பர் 14,1870 நள்ளிரவினின்று போட்டி துவங்குகிறது.

அதிகாரியின் தோட்டமொன்றில் இருக்கும் தங்குமிடத்தில், ஒற்றை அறையில் அவன் கடுமையான காவலுக்கிடையே தனது காலத்தைக் கழிக்க வேண்டும். அறையில் வேறு மனிதர்களோ, மனிதக் குரலோ கூட அனுமதிக்கப்பட மாட்டா. தினசரிகளும் கிடையாது. இருப்பினும் இசை கேட்கவும், புத்தகம் வாசிக்கவும் அவனுக்கு அனுமதி உண்டு. பிரியப்படின் கடிதங்கள் எழுதலாம். ஒயின் அருந்தவும் புகைப்பதற்கும் கூட அனுமதி உண்டு. வெளியுலகத் தொடர்பிற்கு ஒரே வழி ஒரு சன்னல் மட்டுமே. அதன் வழியாகவே அவனுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும், உணவு உட்பட. இவையாவும் நிபந்தனைகளாக அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பந்தயம் ஆரம்பமாகிறது.

முதல் வருடத்தில்- அவன் எழுதிய குறிப்புகளின் படி அவன் கடுமையாக தனது தனிமையால் அவதிப்படுவதும் மன அழுத்தத்தினால் அல்லலுறுவதும் அதிகாரிக்கு தெரிய வருகிறது. இரவும் பகலும் சதா காலமும் அவனது அறையினின்று பியானொ இசை வழிந்து கொண்டெயிருந்தது. அவன் ஒயினை மறுக்கிறான். ஒயின் தனது ஆசையை கிளர்த்துவதாகவும், ஒரு சிறைவாசிக்கு ஆசையே முதல் எதிரி எனவும் சொல்கிறான். புகையோ அடைந்து கிடக்கும் அறையின் காற்றைக் கெடுத்து விடுவதால் அதையும் ஒதுக்குகிறான். முதல் வருடத்தில் அவனுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இலகுவான வாசிப்பிற்கு ஏதுவான நாவல்களும் கதைப் புத்தகங்களுமே.

இரண்டாம் வருடம் பியானோ இசை ஊமையானது. வாசிப்பிற்கு அவன் தேர்ந்த நாவல்களையே வேண்டுகிறான். ஐந்தாம் வருடம் பியானோ இசை மீண்டும் வழியத் துவங்குகிறது. அவன் ஒயின் கேட்கிறான்.வெளியிலிருந்து பார்பவர்களுக்கோ அவன் ஒன்றுமே செய்யாது உண்பதும், உறங்குவதும், தனிமையில் தனக்குத் தானே கோபமாக பேசிகொள்வதுமே காணக் கிடைக்கிறது. இரவு முழுவதும் அவன் எதையோ எழுதிக் கொண்டேயிருப்பதும், விடியும் தருணத்தில் அவ்வளவையும் கிழித்தெறிவதும் வாடிக்கையாகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அவன் அழுவதும் கேட்கிறது.

ஆறாம் வருடத்தின் இரண்டாம் பாதியில் அவன் அதிஆர்வத்துடன் மொழிகளையும், தத்துவத்தையும், வரலாறையும் கற்கத் துவங்குகிறான். அவனது வாசிப்புத் தேவையை பூர்த்தி செய்ய அதிகாரி 600-க்கும் அதிகமான புத்தகங்களை வரவழைக்க வேண்டியிருக்கிறது. அக்காலகட்டத்தில் அவன் அதிகாரிக்கு எழுதிய ஒரு கடிதத்தில்,
‘எனது அன்பிற்குரிய சிறை அதிகாரியே, நான் இவ்வரிகளை ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். அந்தந்த மொழி தெரிந்தவரிடம் காண்பித்து நான் என்ன எழுதியிருக்கிறேனென புரிந்து கொள்ளுங்கள். நான் எழுதியவற்றுள் ஒரு குறையைக் கூட அவர்களில் யாரும் சுட்டிக் காட்ட இயலாது. எல்லா கால கட்டத்திலும், அறிவுஜீவிகள் வெவ்வேறு தேசத்தவராய் வெவ்வேறு மொழிகள் பேசியிருப்பினும் அவர்களின் உள்ளத்தில்
எரியும் தீ ஒன்றே. நான் இப்போது எத்தகைய உலகம் சாராத மகிழ்வில் திளைக்கிறேனோ,அதனை நீங்கள் உணர்ந்தால் தான் எனது ஆன்மா உணர்வதை உங்களால் புரிந்து கொள்ள இயலும்.’

