பொய்களைப் பழிக்காதீர்

Tuesday, August 31, 2010

பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
கலைனயம் மிக்கவை

உண்மயைப் போல
இயந்திரத்தனமாய்
ஒருபோதுமவை இருப்பதில்லை

உண்மைகள்
ஒரு நாளும் ஒத்திகைகள்
பார்த்துக் கொள்வதில்லை

உண்மைகள் விறைப்பானவை
பொய்கள் காற்றின் திசையில்
லாவகமாய் வளையும் நாணல்கள்

உண்மை எதுவென
நாமுணர ஏதுவாகிறது
பொய்களால்தான்

பொய்களைப் பழிக்காதீர்
அவை அழகானவை
முன்தயாரிப்புள்ளவை.


இக்கவிதையை வெளியிட்ட இளமை விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.
http://youthful.vikatan.com/youth/NYouth/varunanpoem300810.asp

எப்படியேனும்...

Monday, August 30, 2010ஐயங்களாய்
ஆற்றாமையாய்
கருணையாய்
கோபமாய்
மறுதலிப்பாய்
உன் வார்த்தைகள்

வார்த்தைகளால் வார்க்கவியலா
உணர்வுகளின் வெளிப்பாடாய்
ஆழ்மனதின் கேவலாய்
கெஞ்சலாய்
குழப்பமாய்
யாசிப்பாய்
உன் பார்வைகள்

ஒவ்வொரு சந்திப்புகளிலும்
எப்படியேனும் என் மீது
படிந்துவிடுகின்றாய்
வார்த்தைகளாகவோ
பார்வைளாகவோ

வெறும் சாட்சியாய் நான்.

உள்ளும் புறமும்

Saturday, August 28, 2010என் கர்வக் கேணியில்
குளித்தெழும் நானென்னும் ஆணவம்
பீடம் ஏறியமர்ந்து
அடிபணிய நிர்பந்திக்கும்
உன் பெண்மையை.

பதியின் வாக்குக்குப்
பணிந்து நடவென்றே சொல்லும்
நீ கேட்ட கற்பிதங்கள்.
ஆயினும் உன் சுயமுன்னை
சிந்திக்கவே சொல்லும்.

எல்லாம் முடிந்த பின்னே

Thursday, August 26, 2010யாருமே தனக்கில்லையென
வீதி வழி நடப்பவனுக்கு
அவனுக்குத் தெரியாமலேயே
துணையாய் வரும்
தெருக்கள் வழிநெடுகிலும்.
ஊரடங்கும் சாமத்தில்
அண்ட இடம் கிடைத்ததும் உடன்வந்த
தெருக்களை உதறிவிட்டு உட்செல்லும்
அவனது புறக்கணிப்பால் செய்வதறியாது
திகைத்து நிற்கும் தெருவினைப்
பார்த்து ஆதரவாய் கண்சிமிட்டுகின்றன
தெருவிளக்குகள் யாரில்லையெனினும்
துணையாய் தாமிருப்பதாய் சொல்வதுபோல்.

கவலைக் குழந்தைகள்

Tuesday, August 24, 2010நம் பந்தத்தின் விளைவாய்
இமை மூடா இரவுகளோடு
வாசம் செய்கிறேன் நான்

உன்னைப் பற்றிய
குழப்பங்களால் அலைகிறது மனம்
ஓய இடம் தேடி

வேண்டாமென்றே சொன்னாலும்
உன்னைப் பற்றிய
கவலைக் குழந்தைகள் என்
மனக்களிறின் மீதேறியமர்ந்து
சவாரி செய்யவே விரும்புகின்றன!

பழையன கழிதல்

Sunday, August 22, 2010வர்ணிக்க முடியாததொரு வலி
தைத்திடவியலா மன கிழிசல்கள்
அவ்வப்போது பூத்திட்ட சிறு புன்னகைகள்
பாவங்கள் செய்யவிருந்த தருணங்கள்
பெறத் தகுதியில்லாத போதும்
கிடைத்திட்ட சில பாராட்டுக்களும்
பல குற்றச்சாட்டுகளும்
வெப்பமாய் பணியினூடே வெளிவரும்
அயற்ச்சிப் பெருமூச்சுகள்
மேற்சொன்னதும்
இன்னும் சொல்லாத பிறவும்
கடந்து வந்து இன்றைய நாளின்
முகப்பில் நின்றபடி
கிழித்து எறிகிறேன் அன்றைய தேதியை
என் கரங்களால் – அந்த நாளின்
அனைத்து சாராம்சங்களுடன்.

