முதன் முதலாய்...

Sunday, November 28, 2010மற்றவரிடம் பழகியதால்
கிடைத்தது கவிதைகள் சில
உன்னுடனான பந்தத்தால்
கூடவே ஒரு வாழ்க்கையும்
புதிதாய்

நதிகள் சேருமிடம் பலவாயினும்
கலப்பது கடலிலேதான்
என் வார்த்தைகள் பலாவாயினும்
கருப்பொருள் ஒன்றுதான்.

காதலென்பது எடுப்பதன்று
கொடுப்ப தென்றுணர்ந்தேன்.
கொடுத்தேன் என்னை...

நம் நேசம் கற்பித்தபடி
முழுமையாய் காதலிக்கத்
துவங்கியிருக்கிறேன் – என்
தாயை,தங்கையை,தந்தையை,
தமையனை, நண்பர்களை,
சக பயணியை, எதிர் வீட்டு நாய்குட்டியை...

மௌன ராகம்-VI

Thursday, November 25, 2010நேற்றுகளில் மட்டுமே வாழ்ந்திருந்த
என்னை இன்றுகளுக்கு
இழுத்து வந்தவள் நீ
எனது நாளைகளில் நீ
இருக்கப்போவதில்லை எனும் யதார்த்தம்
தெரியும் எனக்கு...

நாளைகளைக் குறித்த
கவலைகளில்லை என்னிடம்
இன்று உன்னோடிருக்கிறேன்
அது போதும்.

நாம் சந்திக்கும்
இன்றுகளில் கூட சுதந்திரமாய்
உரையாட முடிவதில்லையென
வருத்தம் கொள்கிறாய்

எனது எண்ண அலைகளை
நீ உள்வாங்கிக் கொள்கிறாயென்பது
எனக்குத் தெரியும்

நீயனுப்பும் பதில்களை
மனக்கண்ணால் படித்துவிடுகிறேனென்பது
உனக்கும் தெரியும்

நம்மிடையேயான தொடர்புகள்
இவ்வாறிருக்க எதற்கு
வார்த்தைகளால் சமைத்த உரையாடல்கள்?

ஊன் தவிர்த்து உயிர் தேடும்
பேரன்பிற்கு தேவையில்லை ஒரு போதும்
ஒலியும்
ஒளியும்.

மௌன ராகம்-V

Thursday, November 18, 2010அருகருகே அமர்ந்திருப்பினும்
பிறர் கவனம் நம் மீது
படியாதிருக்க பேசாதிருக்கின்றோம்.
மெல்ல நம்மிடையே மௌனம்
மொட்டவிழ்கிறது
ஒரு மென்மலர் போல...
மெல்ல மலர்ந்து அது மணம் கமழ்த்தும்
தருணத்தில், யாரோ வார்த்தையுதிர்த்து
அம்மலர்ட்ச்சியை மாய்க்கிறார்
அம்மலரை மீண்டுமெப்படி
மலர்த்துவதென்ற ஆழ்ந்த சிந்தனையில்
நாம் இக்கணத்தில்.

யாதும் நலம்

Tuesday, November 16, 2010பண்டிகை காலங்களின்
இரவல் கூதூகலங்களுக்குப்
பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய
கடன்களின் கணக்கீடுகளால்
சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும்
நடுத்தர குடும்பத் தலைவர்களுள்
ஒருவனாய் நானும்;
இவ்வமயம் எனதிந்த அமர்வும்.

காமப் பாற்கடலில்
கடைந்தெடுத்த அமிழ்தங்களாய்
மழலைகள் இல்லாதிருந்திருந்தால் நலம்.

கடைவதற்கு அசுரர் போல நானிருக்கையில்
துணைக்கு தேவர் போல இல்லாள்
இல்லாதிருந்திருந்தால் இன்னும் நலம்.

இதற்கும் மேலே
இருப்பின் பிரக்ஞையும்
வாழ்வு குறித்த அவதானங்களும் அவசியப்படும்
நரனாய் ஜனிக்காதிருந்திருந்தால்
இன்னும் இன்னும் நலம்.

’கப்பல்கள் கரைகளில் பாதுக்காப்பாய் இருக்கும்
ஆனால் அதற்காய் அவை கட்டப்படுவதில்லை’
எனும் ஜான் ஷீடின்
மேற்கோளை மடிக்கணிணியின்
முகப்புப் படமாய் வைத்து
“அப்பா எப்படி?” என்கிறாள்
மலர்ச்சியாய் மகள்.

