பொரியா முட்டைகள்

Friday, December 16, 2011பற்களுக்குப் பின்னால்
சொற்களோடு அகப்பட்ட நாவை
இதழ் கதவடைத்து இறுகப் பூட்டுகிறது
அதிகாரத்தின் சாவி.

இயலாமையின் உக்கிரத்தில்
விம்மியெழுந்து எழுந்து தாழ்கிறது
பெருமூச்சு கக்கும் நெஞ்சுக்கூடு

தடைகள் உடைத்துப் புறப்படத்
துணிந்திடும் சுயத்தைச் சுற்றி
எழுப்பப்படுகிறது
புதிரான எதிர்காலம் குறித்த
கேள்வியின் மதில்கள்

உறவுகளின் நிலை குறித்த கேள்விகளோ
அம்மதில்களின் பூசப்பட்ட கதவுகளாகின்றன.

குமுறும் சுயம் அடை காக்கிறது
உண்மைக் கரு சுமக்கும்
என்றும் பொரியா முட்டைகளை

மதில்களிப்போது கல்லறைகளாகின.

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Friday, December 9, 2011தனியனாய் கிடத்தல் இனிதென்றிருந்தேன். தனிமையின் இசையே எனது யாழில் வழிந்து கொண்டிருந்தது இதுகாறும். எனை மட்டுமே கொண்டிருந்த எனது பிரபஞ்சத்தினை நிறைக்க என மனவெளி மண்டலத்தைத் துளைத்து வந்து விட்டாள் ஒரு தேவதை. இறை தன் ஆசீர் அனைத்தையும் திரட்டி மொத்தமாய் ஒரே தவணையில் எனது கைகளில் ஒப்படைத்து விட்டார். எனக்காய் அவர் சிருஷ்டித்த பெண்ணே அப்பேராசீர்.

எனக்குத் தெரியும் நீண்ட நாள்- சொல்லப் போனால் மிக நீண்ட நாட்களாயிற்று- நான் வலைப்பூவில் எழுதி. ஏன் உண்மையில் கவிதை கிறுக்கியே வாரங்கள் பலவாகிறது. வாழ்க்கையில் கவிதையெனும் நிலை போய் வாழ்க்கையே கவிதையாகிக் கொண்டிருக்கும் இத்தருணங்கள் என்னைச் சிதறடித்து மிளாசி எறிவதை வெறும் சாட்சி மாத்திரமாய் பார்த்து, ரசித்து, லயித்து, சுகித்து... கழிக்கின்றேன் பொழுதுகள் அனைத்தையும்.

கவிதையில் எனது எழுத்துக்களில் எண்ணற்ற முறை காதலில் திளைத்ததுண்டு அரூபப் பெண்மையை. ஆனால் முதன் முதலாக குருதியும் சதையுமாய் ஒரு பெண் மீது காதல் வயப்படுவது முன்னுவமை சொல்லவியலா அனுபவமாய் இருக்கிறது. அந்த அதீதத்தின் ருசி இருதயம் முழுமையும் தித்திக்கிறது. மூளையின் சகல நினைவறைகளும் பொங்கி வழிய வழிய திக்குமுக்காட்டுகிறது.

“பார்த்தவுடன்
அழகாய் தெரிபவள்
காதலியாகிறாள்.

பழகியவுடன்
அழகாய் தெரிபவள்
தோழியாகிறாள்.”

எனக்கோ இரண்டுமாயும் இருக்குமிவளை என்னென்று சொல்வேன். நாலேழு வயதுவரை காத்திருந்தேன் எனக்கான தேவதையின் வரவிற்காய். முதன் முதலாய் விரிந்த அவளது மென்சிறகு என் முகம் வருடிய கணத்தில் மிகப் புதிதாய் இன்னும் ஒரு முறை பிறந்தது போல் இருந்தது. தனது திராட்சை விழிகளால் என் மனதை மட்டுமன்றி எனை முழுவதுமாய் கொள்ளை கொண்டு விட்டாள் அந்த மாமை நிறத்தாள்.

கண்டதும் காதலென்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இருந்ததில்லை, திருமணத் தகவல் மையத்தில் அவளது நிழற்படத்தை பார்க்கும் வரையில். இரு வீட்டார் கலத்து பேசி முடிவு செய்தபின் நாங்கள் இருவரும் இதயம் கலந்தோம். இரவுகள் எனக்கு எப்போதும் பிடிக்கும். இப்போது இன்னும் அதிகமாய்ப் பிடிக்கிறது. தாளில் கவியெழுதிய காலம் போய் அநுதினமும் முன்னிரவில் அவளுடன் கதைப்பதெல்லாம் கவிதையாகிறது.

வாழ்வின் அடுத்த கணம் ஒவ்வொன்றிலும் ரகசியங்களும், ஆச்சரியங்களும் மட்டுமே ஒளிந்து கொண்டிருப்பதாய் எண்ணியிருந்தேன். பரிசுகள் குறித்து ஒரு போது நினைத்துப் பார்த்ததில்லை. அது சரி எதிர்பாராத தருணத்தில் கிடைப்பவை தானே பரிசுகள். இருப்பினும் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை இப்படியொரு புதையலை... !

தோழர் தோழியரே எனது தோழியும் காதலியுமான அவர் சனவரி திங்கள் 29 ஆம் நாள் என் இல்லாள் ஆகின்றார். அவ்வசந்தத்தினை எதிர்நோக்கியிருக்கும் நாங்கள் உங்களின் ஆசீர்வாதத்தினை வேண்டுகின்றோம்.

இதுவும் ஒன்று

Thursday, November 10, 2011எத்தனை கவிதைகள்
எத்தனை கற்பனைகள்
எத்தனை கனவுகள்
எத்தனை கலகங்கள்
எத்தனை எதிர்பார்ப்புகள்
எத்தனை முன்தயாரிப்புகள்
எத்தனை சூட்சுமங்கள்
எத்தனை சூத்திரங்கள்
எல்லாம்... எல்லாம்...
முடிந்துவிடும் இரண்டு நிமிடத்திற்காய்!
எத்தனை கவிதைகள்
அவற்றுள்
இதுவும் ஒன்று.

கவிதை

Wednesday, October 19, 2011
இல்லாத எல்லைக்குள்
சொல்லாத சொல்லைத்
தேடும் யாத்ரீகனின்
கைவிளக்கு

எண்ண ஊடல்களின்
சொற்கூடல்

கடக்கும் காலனின் நிழல்

கனவுக் கடலை
கடக்கும் தோனி

சிந்தனை நிலங்களடியில்
கணக்கற்ற கனிகளின்
எதிர்காலம் தேக்கியிருக்கும்
ஒற்றை விதை

வாழ்வின் அர்த்தம் வேண்டும்
வார்த்தை யாகம்

கவிஞனின் இருப்பின் சாட்சி

அனைத்துமளித்த அகிலத்துக்கு
அவனது நினைவுப் பரிசு

ஒரு வாழ்க்கையில்
ஓராயிரம் வாழ்வை
வாழத் துடிக்குமவன்
பேராவலின் நீட்சி.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(17.10.11)
இணைய இதழுக்கு உளம் கனிந்த நன்றி.

முத்தத் தத்துவம்

Wednesday, October 12, 2011
உனதிருப்பையும் எனதிருப்பையும்
துறந்து வேரற்று அந்தரத்தில்
உதடுகள் மட்டும் அருகருகே
அவைகளுக்கிடையில் ஒடுங்கும் உலகனைத்தும்
அவைகளே ஓர் உலகமாயும்...
காமத்தின் வாசமறியும் கணங்களில்
மனம் பிளந்து எழுகின்றது
விலங்கறுத்த விலங்கு ஒன்று
உதடுகளில் முளைத்த கண்களனைத்திற்கும்
இணையைத் தவிர வேறேதும் தெரியவில்லை.
இடையிடையே அரவமாய் நாவுகள் அவ்வப்போது
நிலத்தினை நனைத்திட...
நிசி அகவும் பொழுதில்
தூரமிழக்கும் இரு உலகங்களிடையே
காத்திருக்கிறது ஒரு பிரளயம்.
சிற்றின்பத்தில் மதி தொலைக்காதே
மானிடப் பதரே...
கதறும் போதகனின் குரல் கடக்கிறது
செவிகளற்ற உலகத்தினை.
தன்னைத் தொலைக்க கற்றுத் தருகிறது தியானம்
எது செய்கிறாயோ
அதுவாய் இருவென்கிறது சென்.
கவலை கொள்ளாய் இணையே
நாம் தவணை முறையில்
ஞானிகளாகிக் கொண்டிருக்கிறோம்.

இரவை வென்ற விழிகள்

Monday, September 26, 2011
துஞ்சாத கண்களும்
துயிலாத இரவும்
உருட்டிய பகடையில்
விழுந்தது முதல் தாயம்

ஆட்டத்தை துவங்கியது இரவு.

உறங்காத இரவிற்குள்
சலனமின்றி உறங்கிய
கனவு ஏணிகள் வழியாய்
அசுரப் பாய்ச்சலில் நகர்வு.

எதிர்வந்த அரவங்களின்
வாய்தனில் அகப்படாமல்
தாண்டித் தாண்டி
தொடர்ந்தன கண்கள்

மூன்றாம் யாமத்தைத் தாண்டியும்
வெற்றி தோல்வியின்றி
தொடர்ந்த உருட்டல்களில்
எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு
இறுதியாய்
வைகறையின் வாயில் சிக்குண்டது.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(25.09.11)
இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

நான் நிறையாத என் குறிப்பேடு

Friday, September 23, 2011
திறந்தபடியே
இன்னமுமென் குறிப்பேடு

காற்றினில் அலைகின்றது அருகிருக்கும்
அகல் விளக்கின் திரிக் குழாயினில்
ஒட்டிக் கொண்டிருக்கும் துளி சுடர்

தலை சாய்த்து ஓய்ந்திருக்கிறது
மைப்புட்டியிலுள்ள மயிற்பீலீ

என்னைக் குறிப்பெடுக்க எத்தனித்து
இறுதியில் பக்கம் முழுமையும்
நிறைந்த உன்னை
தாடை தாங்கும் கைகளுடன்
இமைக்காமல் பார்த்தபடி நானிருக்க
படபடக்கும் தாள்களின்
வெற்று பக்கங்களோ
எனைப் பார்த்து நகைக்கின்றன.

உன் சாணக்கியம்

Monday, September 19, 2011
வார்த்தைகளால் என்னை விஞ்சிட
முடியாதென்றுனக்கு
தெரிந்ததாலோ என்னாவோ
உன் கயல்விழிகளின்
ஒற்றைப் பார்வையிலென்னை
மௌனியாக்குகிறாய்
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும்
உறைந்த என் மௌனத்தின்
வெடிப்புகளினின்று கசிந்து
வழிந்தபடி என் காதல் மட்டும்...
வார்த்தைகளற்றுப் போன நம் உலகில்
பிறகெப்படிப் பிறந்திடும்
வெற்றிகளும் தோல்விகளும்?

அநுதினமும்

Tuesday, September 13, 2011
அன்னையர் தினம்
காதலர் தினம்
நண்பர்கள் தினம்
தந்தையர் தினமென
இன்னும் பிற தினங்களுண்டு
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
பொம்மைகள், இனிப்புகள்
இத்யாதிகளென
இன்னும் பல உண்டு...
எனக்கோ எல்லாமுமாய் நீயிருக்க
எத்தினத்தில்
உனக்கிவைகளை நானளிப்பேன்?!

யாதுமாகிய யான்

Monday, September 5, 2011
அவள் விழி குளத்தினுள்
நீராடும் என்னையும்
அதன் கரையோரங்களில்
தளும்புமவள் கனாக்களையும்
அன்னல் யான் நோக்கினேன்
அவள் நோக்கா தருணங்களில்

மஞ்சமென நினைத்தென்
மடிதனில் நீ கிடக்கையில்
நின் விழிதனில் மின்னும்
அதே கனவுகளும் ஆசைகளும்

யாதுமானவன் எனக்கு நீயென
வாழ்ந்திடுமென் சகியுனக்கு
வேறெதனைச் சிறப்பாய்
அளித்திட முடியும்
என்னைத் தவிர...?

தனிமை

Sunday, August 28, 2011
போவதாய் பலமுறை சொல்லி
கடைசியாய் விடைபெற்றுச் செல்வேன்
உனக்கு மட்டுமே தெரியுமாறு
மாய பிம்பமாய் என்னை விடுத்து

வீடு சேர்ந்து
சகலரும் துயிலும் வரை காத்திருப்பேன்.

உன்னைப் போன்றதொரு மாய பிம்பத்திற்கான
தேடல் துவங்கும்...
அலைந்து கலைத்த விழிகளும், இருளினுள்
அலசிக் கலைத்த விரல்களும் ஒரு சேர
அமிழ்த்திடுமென்னை மஞ்சத்திலே
வீழ்ந்த மறுகணமே ஓடிவந்து அள்ளும் என்
த னி மை!

