மீளல்

Friday, February 25, 2011



தூரத்து தொழிற்சாலையின் சங்கொலி
நேர மாற்றத்தை ஊதுகின்றது.
வெளிவரும் ஊழியனின் களைப்பும்
உள்வருபவனின் மலைப்பும்
ஒரு கவிதை புத்தகத்தின்
முதல்,கடைசி பக்கங்களாய்
அருகிருந்தும் மிக தூரமாய்.
பாராட்டப் படாத அவனது
உழைப்பிற்கான ஊதியம் கூட
முறையாய் கிடைக்காத அவலம்
பூசுகிறது சிவப்பின் வண்ணங்களை
சிந்தைக்கு
தொடர்ந்து ஊற்றெடுக்குமந்த
சீவ நதியின் ஊடே கரைதனில்
கேட்கிறது துணைவியின் குரல்
திருப்பித் தர வேண்டிய கடன்களைப்
பற்றிய புகாராய்
மீளல் மிக எளிதாகிறது.
வரள ஆரம்பிக்கிறதொரு சீவ நதி.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (20.02.11) இணைய தளத்திற்கு நன்றி.

முடிவும் பிறகும்

Wednesday, February 23, 2011



கட்டுப்பாடுகளின் மலைமுகட்டின் விளிம்பில்
செய்வதறியாது திகைப்பிலென் பெருங்காமம்
கைகள் முறிபட்ட கடிகாரமொன்று
காலம் நிறுத்தி அருகே ஓய்ந்திருக்கிறது.
காலில் கட்டப்பட்ட சல்லாபப் பாறை
நற்கற்பிதங்கள் மோதி எதிரொலித்து
அதிரச் செய்கிறது மலையை
நம்பிக்கையின் கடைசித் துளி
சொட்டுகிறது நாவில்
நாசிகளில் தீய்ந்த நெடியேற்றி
அபிப்பிராயக் கயிறு
மூர்க்கமாய் பின்னிழுக்கிறது
மனக்களிரின் திமிறும் கால்களை
காமம் வடிந்த கணப்பொழுதில்
சருகான உடம்பு உதிர்கிறது முகட்டினின்று
கீழிருக்கும் பச்சை அடர்வனத்தில் முடியும்
அந்தரச் சாலை வழியே
வானெழுகிறது முகிலோடு காதல் கொண்ட
வெள்ளொளி ஒன்று.



இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

சவுக்கினுள் உறையும் இறை

Monday, February 21, 2011



மூன்றாம் உலகின் பசி தீர்க்க
கருத்தரங்கில் கூடி விவாதித்து
பதினேழு வகை பதார்த்தங்களுடன்
மதிய உணவு முடித்துக் கொள்கிறீர்கள்.
ஐஸ் கட்டிகள் மிதக்க
ஸ்காட்ச் ததும்பும் கோப்பைகளை
கைகளில் ஏந்தியபடி
போர் நிறுத்தங்களின் அவசியங்களை
அவதானித்து அலசுகிறீர்கள்.
மறவாமல் சொல்லிக் கொள்வீர்கள்
‘சியர்ஸ்’ என்று
திரவத்தை விழுங்கும் முன்னர்.
வீடில்லா கூட்டத்தின் குறைகள் களைய
பன்னாட்டு உடன்படிக்கைகளடங்கிய
கோப்புகளில் கையெழுத்திட்டு மாற்றியபடி
நிழற்படமெடுக்க வசதியாய் சிரிக்கிறீர்கள்
குளிரூட்டப்பட்ட கூடங்களில்.
வெளியே பெருங்கூட்டம் கடவுளின்
கருணை கோரி வழிபட்டு கிடக்கிறது
உருகியுருகி
தோழர்களே காலியான கடையின் முன்
பொருள் வேண்டி நிற்பது புரியவில்லையா?
தொழக் குவிக்கும் கரங்களில்
சவுக்குகள் அமரட்டும்.
எங்கும் நிறையும் பரம்பொருள்
சர்வ நிச்சயமாய் இருப்பார்
சுண்டும் சவுக்கினுள்ளும்.

இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

இலக்கற்றுத் திரிதல்

Thursday, February 17, 2011



காய்ந்த சருகுகள்
இலக்கற்று திரிகின்றன
வீசும் காற்றின் இசை கோவைக்கேற்ப
முன்னேறி பின்னேறி
கவிழ்ந்துருண்டு கரணம் அடித்து
எதிர்வரும் சிறுமணற் பள்ளங்களை
லாவகமாய் கடந்தேறி
ஒன்று மற்றொன்றைத் துரத்தி
அணி சேர்ந்து ஒன்றுமற்ற மையத்தை
சுற்றி களிப்பாட்டம் ஆடி
இலக்கின்றியே திரிகின்றன...


இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

குறுஞ்செய்திகள்

Monday, February 14, 2011



1
படுக்கையில் புரண்டபடி
உறங்காமல் நான்
அதே மஞ்சத்தில் ஓர்
ஓரமாய் ஆழ்ந்த்திரையில்
என் கைபேசி
எப்போதுன் வார்த்தைகள்
அதன் மௌனம் கலைக்கின்றனவோ
அப்போது நான் நித்திரையிலாழ்வேன்.


2
துவக்கத்தில் என்னவோ
குறுஞ்செய்திகளாய் தான்...
பின்னரவை மெல்ல
நீண்டு பேச்சுக்களாய் உருமாறும்
குறுஞ்செய்தியெனும்
உடை தரித்தபடி
பெருகும் நேசமும்
பரிகசிப்பும் விளையாட்டுமாய்
நம் பரிமாற்றங்களால் அவை
தொடரும் முடிவற்ற நெடுஞ்சாலையாய்.
நீள்கின்றன நமது முன்னிரவுகள்.
இரவு வணக்கம் சொல்லி
முடித்துக் கொள்ள எத்தனிக்கையில்
மீண்டும் தொடர்வோம்
நம்மில் யாரவதொருவர்.
இறுதியில்
கைபேசியின் பொத்தான்களை
அழுத்தி அழுத்திச் சோர்ந்த விரல்களும்
பார்த்துப் பார்த்து களைத்த விழிகளும்
ஒரு சேர கெஞ்சிட
போனால் போகிறதென
முடித்துக் கொள்வோம்
அன்றைய பரிமாற்றத்தினை
மறுநாளைய சந்திப்பு குறித்த
பீடிகையுடன் !

பிறருக்காக வாழ்பவன்

Saturday, February 12, 2011



பெரும் ரசனைக்காரனாக
தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன்
எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி
நாவிதனின் விரல்களுக்கிடையில்
நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை
ரசிக்காமல்...
தான் பிறருக்காகவே வாழ்பவனென
அவன் சொல்லிக் கொள்வதில்
ஒரேயொரு உண்மையும்
சிலவேறு அர்த்தங்களும்
இருக்கவே செய்கின்றன.



இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (06-02-11) இணைய தளத்திற்கு நன்றி.

பிரிவு-V

Monday, February 7, 2011



அனிச்சை செயல்போல
உன் வீட்டைக் கடக்கையில்
நீயமர்ந்த திண்ணையினை
விழிகள் கழுவிச் செல்லும்.
நீயிருந்தபோது வழியனுப்பிச்
சைகை புரிவாய்
அப்போதுன் முன்னே விழும்
முடி விழுது பற்றியேறி வர
யத்தணித்த தருணங்கள்
நெஞ்சில் நிழலாடும்.
உன்னைப் பிரிந்தென்னால்
இருக்க முடியும்...
முடிகிறது.
உன் நினைவையும் பிரிந்தென்பதை
மறுபரிசீலனைகளுக்கு
உட்படுத்த வேண்டும்.

பிரிவு-IV

Saturday, February 5, 2011



உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு
புகைப்படம் கூட வைத்துக் கொள்ளவில்லையே?!
என்னுலகை முழுமையாய் அடக்க
உறைந்த அந்த ஒற்றை கணம்
எப்படி போதுமெனக்கு?
இவ்வளவு எழுதியும் உன்னைப்பற்றி
வாசிக்கும் இவர்களுக்கெல்லாம்
அறிமுகம் தானே செய்ய முடிகிறது...
உன்னை சிலாகிக்கும் என்
பிரத்தியேக மௌனத்தை எப்படி
இவர்களுக்கு புரியும் வண்ணம்
வார்த்தைகளில் மொழிபெயர்ப்பேன்?!

தெரு பார்த்தல்

Wednesday, February 2, 2011



மாடியிலுள்ளது தனியறை
தனிமை கொல்லும்
விடுமுறை மாலைகளில்
தெரு பார்த்தல் பொழுதுபோக்கு.
சரஸ்வதி உருவம் தாங்கிய
பெரிய சாளரத்தின்
வளைந்த கம்பிகளுக்கிடையே
பார்க்கும் போதாகிலும்
ஆண்களை சுவாரசியமற்றுப் பார்ப்பதும்
நங்கையர் கண்டால் அவயம் தேடுவதுமான
பசித்த கண்கள் ஒரு ஒழுங்கமைவுக்குள்
வராதாவென நினைத்திடும் வேளையில்
வராதென்பது போல சட்டென
மிணுக்கி எரிகிறது மிக அருகிலிருக்கும்
சோடியம் தெரு விளக்கொன்று.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (30.01.11) இணைய தளத்திற்கு நன்றி.