“ம்...
மிக நன்று”, நான்.
ஓய்தல் மீண்டு
எழுப்பப் பட்டேன் மீண்டும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (14.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

மௌன ராகம்-IV

Saturday, November 13, 2010நாம் பேசாத வார்த்தைகளை
எல்லாம் என் மரங்களில்
தூளி கட்டி சேமிக்கிறேன்.
விடைபெறும் ஒவ்வொரு தருணத்திலும்
என் மரங்களில் ஏதெனும் ஒன்றில்
அந்நாளுக்குரிய ஒற்றை தூளி
ஏறியமர்கின்றது.
பருவமாற்றம் நிகழ்த்திய பெருங்காற்றில்
ஓர் அந்தியில் தூளிகளனைத்தும்
ஒரு சேர அறுந்து
காற்றில் சிதறுகின்றன வார்த்தைகள்
நாம் பரிமாறிட கூச்சப்பட்டு சேமித்த
வார்த்தைகள் அனைத் துமிப்போது
பெருமழையாய் பொழிகிறது எங்கும்
வெட்கம் மிச்சமிருக்க நாணியபடி
மறைவிடம் தேடி ஓடுகிறோம் இருவரும்
அப்பெருமழையில் நனையாதிருக்க
யாருமற்ற பெருவெளியை நனைத்துக்
கரைகின்றன அவை.

உள்ளொன்று வைத்து…

Wednesday, November 10, 2010வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள்
முயல் குட்டி துள்ளுகிறது
தவழும் முகில் யானையாய்
துதிக்கை உயர்த்துகிறது.
பேருந்து நிலையச் சுவற்றின்
அழுக்குக் கறைகள்
கொம்பிலா ஆநிரையாகவும்
ரகசியம் கிசுகிசுக்கும் மனிதர்களாகவும்
ஆகின்றன.
சிந்திய சில துளி குளிர்பானம்
பெயர் தெரியா தூர தேசத்தின்
ஆரஞ்சு வண்ண வரைபடமாகிறது.
அரூபங்களில் கூட ரூபங்களை
பிரசவிக்கும் என் விழிகள்
கடவுளாகின்றன.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (07.11.10) இணைய தளத்திற்கு நன்றி.

மௌன ராகம்-III

Sunday, November 7, 2010கவிதைகள் வார்த்தைகள்
ஏதுமின்றியும் எழுதி
வாசிக்கப்படலாம் !
வார்த்தைச் சட்டங்களுக்குள்
கவிதைகள் அடங்கிவிடுவதில்லை
எல்லா சந்தர்ப்பங்களிலும்

எதிரெதிரே அமர்ந்தவண்ணம்
விழிகள் துளைத்து நாமிருவரும்
உற்று நோக்குவதை என்னவென்று சொல்வாய்?

மௌன ராகம்-II

Wednesday, November 3, 2010வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும்
இடையேயான தூரம் எவ்வளவு?

கதை பேசாது விடை தேடி
நாமிருவரும் எதிரெதிரே

தூரத்துத் தெருவிளக்கும், சில
சில்வண்டுகளும் சாட்சிகளாய்

பனியாய் உருகும் நேரம் நம்மிடையே...

வார்தைகளற்று விழியால் புசிப்பதைத் தவிர
வேறேதும் செய்யவில்லை இருவருமே

பட்டாம்பூச்சியாய் படபடக்குமுன்
விழிகள் பார்க்கையில்
விட்டிலாய் துடிக்கும் மனது
பேசிவிட...

கண்டோம் இறுதியில்
வார்த்தைகளுக்கும் மௌனத்திற்குமான
தூரங்கள் நம் கர்வத்தால்
அளக்கப்படுகிறதென்பதை...

தெரிந்தும் நாம் பேசவில்லை.

என்னிதழ் பூட்டினைத் திறந்திட
இதொ நெருங்கி வருகிறது
உன் சாவி !

நிழல் வேண்டும் காலம்

Monday, November 1, 2010ரௌத்திரம் பழகியிராதது தவறோவென
எண்ணத் தூண்டும்
அசௌகரிய தருணங்கள்
பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும்
கரிசனங்களும் போலியேனப்
புலப்படும் வேளைகளில்
படரும் விரக்தியின் நிழல்
ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு
நீர்த்துப் போகிறது
நிசத்தின் பாரபட்சமற்ற குரூரத்தால்
புலன் தோற்று தாகம் தணிக்க இறங்கிக்
கால்கள் பொசுங்கிய பின்னரே
தெரிகிறது கானல் நீரென
புண்பட்டுத் தோற்ற வெட்கம் தின்ன
சலனமடங்கிய சவத்தைப் போல
யாருமற்று அனல் தகிக்கும்
இம்முடிவிலா பாதையில் இதப்படுத்த
ஒரு காட்டுப் பூவேனும் வழியிலிருந்தால் நலம்
குறிப்பாக தெரிந்தே தோற்கின்ற
இக்காலங்களிலேனும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(31.10.10) இணைய தளத்திற்கு நன்றி