துளிர்க்கும் முடிவுகள்

Friday, August 20, 2010கவிதையொன்று
முடிந்த இடத்தினின்று
மீண்டும் எழுதப்படுகிறது

முடிந்ததாய் எண்ணிய
பொழுதில் வழிய ஆரம்பிக்கிறது
மனதை உருக்கிய இசையொன்று

பொய்த்ததாய் நினைத்திருந்த
ஆகாயத்தினின்று மண் சேர்கிறது
ஒரு சிறு தூறல்

போனதாய் நினைத்திருந்த
காதலி மீண்டும்
பேச துவங்கியிருக்கிறாள்.

போகட்டும் விடு

Wednesday, August 18, 2010பகலுக்கு ஒளியூட்டும்
ஆதவன் அணைகையில்
இரவுக்கு தெம்பூட்டும்
பால் நிலா
தகிக்கும் வெயிலுக்கு
மாற்றாய் நிழலும் கிட்டும்
ரணங்கள் தரும் வையமே
மருந்தும் தரும்
கவலை கொள்ளாய் மனமே!
சன்னல்கள் அடைபட்டால்
போகட்டும்
கதவுகள் திறக்கும்.

இடப்பெயர்ச்சி

Monday, August 16, 2010பிரிதொரு நாளில் நிகழ்ந்த
துயரத்தை துவட்டி எறிகிறேன்.
நெகிழ்ந்து போனதொரு நெருங்கிய
பந்தத்தினை சலனமின்றி பார்த்தபடி
சற்றுமுன் அடைந்த ஒரு நன்மையின்
நிழலில் ஓய்வெடுக்கிறேன்.
கடவுள்கள் வசிக்கும்
கருவறை தரிசனங்கள் அவ்வப்போது
ரணங்களை வீட்டு
வரவேற்பறையில் அலங்காரமாய்
வைத்தபடி மீளாத் துயரினின்றும்
மீண்டு செல்கிறேன்
கதவுகள் சன்னல்கள் எல்லாம்
மூடிக்கொண்டாலும்
சாவித் துவாரங்கள் வழியாகவாவது
இடம் பெயர்ந்து சென்ற வண்ணமிருக்கிறேன்.

நான் நகரும் நகரம்

Saturday, August 14, 2010அதிகாலை துயில் எழுந்து
அவசரக் குளியல்
அரைகுறை உணவு
ஆலாய் பறந்து அலுவலகம்
செல்லும் தடத்தில் போக்குவரத்து
நெரிசல் வாங்கும் பாதி சீவனை
மேலதிகாரியின் வசவுகள்
வாங்கும் மீதி சீவனை
அரட்டையுடன் உட்செல்லும்
மதிய உணவு
ஐந்தடிக்கக் காத்திருந்து
மீண்டும் கட்டப்படும்
கால்களில் சக்கரம்
யதார்த்தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும்
நகரத்துக்குள் தகுதிக்கு மீறிய அவாக்களுடன்
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்
என்னையும் என் பரிசுத்தத்தையும்.

விட்டம் பார்த்தல்

Friday, August 13, 2010என் அறையின் கூரை
நினைவுகள் சேமிக்கும்
வெளிப்படையான ரகசிய இடம்

எண்ணற்ற முறை பார்த்துக் கொள்வேன்
விட்டத்தை
வேலைப் பளுவினிடையேயும்

உடனிருப்போர் நான் யோசிப்பதாய்
எண்ணிக் கொள்வர்
நானோ விட்டத்து ரகசியங்களை
அசைபோட்டபடி

நான் என் விட்டம் பார்க்கிறேன்
நினைவுகள் தேக்கிய என் அறையின்
விட்டம் என்னைப் பார்க்கின்றது.

கால்களின் மொழி

Wednesday, August 11, 2010உன் கால்விரல் தூரிகையால்
என்னதான் ஓவியம்
தீட்டுகிறாய் என் கால்களில்?
வரைவது எதுவெனத் தெரியாத
போதிலும் என்னையே நானுனக்கு
வண்ணமாய் உருக்கித் தருகிறேன்

என் செவிகளுக்கு மட்டுமே
கேட்கிறது எப்பொதாவது
இடறிடும் கொலுசுகளினின்று
எழும் மெல்லிசை

ஒரு வகையில் இது கூட
போர்க்களம் தான்
அங்கே வாள்கள்
இங்கெ நம் கால்கள்

ஒருவர் பின் ஒருவர்
மௌனமாய் நாம்
அமர்ந்திருப்பினும்
கால்கள் மட்டும் பேசிக்கொண்டே...

