Showing posts with label சினிமா கட்டுரை. Show all posts
Showing posts with label சினிமா கட்டுரை. Show all posts

அகிரா (Japanese, 1988)

Sunday, December 7, 2014






அனிமேஷன் திரைப்படங்கள் உலகெங்கிலும் குழந்தைகளுக்கானவை மட்டுமே என்றொரு பொது பார்வை உள்ளது. அப்பார்வை ஓரளவுக்கு சரியே என்பதை மறுக்க முடியாது. பெரும்பான்மையாய் இவ்வகைப் படங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக அவர்களின் உலகினை ஒட்டிய கதைக்களங்களை அல்லது அவர்களுக்கு மிகப் பிரியமான கனவுறு புனைவுகளை (fantasy)  மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. காமிகஸ் எனப்படும் படக்கதைகளை அடியொற்றி எடுக்கப்படும் திரைப்படங்கள் உலகெங்கிலும் பெருத்த வரவேற்பை பெறுகின்றன. ஹாலிவுட்டில் மார்வெல் படக்கதைகள் (Marvel Comics) எண்ணற்ற (அனிமேஷன் அல்லாத) திரைப்படங்களாக வெளிவந்து வசூல் சாதனைகளை படைத்துள்ளன என்பதும் நாம் நன்கு அறிந்ததே. இருப்பினும் இந்த படக்கதைகளுக்கெல்லாம் முன்னோடியாகவும் ஊற்றுக் கண்ணாகவும் இருந்தது ஒரு வகையில் ஜப்பானிய படக்கதைகள் தான். அதிலும் குறிப்பாக ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட மங்கா படக்கதைகள் (Manga Comics) உலக பிரசித்தி பெற்றவை.

ஹாலிவுட் தனது உலகளாவிய சந்தையை பயன்படுத்தி அதிக பொருட்செலவில் குழந்தைகளுக்கென எடுப்பதாக சொல்லப்படும் பல படங்களில் அமெரிக்க தேசிய கருத்துருவாக்கம் (American Nationalism) ஊடிழையாக பின்னப்பட்ட்டிருப்படதை ஆழ்ந்த திரை வாசிப்பின் மூலம் நாம் அறிய வரலாம்.பேலும் அவை ஒரே விதமாக ஆக்‌ஷன் திரைப்படங்களாக இருப்பினும் அவற்றின் அடிநாதமாக அமெரிக்க தனிமுதல் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். உலகம் எதிர்கொள்ளும் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வும் விடிவும் அமெரிக்காவிடம் மட்டுமே உண்டு எனும் மாயையை அத்திரைப்பிரதிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி இளைய தலைமுறையினரின் மனங்களில் வலுவூட்டப்படுகின்றது.



மங்கா நாம் நினைப்பதைப் போல படக்கதைகளை வெளியிடும் ஒரு நிறுவனம் அல்ல. மாறாக மங்கா எனும் பதம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானியர்களால் அல்லது ஜப்பானிய மொழியில், தமக்கென ஒரு ஓவிய பாணியை வளர்த்தெடுத்துக் கொண்ட ஒரு பாணியையே குறிக்கிறது. இப்படக்கதைகளின் தோற்றுவாயாக ஜப்பானாக இருப்பினும் அவற்றின் பாதிப்பில் சீனா, கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் படக்கதைகள் உருவாகின. போலவே பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் கூட படக்கதைகள் உருவாகின. நவீன மங்காவின் வரலாறு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிகார வீச்சுக்கு ஜப்பான் கட்டுப்பட்டிருந்த காலத்திலிருந்து (1945-52) துவங்குகிறது. அந்த காலகட்டத்தில் தான் ஜப்பானியர்களுக்கு அமேரிக்காவின் மார்வெல் படக்கதைகள் அறிமுகமாகியிருந்தன. எனவே கணிசமான தாக்கத்தை அவை உள்நாட்டில் தயாரான மங்கா படக்கதைகளில் ஏற்படுத்தின. 



ஜப்பானில் படக்கதைகள் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினராலும் படிக்கப்படுபவை. மேலும் சினிமாவைப் போல அப்படக்கதைகள்- சாகசம், மீபுனைவு, புதிர் கதைகள், மர்மக் கதைகள், அறிவியல் புனைக் கதைகள், அமானுஷக் கதைகள், அரசியல் புனைவுகள், குடும்பக் கதைகள் என- எல்லா வகைப்பாடுகளிலும் வெளியாகும். எனவே பெயர்தான் படக்கதைகளேயொழிய அக்கதைகளில் அத்தனை சாரம்சங்களுக்கும் இடமுண்டு. 1960ல் முதல் மங்கா படக்கதை திரையுருவம் பெற்றது. இவ்வளவு முன்னரே இதன் துவக்கம் இருந்தது எனினும் 1980 வரையிலும் வெளியான அனிமேஷன் படங்களின் எண்ணிக்கை மிக சொற்பமே. மொத்தம் 12 படங்கள் வெளியாகியிருந்தன. அதில் 80வது வருடம் மட்டும் ஐந்து படங்கள். ஆனால் இந்த நிலை எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து மாறத் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை வருடந்தோறும் கணிசமான அனிமேஷன் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகின்றன. இவை தவிர மங்கா படக்கதைகள் முழுநீள திரைப்படங்களாகவும் தொடர்ந்து வெளிவருகின்றன. இவ்வகைக் கதைகள் ஒருவைகையில் அறிவியற் புனைக்கதைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன என உறுதியாக சொல்லலாம். அறுபதுகளில் வெளியான மங்கா அனிமேஷன் படங்கள் கூட அறிவியற் புனைக்கதைகளே.






