பொரியா முட்டைகள்

Friday, December 16, 2011பற்களுக்குப் பின்னால்
சொற்களோடு அகப்பட்ட நாவை
இதழ் கதவடைத்து இறுகப் பூட்டுகிறது
அதிகாரத்தின் சாவி.

இயலாமையின் உக்கிரத்தில்
விம்மியெழுந்து எழுந்து தாழ்கிறது
பெருமூச்சு கக்கும் நெஞ்சுக்கூடு

தடைகள் உடைத்துப் புறப்படத்
துணிந்திடும் சுயத்தைச் சுற்றி
எழுப்பப்படுகிறது
புதிரான எதிர்காலம் குறித்த
கேள்வியின் மதில்கள்

உறவுகளின் நிலை குறித்த கேள்விகளோ
அம்மதில்களின் பூசப்பட்ட கதவுகளாகின்றன.

குமுறும் சுயம் அடை காக்கிறது
உண்மைக் கரு சுமக்கும்
என்றும் பொரியா முட்டைகளை

மதில்களிப்போது கல்லறைகளாகின.

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Friday, December 9, 2011தனியனாய் கிடத்தல் இனிதென்றிருந்தேன். தனிமையின் இசையே எனது யாழில் வழிந்து கொண்டிருந்தது இதுகாறும். எனை மட்டுமே கொண்டிருந்த எனது பிரபஞ்சத்தினை நிறைக்க என மனவெளி மண்டலத்தைத் துளைத்து வந்து விட்டாள் ஒரு தேவதை. இறை தன் ஆசீர் அனைத்தையும் திரட்டி மொத்தமாய் ஒரே தவணையில் எனது கைகளில் ஒப்படைத்து விட்டார். எனக்காய் அவர் சிருஷ்டித்த பெண்ணே அப்பேராசீர்.

எனக்குத் தெரியும் நீண்ட நாள்- சொல்லப் போனால் மிக நீண்ட நாட்களாயிற்று- நான் வலைப்பூவில் எழுதி. ஏன் உண்மையில் கவிதை கிறுக்கியே வாரங்கள் பலவாகிறது. வாழ்க்கையில் கவிதையெனும் நிலை போய் வாழ்க்கையே கவிதையாகிக் கொண்டிருக்கும் இத்தருணங்கள் என்னைச் சிதறடித்து மிளாசி எறிவதை வெறும் சாட்சி மாத்திரமாய் பார்த்து, ரசித்து, லயித்து, சுகித்து... கழிக்கின்றேன் பொழுதுகள் அனைத்தையும்.

கவிதையில் எனது எழுத்துக்களில் எண்ணற்ற முறை காதலில் திளைத்ததுண்டு அரூபப் பெண்மையை. ஆனால் முதன் முதலாக குருதியும் சதையுமாய் ஒரு பெண் மீது காதல் வயப்படுவது முன்னுவமை சொல்லவியலா அனுபவமாய் இருக்கிறது. அந்த அதீதத்தின் ருசி இருதயம் முழுமையும் தித்திக்கிறது. மூளையின் சகல நினைவறைகளும் பொங்கி வழிய வழிய திக்குமுக்காட்டுகிறது.

“பார்த்தவுடன்
அழகாய் தெரிபவள்
காதலியாகிறாள்.

பழகியவுடன்
அழகாய் தெரிபவள்
தோழியாகிறாள்.”

எனக்கோ இரண்டுமாயும் இருக்குமிவளை என்னென்று சொல்வேன். நாலேழு வயதுவரை காத்திருந்தேன் எனக்கான தேவதையின் வரவிற்காய். முதன் முதலாய் விரிந்த அவளது மென்சிறகு என் முகம் வருடிய கணத்தில் மிகப் புதிதாய் இன்னும் ஒரு முறை பிறந்தது போல் இருந்தது. தனது திராட்சை விழிகளால் என் மனதை மட்டுமன்றி எனை முழுவதுமாய் கொள்ளை கொண்டு விட்டாள் அந்த மாமை நிறத்தாள்.

கண்டதும் காதலென்பதில் எனக்கு துளியும் உடன்பாடு இருந்ததில்லை, திருமணத் தகவல் மையத்தில் அவளது நிழற்படத்தை பார்க்கும் வரையில். இரு வீட்டார் கலத்து பேசி முடிவு செய்தபின் நாங்கள் இருவரும் இதயம் கலந்தோம். இரவுகள் எனக்கு எப்போதும் பிடிக்கும். இப்போது இன்னும் அதிகமாய்ப் பிடிக்கிறது. தாளில் கவியெழுதிய காலம் போய் அநுதினமும் முன்னிரவில் அவளுடன் கதைப்பதெல்லாம் கவிதையாகிறது.

வாழ்வின் அடுத்த கணம் ஒவ்வொன்றிலும் ரகசியங்களும், ஆச்சரியங்களும் மட்டுமே ஒளிந்து கொண்டிருப்பதாய் எண்ணியிருந்தேன். பரிசுகள் குறித்து ஒரு போது நினைத்துப் பார்த்ததில்லை. அது சரி எதிர்பாராத தருணத்தில் கிடைப்பவை தானே பரிசுகள். இருப்பினும் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை இப்படியொரு புதையலை... !

தோழர் தோழியரே எனது தோழியும் காதலியுமான அவர் சனவரி திங்கள் 29 ஆம் நாள் என் இல்லாள் ஆகின்றார். அவ்வசந்தத்தினை எதிர்நோக்கியிருக்கும் நாங்கள் உங்களின் ஆசீர்வாதத்தினை வேண்டுகின்றோம்.