நாம் தயாரிக்கும் முகங்கள்

Tuesday, August 23, 2011
தனி மனிதன் தோப்பாக முடியாது. பிடிக்கிறதோ இல்லையோ உயிர்கள் அனைத்தும் ஒன்றாக வாழ்வது வாழ்வியல் தேவையின் நிர்பந்தம். நமது வாழ்வின் அன்றாடங்களில் எத்தனையோ பேரை கடந்து செல்கிறோம். வீட்டிற்குள், அண்டை வீடுகளில், பணியிடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். நம் நேரத்தின் பெரும் பகுதியினை யாராவது ஒருவருடனேயே செலவிடுகிறோம். தனிமையை, பெரும்பான்மையான மனிதர்கள், தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக மட்டுமே இருத்தல் வேண்டுமேன விரும்புகின்றனர்.தேடிக் கொண்ட தனிமையின் ருசி அலாதியானது. ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட தனிமையெனும் விடத்தின் வீரியம் அதனை அனுபவித்தவருக்கு மட்டுமே தெரியும்.

சக மனிதர்களிடம் பழகிய வெகு சில நாட்களிலேயே, அவர்கள் பழகும் விதத்தை வைத்து அவர்களுக்கென ஒரு பிம்பத்தை நம் மனம் தயாரித்து விடுகிறது. அப்பிம்பம், அவர்கள் பழகிய விதத்தை வைத்து,அது குறித்த நமது புரிதலின் அடிப்படையில், நம்முடைய சில அனுமானங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பே. அது அம்மனிதர்கள் குறித்த உண்மைகள் மற்றும் (அவர்கள் குறித்த) நமது ஒரு சில புனைவுகளின் கலவையே என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம். மனித மனம் தனது புத்திக்கு உட்பட்ட அளவுகோல்களை வைத்துக் கொண்டே சக மனிதரை நல்லவர் எனவும், கெட்டவர் எனவும் தரம் பிரித்து அவர்களுக்கான முகங்களை தயாரிக்கிறது.


நாள்தோறும் நாம் மனிதர்களைப் பார்த்து அவர்களுடன் பழகுவதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் நம் மனக்கண்ணால் பார்ப்பது அவர்களுக்கென நாம் பிரத்தியேகமாக தயாரித்த முகமூடிகளையே! இம்முகமூடிகளே அவர்களது விலாசமாகிறது, நமக்கு. இவ்வகையில், எல்லோரையும் ஒருவித பொதுவான அணுகுமுறையுடனேயே நம் மனம் கையாள்கிறது. யாரையும் இதிலிருந்து மனம் விதிவிலக்காக அறிவதில்லை, ஒரு சிலரைத் தவிர. அந்த வெகு சிலரின் மீது நமக்குள்ள பிரியமே அதற்கு காரணம். ஆனால் இந்த விதிவிலக்குகளுக்கான இடங்கள் கூட எப்போதும் தற்காலிகமானவையே. நிரந்தரம் என்று இங்கு எதுவுமில்லை.

எல்லா மனிதர்களும் சூழ்நிலைக் கைதிகள். உணர்வுகள் மேலோங்கிய தருணங்களில் தமது சுய அறிவை, சுயநிலையை இழப்பவர்கள். இது பொதுவான மானுட வாழ்வியல் உண்மை. ஞானிகள், மகான்கள் என நாம் சொல்பவர்களைத் தவிர இது நம் அனைவருக்கும் பொருந்தக் கூடியதே. ஒருவர் ஏதோ ஒரு இக்கட்டான தருணத்தில் நமக்கு இணக்கமாக இருக்கவில்லை என்பதற்காகவும், நமக்கெதிராய் செயல்பட்டு விட்டனர் என்பதற்காகவும், இவர் நமக்கெதிரானவர் என்ற முத்திரையை அவர் மீது குத்தி விடுகிறோம். அதன் அடிப்படையில் இவர் எனக்குப் பிடிக்காதவர் அல்லது இவர் கெட்டவர் என்ற முகமூடியை உடனடியாக தயாரித்து விடுகிறோம். பெரும்பாலும் நாம் உற்பத்தி செய்த இத்தகைய பிம்பங்களை நாம் மறுபரிசீலனைகளுக்கு உட்படுத்துவதே இல்லை. எடுத்த முடிவுகள் முற்றிலும் சரியானவையே என்ற கருத்தில் நமது அளவுகோல்களை இறுக்கிக் கொள்கிறோம்.

இந்த நிலைக்குப் பிறகு அம்மனிதரைக் குறித்த நமது அபிப்ராயங்கள் பெரும்பாலும் அவரது அப்போதைய செயல்பாடுகளை அடிப்படையாகக் கொள்வதைவிட, முன்னரே நாம் அவருக்காய் தயாரித்திருந்த முகமூடி தரும் சாயலைப் பொருத்தே அமைந்து விடுகின்றன. பல சமயங்களில் பிறர் குறித்த நமது தீர்ப்புகள் இதனடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு வேளை- கால ஓட்டத்தில்- நாம் கெட்டவர் எனக் கருதியவர் உண்மையாகவே தன் பிழையுணர்ந்து திருந்தியிருப்பதர்கான சாத்தியங்கள் இருக்கும் போதும், அதனை நம் மனம் நம்பி ஏற்க மறுக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள பல மனிதர்கள் குறித்த, இனக் குழுக்களைக் குறித்த, குறிப்பிட்ட சமூகத்தினைரைப் பற்றிய, நாட்டவரைக் குறித்த கருத்தியல்கள் இதன் அடிப்படையிலேயே நாம் உருவகித்துக் கொள்கிறோம். நாளடைவில் இந்த உருவகங்களே ஆழமான கொள்கைகளாக, அசைக்க முடியாமல் ஆழமாய் வேறூன்றிய நம்பிக்கைகளாக ஆகிவிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்த அனைவரும் முரடர்கள், இஸ்லாமியர் அனைவரும் தீவிரவாதிகள்... இது போன்ற உண்மைக்குப் புறம்பான எண்ணற்ற கருத்தியல்களை உதாரணங்களாக நாம் கூறலாம். இது நமது உலகியல் பார்வையை எவ்வளவு குறுகலாக வழி செய்கிறது என தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். உலகின் பெரும்பான்மையான சண்டைகளும் பிரச்சனைக்கும் (அது இரு தனி மனிதருக்காயினும் அல்லது இரு நாடுகளுக்காயினும்) ஊற்றுக்கண்ணாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர புரிதல் இல்லாமையினாலேயே. அதற்கு காரணம் சில நேரங்களில் நாம் தயாரிக்கும் இந்த முகங்களாகவும் இருக்கலாமே! சிந்தனை செய் மனமே!

ஈதல்

Thursday, August 18, 2011பிரபஞ்ச ரகசியங்களை
தன் அதரங்களில் ஒளித்து வைத்து
நிபுணி போல் வகுப்பெடுக்கிறாள்
தனக்கே தெரியாமல்...

தோள்கள் குறுக்கிய விலங்கின்
ரோமங்கள் நெகிழ்த்தி
சிறகுகள் மறந்த பறவையொன்றின்
இறகுகள் நீவுகிறாள் இதமாக,
பறத்தலுக்கான ஆயத்தமாய்

இடை யிடையே உறங்கிடும்
மகரந்தங்களை துயிலெழுப்பும்
சூட்சுமங்கள் கைகூடுமவளுக்கு
அனாயசமாக
முன்தயாரிப்புகள் ஏதுமிலாமலேயே

இந்த ரகசியங்களை
அவள் செவிமடல் வருடும்
இடைவேளைகளில் சொன்னால்
அப்படியாவென ஆச்சரியம் கூட்டுகிறாள்
கரங்கள் குவித்து வாய்பொத்தி
தேனடை காக்கும் சிறுவெண் மதிற் பற்கள்
மறைத்தும்
கன்ன மேட்டில் வெட்க வெளிச்சம்
படர விளக்குகள் ஏற்றியும்

கணங்கள் யுகங்களாகும் ரசவாதத்தின்
ஆதி நொடியில்
கரைகள் குறித்த கவலைகள் துறந்து
திசையறியா யாத்திரையில் என்னுடல்
காமப் பெரும்புனலின் இசைவிற்கேற்ப.


யாதுமாகிய நீ

Saturday, August 13, 2011நாட்டியக்காரியின் சலங்கையின் பரல்களில்
நர்த்தனமாடும் ஒலியாய் நீ வெளிவருகிறாய்
பாடகனின் குரலோடு குழைந்து வந்து
செவி சேர்கிறாய்.
ஓவியனின் தூரிகையில் வண்ணமாய் வழிந்து
அப்படைப்பின் உயிர் நாதமாகிறாய்
வீணையின் நரம்பில் இன்னிசையாய்
தெறித்து செவிகள் வருடுகிறாய்.
மலர்களின் மணமாய் நாசிகள் நிறைகிறாய்
யாதுமாயிருக்கும் நீ என்னுள்
எப்படியிருப்பாய்?
என் உணர்வுகளெல்லாம் திரட்டினேன்
அவ்விடத்தே நீயிருந்தாய்.


பகற் கனா

Monday, August 8, 2011
மோன நிலையோ யோக நிலையோ
நானறியேன்.
இமை விரித்துப் பார்க்கையிலே
தடாகமொன்றின் கரைதனிலே
தலைகுப்புற நான் கிடந்தேன் தனியனாய்
என் விழி நீர்க் கண்ணாடியின்
பிம்பத்தை வருடிச் செல்கிறது
அதன் ஒரு ஜோடி விழிகளுக்குள்
உறைந்த நிழற்படம் போல நீ...
தங்க மீன்கள் என் விழிகளுக்குள்
துள்ளிக் குதிக்கின்றன.
உன்னையவை உண்ண எத்தனிக்கையில்
என் கைகளுயர்த்தி கண்ணாடியை நானுடைக்க
நீ நீரோடு கரைந்து என் மீது
தெரித்துச் சிதறினாய்.
பிம்பமாய் கிடந்த நீ மீண்டுமொருமுறை
வழிந்து என் மீதே உறையத் தொடங்குகிறாய்.

நீட்சி

Sunday, July 31, 2011
நீண்ட பரிசீலனைகளுக்குப்
பின்னர் பரிச்சயமாகிக்
கொள்கின்றன நம் விரல்கள்
நடைபயிலும் சிறு மழலை போல
இறுகப் பற்றியபடி

துவக்கத்திலிருந்த கணநேரத்
தயக்கங்களினின்று விடுபட்டு
உன்னுடையதும் என்னுடையதுமான
விரல்கள் மெல்ல இதழ் சேர்கின்றன.

இடைவெளிகள் துறந்து
கைகள் ஸ்பரிசித்த கணம் தொட்டு
கவிதையாக உருமாறுகிறது
மிகச்சாதாரணமாக
ஆரம்பித்த அப்பயணம்...

கரங்கள் பிரிந்தும்
நீட்சியுருகின்றதது
ஒரு கனவின் நிழலாய்.

பெண்ணில் வீழ்கின்ற நொடிகள்

Tuesday, July 26, 2011
நகக்கண்ணின் நுனியினின்று
புறப்படுமந்த குறுந்தீண்டல்
ஆதவனின் முகம் மறைக்கும்
முகிலினத்தால் தரையில் படரும்
மங்கலான வெயிலினைப் போல

நீர்தேடும் வேராக தேடிடும்
நகப்பூச்சுக் கால்கள்
இணை கால்களை

வேனிற் காலங்களில் கவிழும்
நிழல் போல பரவுமந்த
விழியின் மௌன மொழிகள்

அருகிலிருக்கும் பொழுதுகள்
அவ்வப்போது வாய்த்திடினும்
பெண்ணில் வீழ்கின்ற நொடிகள்
எப்போதாவதுதான் வாய்க்கின்றன
அனுமானங்களுக்குள் அகப்படாமல்
வழக்கம் போலவே.

நதிமூலம்

Monday, July 18, 2011கவிபுனைய ஆரம்பித்த
காலந்தொட்டே என்னுள் நீ
இருந்திருந்தால்
இன்னும் புனைந்திருப்பேன் ஆயிரமாயிரம்.
கண்ணெதிரே பிரம்மாண்ட விருட்சமாய்
வானம் மறைத்து
கிளைகள் விரவிக் கிடக்கிறாய்
இப்போது
உன் நிழலடியில் நின்று
உன்னுயரம் பார்த்து
மலைத்துச் சலிப்பதிலேயே
கழிகின்றதென் பொழுதுகள்
என் கவிக்கனிகளை ருசிப்பவர்க்கு
எப்படிச் சொல்ல முடியுமென்னால்...
என் மரத்தின் வேர்கள்
உன் நிலத்தினுள் புரையோடிக் கிடப்பதை?

ஏதாவது சொல்

Wednesday, July 13, 2011
அடுத்தது...
ஏதாவது சொல்...
என்றழகாய் உதிர்ப்பாய்
மூன்றே வார்த்தைகளை

அவைகளோ தம் கைகோர்த்து
உலையில் விழுந்துருகி சாவிகளாகி
இதயப் பூட்டினைத் திறந்திடும்.

