பந்தயப் புரவிகள் - பகுதி - V

Saturday, August 24, 2013கில்லிஸ் எனும் பாத்திரப் படைப்பு வாழ்க்கையில் போராடி சலித்த ஒரு இளைஞனையே முன்னிறுத்துகிறது. பல வழிகளில் அவன் போராடிவது ஒரு நல்ல வாழ்க்கைக்காகத்தான். அது அவனுக்கு தானாகவே நோர்மாவின் வழியாக கிடைக்கிற போது அதை அவன் மறுக்கும் மனநிலையில் இல்லை. அதுவே பெட்டியிடம் அவன் காதல் கொண்டிருந்தாலும் வெகு சாதாரணமாக அவளுக்கே, இப்பகட்டு வாழ்க்கையை தன்னால் காதலின் பொருட்டு விட்டுத் தர முடியாது எனவும் அதனால் அவள் ஆர்டியையே மணந்து கொள்வதே சரியானதெனவும் புத்திமதி கூறும் தொனியில் அவனை சொல்ல வைக்கிறது. அவளை அனுப்பி விட்டாலும் அவனது மனம் ஒரு ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிகப் பெரிதாக விரும்புவது தனது சுதந்திரத்தையன்றி வேறல்ல. ஆனால் தனது சுதந்திரத்திற்கு விலையாக தான் கனவிலும் நினையாத பகட்டும் பணமும் அதற்கு விலையாக முன் வைக்கைப்படும் போது அவன் மனம் சஞ்சலப்படுகிறது.

இறுதியில் அவன் நோர்மாவின் பொருட்களையெல்லாம் அங்கேயே விடுத்து தன் பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான். நோர்மாவால் இவன் தன்னை விட்டு போவதை சீரணிக்க முடியவில்லை. பலவாறாக அவனை சமாதானம் செய்கிறாள். அவனோ அவள் வாழும் இந்த வாழ்க்கை அவளாகவே உருவகித்துக் கொண்ட ஒரு கனவுக் குமிழுக்குள் இருப்பதைச் சொல்கிறான். அத்தருணத்தில் நோர்மாவின் மனநிலையும் ஒரு தனிமையின் துயரில் வாடி அன்பிற்கு ஏங்கும் ஒரு சராசரி பெண்ணுக்கும், தன்னை யாவரும் கொண்டாடுவதாய் இன்னும் தனக்குத் தானே கற்பனை செய்து கொள்ளும் ஒரு நடிகையின் கர்வத்திற்கும் இடையே அலை பாய்ந்தபடியே இருக்கிறது.

அவள் அவனிடம் வாதம் செய்ய பாசாங்கின்றி அத்தனை உண்மைகளையும் போட்டு உடைக்கிறான். அவளோ அவன் தன்னை பிரிந்தால் தான் தற்கொலை செய்யப் போவதாக கையில் ஒரு துப்பாக்கியுடன் மிரட்டுகிறாள். அதற்கு பணியாமல் அவன் புறப்படுகிறான். அவளது புனைவுலகில் அவளே மகாராணி. அவள் தான் ஒரு மாமெரும் நட்சத்திரம் எனவும் ஒரு நட்சத்திரத்தை யாருமே விட்டுப் பிரிய மாட்டார்கள் என தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள். அவனைப் பின் தொடரும் அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவனை சுட்டுக் கொல்கிறாள். இவை யாவும் கில்லிஸின் மனக் குரலின் வாயிலாக நமக்கு சொல்லப்படுகிறது. இறுதிக் காட்சியில் நோர்மாவை கைது செய்ய வரும் காவலர்கள், செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாலர்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் என அவளது மாளிகை மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகிறது. மேலே நின்றபடி காவலர்களோடு இறங்கி வரும் நோர்மா கீழே வெளிச்சம் மின்ன தன்னை புகைப்படம் எடுக்கும் நிருபர்களையும், தொலைக்காட்சி காமிராக்களில் படம் பிடிப்பவர்களையும், ஏறக்குறைய ஒரு புத்தி பேதலித்த நிலையில் தனது புனைவுலகின் அங்கத்தினர்களாகவே அவள் பாவிக்கிறாள். ஏதோ அவளை மீண்டும் காமிரவின் ஒளி வெள்ளம் நனைப்பதைப் போலவும் தான் மறுபடியும் நடிக்கத் துவங்குவது போலவும் அவள் நினைத்துக் கொள்கிறாள். தனது மிதமிஞ்சிய கற்பனையால் அதற்குள்ளேயே அவள் தன் சுயத்தைத் தொலைக்கிறாள். 

நிராதரவாய் நிற்பது தனித்து விடப்படும் சாதாரண மனிதர்களுக்கு புதிதல்ல. அது ஒரு வகையில் அவர்கள் எதிர்பார்த்தாகவே இருக்கும். ஏனெனில் அவர்கள் யதார்த்தத்தில் வாழ்பவர்கள். ஆனால் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை முறை ஒரு வகையில் விசித்திரமானது. நாள்தோறும் அவர்கள் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் மனநிலையை தங்களின் மனநிலையாய் தற்காலிகமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவரளுக்கு அன்றாடம் உண்டு. உளவியல் ரீதியாக இது அத்தனை எளிதான காரியமல்ல. மிகுந்த சவாலுக்குரியது. தொடர்ந்து ஏற்கும் புனைவு வெளியின் கதை மாந்தரின் மனநிலையின் சாயல்கள் தங்களின் சுய சாயலை பாதிக்காத வண்ணம் மிகக் கவனமாய் இருப்பது முக்கியம். 

புனைவுக்கும் யதார்த்தத்திற்குமான அலைக்களிப்பே அவர்களின் வாழ்க்கை முறையாகிறது. மிதமிஞ்சிய புகழும் பொருளும் பெரும்பாலானவர்களை மாற்றவே செய்கிறது. காதாசிரியரின் கற்பனையில் உருவான கதாபாத்திரங்களின் அக அடையாளங்களுக்கு தங்களின் நடிப்பாற்றலால் உயிர் கொடுக்கும் நடிகர் நடிகைகள் பல நேரங்களில் தங்களின் அக அடையாளங்களைத் தொலைக்கிறார்கள். ஆயினும் பொது வெளியில் அவர்களது அந்தரங்கங்கள் விற்பனைப் பொருளாகின்றன. பலராலும் விரும்பப்படும் நுகர்வுச் சரக்காகவும் இது மாறிப் போய்விட்டது.

No comments:

Post a Comment