பந்தயப் புரவிகள் - பகுதி - III

Tuesday, August 13, 2013நோர்மாவிற்கு இன்னமும் ரசிகர்களிடமிருந்து கடிதங்கள் வருவது அவனுக்கு ஆச்சரியமூட்டுகிறது. மேலும் அம்மாளிகையில் கதவுகளுக்கு தாழ்களே இல்லாததும் விசித்திரமாய் இருப்பதாய் மேக்ஸிடம் கேட்கிறான். அவனோ ரசிகர் கடிதங்கள் வரும் முகவரியை பார்க்குமாறு சொல்ல, அக்கடிதங்கள் உண்மையிலேயே ரசிகர்களிடமிருந்து வருவதில்லை என்பதை கில்லிஸ் அறிகிறான். மேலும் நோர்மா பல தருணங்களில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனால் அவளது  மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அம்மாளிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாய் விளக்குகிறான். எந்த அறைக்கும் தாழ்கள் இருக்காது. மேலும் சவரக் கத்திகளோ, தூக்க மாத்திரைகளோ இருக்காது என்கிறான்.

 

ஒவ்வொரு வாரமும் தனது மாளிகையின் கூடத்தில் பழைய திரைப்படங்களை திரையிட்டுப் பார்ப்பதை வழக்கமாய் கொண்டவள் நோர்மா. எப்போதும் அவள் பார்ப்பது தான் நடித்த மௌனப் படங்களை மட்டுமே. மௌனப்படங்கள் தான் அசலான கலை என்பது அவளது கருத்து. உணர்சிகள் ததும்பும் முகபாவங்கள் மௌனப் படங்களில் பிரதானப் படுத்தப்பட்டன. ஆனால் பேசும் படங்களிலோ அற்புதமான முகபாவங்களை வசனங்கள் வழி வார்த்தைகள் திருடிக் கொண்டதாக ஆத்திரப்படுகிறாள். அதன் வழியாக நோர்மா தனது கடந்த கால நினைவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை அறிந்து
கொள்கிறான் கில்லிஸ்.

நோர்மா தனது திரைப்பயணக் காலம் முடிவுற்றது எனும் யதார்த்தத்தை ஏற்க மறுக்கிறாள். தான் புனைந்து கொண்டிருக்கும் கனவுக் கோட்டையின் நிரந்தர மகாராணியாக தன்னையே நினைத்துக் கொள்கிறாள். தன்னை இன்னும் திரைஉலகம் விரும்புவதாகவும், ரசிகர்கள் தனக்காக காத்திருப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறாள். தன்னை கடந்து  சினிமா சென்றுவிட்டது எனும் நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது அவளது மனம். வாழ்ந்து வீழ்ந்த ஆளுமைகளின் மன சஞ்சலங்கள் நோர்மா எனும் கதாபாத்திரத்தின் வழியே இப்படைப்பில் அலசப்படுகிறது. தங்களைச் சுற்றி புடைசூழும் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கும் பொதுமக்களின் அதீத கவனக் குவிமையமாய் தாங்கள் இருக்கும் பெருமிதமும் அவர்களை புகழ் போதையில் ஆழ்த்திடும். பரபரப்பான அவர்களது வாழ்க்கையில் கடவுளைப் போல தங்களை பாவித்துக் கொண்டு கர்வத்துடன் அவர்கள் வலம் வரும் காலத்தில், திடீரென ஒரு நாள் தங்கள் மீதிருந்த மோகம் மக்களுக்கு குறைவதை உணரத் துவங்குவர்.  ஆனால் அந்த உண்மையை அவர்களின் மனம் ஏற்பதில்லை. அவர்கள் மனதளவில் தமது ஏகபோகத்தை, புகழின் அரியணையை வேறொருவருக்கு தாரை வார்த்திட ஒரு போதும் தயாராய் இருப்பதில்லை. 

புத்தாண்டு தின சிறப்பாக ஒரு கேளிக்கை விருந்தினை தனது மாளிகையில் நோர்மா ஏற்பாடு செய்கிறாள். விருந்தினரை எதிர்பார்த்திருக்கும் கில்லிஸுக்கு அவ்விருந்து தனக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என சீக்கிரமே விளங்குகிறது. தன் மீது நோர்மா காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரிய வர அது சரிவராது என தெளிபடுத்துகிறான். அதனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை. அங்கிருந்து விலகி தனது நண்பனான ஆர்டி கிரீனின் (Jake Webb) இல்லத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள கிளம்புகிறான். அங்கு தன் கதையைப் புறக்கணித்த பெட்டி ஆர்டியின் காதலியென அறிய வருகிறான் கில்லிஸ். பழையவற்றை மறந்து அவர்கள் நண்பர்களாகின்றனர். அவள் அவனது மற்றொரு திரைக்கதையை படித்துப் பார்த்ததாகவும் அதில் சில மாற்றங்களை இருவரும் சேர்ந்தே மேம்படுத்தலாம் என கூறுகிறாள். அவனும் உடன்படுகிறான். 

No comments:

Post a Comment