நீயுதிர்க்கும் இவ்வார்த்தைகளென்ன
என் மன அணையின் மதகுகளை
உயர்த்தும் தாழ்களோ?

உனக்காகவே பிறவியெடுத்தது போல்
வழியும் வார்த்தைகள்
உன்னில் முக்தியடையாது
எங்கே செல்லும்?!

விழிகள் வழியாய்
கைபேசியினின்று வந்த வார்த்தைகள்
தடம் மாறி தற்போது செவி வழி
நம் சுயம் சேர்கின்றன.

முன்னிரவில் நம்மிடையே
பறக்கத் துவங்கிய வார்த்தைப் பறவைகள்
மூன்றாம் சாமத்திலும் பயணத்தை
முடிக்க மறுக்கின்றன.

பின்னிரவிலும் நட்சத்திர நண்பர்களோடு
விழித்தபடி நாம்
அறையின் மின்விசிறிகள் நமக்கு
தோழர் தோழியராய்

அருகிலில்லாத போதே தெரிகிறது
நமது வாழ்வில் ஒருவர் மற்றவரது
இருப்பின் தேவை.

எங்கே நானிப்போது கேட்கிறேன்...
ஏதாவது சொல்... !

திரைவிமர்சனங்களின் மீதான ஒரு விமர்சனம்

Thursday, June 30, 2011
எத்துறை சிறப்படையவும் அதன் நிலையினின்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும் விமர்சனம் இன்றியமையாதது. அவ்விமர்சனத்தின் தரமும் அதனை எழுதும் விமர்சகனின் பொறுப்புணர்வும் அத்துறையை மென்மேலும் வலுப்படுத்தும். நான் சரியாக ஒரு வருடத்திற்கு முன்னரே பதிவுலகினுள் காலடியெடுத்து வைத்தேன். எனது ஆர்வம் கவிதைகளில் மையம் கொண்டிருந்த போதிலும் அவ்வப்போது நான் மற்றவற்றையும் வாசித்ததுண்டு. அதில் பெரும்பான்மையாக நான் வாசித்திட முற்பட்டது சினிமா விமர்சனங்களெ. அது எனக்கு சினிமா எனும் கலைவடிவின் மீதிருந்த அதீதக் காதலால் வந்த உந்துதல். ஆனால் எனது கழிந்த வருட வாசிப்பனுபவத்தில், நான் வாசித்த நேர்த்தியான சினிமா விமர்சனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அரிதாக வாசிக்கக் கிடைத்த சில விமர்சனங்களை எழுதிய பதிவர்களின் வலைப்பூக்கள் பலரால் பார்க்கப் படாமலேயே விடுபட்டிருப்பது கவலை அளிப்பதாகவே இருந்தது.

ஒரு சினிமாவை உள்வாங்கிட அவகாசம் ஒரு தீவிர பார்வையாளனுக்கு அவசியம் தேவை. ஆனால் நான் கண்ட பல பதிவர்கள் முதல் ஆளாய் விமர்சனம் எழுதுவதில் காட்டிய தீவிரத்தையும் கவனத்தையும், எழுதப்படுகின்ற விமர்சனத்தின் உள்ளடக்கத்தில் நேர்த்தியைக் கொண்டுவருவதில் காட்டியதாகத் தெரியவில்லை. மற்ற எந்த கலைப் படைப்பை விடவும் சினிமாவுக்கே அதிக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஒரு நேர்த்தியான விமர்சனம் என்பது ஒருவர் கண்டு களித்த திரைப்படத்தின் மொத்தக் கதையையும் தமது சொந்த வார்த்தைகளால் சொல்வது அல்ல. அது கதை சொல்லலே. மாறாக அது விமர்சனமாகாது. சிலரோ தாங்கள் பார்த்த படைப்பில் தங்களைக் கவர்ந்த வசனங்களை தங்கள் விமர்சனப் பிரதிகளில்(!) நிரப்புகின்றனர். அது அப்பதிவை எழுதுகின்ற ஒரு தனி நபரின் ரசனையின் பேரிலான பகிர்வு. அதனையும் பலர் விமர்சனமாக கருதுகின்றனர்.

சினிமா என்பது ஒரு கலை வடிவம். கலை எந்த வடிவில் இருப்பினும் அதன் மையம் ஒரு கருத்தியலை முன்வைப்பதே[ சினிமாவில் சில வேளைகளில் அழகியல் பார்வையிலும், வடிவ ரீதியிலான சோதனை முயற்சிகளின் அடிப்படையிலும் அமைகையில் அப்படைப்பில் கருத்து இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை]. சொல்ல விழையும் கருத்தினை மையப்படுத்தியே அந்தந்த கலைவடிவிற்கு ஏற்றார் போல அதன் வடிவம் கட்டமைக்கப் படுகிறது. உதாரணமாக சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் (Visual Medium). எனவே ஒரு இயக்குனன் தான் சமூகத்தின் பார்வைக்கு வைத்திட விரும்பும் கருத்தினை ஒரு கதையின் வழியாக முன் வைக்கிறான். அக்கதையாடலை காட்சிகளாக முன் வைக்கிறான். அதற்கு திரைக்கதை ஒரு சட்டம்(Framework) போல உதவுகிறது. திரைமொழி தனித்துவமானது. அதன் கூறுகளை, தனித்துவத்தை, சிறப்பியல்புகளை புரிந்து கொள்ளாமலேயே பலர் விமர்சகனின் தொப்பிகளை தலையில் மாட்டிக் கொள்கின்றனர்.

ஒரு படைப்பாளன் ஒரு சினிமாவை எடுத்து முடிக்கும் வரையில் மட்டுமே அதன் மீது உரிமை கொண்டாடிட முடியும். அதனை முழுமை செய்து சமூகத்தின் பார்வைக்கு வைத்த கணத்திலிருந்து அந்த தனியுரிமையை இழக்கிறான்[ இதைத்தான் இலக்கியத்தில் ”Author is dead” எனும் கருத்தக்கத்தில் சொல்வார்கள்]. இப்போது அது எல்லொருக்கும் பொதுவான படைப்பாகிறது. அதனை விமர்சிக்கும் உரிமை அகலருக்கும் உள்ளது. இது எந்த கலைப் படப்பிற்கும் பொருந்துகின்ற பொது அம்சம்.

ஆனால் நாம் முன்வைக்கின்ற விமர்சனம் அதன் மையம் குறித்த அலசலாக, அதன் கருத்தியல் குறித்த விசாரணையாக இருத்தல் அவசியம். அதுவே அப்படைப்பை தரமான முறையில் ஆய்வு செய்து அதன் வாயிலாக வாசகருக்கு படைப்பினை ஒட்டிய சிலவற்றை முன்வைத்து, அவர்களும் அறிந்து கொள்ள உதவிடுவதாக அமையும்.

ஆனால் நான் வாசித்த 95%க்கும் அதிகமான விமர்சனங்களில் அந்த சினிமா முன்வைக்கிற கருத்தியல் அலசப்படவே இல்லை. ஏன் அவற்றை தொடக்கூட இல்லை. நான் வாசித்ததில் எனக்கு கவலை அளித்த விமர்சனங்களில் இன்றளவும் மனதில் இருப்பது யுத்தம் செய், நடுநிசி நாய்கள் போன்ற படங்களின் விமர்சனங்களே. சமீபத்தில் ஒரு நண்பரின் ’ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் விமர்சனமும் எனக்கு வருத்தமளிப்பதாகவே இருந்தது.

ஒரு பதிவர் யுத்தம் செய் படம் கொரியப் படங்களின் வாந்தி என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற சித்ரவதைக் காட்சிகளை,இயக்குனர் மிஷ்கின், பல கொரிய சினிமாக்களின் காட்சிகளைப் பார்த்து அப்பட்டமாய் பிரதியெடுத்திருந்தார் என்பதே அவரது பதிவின் சாராமசம். அதற்கு நானளித்த பின்னூட்டத்தை இங்கு மீள்பதிவு செய்கின்றேன்

“நண்பா... ஒரு படத்தை பிரதி எடுப்பதற்கும் பாதிப்பில் உருவாக்குவதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இப்படித்தான் முன்பு புதுப்பேட்டையை City of God என்றார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. இப்போது ஏதாவதொரு gangster சினிமாவை Godfather சாயலின்றி, அதன் நினைவு பார்வையாளனுக்கு வராதவாறு எடுக்க முடியுமா? சினிமாவில் ஒரு இயக்குனன் முன் வைக்கிற கருத்து எவ்வளவு முக்கியம் என்பதை விமர்சனம் எழுதுகிறவர்கள் 90% பேர் விவாதத்துக்கே எடுத்துக் கொள்வதில்லை. ஒரு படைப்பாளி சித்ரவதை காட்சியொன்றை தனது கற்பனா சக்தியை விரயம் செய்து எடுக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு இயக்குனனிடமும் அவனது படைப்பிடமும் அதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

சொல்கிறேன் என்று வருத்தம் வேண்டாம். நானும் கவனித்திருக்கிறேன். விமர்சனம் எழுதுகிற பலர் இப்படம் இந்த மொழி படத்திலிருந்து பிரதியெடுக்கப்பட்டது என சொல்லும் போது, அதன் மூலமாக தாங்கள் இத்தகைய அயல் சினிமாக்களை பார்க்கும் அளவிற்கு ரசனை அதிகமுள்ளவர்கள் என பறைசாற்றிக் கொள்வதான தொனியிலேயே எழுதுவதாக தோன்றுகிறது. தங்களின் மனம் நோக சொல்லியிருந்தால் வருந்துகிறேன்.”

யுத்தம் செய் படைப்பின் மையமாக நீங்கள் எதனை நினைக்கிறீர்கள்? அதனை எவ்வாறு அணுகுகிறீர்கள்? அது இன்னுமொரு Thriller சினிமா என்றா?! அக்கதையின் வாயிலாக அப்படைப்பு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. பணம் கொழுத்த மேட்டுக்குடியினர், தமது வக்கிரத்திற்குத் -அப்பாவியாக,கொட்டக் கொட்டக் குனிந்து கொண்டிருக்கும், அதீத அறிவு வாய்க்கப் பெற்ற- நடுத்தர வர்க்கத்தினரை இரையாகின்றதைப் பதிவு செய்கின்றது. அதோடு நில்லாமல் ஒரு வேளை குனிந்து கொண்டுருப்பவர்கள் நிமிர்ந்தால், நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டு ஓடும் அவர்கள் நின்று திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறது. அதுவே அப்படைப்பின் அடிநாதம். அதனைப் பிரதிநிதிப்படுத்தும் விதமாக, இயக்குனர் ஒரு மருத்துவரின் குடும்பத்தின் கதையினை, அவர்கள் அனுபவித்த கொடுந்துயரை, அதனால் வெகுண்டு அந்த சாதுக்கள் மிரள்வதையும் அதனை மனித விலங்குகள் மலிந்த இந்நகரக் காடு கொள்ளாததையும் முன்வைக்கின்றார்.

இங்கு நான் இப்படத்தை ஒரு உதாரணத்திற்கே எடுத்துக் காட்டியுள்ளேன்.இது போல எண்ணற்ற எடுத்துக்கட்டுக்களை என்னால் சுட்ட முடியும். சிந்தனை செய்வோம். வரும் காலங்களில் அர்த்தமுள்ள விமர்சன உரங்கள் விழுந்து நமது ரசனை நிலங்கள் பண்பட்டும்.


குறிப்பு : இப்பதிவின் நோக்கம் எந்த தனி மனிதரையும் புண்படுத்துவதற்காக அல்ல. மாறாக நமது பார்வை ஆழமாக வேண்டும், விசாலப்பட வேண்டுமென்ற ஒரு ஆவலின் விழைவே.

சமன் விதி

Sunday, June 26, 2011பிடிகள் தேடி கைகளும்
ஆதாரங்கள் தேடி கால்களும்
அலையும்
உயிர்வளிக்காய் பிதற்றும்
நுரையீரல்கள்...
வெள்ளி மறைந்து
நாளை குறித்த ஐயங்கள்
முளைக்கையில்
எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி
தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும்.
பெருவேதனைக்குப் பின்னே
பிரசவித்த மகவு கண்டு
வலி மறந்து
புன்முறுவல் பூப்பாள்
சில நொடிகளுக்கு
முன் பிறந்த அன்னை.

உண்மையான நான்

Sunday, June 19, 2011தினமும் உடை மாற்றிடும்
துணிக்கடை பொம்மை போல
வாழ்க்கை அன்றாடம் எனக்கு
முகங்களை மாட்டி விடுகிறது
எனது அனுமதியின்றி
சில நேரம் அழகாயும்
பல சமயம் விகாரமாயும் முகங்கள்.
ஒவ்வொரு மனதிலும்
ஒவ்வொரு கோட்டோவியமாய்
படிகின்றதென் சுயம்.
இதில் எது உண்மயான நான்?