பத்தாம் வருடத்திற்குப் பிறகு இருக்கையினின்று அசையாது விவிலியம் மட்டுமே வாசிக்கலானான். அதிகாரிக்கோ கடந்த வருடங்களில் 600 புத்தகங்களை வாசித்து விட்ட இவன் வாசிக்குமளவிற்கு அந்த சிறிய விவிலியப் புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆச்சரியம். விவிலியத்தை தொடர்ந்து அவன் மதங்களின் வரலாற்றையும், இறையியலையும் வாசித்தான். கடைசி இரு வருடங்களில் அவனது வாசிப்பு இன்னமும் புதிரான வகையில் மாறியது. சகலத்தையும் வாசித்திடும் பெரு வேட்கையோடு அவன் இருந்ததாகவே தெரிந்தது. அவனது வாசிப்பு, கைகளில் கிடைக்கிற தக்கைகளை ஒன்றொன்றாக பிடித்தபடி எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வெறியோடிருக்கும் கவிழ்ந்த கப்பலொன்றிலிருந்து தப்பிய ஒருவனது மனோநிலையை ஒத்திருந்தது.

மறுநாள் இரவோடு முடிவுக்கு வருகிறது 15 வருடப் பந்தயம். அதிகாரி முன்னிருந்த நிலையில் இல்லை இப்பொது. தனி வாழ்க்கையில் ஏற்பட்ட நட்டம் என மனிதர் நொடித்துப் போயிருந்தார் இப்போது. இப்பந்தயப் பணத்தை செலுத்துவதன் மூலம் அவர் திவாலாகும் நிலையை அடைவது நிச்சயம். தன்னைத் தான் நொந்தபடி புலம்பிக் கொண்டுதான் நடந்த அனைத்தையும் அசை போட்டபடியிருக்கிறார் இப்போது.

வழக்கறிஞனுக்கு இப்போது 40 வயது. கண்டிப்பாக அவன் ஜெயிக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை மகிழ்வாய் வாழ்வான். நானோ பிச்சைக்காரன் போல... என்ற ரீதியில் அவரது எண்ண ஓட்டம் அவரை கவலையில் ஆழ்த்துகிறது. அவன் என்னதான் செய்கிறான் இப்பொது எனத் தெரிந்து கொள்கிற ஆர்வம் அவருக்கு மிகுதியாகிறது. இத்தனை வருடங்களில் முதன் முறையாக அவனது அறையை நோக்கிப் பயணிக்கின்றன அவரது கால்கள்.

அந்த மழையிரவில் உணர்வு வயப்பட்ட அந்த வயதான அதிகாரி அவனது அறையை நெருங்குகிறார். முதல் முறையாக அவனது சன்னல் வழியாய் உள்ளே பார்க்கிறார். மெல்லிய மெழுகுதிரி ஒளியில், அவன் இவருக்கு முதுகைக் காட்டிய வண்ணம் இருக்கையில் அமர்ந்திருப்பது தெரிகிறது. மேசையில் படபடக்கின்றன திறந்த புத்தகங்களின் பக்கங்கள். அவனிடம் துளி அசைவில்லை, இவர் பார்த்த ஐந்து நிமிடங்களாக. இத்தனை வருட வாழ்க்கை இவ்வாறு சலனமற்று இருக்க அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். திறக்காத அறையை சாவியால் திறக்கிறார். பெரும் ஒலியெழுப்பித் திறக்கும் அறைக் கதவின் ஓசைக்குக் கூட அவனிடம் அசைவில்லை. மெல்ல அருகில் செல்ல அவர் அவனைப் பார்க்கிறார். கன்னங்கள் ஒட்டி, ஏதோ எலும்புக் கூட்டினை போல அமர்ந்தபடியே உறங்கி இருக்கிறான். மேசையில் படபடக்கும் ஒரு கடிதம் இவரது கவனத்தை ஈர்க்கிறது.