இவ்வகை படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு படைப்பு 1988ல் கட்சுஹிரோ ஒடாமோ (Katsuhiro Otomo) இயக்கத்தில் வெளியான அகிரா (Akira) அனிமேஷன் திரைப்படத்தைச் சொல்லலாம். இத்திரைப்படம் அனிமேஷன் உருவாக்கத்தில் ஒரு முன்னோடியாகவும் அந்த காலகட்டத்தின் அனிமேஷன் துறையின் அடுத்தகட்ட நகர்வின் துவக்கப் புள்ளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைவடிவின் மூலமான அகிரா மங்கா படக்கதையாக 1982ல் வெளியானது. இப்படத்தின் சிறப்பம்சம் அகிராவின் மூல வடிவான படக்கதையை எழுதி அதற்கு ஓவியங்களையும் வரைந்தவர் (ஜப்பானில் இவர்கள் மங்காகா என அழைக்கப்படுகின்றனர்) திரைப்படத்தின் இயக்குனர் ஒடமா தான். 1973 ஆம் வருடம் முதலே அவர் மங்கா ஓவியராக தனது படைப்புலக வாழ்வைத் துவங்கினார். சிறிதும் பெரிதுமாக அவர் எண்ணற்ற சிறுகதைகளுக்கு மங்கா வடிவம் கொடுத்தி வந்தார்.

தனது முதல் அறிவியல் புனைக் கதை மங்கா முயற்சியை 1979 ஆம் ஆண்டு Fireball என்ற தலைப்பில் துவங்கினார். அவர் அந்த மங்காவை முடிக்கவே இல்லை என்ற போதிலும் அவர் அவ்வனுபவத்தில் இருந்து நிறைய கற்றுக் கொண்டார். 1982ல் அவர் முதன் முதலில் ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் கதாப்பாத்திர வடிவமைபாளராக பணிபுரிந்தார். அதே வருடம் அவர், இன்றளவும் அவரது மகத்தான சாதனையாக கருதப்படும் மங்காவான அகிராவை எழுதத் துவங்கினார். அது 1982 முதல் 1990 வரை சித்திரத் தொடராக வெளியானது. ஆறு பகுதிகலாக வெளியான அந்த மங்கா அவரது வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது. அகிரா மங்கா தொடருக்கான படங்களை வரைந்தும் (Illustrator) இவரே. 1988 ல் தனது கதையின் ஒரு பகுதியை தேர்ந்து, ஏறத்தாழ 2000 பக்கங்களுக்கும் மேலான அகிரா மங்காவை சுருக்கி அதற்கு திரைக்கதை எழுதி, அகிரா என்ற பெயரிலேயே இயக்கவும் செய்தார். ஒரு இயக்குனராக இது அவரது முதல் திரைப்படமும் கூட.

1988ஆம் ஆண்டு நடைபெறும் மூன்றாவது உலகப் போரின் இறுதியில் டோக்கியோ நகரம் முற்றிலும் அழிகின்றது. அகிராவின் கதைகளம் அதிலிருந்து முப்பத்தியோரு ஆண்டுகள் கழித்து 2019ல் நவ டோக்கியோ நகரில்( Neo Tokyo) துவங்குகிறது. கதியின் துவக்கம் இரண்டு மோட்டார் சைக்கிள் குழுக்களுக்குள் இருக்கும் போட்டி, அதன் வழியே அவர்களுக்குள் மூளும் விரோதம் எனும் புள்ளியிலிருந்து துவங்குகிறது. ஷொட்டாரோ கானடா (Shotaro Kaneda) ஒரு குழுவிற்கு தலைவனாக விளங்குகிறான். அவர்களது எதிரி குழுவைச் சேர்ந்தவர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து தொடுக்கும் தாக்குதலில் கானாவின் குழுவினனும் அவனது பால்ய நண்பனுமான டெட்ஸுவோ ஷீமா (Tetsuo Shima) காயமடைகிறான். அவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட காவலரின் விசாரணைக்கு ஏனையோர் உட்படுத்தப்படுகின்றனர். தொடரும் நிகழ்வுகள் அந்நகரில் நடக்கும் ரகசிய ராணுவ நடவடிக்கைகளையும், சுழலின் சுதந்திரமின்மையையும் எடுத்துக் காட்டுகின்றன.