கணமேனும்

Wednesday, June 15, 2011குழந்தைகள் பற்றிய
எந்த கவிதையையும்
நினைக்கையிலும் வாசிக்கையிலும்
வரிகளினூடே திரிகின்றனர்
எண்ணற்ற குழந்தைகள்.
நமது குழந்தையோ
நண்பரின் குழந்தையோ
எதிர் வீட்டுச் சிறுமியோ
பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ...
நினைவுகளில் புதையுண்டு
கனவுகளில் பிறப்பெடுக்கும்
தொலைந்த நம் பால்யமோ...
அலங்காரங்கள் அவசியப்படாத
எந்த குழந்தையைப் பற்றிய
கவிதையையும் சுகிக்கையிலும்
எழுதுகிற நானும்
வாசிக்கிற நாமும்
மீண்டும் மழலைகளாகிறோம்
கணமேனும்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(12-06-11)
இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றி.

மதராசப் பட்டிணம்

Saturday, June 11, 2011ஒரு சராசரி தமிழனின் கனவு மூட்டைக்குள் கண்டிப்பாக இருக்கும் ஒரு பொன் முட்டை. கனவுகள் பலவிதம். திரை நட்சத்திரமாக வேண்டுமெனவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலொச்சி லட்சங்களில் சம்பாதிக்கும் ஆசைகளுடனும் ஒரு கூட்டம் ஒரு புறம். அன்றாட வாழ்வின் தேவைகளை இப்பெருநகருள் பூர்த்தி செய்து கொள்ள திண்டாடும் ஒரு பெருங்கூட்டம், மறுபுறம். உயர் நடுத்தர நண்பனொருவனின் அழைப்பின் பேரில் பல ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு வந்துள்ளேன்.


பேருந்து நிறுத்தங்களில் நீங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு இளைஞனின் மனோநிலையுடன் இருக்கும் போது, காரில் பயண்ம் செய்வதென்பது சற்று தர்மசங்கடமான தருணமாகவே எனக்கு இருந்தது. பின் மாலைப் பொழுதுகளில் தோழனுடன் வெளியே செல்கையில், தெருவெல்லாம் நிறைந்திருக்கின்றன முகங்கள். கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்திடும் முகங்கள். பணிச்சுமை மூடை மூடையாய் ஏற்றி வைத்த அசதி படர்ந்த முகத்துடன் எண்ணற்ற ஆத்துமாக்கள். சொகுசு வாகனத்தின் வெளியே இருப்பவனின் மனோநிலையில் இருந்து கொண்டு குளிரும் வாகனத்தின் உள்ளே கசியும் இசையினூடே அமர்ந்தபடி அவனயே பார்ப்பது மிகவும் இக்கட்டான சூழல் கொண்ட ஒரு அனுபவமாக இருந்தது.

காசு வைத்திருப்பவனுக்கு மட்டுமே ஆனந்தம் அருளும் மெட்ரோ நகரங்களுக்கு சென்னை ஒன்றும் விதிவிலக்கல்ல. வயிற்றின் பசி கண்களில் தெரியும் ஆத்மாக்கள் வாழும் இதே நிலத்தில், நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியில் வலியச் சென்று சிக்கி அதன் அத்தனை பரிமாணங்களையும் ருசித்திடத் துடிக்கும் ஆத்மாக்களும் வாழ்கின்றனர். கடக்கின்ற யுவதிகளில் பெரும்பான்மையோர் அயற்சியால் தளர்ந்த நடையுடன் யாருடனோ அலைபேசியில் கதைத்தபடி. மனிதர்கள் (கிட்டத்தட்ட) அனைவருமே யந்திரர் போல நடமாடுகின்றனர். மனிதமும், சக மனித வாஞ்சையும் தளும்பும் முகங்கள் கிடைத்தற்கரியவை இந்நகரத்தில். பார்வைகள் இரண்டு விதம். ஒன்று ஏக்கப் பார்வை. இதனைச் பெரும்பான்மையாய் பார்க்கலாம். மற்றது பெருமிதப் பார்வை. இப்பார்வையைச் சுமக்கும் முகங்களில் கொஞ்சம் கூட தெரிவதில்லை, அவர்கள் அப்பெருமிதத்தை தங்கள் நிம்மதியை அடகு வைத்தே அடைந்தனர் எனும் உண்மையின் நிழல். ஒரு வேளை அவர்களே அதனை மறக்க முயல்கின்றனரோ?

அண்ணா சாலையின் உயரமான வியாபார மையங்களை கடக்கிறது எங்கள் வாகனம். ”நண்பா, எக்ஸ்பிரஸ் அவென்யு போயிருக்கியா?” என தோழனின் குரல். இல்லை என நான் தலையை இடமும் வலமும் அசைக்க, சொன்னான், “ நாளைக்குப் போகலாண்டா”... சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தின் ஒரு வசனத்தை அனிச்சையாய் முணுமுணுத்தது உதடுகள்... “என்ன வாழ்க்கடா இது?!”

அவனது அன்றாடம்

Friday, June 10, 2011ஒரே உடுப்பு
ஒரு அழுக்கு மூட்டை
இவனை தரிசிக்காமல்
கடவுளைப் பார்ப்பது இயலாதது.
உண்டு பார்த்தாரில்லை
கொஞ்சம் தேநீர்
சில விள்ளல் பிரசாதம்
பணமிருந்தால் மாலையில் கஞ்சா
அல்லது பீடி
பிரகாரம் நோக்கி மறந்தும்
திரும்பியதில்லை விழிகள்.
ஆட்கள் கடக்கையில் ’சாமி’என்பான்.
அதிக சில்லரை தருபவரிடம் சிரிப்பான்
நிகோடின் பற்கள் தெரிய.

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

Tuesday, June 7, 2011
அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள
உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை
வெண்புகை குடை விரித்த
மலைச் சிகரத்தினுச்சியில்
காற்றில் தவழ்ந்த பெயரோ
நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி
அடர் பச்சை ஊசியிலை மரங்களின்
இலைகளின் கைகுலுக்கி
நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது.
மலையின் மடியில் வீசிய
நெற்பயிரின் தலை கோதி
நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி
கரைகின்றது காற்றில்
இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட
இனியெனக்குச் சொந்தமில்லை.
அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்பட்டது.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.06.11)
இணைய தளத்திற்கு நன்றி

பரிமாற்றங்களின் முடிவிலியில்

Saturday, June 4, 2011

பேரண்டத்தின் பெருமௌனத்தினூடே
மோதிக் கொண்டோம் நாமிருவரும்
மோதலின் மீட்சியில்
உன்னுடையவைகள் எல்லாம்
என்னுடையவைகளாகவும்
எனதுடையவைகளெல்லாம்
உனதுடையவைகளாகவும்...
உனது பிடிவாதம் எனதானது
எனது கர்வம் உனதானது
உனது கருணை எனதானது
எனது பொறுமை உனதானது
உனது கோபம் எனதானது
எனது காமம் உனதானது
உனது காதல் எனதானது
எனது வாஞ்சை உனதானது
பரிமாற்றங்களின் முடிவிலியில்
நீ சூரியனானாய்
நான் சந்திரனானேன்.

வேரற்ற மரம்

Monday, May 30, 2011
சொல்லாமல் செல்வதால் பெருகும் வலியை
உனது இருபின்மையால் உணர்கிறேன்.
நிழல் போல வருவதாய்
நீ வாக்களித்திருந்த வரிகள்
எனது நாட்குறிப்பின் பக்கங்களில்
வரிகள் மட்டுமே அருகிருந்து
சொற்களை அர்த்தப்படுத்துகின்றன.
எனது வாழ்க்கை வனத்தில் இது
நட்புதிர்காலம்...
வெறுமை பூத்த கிளைகள் மட்டும்
காற்றின் ஆலாபனைக்கு அசைந்தபடி
அகத்தே மண்டிய நினைவின் புகையாய்
அவ்வப்போது வியாபிக்கிறாய் என்னை
நமது நட்புறவின் குருதியை
நிறமற்ற நீராய் விழிகளினின்று உகுக்கும்படி
புன்னகை ஒட்டிய உதடுகளுடன் கைகோர்த்தபடி
புகைப்படங்களில் மட்டும் நீ
வேரற்ற மரமாய் மிதந்தலைகிறேன்
உனக்குப் பிரியமான இசையைக் கேட்கையிலும்
நீ ரசித்த உடைகளை உடுத்தும் போதும்
வாசிக்க எடுத்த புத்தகத்தில்
என்றோ பத்திரம் செய்த- நீயளித்த
மயிலிறகை விரல்களால் வருடும் போதும்...
இருக்கும் போது வரமான நட்பு
இல்லாத போது சாபமாகிறது.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (29.05.11)
இணைய தளத்திற்கு நன்றி

நகர் புகுதல்

Thursday, May 26, 2011
அர்த்தமிழந்த வார்த்தைகள்
சமைக்கும் தருக்கச் சகதியுள்
அமிழ்ந்தென்ன லாபம்
துடிதுடிக்க காலத்தைக்
கொல்வதைத் தவிர
கால்களையும் கைகளையும்
குரல் வளையையும் சுற்றியிறுக்கும்
மொழியின் வேர்களும் கொடிகளும்
மண்டிய வனம்
சொற்களுக்கு அனுமதியில்லா
நகரமொன்று வேண்டும்
வன வாசம் துறந்து
நகர் புக.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(22.05.11) இணைய தளத்திற்கு மனமார்ந்த நன்றி.

கூடடையும் பறவை

Tuesday, May 24, 2011ஒவ்வொரு அந்தியிலும்
பறந்து களைத்த பறவை
கூடடைவதைப் போல
தனிமை வந்தமர்கிறது
என் கிளைகளில்
மொழிகள் மறுதலித்த
அடர் மௌன வனத்தின்
ஒற்றை மரமாய்
கிளைகள் பரப்பி நான்.
சில்வண்டுகளின் ரீங்காரமோ
காற்றின் சிலும்பலோ
இலைகளின் நடனமோ
ஏதுமற்ற பேரமைதியில் வனம்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(15.05.11)இணைய தளத்திற்கு நன்றி

சே IX- நாங்கள் தொடர்வோம் காம்ரேட்

Sunday, May 22, 2011சே எனும் ஆளுமையை, எங்கொ ஒரு அந்நிய தேசத்தில் வாழ்ந்து மடிந்த ஒரு அர்ஜண்டினிய மருத்துவனைப் பற்றி ஏன் நாம் இவ்வளவு நாட்களாக சிந்திக்க வேண்டும். எவ்வளவோ தலைவர்கள் மக்களுக்காவும் அவர்களது நல்வாழ்விற்காகவும், விடுதலைக்காகவும் போராடவில்லையா? வரலாற்றின் சகல பக்கங்களிலும் நமக்கு அவை காணக் கிடைக்குமில்லையா? நமது நாட்டில் காந்தியடிகள் போராடினார், நெல்சன் மண்டேலா கறுப்பின மக்களின் விடுதலைக்கு போராடினார்... ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ், யாசர் அராபத் என உதாரணங்களை அடிக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. இவர்கள் எல்லொரும் தமது தேசத்திற்காக, இனத்திற்காக, மக்களுக்காக போராடியவர்கள். ஆனால் ஒரு அர்ஜண்டைன உயர்குடியில் பிறந்த ஒரு மருத்துவன், எவ்விதத்திலும் தனக்குத் தொடர்பு இல்லாத கியூப மக்களுக்காக ஏன் போராட வேண்டும்? காங்கோவின் வறட்சியில் எதற்காக உழல வேண்டும்? பொலிவிய காட்டில் ஆஸ்மாவின் கொடுமையோடு வனத்தில் அனாதையைப் போல ஏன் பிடிபட வேண்டும்? அதற்கெல்லாம் ஒரே ஒரு பதில் தான் சொல்ல முடியும். சக மனிதனின் பால் சேவுக்கு இருந்த அளப்பறிய நிபந்தனையற்ற பேரன்பும்[Unconditional Love], அவர்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கப் படாமல் கிடைக்க வேண்டுமென்ற பெரும் அக்கறையுமே !

சேவின் இறுதிக் கடிதத்திற்கு( 1965ல் அவர் எழுதியது) மறுமொழி கூறுவது போல் 1965ல் கியூபக் கலைஞர் “கார்லொஸ் பாப்லா” என்பாரால் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டது தான் ” ஹாஸ்டா சீம்ப்ர” எனும் உணர்ச்சி மிக்க பாடல். இப்பாடல் பலரால் பாடப்பட்டிருந்த போதிலும், நடாலி கார்டோன்[Nathalie Cardone] எனும் பிரஞ்சு பாடகி பாடிய இப்பாடலின் நவீன வடிவம் உலகப் புகழ் பெற்றது. இப்பாடலின் ஸ்பானிய வடிவமும் அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே தரப்பட்டுள்ளது.