அக்கடிதத்தில்,
“ நாளையுடன் எனது சுதந்திரம் இன்னிடமே திரும்பவும் கிடைக்க இருக்கிறது. இவ்வறையை விட்டு நான் வெளிச்சத்தைக் காணச் செல்லும் முன்னர் சில வார்த்தைகள். இவ்வாழ்க்கையும், இச்சுதந்திரமும், நீங்கள் எனக்களித்த எல்லா புத்தகங்களில் இருக்கும் எல்லா நல்ல விசயங்களும் ஒன்றுமே இல்லை. இப்பதினைந்து வருட வாழ்க்கையில் நான் உலக வாழ்வை ஊன்றிப் படித்தேன். நான் உலகையும் மனிதரையும் கண்ணார காணவில்லையே தவிர, புத்தகங்களில் நான் மனம் கமழும் ஒயினை அருந்தினேன், பாடல்கள் பாடினேன், காடுகளில் வேட்டையாடினேன், பெண்களோடு கூடியிருந்தேன்...

கவிஞர்களும் அறிவாளிகளும் உருவாக்கிய மேகத்தைப் போல மென்மையான கவிதைகளையும், கதைகளையும், அவர்களே எனது காதில் இரவுகளில் சொல்லி, எனது மனதை ஆட்கொண்டனர். புத்தங்களில் நான் மலையேறினேன். இயற்கையின் எழில் முழுமையையும் தரிசித்தேன். உங்கள் புத்தகத்தின் வழியாக நான்
முடிவிலாத பள்ளங்களுக்குள் குதித்திருக்கிறேன். புதுமைகள் செய்து, நகரங்களை எரித்து, புது மதங்களை போதித்து, ராஜ்ஜியக்களைப் பிடித்திருக்கிறேன்.

ஆனால் இது எல்லாவற்றையும் நான் புறந்தள்ளுகிறேன். இவ்வுலகம், இந்த ஞானம் அனைத்தும் மாயை, கானல் நீரைப் போல. நீங்கள் ஞானியாக, சிறந்தவராக இருக்கலாம். ஆனால் மரணம் அனைத்தையும் துடைத்தெறியும். உங்களது வரலாறு, வளம்,முடிவிலா அறிவுஜீவித்தனம் எல்லாவற்றையும் இவ்வுலகுடனேயே உறையச் செய்திடும்.

நான் அனைத்தையும் மறுதலித்தது குறித்து தங்களுக்கு புரிய வைத்திட, ஒரு காலத்தில் சொர்க்கமாக நான் கனவு கண்டிருந்த இந்த இரண்டு மில்லியன் பணத்தை மறுதலிக்கிறேன். அதனைப் பெறும் தகுதியை இழக்கும் பொருட்டு, குறிக்கப்பட்ட நேரத்திற்கு 5 மணி நேரம் முன்னதாக நான் வெளியேறி விடுவேன் . . .”

அதிகாரி அக்கடிதத்தை மீண்டும் மேசையிலேயே வைத்து விட்டு, அழுதபடி அவனது தலையில் மித்தமிட்டு வெளி வருகின்றார். அக்கணத்தில் அவர் பங்குச் சந்தையில் இழந்த பணமோ, இதர செல்வங்களோ பெரிதாகத் தெரியவில்லை. அவர் படுக்கையில் வீழ்ந்தும் நீண்ட நேரம் பொங்கும் உணர்வுகளும், கண்ணீரும் அவரை உறங்க அனுமதிக்கவில்லை.

மறுநாள் வெளுரிய முகத்துடன் ஓடிவந்த காவலாளி, சிறையிலிருந்தவன் சன்னலின் வழியாக தப்பித்து போனதாக கூறுகிறான். அதிகாரியோ குழப்பங்களுக்கும், வீண் பேச்சுகளுக்கும் இடமளிக்கா வண்ணம், பணத்தை அவன் மறுதலித்திருந்த அவனது கடிதத்தை தனது பெட்டகத்தில் பத்திரப்படுத்துகிறார்.



இக்கதையினை இசைக்கோர்வையுடன் கூடிய படங்களாகக் கீழே காணலாம்.