இதற்கிடையே மருத்துவமனையில் ராணுவ தளபதியும், அரசின் ரகசிய ஆராய்ச்சிகளின் மேற்பார்வையாளராகவும் இருக்கும் தளபதி ஷிகிஷிமா ஆய்வாளரின் வழி சிகிச்சை பெறும் டெட்ஸுவோவின் குனநலன்கள் அகிராவினுடையதை ஒத்திருப்பதாக அறிய வருகின்றார். இவரது கதா பாத்திரம் மிகவும் கட்டுக்கோப்பானதாகவும் அதே வேளையில் துளியும் இரக்கமற்றதாகவும் முன் வைக்கப்படுகின்றது.

சிகிச்சை பெறும் டெட்ஸுவோ இளைமையிலேயே விடுதியில் வளர்ந்தவனாகவும், அனைவரின் எள்ளலுக்கு உள்ளாகுபவனாகவும், எப்போதும் கானடாவின் உதவியாலேயே இக்கட்டுகளினின்று தப்பிப்பவனாகவும் இருக்கிறான். அவனுக்கு இது ஒரு வகை தாழ்வு மனப்பான்மையையும், விளைவாக கானடாவின் மீது வெறுப்பையும் உண்டாக்குகிறது. தனிச்சையாக இருப்பதற்கு அவன் முயலும் தருணங்கள் தோறும் ஏதாவது பிரச்சனை ஏற்பட முடிவில் கானடாவின் தலையீட்டினாலேயே காப்பாற்றப்படுவது அவனுக்கு மிகுந்த மனக்கசப்பை தருகின்றது.

படத்திற்கு தலைப்பைத் தரும் கதாப்பாத்திரமான அகிரா குறித்த தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே, பார்வையாளருக்கு தெரிவிக்கப்படாமல், வெகுநேரம் வரை இருக்கிறது. திரைக்கதையின் போக்கே ஒவ்வொரு கட்டத்திலும் அகிராவின் முன் கதையை நமக்கு அறிவிக்கின்றது. எண்பதுகளில் ஜப்பான் அரசு செய்திடும் ரகசிய அறிவியல் ஆராய்ச்சிகளில் ஏற்படுகின்ற பெரும் தவற்றினால் அதில் ஈடுபடுத்தப்பட்ட  ஒரு சோதனை உயிரான (Test Subject ) அகிரா அபரிவிதமான சக்தி பெற்றவனாகவும் தான் பெற்ற சக்தியை கட்டுப்படுத்த இயலாதவனாகவும் ஆகின்றான். விழைவாக ஏற்படும் பெரும் பிரளய வெடிப்பில் டோக்கியோ நகரம் அழிந்ததும் நமக்கு மற்றொரு பாத்திரமான அகிராவைப் போன்ற இன்னுமொரு பரிசோதனை உயிரான கியோகோ மூலம் தெரிய வருகிறது. மேலும் நவ டோக்கியோவில் அகிராவின் எஞ்சியிருக்கும் தகவல்களும் மீதமிருக்கும் அவனுடைய பாதுகாக்கப்படும் மாதிரிகளுமாக ஆய்வு தொடர்கிறது.

இதற்கிடையில் டெட்ஸுவோவை தனது சக தோழி கேயுடன் கானடா மீட்க கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறான். அதே  வேளையில் தாழ்வு மனப்பான்மையாலும், இயலாமையாலும் ஒடுங்கிப் போயிருந்த டெட்ஸுவோவின் சுயம், தன்னிடமுள்ள அபரிவிதமான வலிமைகள் குறித்து கொஞ்சம் கொஞ்சமாய் அறிய வர பெரும் மார்றத்துக்குள்ளாகிறது. தேக்கி வைத்திருந்த ஏக்கங்களை யாவும் புதிதாய் கிடைத்த இப்பெருவலிமை அவனுள்அகங்காரத்தினை வளர்த்தெடுக்கிறது. நகரத்தில் அகிராவின் கதையை அறைகுறையாய் தெரிந்து வைத்திருக்கும் கூட்டமொன்று அவனை அரசின் அடக்கு முறைகளினின்று தங்களை மீட்க அவன் நிச்சயம் வருவான் என மிகுந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு காத்திருக்கிறது. அவர்கள் முன்னிலையில், புதிதாய் கட்டவிழ்ந்திருக்கும் டெட்ஸுவோவினை அடக்க ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அதனை அவன் அனாயசமாய் எதிர்கொள்வதையும் காணும் அக்கூட்டத்தினர் அவனை அகிராவென்று ஆர்ப்பரிக்கத் துவங்குகின்றனர். 