Original lyrics in Spanish

Aprendimos a quererte
desde la histórica altura
donde el Sol de tu bravura
le puso cerco a la muerte.

Chorus:
Aquí se queda la clara,
la entrañable transparencia,
de tu querida presencia,
Comandante Che Guevara.

Tu mano gloriosa y fuerte
sobre la Historia dispara
cuando todo Santa Clara
se despierta para verte.

[Chorus]

Vienes quemando la brisa
con soles de primavera
para plantar la bandera
con la luz de tu sonrisa.

[Chorus]

Tu amor revolucionario
te conduce a nueva empresa
donde esperan la firmeza
de tu brazo libertario.

[Chorus]

Seguiremos adelante,
como junto a tí seguimos,
y con Fidel te decimos:
«¡Hasta siempre, Comandante!»

[Chorus]

Translated English lyrics:

We learned to love you
from history's heights
where the sun of your bravery
laid siege to death

Chorus:
Here lies the clear,
the deep transparency
of your beloved presence,
Commandante Che Guevara

Your glorious and strong hand
fires at history
when all of Santa Clara
awakens to see you

[Chorus]

You come burning the breeze
with springtime suns
to plant the flag
with the light of your smile

[Chorus]

Your revolutionary love
leads you to a new undertaking
where they await the firmness
of your liberating arm

[Chorus]

We will carry on
as we followed you then
and with Fidel we say to you:
Until always, Commandante!

[Chorus]
சே நீ மடியவில்லை. அநீதிக்கெதிரான, அடக்கு முறைக்கு எதிரான எங்களின் இவ்வொரு குமுறலிலும் நீ இருக்கிறாய். புரட்சி எனும் சொல்லோடு பிணைந்து நீ எங்களின் உணர்வாகினாய் ! எங்கள் உணர்ச்சி என்றும் சாவதில்லை. ஆகவே நீயும்....


குறிப்பு: எந்த ஏகாதிபத்தியத்தை சே எதிர்த்தாரோ அதனுடைய குழந்தையான நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப் பிடியில் (சேயின் உருவத்தை நீங்கள் உடைகளில்,தொப்பிகளில், சாவிக் கொத்துகளில், தேனீர்க் கோப்பகளில், சில அழுக்குப் பிடித்த அரசியல் விளம்பரங்களில் என எங்கும் பார்த்திடலாம். உலகிலேயே அதிக பட்சமாக பல்வேறு வகைகளில் பிரதியெடுக்கப் பட்ட புகைப்படம் சேவுடையது தான்) இவர் சிக்கிக் கொண்டது, சே எனும் ஆளுமையை புரிந்து ஏற்றுக் கொண்ட எல்லா காம்ரேடுகளுக்கும் ஒரு சோகச் செய்தியே!

சே VIII- இறுதி கணங்கள்

Friday, May 20, 2011

சே எனும் ஆளுமையை விட்டு வைத்தால் எங்கே இதுவரை சுதந்திர உணர்வற்ற அனைவரின் உள்ளத்திலும் அவர் புரட்சித் தீயை மூட்டி விடுவாரோ என்ற அச்சம் அமெரிக்காவிற்கு மிக அதிகமாகவே இருந்தது. அப்புறம் எல்லா நாடுகளும் தன்னுணர்வு பெற்றுவிட்டால், பிறகு யாரைச் சுரண்டி அமெரிக்கா பிழைப்பதாம்! அதனால் சேயின் வாழ்க்கையின் இறுதிப் பக்கங்களை எழுதிட கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருந்தது. சிங்கம் இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம் தானே. ஏற்கனவே பொலிவியக் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த சேவை ஆஸ்மா வாட்டியெடுத்து அவரை உடலளவில் பலவீனப்படுத்தியிருந்தது. இது எதிரிகளுக்கு சாதகமானது.

சேவை உயிருடன் பிடிக்கவே சி.ஐ.ஏ. முயன்றது. ஆனால் பொலிவிய ராணுவம் அதற்கு இடமளிக்கவில்லை என அமெரிக்கா சமாளித்தாலும், அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். சே பிடிபட்ட போது காட்டுக்குள் அவரோடு இருந்தவர்கள் வெகு சிலரே. அவரை நீண்ட நாள் தாடியுடன், மெலிந்த தேகத்துடன் கண்ட வீரர்கள் சற்றே ஆச்சரியமடைந்தனர். அசைக்க முடியா வல்லரசாக விளங்கிய அமெரிக்காவிற்கே சவால் விட்ட மாவீரன் இப்படி இருந்தால் ஆச்சரியம் தானே வரும். சொல்லப் போனால் அவர்களுக்கு அவரை அடையாளமே தெரியவில்லை. சேவே தன்னை துப்பாக்கி முனையில் அறிமுகப்படித்திட வேண்டிய அவலம்.


சேவைப் பிடிக்க 1800 வீரர்கள் கொண்ட படை காட்டிற்குள் சென்றது. தனது துப்பாக்கியும் உபயோகமற்றுப் போன தருணத்தில், சே கைகளை உயர்த்தி “ நான் தான் சே! என்னை நீங்கள் கொல்வதை விட உயிருடன் பிடிப்பது உங்களுக்கு லாபகரமானது” என கூறியதாக சொல்லப் படுகிறது. அக்டோபர் 7 ஆம் நாள் சே பிடிபட்டார். அன்றே கைவிலங்கிடப்பட்ட நிலையில் அவர் அருகிலிருந்த ‘லா ஹிகுரா’ எனும் கிராமத்திலிருந்த ஒரு பள்ளிக் கூடத்தில் அடைக்கப்பட்டார். பொலிவிய அதிகாரிகள் யாருடனும் பேசிட சே மறுத்து விட்டார். ராணுவ வீரர்களிடம் மட்டும் பேசியதாக அவர்களே நினைவு கூர்கின்றனர்.

அவர்களிடம் புகைப்பதற்கு அவர் புகையிலை கேட்க அவர்களும் பரிதாபப் பட்டு கொடுத்தனர். ஒன்றரை நாட்கள் அவர் அங்கிருந்தார். அப்போது அவர் அந்த பள்ளியின் ஆசிரியரை சந்திக்க விரும்பினார். ஜூலியா கார்டஸ் எனும் 22 வயது ஆசிரியை அவரை சந்தித்தார். சேவின் கண்கள் மிகவும் தீர்க்கமாக இருந்ததாகவும், தன்னால் அவரது கண்களை நேராக எதிர் கொள்ள முடியவில்லை எனவும் அவர் பின்னால் தெரிவித்தார். சே ஜூலியாவிடம் பள்ளிக் கட்டத்தின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இந்நிலையில் எப்படி குழந்தைகள் அப்படி கல்வி கற்கிறார்கள் என ஆதங்கப்பட்டார். தான் சாகப் போவது சர்வ நிச்சயமாய் ஒரு மனிதனுக்கு தெரிந்த பின்னரும் எப்படி அவனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து, சமூகத்தின் பால் அக்கறைப் பட முடிகிறது என எண்ணிய வேளையில் அடக்க முடியாமல் குமுறி அழுதார் ஜூலியா.
சேவை என்ன செய்வது என இன்னும் முடிவாகியிருக்கவில்லை. இறுதியில் அக்டோபர் 9 காலையில் பொலிவிய அதிபர் சேவைக் கொல்ல ஆணை பிறப்பித்தார். அதனை நிறைவேற்றிடும் பணி, ’ஃபெலிஸ் ரொட்ரிகுஸ்’-க்கு அளிக்கப் பட்டது. அவர் சேவின் இறுதி கணங்களை பற்றி பின்வருமாறு சொல்கிறார்.

“ சே காலிற்கு ஷூ கூட அணிந்திருக்கவில்லை. லெதரை காலைச் சுற்றி கட்டிக் கொண்டிருந்தார்.(நம்மூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவோர் காலில் கட்டி இருப்பார்களே, அது போல) ஒரு சக மனிதனாக அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. சில சங்கேத வார்த்தைகள் எங்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. 500 என்பது சே, 600 என்பது கொல் என்றும், 700 என்பது உயிருடன் பிடி என்பதுமாக இருந்தது. அக்டோபர் 9 காலை, அந்த கிராமத்திலிருந்த ஒரே தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. வந்த செய்தி 500-600.

’மாரியோ டெரன்’ எனும் ராணுவ வீரனுக்கு சேவிற்கு மரண தண்டனை நிறைவெற்றும் பணி வழங்கப்பட்டது. அவனது நண்பர்கள் மூவரும் சேவின் கொரில்லப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தனர். ஆகவே தனிபட்ட வகையில் இது அவனுக்கு ஒரு பழி தீர்க்கும் வாய்ப்பு. கதவைத் திறந்து அவன் வந்தவுடனே சேவிற்கு புரிந்து விட்டது. அவன் சேவிடம்,” நீ உனது அமரத்துவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிராயா?”, எனக் கேட்க அதற்கு சே,” இல்லை! நான் புரட்சியின் அமரத்துவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்’, என தாமதமின்றி பதிலளித்தார்.

5 முறை கால்களிலும், வலது தோளிலும் கையிலும் தலா ஒரு முறையும், மார்பில் ஒரு முறையும், இறுதியாக தொண்டையிலுமாக சே ஒன்பது முறை சுடப்பட்டார். அதற்கு காரணமிருந்தது. அவர் பொலிவிய படையினருடன் நடந்த சண்டையின் போது சுட்டுக் கொல்லப் பட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தவே அப்படி செய்யப்பட்டது. சே சுடப்படுவதற்கு முன் சுடும் வீரனை பார்த்து சொன்ன வார்த்தைகள் “ கோழையே ! சுடு, நீ சுடப்போவது ஒரு மனிதனைத்தான் “.அக்டோபர் 10, சே கொல்லப் பட்ட மறுநாள் அவரது உடல் உலகின் பார்வைக்கு ’வாலே கிரானடா’ நகரில் ஒரு மருத்துவமனையில் வைக்கப் பட்டது. ’பிரடி ஆல்பர்டோ’ எடுத்த அப்புகைப்படம் பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்றது.

படங்கள்:01. சாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பெலிக்ஸுடன் சே.
02. கொல்லப்பட்ட சிறிது நேரத்தில்
03. ஆல்பர்டோவின் புகழ் பெற்ற புகைப்படம்
04. சேவின் முகம்- மரணத்திற்கு பின்

சே VII – காங்கோ தோல்விக்குப் பின்

Wednesday, May 18, 2011
எதிர்பார்த்தது போல வாழ்க்கையில் எல்லாமே நடப்பதில்லை. காங்கோவில் புரட்சி சே எதிர்பார்பிற்கு எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் மன அழுத்தத்தாலும், கவலையாலும் நொந்து போயிருந்த சேவின் மீது ஆஸ்மா அரக்கன் தனது பிடியை மேலும் இறுக்கினான். நவம்பர் 20,1965ல் சே தனது சொற்ப எண்ணிக்கையிலான வீரர்களுடன் காங்கோவை விட்டு வெளியேறினார். தோல்வியோடு கியூபா திரும்ப சேவுக்கு மனமே இல்லை. ஆயினும் அவர் மீண்டும் திரும்ப பெருமுயற்சி எடுத்தது பிடலே. சே “ ஒரு தேசத்தை அதன் விருப்பமில்லாமல் நாம் என்றுமே புரட்சியின் மூலமாக விடுதலை அடையச் செய்ய முடியாது”, என மிக வருத்தத்துடன் கூறினார். ஒரு கட்டத்தில் மற்ற வீரர்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் தனியாக சாகும் வரை போரிடவும் துணிந்தார். அதுவே ஒரு புரட்சியாளனுக்கு அழகு என அவர் கருதினார். அதற்கு காரணமிருந்தது. காங்கோவிற்கு கிளம்பும் முன்னர் சே தான் வெல்லாமல் திரும்பப் போவது இல்லையென பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தார். வீராப்பாக சொல்லி விட்டு தற்போது முகத்தில் தோல்வியின் சாயம் பூசியபடி மக்கள் முன்னே செல்ல அவரது தன்மானம் இடம் தரவில்லை.

இதனாலேயே சே ஒரு ஆறு மாதங்கள் ப்ரேக் நாட்டிலேயே தங்கி விட்டார். இந்த கால கட்டத்தில் அவர் மேலும் இரு புத்தகங்களை எழுதினார். மேலும் கியூப உளவுத் துறை தயாரித்தளித்த போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, முதலில் சோத்னை முயற்சியாக ஐரோப்பிய தேசங்களுக்கும், பின்னர் தென் அமெரிக்க தேசங்களுக்கும் பயணப்படலானார். அப்போது ஒரு முறை அவர் பிடலையும் தனது குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக கியூபா வந்தார். அப்போது தனது ஐந்து குழந்தைகளுக்கு- தனது மரணத்தின் போது வாசிக்கப்பட- ஒரு இறுதிக் கடிதத்தை எழுதியிருந்தார். அக்கடிதம் இவ்வார்த்தைகளோடு முடிந்திருந்தது.

“... எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் எந்த மூலையில் மக்களுக்கெதிராக அநீதி நடந்தாலும் அது குறித்து அக்கறை கொள்பவர்களாக இருங்கள். அதுவே ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய ஒரு மிக அழகான குணாதிசயம்.”


1966ல் சே பொலிவியா சென்றதாகவும் அங்கு அவர் மொசாம்பிகியூ விடுதலை இயக்கத்துடன் இணைந்து புரட்சிக்குத் தயாராவதாகவும் தகவல்கள் கசிந்தன. இத்தகவல்கள் மறுக்கப்படன. கடைசியில் 1967ல் தொழிலாளர் தினத்தன்று, ஹவானாவில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய ராணுவ அமைச்சர், தளபதி அல்மேடா, சே லத்தீன் அமேரிக்க கண்டத்தில் எங்கோ ஒரு இடத்தில் புரட்சியில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பொலிவியாவுக்கு சே, தாடியில்லாமல், அடால்போ கொண்ஸாலஸ் எனும் நபராக சென்றார். தன்னை உருகுவே நாட்டைச் சேர்ந்த வியாபாரியாக கூறிக்கொண்டார். அவர் அங்கு சுமார் 50 பேர் கொண்ட கொரில்லப் படையோடு சேர்ந்து போராடத் துவங்கினார். முதலில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னர் அவர்கள் பொலிவிய ராணுவத்தை எதிர் கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தனர். காங்கோவின் தோல்வி இப்பொது மீண்டும் வராது என சே உறுதியாக நம்பினார். இவர்களுக்குச் சாதகமாக சென்று கொண்டிருந்த புரட்சி திடீரேன திசை மாறியது.
நேரடியாக மோதுகின்ற ஒரு எதிரியை எதிர்கொள்வது ஒரு வீரனுக்கு எளிது. ஆனால் மறைமுகமாக தாக்கும் கோழைத்தனமான எதிரியை என்ன செய்வது? அதிக பயிற்சி இல்லாத பொலிவிய ராணுவத்தை எதிர்ப்பது ஒரு சிரமமே இல்லை என சே நினைத்தார். ஆனால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. --வின் ஒரு குழு சேவின் கதையை முடிக்க கிளம்பி இருப்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர்கள் பொலிவிய ராணுவத்திற்கு பயிற்சி அளித்ததோடு மட்டுமல்லாமல், ஆயுத உதவிவும் செய்தனர். மேலும் சே எதிர்பார்த்தது போல அவருக்கு உள்நாட்டில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக பொலிவிய கம்யூனிசக் கட்சியிடமிருந்து. மேலும் ஒரு சோதனையாக, ஹவானாவோடு தொடர்பிலிருக்க, பிடல் அளித்திருந்த இரண்டு தனி அலைவரிசை ரேடியோ தொடர்பு சாதனங்களும் பழுதடைந்தன. பொலிவியக் காட்டிற்குள் சே தனிமைப் படுத்தப்பட்டார்.


படங்கள்:01. காங்கோவில் சே
02. மாறுவேடத்தில் சே
03. பொலிவியாவில் சே

சே VI- அரசியல் வாழ்க்கை

Saturday, May 14, 2011

பிடலின் படைகளோடு சேர்ந்து சே மாபெரும் யுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும் அதனை ருசிக்க முடியாமல் அவரது ஆஸ்மா அவரை வாட்டியது. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சகாக்கள் கேட்டுக் கொண்டனர். பிடலும் சேவிற்கு ஓய்வு தேவை என வலியுறுத்தினார். முடிவில் டராரா நகரில் அவர் தங்க சம்மதித்தார்.

பெயருக்குத்தான் ஓய்வு. எர்னஸ்டோவால் சும்மா இருக்கவே முடியவில்லை. பொழுதை வெட்டியாகக் கழிப்பதாகவே அவருக்குப் பட்டது. அதனால் அவர் புதியதாக மலர்ந்துள்ள கியூப தேசத்தின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நலப்பணிகள், அவசியமாக கொணரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் போன்றவற்றிற்கான திட்டங்களை வகுப்பதில் தனது காலத்தைச் செலவழித்தார். இக்கால கட்டத்தில் தான் சே தனது புகழ் பெற்ற புத்தகமான “கொரில்லப் போர்முறை” யை எழுதத் துவங்கினார்.

1958 பிப்ரவரியில் சேவுக்கு, போரில் அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு கியூப தேசத்துக் குடியுரிமை வழங்கப்பட்டது. தனது முதல் மனைவியிடம் சே தான் ஜூலை 26 இயக்கத்தின் ஒரு பெண் போராளியின் [அலைடா மார்ச்] மீது காதல் வயப்பட்டதை தெரிவித்தார். இருவரும் பரஸ்பர விருப்பத்துடன் பிரிந்தனர். ஜூன்2,1959ல், சே அலைடாவை மணந்தார்.

புதிய அரசுக்கு பிடிபட்ட படிஸ்டா படையினரை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். வழக்கம் போல போர் குற்றவாளிகளை எடுத்த மாத்திரத்தில் கொன்று விடாமல் அவர்களை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நடந்ததைப் போல சட்டத்தின் முன் நிறுத்தி பின்னர் முடிவெடுக்கலாம் என்ற கருத்தை மக்களுக்குப் புரிய வைத்து செயல் படுத்த ஆரம்பித்தது கியூப அரசின் நீதித்துறை. போர்க் கைதிகளின் மனுக்களைப் பரிசீலிக்கும் முக்கிய பொறுப்பு சேவிற்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய 55-164 பேர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டிருக்கலாம் என தெரிகிறது.
[ஆய்வாளர்கள் சற்று தங்களுக்குள் எண்ணிக்கை குறித்து வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கின்றனர்.] அவருடன் இருந்தவர்கள், சே தன்னால் முடிந்த வரை அவர்களில் பலரை மன்னிக்கவே பெரு முயற்சி செய்தார் என நினைவு கூறுகின்றனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதனை நன்கு புரிந்து கொண்டனர் பிடலும், சேவும். நாட்டின் விவசாயிகளுக்கு நலன் பயக்கும் [நமது தெசத்தைப் போலவே கியூபாவும் ஒரு விவசாய நாடே. அதுவே உலகின் சர்க்கரைக் கிண்ணம்.] நில சீர்திருத்தங்களுக்கு அடுத்தபடியாக, அவர்கள் கவனித்தது கல்வித் துறையை. ஏனெனில் உயர்கல்விக்காக மாணவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. அந்நிர்பந்தத்திலிருந்து விடுபட ஒரு வழி உள்நாட்டில் உயர் கல்வித் துறையை மேம்படுத்துவது தான். 1959 க்கு முன்னர் 50-76% இருந்த கற்றவர் எண்ணிக்கை 1961 வாக்கில் 96% என உச்சம் தொட்டது.

இக்கால கட்டத்தில் தான் தான் வகித்து வந்த தொழிற் துறை அமைச்சர் பதவியோடு சேர்த்து அவருக்கு நிதித் துறையும் வழங்கப்பட்டது. அவர்- ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற- கியூப மத்திய வங்கிக்கு தலைவரானார். அத்தோடு நில்லாமல் அவர் உலகின் பிற நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் விதமாக, அரசு முறைப் பயணங்களை அனேக நாடுகளுக்கு மேற்கொண்டார். இப்பயணங்கள் அவரை உலகளாவிய அளவிற்கு அவரது ஆளுமையை எடுத்துச் சென்றது. உலக அளவில் சே முக்கியத்துவம் பெறத் துவங்கினார். 1964 டிசம்பர் மாதம் நியூயார்க்கில் நடை பெற்ற ஐக்கிய சபைகளின் கூட்டத்தில் கியூப பிரதினிதிக் குழுவுக்கு தலைமையெற்றுச் சென்றார். அங்கு அவர் சிறிதும் பயமின்றி ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளையும் அதனைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாத ஐக்கிய சபையின் கையாலாகாத தனத்தை கிழிகிழியேன கிழித்தார். உலகத் தலைவர்கள் இந்த இளைஞனின் துணிவைக் கண்டு வாயடத்துப் போயினர். ஆனால் கூடவே அமெரிக்காவின் வெறுப்பையும் சே சம்பாதித்துக் கொண்டார். சி.ஐ.ஏ.வின் கழுகுப் பார்வை இவரை வட்டமிட ஆரம்பித்தது.

1965ன் துவக்கத்தில் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள காங்கோ தேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு மக்களின் அடிமைத்தனமான அவல நிலை கண்டு உள்ளம் குமுறிப் போனார். அவர்களை ஒருங்கிணைத்து பயிற்றுவித்தால் அங்கு ஒரு கொரில்லப் புரட்சி சாத்தியம் என நம்பினார். அவரது நண்பரான எகிப்த்தின் அதிபர் கமால் நாசரோ, அந்த யோசனை சே நினைப்பதைப் போல நடந்திடும் நடைமுறை சாத்தியங்கள் குறைவு எனவும், வெற்றி வாய்ப்பு அற்றது எனவும் எச்சரித்தார். ஆனால் தனது கனவு நனவாகும் என முழுமையாக நம்பினார் சே. தனது முடிவில் பின்வாங்கவில்லை சே. ஒரு போராளியின் வரலாற்றின் பக்கங்களில் தோல்வியின் சரித்திரம் முதன் முதலாக எழுதப்படவிருப்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

சே V- கியூப புரட்சி-II

Sunday, May 8, 2011

வலுவிழந்த நிலையிலும் படிஸ்டா தைரியமாக இருந்ததற்கு ஒரு காரணம் அவரிடம் அதிக எண்ணிக்கையில் இருந்த படை வீரர்கள் தான். “ஆபரேஷன் வெரானோ” என்ற பெயரில் 12,000 வீரர்கள் சியரா மாஸ்டரா மலைப் பகுதியை சுற்றி வளைத்தனர். வெறும் சில நூறு வீரர்களை மட்டும் வைத்து அவர்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் பிடலுக்கு. ஆனால் வெறும் என்ணிக்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆம். படிஸ்டாவின் படையினருள் பாதிப் பேர் போதிய பயிற்சியோ, போர் வீரருக்கான மனவலிமையோ இல்லாதவர்களாக இருந்தனர். நமது பாஷையில் சொல்வதானால் உப்புக்கு சப்பானி.

ஏற்கனவே முறையான பயிற்சியோடு இருந்த புரட்சிப் படையினர் இவர்களை ஒரு கை பார்த்து விட்டனர். 11ஜூலை 1958ல் துவங்கிய இப்போர் ( லா பிளாட்டா என அது அழைக்கப்பட்டது.) ஆரம்பம் முதலே புரட்சிப் படையினரின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் போர்களில் தான் எதிர்பாராத திருப்பங்கள் சகஜம் ஆயிற்றே. போர் துவங்கி 19 நாட்களுக்குள் வெற்றிக் காற்று அரசுப் படையின் திசையில் வீசத் துவங்கியது. இறுதியில் பிடலின் சிறிய படை சிதறடிக்கப்பட்டது. வழியின்றி பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டது பிடலின் படை. சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் முடிவாகவில்லை அதில். (எந்தப் பேச்சு வார்த்தையில் தான் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது?!)
ஒன்றும் உதவாது எனத் தெரிந்ததும் படைவீரர்கள் மெதுவாக மீண்டும் மலைப் பகுதிக்கே திரும்பினர். மறுபடியும் பதுங்கல் வாழ்க்கை...

இரு மாத திட்டமிடலுக்குப் பிறகு மீண்டும் 21 ஆகஸ்டு 1958ல் வீரர்கள் நேரிடையாக நாட்டிற்குள்ளேயே களமிறங்கினர். ஆனால் கடந்த முறை அடைந்த தோல்விலிருந்து பாடம் கற்றிருந்தனர். அதனால் கொரில்லப் போர்த் தந்திரங்களை பயன்படுத்தினர். அது பிரிந்து தாக்குதல். நான்கு அணிகளாக பிரிந்து முன்னேறினர். அடுத்தடுத்த வெற்றி அவர்களுக்கு உற்சாகமளிக்க உத்வேகத்துடன் முன்னேறினர்.