அவ்வப்போது நீ ஓய்கையில்
பொறுமையாய்
காத்திருக்கும் என் பாதங்கள்
வார்த்தைகளற்ற மொழியாலான நம்
பிரிதொரு சந்திப்பிற்காய்.

உன்னோடிருத்தல்

Monday, August 9, 2010நீ பருகும் நீராய் மாறி
உனக்குள் புகுவேன்
வியர்வைத் துளியாய்
உன் மீது வழிவேன்

அமரும் இருக்கையாகி
உன்னை உள்வாங்கி அணைப்பேன்

யாக்கை யுடைத்து
வளியாய் மாறி
உன்னுள் புகுவேன்

தென்றலாய் மாறி உன்
குழல் கலைத்து அதனுள்
கரைவேன்

உன்னோடிருத்தல்
மட்டுமே முக்கியம்
எதுவாய் என்பதல்ல.

கண்ணாடி வேர்கள்

Saturday, August 7, 2010ஓங்கி வளர்ந்த நெல்மணிகள்
சிரம் தாழ்த்திப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
வேர்க் கண்ணாடிகளில்
பிரதிபலிக்கும்
உழவுக் கிழவர்களின்
முரட்டு உழைப்பை

நிலங்கள் மாறினாலும்
உழைத்துக் கொண்டுதானிருக்கின்றனர்
இடைவிடாது
மண் புழுக்களுடன்
சேர்ந்து சில மனிதர்களும்
இங்கெ...

விழி விற்று வாங்கிய வானவில்

Friday, August 6, 2010வெளிநாட்டு வேலை
கைகொள்ளா ஊதியம்
தெரியாத ஆட்கள்தான்
அன்புக்கு ஏக்கம்தான்
பரவாயில்லை...

தேற்றுவதற்கு
டாலர் கடவுள்
இருக்கிறான்!

அபரிவிதமாய் கிடைத்தது
வகை வகையாய்
உணவும்
விதவிதமாய்
உடையும்

கொண்டு வந்து கொட்டியது
சகலத்தையும்
டாலர் குப்பை

எப்போதாவது
நினைவிற்கு வரும்
அன்னை ஆசையோடு
பிசைந்து கொடுக்கும்
சாம்பார் சாதம்...

கண்கள் குளமாகும்

அவ்வப்போது தோன்றும்
அவசரப்பட்டு ஆசையில்
விழிகளை விற்று
வானவில் வாங்கிவிட்டேனோ?

வாழ்க்கைச் சக்கரம்

Wednesday, August 4, 2010பம்பரம் விட்ட பால்ய நாட்கள்
திமிறித் திரிந்த இளமை முறுக்கு
யதார்த்தம் உறைத்த நடுத்தர வயது
சோர்ந்து சாய்ந்திருப்பினும்
அனுபவங்கள் புடமிட்ட முதுமை
சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
வந்த பகுதி மீண்டு(ம்) வராமலேயே
எல்லாம் முடிந்து விடுகிறது
இமை மூடித் திறப்பதற்குள்.

அதிசய மெழுகு

Monday, August 2, 2010ஊன் மெழுகின்
மனத்திரியில்
காமச் சுடரை
ஏற்றுவது யார்?

விடைதெரியா குழப்பத்தில்
சூன்யமான இரவுகள்

அதிதீவிர யோசிப்பிலும்
அண்டாதது ஒரு
நடுநிசியில் ஞானோதயமாய்


தனக்குத் தானே சுடரெற்றி
ஊழித்தீயில் உருகும்
அதிசிய மெழுகு நான்.

இரவு பயணம்

Sunday, August 1, 2010வெட்ட வெட்ட
வளரும் கறுப்பு
ராட்சஸர்களாய்
முடிவற்றவை போல
நீளும் நெடுஞ்சாலைகள்

சாலையெங்கும்
சீரான இடைவெளிகளில்
ரத்தக் கண்களுடன்
கண் சிமிட்டிடும்
பிரதிபலிப்பான்கள்

விரித்த கூந்தற் கிளைகளுடன்
இரு புறத்திலும்
வேலி கட்டும்
பெயர் தெரியா
பேய் மரங்கள்

எங்கே பிறந்ததென
விளங்காது
காற்றில் கரையும்
சில் வண்டுகளின்
ரீங்காரம்

எமனின் தூதுவர்களாய்
அசுரத்தனமாய்
எதிர் வரும்
கனரக வாகனங்கள்

நடுநிசிப் பயணம்
நன்றே
சாளரத்தின் வழியே
பார்வையை கசிய விடாதவரை.