            

முன்னரே அகிராவின் பேராற்றலையும் அதன் எதிர்விளைவையும் கண்கூடாகக் கண்ட கியோகோ டெட்ஸுவோவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தவளாக இருகிறாள். அவள் தனது சக்தியை பயன்படுத்தி கானடாவின் தோழி கேயை தனது ஊடகமாக பயன்படுத்தி அவள் வழியாக கானடா சூழலில் இக்கட்டைப் புரிந்து கொள்ளவும், உடனடியாக டெட்ஸுவோவை தடுத்து நிறுத்துவதுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறாள்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கேன உருவாகிவரும் பிரத்தியேக மைதானமொன்றின் கீழாக அகிரா பாதுகாக்கப் படுவதை கேள்வியுறும் டெட்ஸுவோ, யாராலும் தடுக்க முடியாதவனாய், அங்கே விரைகிறான். தளபதி ஷிகிஷிமாவின் வாயிலாக அவ்விடத்தில் பாதுகாக்கப்படுவது அகிரா அல்ல, மாறாக அழிந்த அவனது உயிரியல் மீதங்களே என்பதையும் அறிகின்றான். ஆயினும் அவனுள் பொங்கும் பெரும்சக்தி அவனது கட்டுப்படுத்த முடியாததாய், அவனை ஆட்கொள்வதாய் மாறுகிறது. இவ்வளவு நேரம் திடீர் சக்தியால் தன்னிலை மறந்திருந்த டெட்ஸுவொ விழித்து கொண்டவனாய் கானடாவை நோக்கி உதவுமாறு கூக்குரலிடுகின்றான். அதற்குள் காலம் கடந்து விடுகின்றது. முன்பொருமுறை அகிராவின் வழியே டோக்கியோ நகரை நிர்மூலமாக்கிய அப்பிரளய சக்தி இம்முறை டெட்ஸுவோவை மட்டும் பலி கொள்கிறது. நவ டோக்கியோ ஒரு மாபெரும் அழிவினின்று தப்புகிறது. கானடா தனது என்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதோடு படம் நிறைவுறுகிறது. 




அகிரா திரைப்பிரதியின் கதை,வளர்ந்து வரும் மனித குலம் கற்பனை செய்திருக்காத அளவிற்கு அறிவியல் துறையின் அசுர வளர்ச்சியால் ஒரு பக்கம் பல நலன்கள் விளைகின்ற போதிலும் அதில் உறைந்திருக்கும் ஆபத்துக்களை கொண்ட மறுபக்கத்தினை தனது புனைவின் மூலமாக முன்வைக்கிறது. மேலும் இக்கதை டிஸ்டோபியன் வகை கதைக்களத்தினுள் இயங்குவதால், அரசுகள் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு ஆபத்தான ஆய்வுகளை முன்னெடுக்கின்றன என்பதைனையும், இதனால் எதிர்காலத்தில் ஆபாயகரமான எதிர்விளைவுகள் ஏற்படின் அது பலி கொள்ளப் போவது மக்களைத் தான் எனும் உண்மையை சொல்கிறது. மேலும் சனநாயக முறையில் இருக்கும் அரசுகள் கூட எவ்வாறு தமது அதிகாரத்தை பிரயோகித்து மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திடும் சாத்தியங்களை கொண்டுள்ளன என்பதையும் எடுத்து காட்டுகிறது. கதையின் ஊடிழையாக மாறி வரும் ஜப்பானிய கலாச்சாரம் குறித்த கவலையும் பிரதிபலிக்க்கபடுகிறது.

அகிரா முன்வைக்கும் ஜப்பானிய வாழ்க்கை இயந்திரத்தனாமானதாகவும், குடும்ப அமைப்பை உதறித் தள்ளுவதாகவும் இருக்கிறது. தன்னலம் மிக்க மனிதர்களையும் முன்வைக்கிறது. இது ஐம்பதுகளில் ஒசுவின் திரைப்படங்கள் வழியாக நாம் அறிய வரும் ஜப்பானிய வாழ்வியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருப்பதை நாம் உணரலாம். அதிக குடும்பச் சித்திரங்களும், கலாச்சார விழுமியங்களை உள்வாங்கிய ஒசு காலகட்டத்திய ஜப்பானிய திரைப்படங்கள் மெல்ல எழுபதுகளில் தமது சாயலை மாற்றிக் கொள்ளத் துவங்கின. சமகாலத்திய அந்நாட்டுத் திரைப்படங்கள் மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகளாலும், பல படைப்புகளில் அதிகமான பாலியல் காட்சிகளும் இடம்பெறுபவையாகவும் மாறிப் போயிருக்கின்றன. திரைப்படங்கள், அவற்றின் கருப்பொருள்களின் தேர்வு அப்பிராதியத்தில் ஏற்படும் சமூக,அரசியல் நடைமுறை மாற்றங்களை எப்போதுமே பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் தனது சரிந்து போன வரலாற்றை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து வெறியோடு உழைக்க ஆரம்பித்தது. நாளடைவில், உலகம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே, அது சரிவிலிருந்து மீண்டெழுந்து தன்னை மறுநிர்மாணம் செய்து கொண்டது. ஆயினும் ஜப்பானியர் தம் வாழ்வை இயந்திரமயமான ஒரு மீளவியலா சுழலில் ஒப்புவித்தனர். அதுவே அவர்கள் தமது தேசிய முன்னேற்றத்திற்கு தந்த விலை.