சே இந்த கபளீகரம் நடந்த போது என்னப்பா செய்து கொண்டிருந்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது. சியரா மாஸ்டரா மலை பகுதியில் வாழ்ந்த மலைவாசிகளுக்கு ஒன்றுமே இல்லாததை கண்டார். அவர்களுக்கு பள்ளிகள், மின்சாரம், மருத்துவமனை என எதுவுமில்லை. அவற்றை நிர்மாணிக்க வேண்டிய அவசியத்தை பிடலுக்குப் புரிய வைத்தார். மேலும் ஆயுதக்கள் தயாரிப்பதற்குத் தேவையான சிறிய தொழிற்சாலைகளை கட்டியதோடு படையினருக்குப் கொரில்லப் போர் நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார். படையின் நான்கு அணியும் வெற்றியோடு முன்னெறிக் கொண்டிருந்த அதே வேளையில், சே தலைமையில் 3 அணி வரிசை [coloumns] சாண்டா கிளாரா நகரை நோக்கி முன்னெறியது. வழியில் மற்றுமொரு புரட்சிப் படையினரோடு முதலில் முட்டிக் கொண்ட போதும், பிறகு ஒன்றிணைந்து பொது எதிரியான படிஸ்டாவை எதிர்த்தனர்.
31 டிசம்பர் 1958ல் நடந்த சாண்டா கிளாரா போர் [Battle of Santa Clara] மிகவும் முக்கியமானது. கூட்டுப் படையின் அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்த படிஸ்டா கூடாரத்தை காலி செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டமெடுத்தார். கியூபாவிற்கு புதிய வருடமும் ஒரு புதிய வாழ்க்கையும் சேர்ந்தே பிறந்தது.

சேவுடனான கூட்டுப் படையிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் படிஸ்டா ஓடியது குறித்து கேள்விப்பட்ட மாத்திரத்தில் பிடலின் வேலை மிக எளிதானது. ஆயன் இல்லாத ஆடுகளாக முழித்தபடி திண்டாடிக் கொண்டிருந்தது அரசுப் படை. ஆங்காங்கே இருந்த படையினரை வழி நடத்திய தளபதிகளிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார் பிடல். அவருக்கு வழி விடுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை பாவம். வருடத்தின் 2ஆம் நாளே சுமூகமாக அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறின. அவர்கள் அனைவரும் கியூபத் தலைநகரை நோக்கிப் புறப்பட்டனர். இத்தருணத்தில் சேவும் சரியாக அங்கு வந்து ஹவானாவில் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.
படங்கள்: 01. சாண்டா கிளாரா போருக்குப் பின் சே

02. ஹவானா நகரில் வெற்றிக்குப் பின்

சே IV- கியூப புரட்சி-I

Tuesday, May 3, 2011கியூப புரட்சியானது பிடலின் தலைமையில் ஜூலை 26 இயக்கத்தின், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ”படிஸ்டா”வை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதப் போரட்டம். படிஸ்டா கிட்டத்தட்ட அமெரிக்காவின் கைப்பாவை. அவரது தலைமையில் ஒரு பொம்மை அரசின் பின்னால் இருந்து ஆட்டுவித்தது என்னவோ அமெரிக்கா தான். பிடலின் படையினருக்கு இது சீக்கிரம் கிடைத்த வெற்றியல்ல. சொல்லப் போனால் புரட்சி, மான்கடா ராணுவக் குடியிருப்பைத் தாக்கிய தருணத்திலிருந்தே, துவங்கி விட்டது. அத்தாக்குதல் நடந்த அன்றே சிலர் பிடிபட்டனர். அவர்களுள் ஒருவரான தளபதி ஏபல் சான்டாமரியா, துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் பிடலும் அவரது தம்பியும் பிடிபட்டனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பிடல் தங்கள் தரப்பின் சார்பாக நான்கு மணி நேரம் வாதாடினார். எதற்கும் பலனில்லை. பிடலுக்கு 15 ஆண்டு சிறையும், தம்பி ரால்ப்-க்கு 13 வருட சிறை தண்டனையும் கிடத்தது. ஒரு எழுச்சியுடன் துவங்கிய ஒரு புரட்சி அப்படியே நீர்த்துப் போனது போல ஆனது. கனவுக் கோட்டைகள் தகர்ந்த கணங்கள் அவை. (அப்பொதெல்லாம் சே பிடலை சந்தித்திருக்கவில்லை).

ஆனால் நல்ல வேளையாக அரசியல் நிர்பந்தம் காரணமாக 1955ல் படிஸ்டா அரசியல் கைதிகளை விடுவித்தார். வெளிவந்த உடனே காஸ்ட்ரோ சகோதரர்கள், படிஸ்டாவிற்கு எதிரான புரட்சியின் அடுத்த கட்ட ஆயத்ததிற்காக மெக்ஸிகோ சென்றனர். அங்கே ஸ்பானிய புரட்சியில் பங்கு பெற்ற அல்பெர்டோ பெயோ [Alberto Bayo]வின் கீழ் பயிற்சி பெற்றனர். இந்த சூழலில் தான் சே பிடலை சந்தித்தார்.

பயிற்சிக்குப் பிறகு அடுத்த தாக்குதலுக்கு தயாரானது புரட்சிப் படை. வெறும் 82 வீரர்களுடன் டிசம்பர் 2, 1956ல் “கிரான்மா” என்ற படகில் கியூபத் தீவை நோக்கி புறப்பட்டனர். ஒரு தேசத்தின் மொத்த ராணுவத்தை எதிர்கொள்ள இவ்வளவு சொற்ப எண்ணிக்கையிலான வீரர்களுடன், எந்த தைரியத்தில் அவர்கள் கிளம்பினார்கள் என்பது அதிசயம் தான். பெயருக்கு ஏற்றார் போல படகு மிகவும் வயதாகி ஒழுகிக் கொண்டிருந்தது. கிரான்மா கிளம்பியது.

படகு, திட்டப்படி சேர வேண்டிய காலத்திற்கு 2 நாட்கள் பிந்தியே சேர முடிந்தது. அதனால் அங்கு இருந்த மற்றொரு குழுவுடன் இவர்களால் இணைய முடியவில்லை. கிரான்மா கரை சேர, வந்தவர்கள் யாவரும், சியரா மாஸ்ட்ரா மலைப் பகுதிக்குள் புகுந்தனர். ஆனால் படிஸ்டாவின் படையோ இவர்களை துவம்சம் செய்தது. சிதறி ஓடியவர்களுள், வெறும் 22 பேர் மட்டுமே திரும்பவும் சந்தித்தனர். இருந்ததே குறைவான வீரர்கள். அவர்கள் மேலும் தற்போது குறைந்து விட்டனர். இக்கட்டான காலம். இதற்கிடயே மாணவ படையினர் வேறு ஜோஸ் ஆண்டோனியோ எனும் மாணவர் தலைமையில் நடந்திய முற்றுக்கை முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

நல்ல வேளையாக, அமெரிக்க அண்ணாச்சி தனது உதவிகளை கொஞ்சம் படிஸ்டாவின் அரசுக்கு குறைத்துக் கொண்டார். மேலும் கியூப தேசத்தின் மீது சில வாணிபத் தடைகளை அறிவித்தது. இது படிஸ்டாவிற்கு பெருத்த பின்னடைவானது. உள்ளூரில் இருந்த கம்யூனிஸ்டுகளும் தங்களது நீண்ட கால ஆதரவை 1958ன் மத்தியில் விலக்கிக் கொள்ள அவர் நிலை இன்னும் மோசமானது.
பிடல் முதலில் தாங்கள் இருந்த மலை பிரதேசம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் முதலில் கொண்டு வந்தனர். இதற்கு அவர் தம்பி ரால்பும், சேவும் பக்க பலமாக இருந்தனர். இக்கால கட்டத்தில் தான் சேவின் திட்டமிடும் திறனையும், சமயோசிதத்தையும், யுத்த அறிவையும் பிடல் புரிந்து கொண்டார். சே மெல்ல மெல்ல பிடலின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவரானார். இக்காலத்தில் பிடலின் எதிர்ப்பாளர்கள், படிஸ்டாவின் ஆதரவாளர்கள் பலரை கொல்ல வேண்டியதாயிற்று. ராணுவத்தை எதிர்க்க அவர்கள் தேர்ந்தெடுத்தது கொரில்லப் போர் முறை. அது கை மேல் பலனளித்தது. சேவிற்கு இதனை பற்றிய நுணுக்கங்கள் அத்துப்படி. அவரே முன்னின்று தனது சகாக்களுக்கு பயிற்சி அளித்தார்.

புரட்சியாளர்கள் தங்களுக்கென ஒரு வானோலி அலைவரிசையை நடத்தி, அரசுக்கு இன்னும் நெருக்கடியை கொடுத்தனர். அப்பொது அவர்களது படையில் ஏறக்குறைய 200 பேர் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய படையினரோ 30,000-40,000 என அளவில் பிரம்மாண்டமானது. ஆயினும் புரட்சிப் படையை எதிர் கொண்ட ஒவ்வொரு தருணத்திலும், படிஸ்டாவின் படையினர் பின் வாங்க வேண்டியதாயிற்று. எண்ணிக்கையில் மிகுந்திருந்தாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சியற்றவர்களாகவே இருந்தனர். புரட்சிப் படையொ கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் இல்லை.

வாணிபத் தடை படிஸ்டா அரசுக்கு பெரும் இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றது. போர் விமானங்கள் பழுதடைந்தன. அவற்றை சரி செய்ய உதிரி பாகங்கள் அமெரிக்காவிடம் இருந்துதான் பெறப்பட வேண்டும். நாட்கள் நகர நகர கியூப வான் படை வலுவிழந்தது. அதனால் மலைப் பிரதேசத்தில் இருந்த புரட்சிப் படையை எதிர்க்க முடியாமல் திணறிப் போனார் படிஸ்டா.படங்கள் : 01. படிஸ்டா
02. அல்பர்டோ பேயோ
03. புரட்சியாளர்களுடன் பிடல்

சே III – களம் கண்ட மதக்களிறு

Friday, April 29, 2011

பெற்றோரை சரிக்கட்டியாயிற்று, மருத்துவப் பட்டத்தை பெற்றதன் மூலம். ஆனால் ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஆம். சே மற்றுமொரு பயணத்திற்குத் தயரானார். ஜூலை 7, 1953 அன்று பயணம் துவங்கியது. பயணத்தின் முடிவில், கௌதமாலாவிற்கு செல்லும் முன்னர் சே தனது அத்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தில் [10.12.1953], யுனைட்டட் பழக் கம்பெனியின் (அது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம்) செயல்பாடுகள் வாயிலாக ஏகாதிபத்திய முதலைகளைப் பற்றி தெரிந்து கொண்டதாகவும், இவர்களைப் போன்றவர்களை ஒழிக்கும் வரை தான் ஓயப் போவதில்லையெனவும் எழுதியிருந்தார். அனேகமாக தனது குடும்பத்தினரிடம், தனது நிலைப்பாடுகள் குறித்து பகிரங்கமாக அவர் தெரிவித்தது இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.
அம்மாத இறுதியில் அவர் கௌதமாலாவை அடைந்த போது அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன் நில சீர்திருத்தத்தில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். அதன் மூலம் அவர் நாட்டின் பயிரிடப்படாத நிலங்கள் யாவும் பொதுவுடமையாக்கப்பட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிலத்தின் பெரும் பகுதியை கைக்குள் வைத்திருந்த யுனைட்டட் பழக் கம்பெனி, இதனால் பலத்த அடி வாங்கியது. சே மகிழ்ச்சியானார். நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டு அவருக்கு ஆனந்தம். அங்கெயே தங்கி தன்னைக்- ஒரு புரட்சியாளனாக, போராளியாக- கூர் தீட்டிக் கொள்ளவும் தீர்மானித்தார்.

அங்குதான் -இடதுசாரி எண்ணமுடைய- அமெரிக்க எதிர்ப்பு புரட்சி கூட்டணியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பெரு நாட்டினரான ஹில்டா காடியாவை முதலில் சந்தித்தார். அவர்கள் வாயிலாகத்தான் சே அர்பென்ஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளோடு அறிமுகமானார். மேலும் தனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற நபராகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். சாண்டியாகோ நகரில் இருந்த “ மான்கடா இராணுவக் குடியிருப்பு தாக்கப்படது [ஜூலை26,1953]. இத்தாக்குதலின் போது சேவின் அசாத்திய துணிச்சலையும், திறமையையும் கண்டு சகாக்கள் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். புரட்சிகர எண்ணம் இருப்பினும் ஒரு உயர்குடியில் பிறந்த ஒரு மருத்துவர் எந்த அளவிற்கு யுத்த களத்தில் செயல்படுவார் என்ற நினைப்பு அவர்களிடையே இருந்தது. ஆனால் சேவின் வீரத்தைக் கண்டு அவர்கள் வாயடைத்துத் தான் போயினர். “ சே” எனும் அடைமொழி எர்னஸ்டோவோடு ஒட்டிக் கொண்டது அப்போது தான்.
ஒரு நாடு நல்ல முறையில் இருப்பது அமெரிக்காவுக்கு எப்படி பிடிக்கும்? அதுவும் தனது கம்பெனிகளை வெளியே துரத்தி தனது லாபத்தைக் குறைத்த ஒரு தேசத்தை... நல்லபடியாக அர்பென்ஸின் தலைமையிலான அரசுக்கு கம்யூனிஸ செக் நாட்டிலிருந்து வந்த இராணுவ தளவாடங்கள் குறித்து அறிந்ததுமே, சி.ஐ.ஏ- வுக்கு மூக்கு வேர்த்து விட்டது.
உடனே சகல உதவிகளையும் செய்து கார்லோஸ் அர்மாஸ் தலைமையில் ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நிறுவியது. வழியின்றி அர்பென்ஸ் மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சமடைந்தார். சேவோ அவருக்கு ஆதரவாக போராட ஆவலாயிருந்தார். அவ்வளவு நாள் அமேரிக்காவின் கவனத்தில் இல்லாத சே அதற்கு ஒரு புதிய தலைவலியானார். அமெரிக்காவுக்குத் தான் எதிரிகள் என்றாலே பிடிக்காதே. தனக்கு கட்டம் கட்டப்படுவதை அறிந்து கொண்ட அவர், சமயோசிதமாக அர்ஜெண்டின தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். ஹில்டா கைது செய்யப்பட்டார். [1955ல் சே ஹில்டாவை மணந்தார்]

இந்நிகழ்வின் மூலம் அமெரிக்கா சாதாரணமாக எடை போட்டிருந்த சேவை சரியாகப் புரிந்து கொண்டது. சேவும் அமேரிக்கா தனது நலனிற்காக எந்த அளவிற்கும் இறங்கும் எனும் நிசத்தையும் அவர் கண்கூடாகக் கண்டுகொண்டார்.