வாசிப்பின் மகத்துவம்

Thursday, April 14, 2011



நாம் கல்வி கற்க ஆரம்பித்த பால்ய காலம் தொட்டே வாசிப்பதற்கு நிர்பந்திக்கப் படுகிறோம். சிந்திக்கத் தெரிந்த மனித மனதின் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாக வாசிப்பு இருந்து வருகின்றது. ஆனால் தற்போதுள்ள சூழலில் இளைய தலைமுறையினரிடயே- பொதுவாக பார்க்கும் போது- வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது கண்கூடு. சதா அவர்களின் கைகளில் பாடப் புத்தகங்களைத் திணித்து படி படியென நாம் இம்சிப்பதாலேயே, அவர்களுக்கு புத்தகமென்றாலெ ஒருவித வெறுப்புணர்வு வந்துவிட்டதென நினைக்கிறேன். அதனாலேயே அவர்கள் மொழிப் பாடங்களில் வருகின்ற துணைப் பாடப் பகுதிகள், கவிதைகள் என சகலத்தையும் பாடமாகவே பாவித்து வெறுத்து கடமைக்கென மனப்பாடம் செய்கிற அவலத்தை ஒரு ஆசிரியனாக நான் அன்றாடம் பார்த்த வண்ணம் இருக்க வேண்டியுள்ளது.

என்னுடைய பதின்ம வயதில் நான் கல்லூரியில் இளநிலையில் இருந்த போது முதன் முதலாக கல்லூரி நூலகத்திற்குள் அடியெடுத்து வைத்த தருணம் இன்னும் பசுமையாய் நினைவில் அமர்ந்திருக்கிறது. பள்ளி வயதில் நான் அதிகபட்சமாக வாசித்தது சிறுவர் மலரும், படக் கதைகளும், நீதிக் கதைகளும், ஆனந்த விகடனும் தான். எனது வாசிப்பு அந்த நிலையிலேயே தேங்கி விட்டது. கல்லூரி நூலகத்திற்கு சென்ற தருணம் கூட மிக தற்ச்செயலானதே. வழக்கமாக நானும் எனது நெருங்கிய தோழர்கள் இருவரும், ஆக மூன்று பேராக வலம் வருவோம். அந்த நாளில் அவர்கள் இருவருமே ஏதோ காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை. எனக்கோ தனித்து எங்கும் செல்ல பிரியமில்ல்லை. கால் போன போக்கில் கல்லுரிக்குள் நடை போட்டதில், கால்கள் நேராக அமெரிக்கன் கல்லுரியின் பிரம்மாண்டமான DPM நூலகத்தின் முன் சென்று இளைப்பாறின. புத்தக உலகில் எனது சஞ்சாரம் அப்படித்தான் ஆரம்பித்தது.

துவக்கத்தில் வெறுமனே தகவல் களஞ்சியத்தில் படம் பார்ப்பதில் ஆரம்பித்து, பின்னர் அப்படங்களுக்கு அடியில் இருக்கும் சிறு குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தக தேவதை வாசிப்பு அனுபவமேனும் அமிழ்தம் தர ஆரம்பித்தாள். வாசிப்பு எனது எந்த அளவிற்கு நமது பார்வையை, புரிதலை செம்மைப் படுத்தி, நமது ஒட்டுமொத்த ஆளுமையையும் வளர்த்தெடுக்கிறது என வாசிக்கிற அனைவருமே ஏதாவதொரு கட்டத்தில் உணரலாம்.

வாசிப்பு ஒரு மாயம் போல. வாசிப்பிற்கு முன்பிருந்த ’நான்’ இல்லை இப்போது. எப்படி எங்கணம் மாறினேன் என்பது பிடிபடவில்லை. ஒன்றுமில்லாத தரிசு மனதை சிந்தனை நந்தவனமாக மாற்றிடும் ரசவாதம் வாசிப்பு. ஒவ்வொரு முறையும் புதிய சன்னல்களை திறந்து வைத்து, புதிய பாதைகளைக் காட்டிடும் கைவிளக்கு அது. பொதுவாக நாம் யாருக்காவது, எதற்காவது காத்திருப்பது என்பது யாருக்கும் பிடித்தமான காரியமில்லை. காத்திருப்பது என்பது ஒருவித சலிப்பைத் தருகின்றது. எதனையும் உடனே எதிர்பார்த்திடும் மனித மனம், காத்திருப்பை ஆமோதிப்பதில்லை ஒரு போதும். ஆனால் ஒரு புத்தகம் கைகளில் இருந்தால் நிலைமையே வேறு. கரைகின்ற காலப் பிரக்ஞை இல்லாது எழுத்துக்குள் அமிழ்ந்துவிடும் மனது.