அகிரா திரைப்படம் திரைப்பட அனிமேஷன் கலை வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கிறது. இப்படத்தைனை தொடர்ந்து வெளியான எண்ணற்ற திரைப்படங்களில் இப்படத்தின் பாதிப்பை பார்க்கலாம். 1999 இல் வெளியாகி உலகெங்கிலும் பெருத்த வரவேற்பைப் பெற்ற அறிவியற் புனைக்கதையான The Matrix திரைப்படத்தின் இயக்குனர்களன வாட்சௌஸ்கி சகோதரர்கள் தங்களின் படைப்பின் திரைஉருவாக்க மாதிரிகளாக கூறிய இரண்டு படைப்புகளில் ஒன்று அகிராவாகும். (மற்றொன்று 1995 இல் வெளியான Ghost in the Shell என்ற ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமாகும்.) உலகின் தலை சிறந்த அனிமேஷன் திரைப்படங்களின் தரவரிசைப் பட்டியலில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தினை உறுதி செய்துள்ளது இப்படைப்பு. 

குறிப்பு: இக்கட்டுரையை வெளியிட்ட பேசாமொழி, மாற்றுத் திரைப்படங்களுக்கான இணைய இதழுக்கு நன்றி.     

    

பந்தயப் புரவிகள் - பகுதி - VI

Tuesday, September 3, 2013



ஒரு திரைப் பிரதியின் நம்பகத்தன்மையை  யதார்தத்தை புனைவின் வழியே தொட்டுப் பார்க்கும் அதன் மெனக்கெடல்களின் மூலமாக கொண்டு வர இயலும். இதனை இப்படைப்பின் இயக்குனர் பில்லி ஒயில்டர் திறம்பட செய்திருந்தார். 

நடிகை குளோரியா ஸ்வான்சன் (1928)


படத்தின் மையமான நோர்மா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை குளோரியா ஸ்வான்சன் நிஜத்தில் ஒரு பிரபல மௌனப் பட நடிகையே. 1920களில் துவங்கிய அவரது திரைப்பயணம் பேசும் பட யுகம் சந்தையை வியாபித்த 1930 வரை தொடர்ந்தது. அக்கால கட்டத்தில் நிஜ வாழ்வில் அவர் சன்செட் பொலிவார்ட் பகுதியிலெயே ஒரு பெரிய மாளிகையில்  வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேசும் படங்களுக்கு ஏற்ப தான் மாற முடியா இயலாமையை ஏற்றுக் கொண்டு நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்து முதலில் வானொலியிலும் பின்னர் தொலைகாட்சியிலும் பணிபுரிந்து கொண்டிருந்தார். உண்மையிலேயே இப்படம் அவரது மறுபிரவேசமே. இப்படி உண்மைக்கும் திரைப் புனைவு வெளிக்கும் இருந்த இந்த அபூர்வமான ஒற்றுமை ஒரு தனித்துவத்தை படைப்பிற்குத்  தந்தது என்றே சொல்லலாம்.  

படத்தின் ஒரு காட்சியில் நோர்மா தன் கடந்த கால திரை நண்பர்களோடு சீட்டு விளையாடுவதாக வரும் காட்சியில் உண்மையான மௌனப் பட கலைஞர்களே கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர். அதில் சாப்ளினுக்கு சமகாலத்தவரான நடிகர் பஸ்டட் கீட்டனும் ஒருவர். மிக முக்கியமான நகைச்சுவை நடிகரான அவர் அதிகம் கண்டு கொள்ளப்படாமலேயே  போனது துரதிஷ்டவசமானதே.

மேலும் நோர்மா சந்திக்கும் இயக்குனர் சிசில் பி.டிமிலி(Cecil B. De Mille),உண்மையில் ஒரு பிரபலமான இயக்குனரே. பல வணிக ரீதியிலான படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் இயக்குனராக 80 படங்கள் இயக்கியிருப்பினும் அவரது இயக்கத்தில் 1956ல் வெளிவந்த ‘The Ten Commandments’ திரைப்படமெ அவரை உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களிடம் அவரைக் கொண்டு போய் சேர்த்தது .  அவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாது ஒரு தயாரிப்பாளராகவும் (88 படங்கள்) வலம் வந்தவர். ஹாலிவிட்டில் ஸ்டுடியோ நடைமுறையை சாத்தியப்படுத்திய ஆளுமைகளுள் இவரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்த ஸ்டுடியோ முறையே ஹாலிவுட்டின் வணிகரீதியிலான பெரு வீச்சுக்கு அடிகோலியது. 