மெக்ஸிகொ வந்த சே, திருமணத்திற்கு முன் சிறிது காலம் தனது மருத்துவப் ப்ணியை செய்தார். ஒடுக்கப்பட்ட வறியவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை அவரது மனதை வெகுவாக பாதித்தது. சிறிது காலத்தில் ஜூன் 1955 வாக்கில், பழைய கௌதமாலா நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் வாயிலாக, சே ரால்ப் காஸ்ட்ரோவை சந்தித்தார். அவர் பிடலின் சகோதரர் (இன்று கியூப அதிபர் இவரே). அப்போது “ஜூலை26” என்ற புரட்சி இயக்கத்தை நடத்தி வந்தார். ஒரு இரவில் நிகழ்ந்தது பிடலுடனான சேவின் சந்திப்பு. நீண்டதொரு உரையாடலுக்குப் பின்னர், தனது எண்ண அலைவரிசை பிடலோடு மிகவும் ஒன்றிப் போவதை பார்த்து, தனது எஞ்சிய வாழ்க்கை பிடலுடன் தான் என முடிவே செய்து விட்டார்.படங்கள் : 01. ஜாகொபொ அர்பென்ஸ் குஸ்மன்
02. ஹில்டாவுடன் தேனிலவில் சே
03. ரால்ப் காஸ்ட்ரோவுடன் சே.

சே II - பயணங்களின் காதலன்

Tuesday, April 26, 2011


சே மருத்துவத்தை தேர்வு செய்ததற்கான காரணங்கள் புறவியலாக மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அத்துறையின் பால் ஒரு உள்ளார்ந்த தேடலால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. 1948 ஆம் ஆண்டு சே பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்திற்குள் மருத்துவம் பயில காலடி எடுத்து வைத்தார். அவர் ஒரு பயணப் பிரியர். ஒரு இடத்தில் இருப்பதென்பது அவருக்குப் பிடித்தமில்லாத ஒன்று. பயணங்களால் நிறைந்தது சேவின் வாழ்க்கை. அவரது மனதில் கனன்று கொண்டிருந்த தீராத தேடல் அவரை பயணங்களின் காதலன் ஆக்கியது. தனது மருத்துவப் படிப்பை முடிப்பதற்குள் இரு பெரும் பயணங்களை மேற்கொண்டார்.1950ல் தன்னந்தனியாக முதலாவதாக பயணம் ஒரு மோட்டர் பொருத்திய மிதிவண்டியில். அது ஒரு 4500 கிலோ மீட்டர் பயணம். அதற்கு அடுத்த வருடத்திலேயே அவ்ர் தனது நண்பர் ஆல்பெர்டோ கிரானடோ (அவர் இந்த வருடம் தான் இறந்தார்.) ஏறக்குறைய தென்னமேரிக்க கண்டம் முழுவதையும் கடக்கும் ஒரு மாபெரும் 8000 கிலோ மீட்டர் பயணமாக அது அமைந்தது.சே எனும் 24 வயது இளைஞனின் பார்வையை மொத்தமாக புரட்டிப் போட்டது இப்பயணமே. இப்பயணத்தின் வழியில் பார்த்த எல்லா லத்தீன் அமெரிக்க தேசத்திலும் ஒரு விசயம் பொதுவானதாக இருந்தது. அது உழைக்கும் வர்க்கம் அடிமைச் சூழலில் சிக்கித் தவித்தது. வழியெங்கும் அவர் விவசாயிகள் நிலக்கிழார்களுக்கு அடிமைகளாகவும், பாட்டாளிகள் பெருமுதலாளிகளுக்கு கீழே உரிமைகள் தொலைத்த கூட்டமாகவும் இருப்பதை கண்கூடாகக் கண்டார். தன் கண்ணெதிரே ஏகாதிபத்தியம் எனும் திமிங்கலம் லத்தீன் அமேரிக்காவை அப்படியே முழுவதுமாக மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கொதித்துப் போனார் சே. ஒருங்கிணைந்த- லத்தீன பாரம்பரியத்தை கொண்ட- ஒரு “ஹிஸ்பானிக் அமெரிக்கா”, எனும் பெரும் கனவு சேவின் மனதை வியாபிக்க ஆரம்பித்தது அந்த தருணத்தில் இருந்து தான்.

வறுமையாலும், பசியாலும் அல்லல்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதல் சேவிற்கு ஏற்பட இப்பயணம் துவக்கப் புள்ளியாக இருந்தது. இப்பயணத்தின் போதுதான், சே தானே பிரியப்பட்டு பெரு நாட்டிலுள்ள தொழுநோயாளிகள் காலனியில் சிறிது காலம் தங்கி அவர்களுக்கு சேவை செய்தார். அவரது பயணக் குறிப்புகள் பின்னாளில் “ The Motorcycle Diaries” என புத்தகமாக வெளிவந்தது. இப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் 2004ல் ஸ்பானியத் திரைப்படமாகவும் வெளிவந்தது.சேவின் சமூகவியல் ரீதியான, அரசியல் ரீதியான பார்வை மாற்றத்திற்கு அப்பயணத்தின் ஊடே அவர் சந்தித்த சில மனிதர்களும் அவர்களுடைய நிலைப்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பயணத்தின் முடிவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிய சே விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார். 1953 ஆண்டு படிப்பை முடித்து டாக்டர். எர்னஸ்டோ ஆனார், சே.குறிப்பு: படங்கள் அனைத்தும் பிற இணைய தளங்களினின்று பெறப்பட்டது.

சே எனும் விதை- I

Saturday, April 23, 2011ஒரு மனிதன் தலைவனாக மாறுவது எல்லா சமூகங்களிலும் இயல்பாக நடக்கின்ற ஒன்று. ஆனால் ஒரு மனிதன் ஒரு உணர்வாக மாறுகிற தருணம் மகத்தானது. ஒரு மனிதனே புரட்சி எனும் சொல்லின், அந்த மனோநிலையின் குறியீடாக மாறியிருக்கும் கதையிது.

தேசப் பற்றாளார்களை நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் தமது மக்களுக்காக, தமது தேசத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தந்துள்ளார்கள். நமது பாரதம் உட்பட அனைத்து தேசத்திலும் அதற்கு உதாரண புருஷர்களை நம்மால் எடுத்துக் காட்டிட முடியும். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களுக்காக உழைத்து, ஏகாதிபத்தியத்தை தன் கடைசி மூச்சு வரை எதிர்த்து, அனைத்துலக மக்களின் சமத்துவத்திற்காக தனதுயிரை இத்தரணியில் விதைத்துச் சென்றவன் ஒருவன் உண்டு. அவனது கதை இது.

“ சே!” என்னும் ஒற்றைச் சொல் இன்று ஒரு ஓரெழுத்து மந்திரமாயிருக்கிறது.
அர்ஜெண்டினாவின் ரொசாரொயோ நகரில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி , குவாரா லின்ஞ் மற்றும் செலியா டி லா செர்னா ஒய் லோசா தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தார், எர்னஸ்டோ குவாரா ( இப்பெயரோடு டி லா செர்னா எனவும் சேர்த்து அழைக்கப்படுகிறார்). அவருடைய தகப்பனார் ஸ்பானிய-ஐரிஷ் பூர்வீகம் உடையவர். தாயும் தனித்துவமான பாரம்பரியம் மிக்க ஒரு மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்தவர் தான். பணத்துக்குக் குறைவில்லை. மற்றவரிடமிருந்து தனித்துவமானவர் செலியா. மேட்டுக்குடியில் பிறந்த போதும், அவர் ஒரு இடது சாரி நம்பிக்கைகள் மிக்க ஒரு சோசியலிஸ்டாக, மதஎதிர்ப்புணர்வுள்ள ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். சேவின் பல்வேறு கருத்தியல்களும், பார்வைகளும் உருவாவதில் செலியாவின் பங்கு மகத்தானது. சேவின் தந்தை துவங்கிய தொழில்கள் பலவற்றில் சோபிக்க முடியாமல் நஷ்டத்திலேயே முடிந்தது. எனினும் செலியாவிடம் இருந்த அவரது குடும்ப சொத்து அக்குடும்பத்தின் ஜீவனத்திற்கு ஆனது.சே எனும் பெயர் எர்னஸ்ட்டோவிற்கு இடையில் தான் ஒட்டிக் கொண்டது. குவாரா எனும் குடும்பப் பெயரொடு இணைத்து ’எர்னஸ்டோ குவாரா’ என்பதே அவரது இயற்பெயர். நமது ஊரில் கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சகா என்று அழைத்துக் கொள்வார்களே, அது போல அர்த்தம் தொனிக்கும் ஒரு பேச்சு வழக்குச் சொல்லே ’சே’ .

வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் சே. அவர் குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அவரை ஒரு சாராசரி லத்தீன் அமெரிக்கனுக்கு இருக்கும் அறிவாளித்தனத்தையும் மிஞ்சிய அறீவுஜீவி சே என வர்ணிக்கிறது. இளமையிலிருந்தே புத்தகங்களாலே நிறைந்த வீட்டில் இருந்து, ஒரு முற்போக்குவாதியான தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்ததால் இதில் ஆச்சரியங்கள் பெரிதும் இல்லை என்றே கொள்ளலாம்.


துறுதுறு குழந்தையாக இருந்த ’சே’வை அவருடைய இரண்டாவது வயதில் தாக்கிய தீவிர ஆஸ்மா அவரை முடக்கி ஒரு ஓரமாய் சுருட்டிப் போட்டது. தனது வாழ்வின் கடைசிக் கணம் வரைக்கும் பிடிக்காத தோழனாய், அழையா விருந்தினனாய் ஆஸ்மா தன்னுடனே தங்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் தனது தாய் அளித்த நம்பிக்கையினாலும் அவரது கனிவான ஆதரவினாலும், அதனை அப்பாலகன் எதிர்கொண்டான்.
நோயின் தாக்கம் காரணமாக சேவால் எல்லா குழந்தைகளைப் போல தொடர்ச்சியாக பள்ளி செல்ல முடியவில்லை. ஆனால் அவரது தாய் அதனை ஈடு செய்தார். 1930ல் அர்ஜெண்டின தேசத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற நாட்டின் அரசியல் நிலை சிக்கலான சூழ்நிலைக்குள்ளானது. சேவின் பள்ளிப் பருவம் முழுவதும் அந்த சூழல் அப்படியேதான் இருந்தது. ஆஸ்மாவை எதிர்த்து போராடி போராடி அசாதாரணமான மன வலிமையை வளர்த்துக் கொண்ட சே, பின்னாட்களில் அதனயே தனது ஆளுமையின் ஒரு மகத்தான கூறாகக் கொண்டார்.
பள்ளிப் படிப்பை முடிக்கிற தருவாயில் சேவின் பாட்டி மரணமடைந்தார். எதிர் காலம் குறித்து பெரிதும் முடிவுகள் ஏதும் எடுக்காத சே மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததற்கு இந்நிகழ்வு முக்கியமானதாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் அவரது தாயார் மார்பகப் புற்று நோயால் அவதியுற்றதும் இன்னொரு முக்கிய காரணமாக முன் வைக்கப்படுகிறது. அவருடைய குடும்பமும் அவ்வேளையில், தலைநகர் பியூனஸ் அயர்ஸிற்கு குடிபெயர்ந்திருந்தது.

சேவின் கல்லூரி வாழ்க்கை அடுத்த பதிவில்...

படங்கள் உதவி: 1. http://www.hey-che.com/quotes-from-che-guevara.html
2. விக்கிபீடியா இணையதளம் [ படத்தில் இடது ஓரத்தில் சே]
3. விக்கிபீடியா இணையதளம் [ 22 வயதில் சே]