தனிமை மட்டுமே மண்டிக் கிடந்த எனது வாழ்வின் பெரும் பகுதியில் எனக்கு கை கொடுத்தது புத்தகங்கள் தான். எனக்கான உலகம் செய்து நானதில் வாசம் செய்திட வழி விட்டதும் புத்தகங்கள் தான். ஒவ்வொரு முறை ஒரு புத்தகத்தை கைகளில் ஏந்தும் போது அதன் வாசனை நாசியைச் சுண்டுயிழுக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு வாசனை. அது தனித்துவமானது, நங்கையின் கூந்தல் மணத்தைப் போல. கால நேரம் மறந்து சயனம் துறந்து, நிசியைக் தனித்தே கடக்கும் கடிகார முட்களுக்கு துணையிருந்த பொழுதுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

வயது ஏற ஏற நாம் நினைத்திருந்த உலகம் நமது எதிர்பார்ப்பின்படி இல்லாது, தனது சகல நன்மைத்தனங்களையும், பரிசுத்தங்களையும் களைந்து யதார்த்த சவுக்கைச் சுண்டுகிறது. கிட்டத்தட்ட நம்மில் யாருமே இந்த சவுக்கடிக்கு தப்பியிருக்க வாய்ப்பில்லை. நிராயுதபாணியாக இவ்வுலகையும், இவ்வாழ்க்கையையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயங்களுக்குள் தள்ளப்படுகின்றோம். மூச்சு முட்டி நாம் அயர்ந்து போகின்ற போது நமக்கு ஆறுதலாய் சாய தோள் கொடுப்பது வாசிப்பே.

இனி எல்லாம் உண்டு

Tuesday, April 12, 2011



கடந்த 10 மாதங்களாக எனது வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறேன். எனது கவிதைகளை பல சோடி கண்கள் வழியாக, பல இதயங்களுக்குள் குடியமர்த்த வேண்டுமென்ற ஆவல் காரணமாகவே நான் எழுத ஆரம்பித்தேன். எனது ஆசிரியப் பணியின் நிமித்தமாக, என்னால் வலையுலகினுள் அதிக நேரம் செலவிட முடிவதில்லை என்பது உண்மையே. என்னைத் தொடர்பவர்களுடைய வலைப்பூவில் அவர்களுடைய எழுத்துக்களைக் கூட- எனக்கு அதியார்வம் இருப்பினும்- என்னால் வாசித்துத் தொடர முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. ஆயினும் உங்களில் பலர் உங்கள் பணிக்கிடையேயும், வலை உலகில் அதிக நேரம் செலவிட முடிவதைக் கண்டு ஆச்சரியப் படாமல் இருக்க முடிவதில்லை.

நான் தொடராத பட்சத்திலும், எனது எழுத்துக்களை தொடர்ந்து அதனைக் குறித்த பின்னூட்டமும் இட்டு என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் முகம் தெரியாத தோழர் தோழிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த, காதல் நிறைந்த வந்தனங்கள். கழிந்த மாதங்களில் இவ்வலையுலகில் எனக்கு பிரதிபலன் எதிர்பாராத சில நட்புகள் கிடைத்தது எனது பாக்கியம். தோழி ஷம்மி, தோழன் ராஜா, எனது நண்பன் நிரூபன், தொடர்ந்து எனது எழுத்திற்கு எதிர்வினை ஆற்றிவரும் நண்பன் பாலா... இன்னும் நான் சொல்லாமல் விட்ட எண்ணற்ற சகாக்கள்...