இயக்குனர் பில்லி ஒயில்டர்



இயக்குனர் பில்லியின் கலா நேர்த்தி இத்திரைப்பிரதியின் பல இடங்களில் தெரியும். டிமிலியை சந்திக்க படப்பிடிப்புத் தளத்தில் காத்திருக்கும் நோர்மாவின் பின்னால் ஒரு மைக் அது போகிற போக்கில் அவளது தொப்பியில் உள்ள இறகை இடறும். அதனை மிகுந்த அலட்சியத்தோடு நோர்மா தட்டி விடுவாள். அந்த சிறிய காட்சி அக்கதாபாத்திரத்தின் மொத்த மனப் போக்கினையும் அழுத்தமாக பதிவு செய்யும். அந்த இடத்தில் நகரும் மைக் பேசும் படங்களின் ஒட்டு மொத்த குறியீடாகவும், நோர்மாவின் முற்றான புறக்கணிப்பு மௌனப்பட உலகின் கலைஞர்களுக்கு பேசும் படங்களின் இருந்த புதுமைக்கேற்ப தங்களை மீட்டுருவாக்க முடியா இயலாமையின் வெளிபாடாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

இத்திரைப்படம் திரைக்கதை ஆள்கையிலும், உளவியல் பார்வையிலும் மிக முக்கியமான ஃபிலிம் நோயர் (Film Noir) பிரதியாகவும் கொண்டாடப்படுகிறது. இப்பிரதி கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாகவும், அழகியல் ரீதியிலும் மிக முக்கியமான  படைப்பாக கருதப்பட்டதால் அமெரிக்க தேசிய திரை ஆவணக் காப்பகத்தில் (National Film Registry) 1989ல் பாதுகாக்க தேர்வு செய்த முதல் பட்டியலில் இப்படம் இடம் பெற்றது. இப்படம் பதினோரு ஆஸ்கர் அகதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, மூன்று அகதமி விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு : இக்கட்டுரையினை வெளியிட்ட பேசாமொழி இணைய
இதழுக்கு (சூன் இதழ்) நன்றி.

பந்தயப் புரவிகள் - பகுதி - V

Saturday, August 24, 2013



கில்லிஸ் எனும் பாத்திரப் படைப்பு வாழ்க்கையில் போராடி சலித்த ஒரு இளைஞனையே முன்னிறுத்துகிறது. பல வழிகளில் அவன் போராடிவது ஒரு நல்ல வாழ்க்கைக்காகத்தான். அது அவனுக்கு தானாகவே நோர்மாவின் வழியாக கிடைக்கிற போது அதை அவன் மறுக்கும் மனநிலையில் இல்லை. அதுவே பெட்டியிடம் அவன் காதல் கொண்டிருந்தாலும் வெகு சாதாரணமாக அவளுக்கே, இப்பகட்டு வாழ்க்கையை தன்னால் காதலின் பொருட்டு விட்டுத் தர முடியாது எனவும் அதனால் அவள் ஆர்டியையே மணந்து கொள்வதே சரியானதெனவும் புத்திமதி கூறும் தொனியில் அவனை சொல்ல வைக்கிறது. அவளை அனுப்பி விட்டாலும் அவனது மனம் ஒரு ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிகப் பெரிதாக விரும்புவது தனது சுதந்திரத்தையன்றி வேறல்ல. ஆனால் தனது சுதந்திரத்திற்கு விலையாக தான் கனவிலும் நினையாத பகட்டும் பணமும் அதற்கு விலையாக முன் வைக்கைப்படும் போது அவன் மனம் சஞ்சலப்படுகிறது.

இறுதியில் அவன் நோர்மாவின் பொருட்களையெல்லாம் அங்கேயே விடுத்து தன் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான். நோர்மாவால் இவன் தன்னை விட்டு போவதை சீரணிக்க முடியவில்லை. பலவாறாக அவனை சமாதானம் செய்கிறாள். அவனோ அவள் வாழும் இந்த வாழ்க்கை அவளாகவே உருவகித்துக் கொண்ட ஒரு கனவுக் குமிழுக்குள் இருப்பதைச் சொல்கிறான். அத்தருணத்தில் நோர்மாவின் மனநிலையும் ஒரு தனிமையின் துயரில் வாடி அன்பிற்கு ஏங்கும் ஒரு சராசரி பெண்ணுக்கும், தன்னை யாவரும் கொண்டாடுவதாய் இன்னும் தனக்குத் தானே கற்பனை செய்து கொள்ளும் ஒரு நடிகையின் கர்வத்திற்கும் இடையே அலை பாய்ந்தபடியே இருக்கிறது.

அவள் அவனிடம் வாதம் செய்ய பாசாங்கின்றி அத்தனை உண்மைகளையும் போட்டு உடைக்கிறான். அவளோ அவன் தன்னை பிரிந்தால் தான் தற்கொலை செய்யப் போவதாக கையில் ஒரு துப்பாக்கியுடன் மிரட்டுகிறாள். அதற்கு பணியாமல் அவன் புறப்படுகிறான். அவளது புனைவுலகில் அவளே மகாராணி. அவள் தான் ஒரு மாமெரும் நட்சத்திரம் எனவும் ஒரு நட்சத்திரத்தை யாருமே விட்டுப் பிரிய மாட்டார்கள் என தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். அவனைப் பின் தொடரும் அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவனை சுட்டுக் கொல்கிறாள். இவை யாவும் கில்லிஸின் மனக் குரலின் வாயிலாக நமக்கு சொல்லப்படுகிறது. 



