பந்தயப் புரவிகள் - பகுதி - II

Monday, August 12, 2013





கதை ஒரு கொலையில் இருந்து துவங்குகிறது. ஒரு சாதாரண நாளின் காலையை அசாதாரண பரபரப்புக்குள்ளாக்கிறது சன்செட் பகுதியில் பழம்பெரும் நடிகை நோர்மா டெஸ்மோண்டின் (Gloria Swanson) மாளிகையின் நீச்சல் குளத்தில் மிதக்கும் ஒரு பிணம். தண்ணீரில் மிதப்பது ஒரு இளைஞன். அவனது பெயர் ஜோ கில்லிஸ் (William Holden). ஆம், கதையின் மற்றுமொரு மையப் பாத்திரமான அதே ஜோ கில்லிஸ். அவனே தனது கதையையும் நோர்மவின் கதையையும் சொல்வதாக ஆரம்பிக்கிறது கதை.   


கில்லிஸ் திரைக் கதாசிரியனாகும் கனவுகளோடு ஹாலிவுட்டின் பிரம்மாண்டக் கதவினை சலிக்காமல் தட்டிக் கொண்டிருக்கிற
எண்ணற்ற இளைஞர்களுள் ஒருவன். நீண்ட உழைப்போடும் பெரும் சிரத்தையோடும் அவன் எழுதுகிற திரைக்கதைகளால் ஏனோ திரை முதலீட்டாளர்க்களை கவர முடிவதில்லை.அவனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. தனது காருக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம். அப்போதைக்கு இக்கட்டிலிருந்து தப்பிக்க அவனுக்கு முன்னூறு டாலர் அத்தியாவசியமாகிறது. ஏனேனில் வாய்ப்புத் தேட அவன் அவ்வாகனத்தைத் தான் நம்பியிருக்க வேண்டும். தனது நண்பர்களின் உதவியை நாடுகிறான். பலனில்லை. தனது திரைக்கதைகளில் ஒன்றை அவன் மீது பிரியமுள்ள பாராமௌண்ட் திரை நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளரிடம் விற்க முற்பட அதிலும் பலனில்லை. அங்கு கதை இலாக்காவில் பணிபுரியும் பெட்டி ஸ்ரீஃபர் (Nancy Olson) எனும் பெண் அக்கதையை நிராகரித்து விடுகிறாள். வரும் வழியில் வங்கி அதிகாரிகளின் பார்வையில் பட்டு அவர்களிடமிருந்து தப்பிக்க விரைகிற போது வழியில் சன்செட் பொலிவார்டின் அருகில் அவனது கார் டயர் வெடித்துவிட ஒளிந்து கொள்வதற்கு ஒரு மாளிகையில் காரை நிறுத்துகிறான். பார்வைக்கு அது ஆளில்லா மாளிகை போல தோற்றமுடையதாய் இருக்கிறது. ஆனால் அங்கு ஒரு பெண் இவனை உள்ளே வருமாறு சைகை செய்கிறாள். 

சற்றே குழப்பத்துடன் அவன் செல்கிறான். சிறிது நேரத்திலேயே அவள் மௌனப் படங்களில் நடித்த பிரபல நடிகை நோர்மா டெஸ்மோண்ட் எனவும் அவள் தன்னை அவள் எதிர்பார்த்த வேறொரு நபராக தவறாகப் புரிந்து கொண்டாள் எனவும் உணர்கிறான். அவள் தன்னை ரசிகர்கள் இன்னமும் விரும்புவதாகவும், தான் மீண்டும் நடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புவதாகவும் கூறுகிறாள். அதற்காக பல நாள் உழைப்பில் தானே ஒரு கதை எழுதியுள்ளதாகவும் அதனை திரைப்படமாய் ஆக்க விரும்புவதாகவும் கூறுகிறாள். கில்லிஸ் ஒரு திரைக்கதை ஆசிரியனாய் இருப்பதால் அவன் தனது ஆக்கத்தை செப்பனிட வேண்டுமென்றும் அதற்கு சம்பளமாக பெருந்தொகை தருவதாகவும் வாக்களிக்கிறாள்.  அவனுடைய அப்போதைய நிலைமைக்கு கட்டாய பணத் தேவைக்காக அவன் வேண்டுகோளை ஏற்கிறான். 



நோர்மாவோடு மாளிகையில் வசிப்பது மேக்ஸ் (Erich von Stroheim) எனும் ஒரு உதவியாளன் மட்டுமே. அவன் கில்லிஸ் தங்குவதற்காய் மாளிகையின் அருகேயுள்ள விருந்தினர் இல்லத்தை தயார் செய்கிறான். நாட்கள் செல்கின்றன. கில்லிஸ் நோர்மவின் மகா மோசமான திரைக்கதையை அவளது தேவையில்லாத தலையீடுகளுக்கு மத்தியில் செப்பனிடுகிறான், அது ஒன்றுக்கும் ஆகாதது எனத் தெரிந்தும். காசு கிடைக்கிறதே.

சில நாட்களிலேயே நோர்மா அவனிடம் வேறெதையோ எதிர்பார்க்கிறாள் என உணர்கிறான் கில்லிஸ். அவனது விருப்பத்திற்கு மாறாக அவளே அனைத்து முடிவுகளையும் எடுத்துக் கொள்வது இவனுக்கு வெறுப்பாக இருந்தாலும் அவள் அளிக்கும் அபரிவிதமான பணமும் அங்கு தங்குவதால் தனக்கு கிடைக்கும் பகட்டு வாழ்க்கையும் அவனது கண்ணை மறைக்கிறது. யாவற்றையும் அதற்காக சகித்துக் கொள்கிறான்.

No comments:

Post a Comment