மிக சமீபத்தில் நண்பன் நிரூபனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், மிகக் குறுகிய வட்ட வாசகப் பரப்ப்பினுள்ளேயே எனது கவிதைகள் முடங்கி விடுவது குறித்து சொல்லியிருந்தேன். அவர் எனக்கு அனுப்பிய பதிலில் சொன்ன ஒரு விசயம் என்னை யோசனையில் ஆழ்த்தியது. அவர் அதில் நான் வலைப்பூவில் கவிதைகள் மட்டுமே எழுதுவதை குறுகிய வாசக வட்டத்திற்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக் காட்டியிருந்தார். இத்தனை காலமும் எனக்கு இச்சிந்தனை எப்படி வரவில்லை என்று வியந்தேன். எனக்கு கவிதைகள் மீது அலாதி காதல். ஆனால் எல்லொருக்கும் அவ்வகையிலேயே இருந்திட வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை. இந்த எளிய யதார்த்தம் எனது நண்பன் மூலமாகவே எனக்கு உணர்த்தப்பட்டுள்ளது. நிரூபனுக்கு எனது சிறப்பு வணக்கங்கள். நன்றி நண்பா!

எனக்கு சகலத்திலும் நாட்டமுண்டு. எல்லையற்ற கற்றலே நான் கற்க விரும்புவது. அதுவே எனது குழந்தைகளுக்கு நான் போதிக்க விரும்புவதும் கூட. என்னிடமுள்ள ஒரு குறை, காகிதத்தில் எவ்வளவு எழுதச் சொன்னாலும் எழுதிவிடுகின்ற என்னால், தட்டச்சு செய்து அதனை மென்பிரதியாக(Soft Copy) மாற்று வேண்டுமென்றால், இன்று வரை வேப்பங்காய் தான். எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாமை ஒரு புறம் இருப்பினும் எனது சோம்பலும் இதில் சம பங்காற்றத் தவறுவதில்லை.

ஆனால் வரும் மாதம் விடுமுறை காலமாதலால் சோம்பல் துடைத்து தங்களோடு கதைக்க வருகிறான் வருணன்.

வருணன் கவிதைகளாக இருந்த எனது வலைப்பூ இனி

"என் வார்த்தை.. என் குரல்.. என் முகம்.."

என மாற்றம் பெறுகிறது. ஆனாலும் கவிதைகளும் அவ்வப்போது உண்டு. அது எனது பானமாதலால்...

குறிப்பு: எனது பணி இயற்பியல் போதிப்பது என்ற போதும் அதேயளவு- சொல்லப் போனால் அதை விட- ஆர்வம் இலக்கியத்திலும் உலக சினிமாவிலும் உண்டு... ஆதலால் பெரும்பாலும் இவற்றுள் ஏதேனும் ஒன்றின் வழியாக நமது சமூகம், வாழ்வியல், உளவியல் என்ற வகைமைகளுக்குள் செல்லலாம் என கருதுகிறேன்...

என்றென்றும் அன்புடன்,
வருணன்.

ஒவ்வொரு முறையும்

Thursday, April 7, 2011



இதயத்துடிப்பை அறிய நாடிபிடிக்கும்
மருத்துவனைப் போல என் கரங்கள்
பற்றியென் தோள்களுக்கிடையே
சாய்ந்து கொள்வாய்
அப்பொதெல்லாம்
கழுத்துக் காம்பினை கைகளில் ஏந்தி
முகமலர் நிமிர்த்தி
உன் விழியுடன் கரைந்துன்னை நெஞ்சோடு
அணைத்துக் கொள்ள அலைபாயும்
கைகளோடு மனமும்...
ஆயினும் அதிலுனக்கு பிரியமில்லாது
போவதால் தலையுயர்த்தி
வானம் பார்த்து கண்கள் செருகி
விண்ணில் மிதக்கிறேன்
நீ சாயும் ஒவ்வொறு முறையும்.

ம்...

Monday, April 4, 2011



ஆழமாய்
சிலவமயம் சிணுங்கலாய்
உதட்டில் தீட்டிய புன்முறுவலுடன்
நீயுதிர்ப்பாய் ஒற்றை எழுத்தில்
“ம்...”

அதனழகை கவியாக்கும்
ஆவலில் அவ்வெழுத்தின்
உட்புகுந்து
அதன் முடிவிலா பரிமாணங்களைக்
கண்டு மலைத்து களைத்து
வெளிவந்தேன்.

முயன்று தோற்றதன்
சிறுவிளக்கக் குறிப்பாய்
நானெழுதிய இக்கவிதையை
வாசித்ததும் அழகாய் சொல்வாய்
மீண்டுமொருமுறை
என் சிந்தையையும், நினைவுகளையும்
எந்நாளும் நிறைத்திடுமந்த
ம்... !