இறுதிக் காட்சியில் நோர்மாவை கைது செய்ய வரும் காவலர்கள், செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாலர்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் என அவளது மாளிகை மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகிறது. மேலே நின்றபடி காவலர்களோடு இறங்கி வரும் நோர்மா கீழே வெளிச்சம் மின்ன தன்னை புகைப்படம் எடுக்கும் நிருபர்களையும், தொலைக்காட்சி காமிராக்களில் படம் பிடிப்பவர்களையும், ஏறக்குறைய ஒரு புத்தி பேதலித்த நிலையில் தனது புனைவுலகின் அங்கத்தினர்களாகவே அவள் பாவிக்கிறாள். ஏதோ அவளை மீண்டும் காமிரவின் ஒளி வெள்ளம் நனைப்பதைப் போலவும் தான் மறுபடியும் நடிக்கத் துவங்குவது போலவும் அவள் நினைத்துக் கொள்கிறாள். தனது மிதமிஞ்சிய கற்பனையால் அதற்குள்ளேயே அவள் தன் சுயத்தைத் தொலைக்கிறாள். 

நிராதரவாய் நிற்பது தனித்து விடப்படும் சாதாரண மனிதர்களுக்கு புதிதல்ல. அது ஒரு வகையில் அவர்கள் எதிர்பார்த்தாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் யதார்த்தத்தில் வாழ்பவர்கள். ஆனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை முறை ஒரு வகையில் விசித்திரமானது. நாள்தோறும் அவர்கள் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் மனநிலையை தங்களின் மனநிலையாய் தற்காலிகமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவரளுக்கு அன்றாடம் உண்டு. உளவியல் ரீதியாக இது அத்தனை எளிதான காரியமல்ல. மிகுந்த சவாலுக்குரியது. தொடர்ந்து ஏற்கும் புனைவு வெளியின் கதை மாந்தரின் மனநிலையின் சாயல்கள் தங்களின் சுய சாயலை பாதிக்காத வண்ணம் மிகக் கவனமாய் இருப்பது முக்கியம். 

புனைவுக்கும் யதார்த்தத்திற்குமான அலைக்களிப்பே அவர்களின் வாழ்க்கை முறையாகிறது. மிதமிஞ்சிய புகழும் பொருளும் பெரும்பாலானவர்களை மாற்றவே செய்கிறது. காதாசிரியரின் கற்பனையில் உருவான கதாபாத்திரங்களின் அக அடையாளங்களுக்கு தங்களின் நடிப்பாற்றலால் உயிர் கொடுக்கும் நடிகர் நடிகைகள் பல நேரங்களில் தங்களின் அக அடையாளங்களைத் தொலைக்கிறார்கள். ஆயினும் பொது வெளியில் அவர்களது அந்தரங்கங்கள் விற்பனைப் பொருளாகின்றன. பலராலும் விரும்பப்படும் நுகர்வுச் சரக்காகவும் இது மாறிப் போய்விட்டது.

பந்தயப் புரவிகள் - பகுதி - IV

Thursday, August 15, 2013



சிறிது நேரத்திற்கெல்லாம்  நோர்மாவின் இல்லத்திலிருந்து அவள் தற்கொலைக்கு முயன்றாள் என மேக்சிடம் இருந்து தகவல் வர பதறி விரைகிறான். தனது சவரக் கத்தியால் அவள் கைகளை அறுத்துக் கொண்டிருக்கிறாள். தன்னை விட்டுப் போக வேண்டாமென்று இறைஞ்சுகிறாள் நோர்மா. அவள் மீது காதல் இல்லையெனினும் பரிதாபம் கொள்கிறான் கில்லிஸ். அவளோடு இருக்க சம்மதிக்கிறான். அவனது இருப்பு அவளுக்கு புதுத் தெம்பளிக்கிறது. தனது திரைஉலக மறுபிரவேசத்திற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறாள். பாராமௌண்ட் ஸ்டுடியோவிற்கு சென்று தான் பலமுறை இணைந்து பணியாற்றிய இயக்குனர் சிசில் பி. டிமிலியை, அவள் தான் அனுப்பிய திரைக்கதையை குறித்து அவர் பல நாட்களாய் ஏதும் பேசாததால், நேரிலேயே சந்திக்க வருகிறாள். பழைய நட்பினை மதித்து அவர் அவளை வரவேற்கிறார். டிமிலியின் உதவியாளர் பலமுறை அவளோடு தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தான் அவரோடு பேச விரும்பவில்லை எனவும் அவள் சொல்ல அவரோ அவளை படப்பிடிப்பு அரங்கத்திலேயே அமர செய்கிறார். 

உண்மையில் அவரது உதவியாளர் ஒரு படப்பிடிப்பிற்காக நோர்மாவின் காரை வாடகைக்குக் கேட்பதற்காகவே அவளைத் தொடர்பு கொண்டதை அறிகிறார். இவ்விடயத்தை கில்லிஸ் வாயிலில் வேறொருவர் சொன்னதாய் மேக்ஸ் சொல்ல அறிகிறான். 






அங்கு அரங்கில் நோர்மாவோடு வேலை செய்த ஒரு லைட் பாய் அமர்ந்திருப்பது அவள் தான் என அடையாளம் கண்டு அவளை நோக்கி விளக்கினைத் திருப்ப தளத்தில் இருக்கும் அனைவரும் அவளை அடையாளம் கண்டு மொய்க்கின்றனர். நோர்மா தான் இன்னும் ரசிகர்களால் விரும்பப்படுவதாய் கட்டமைத்த கனவுக் கோட்டை இன்னும் பலமாகிறது. ஆனால் அவர்கள் உண்மையில் இவளை கடந்த காலத்தின் ஒரு திரை ஆளுமை என ஒரு வெகுசன ஆர்வத்தில் மாத்திரமே பார்க்கின்றனர்.


மகா மோசமான திரைக்கதையை படமெடுக்க யார் தான் முன்வருவார். டிமிலி நோர்மாவிடம் நாசுக்காக சினிமா மாறிவிட்டதெனும் உண்மையை, சொல்கிறார். ஆனால் அவளோ அதனைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உடனே அவர் அத்திரைக்கதையை இயக்க அதில் தான் நாயகியாக திரையுலகில் மறுபிரவேசம் செய்வதாய் குதூகலிக்கிறாள். அவளைப் புண்படுத்தாமல் பார்க்கலாம் என் சொல்லி அனுப்புகிறாள். தான் மீண்டும் நடிக்கப் போவதாய் மிக உறுதியாய் நம்பும் நோர்மா அதற்காக அழகை மேம்படுத்திட தன் உடலை வருத்தி பல சிக்கிச்சைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறாள்.   

இதே வேளையில் இரவுகளில் அவள் அறியாமல் கில்லிஸ் பெட்டியின் துணையோடு திரைக்கதை எழுதுவதில் தீவிராமாகிறான். இதனை நோர்மா விரைவிலேயே அறிய வருகிறாள். சிறிது சிறிதாக பெட்டி தன்னையும் அறியாமல் கில்லிஸின் மீது காதல்வயப்படுகிறாள். அவனுக்கும் அவளைப் பிடிக்கும் தான்.

நோர்மா என்னதான் நடிகையாக இருப்பினும் முதலில் அவள் பெண். ஒரு சராசரிப் பெண்ணுக்கேயான அத்துணை ஆசாபாசங்களும் குணாதிசியங்களும் அவளுக்கும் உண்டு. கில்லிஸ் தன் காதலை ஏற்றுக் கொண்டதாகவே அவள் கருதிக் கொள்கிறாள். அவன் சந்தர்ப்பவசத்தால் அவளோடு இருப்பதை அவள் யோசிக்க மறுக்கிறாள். எங்கே கில்லிஸை பெட்டி தன்னிடமிருந்து பறித்து விடுவாளோ எனும் அச்சம் அவளை ஆட்கொள்கிறது. ஒரு சாராசரி பெண்ணுக்குரிய பொறாமை அவளை அலைக்களிக்கிறது. 

மேக்ஸின் வழியாகவே அவன் நோர்மா மூன்று முறை திருமணம் செய்து கொண்டதில், முதல் கணவனே மேக்ஸ் தான் எனும் ரகசியத்தை தெரிந்து கொள்கிறான். அது தெரிந்ததும் தான் அவளை விட்டு விலகி மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை துவங்கும் முனைப்புடன் அவளின் அறைக்கு செல்கிறான். இந்த தருணத்தில் பெட்டிக்கே தொலைபேசியில் நோர்மா தொடர்பு கொண்டு கில்லிஸ் நடிகை நோர்மாவின் மாளிகையில் தங்கியிருப்பதாக அவளே சொல்கிறாள். 



அத்தனையையும் கில்லிஸ் அவளுக்குப் பின்னால் இருந்தபடி கேட்டுவிட்டு அவளிடம் இருந்து தொலைபேசியை பிடுங்கி பெட்டியை நேராக நோர்மாவின் மாளிகைக்கே வருமாறு கூறி இணைப்பைத் துண்டிக்கிறான்.

கையும் களவுமாய் பிடிபட்ட நோர்மா திகைக்கிறாள். எங்கே கில்லிஸ் தன்னை விட்டு சென்று விடுவானோ என்ற அச்சத்திலேயே அவள் அப்படி செய்ததாகவும், அதற்காக தன்னை வெறுத்து ஒதுக்கிவிடாமல் இருக்குமாறு மீண்டும் மீண்டும் கண்ணீருடன் மன்றாடுகிறாள். அதற்குள் பெட்டி மாளிகைக்கு வர கில்லிஸ் அவளை சந்திக்க வாயிலுக்குச் செல்கின்றான். அங்கெ அவன் கேள்விகளோடு காத்திருக்கும் பெட்டியை சந்திக்கிறான். அவள் தன்னொடு வந்துவிடும்படி அவளை வேண்டுகிறாள்.