பந்தயப் புரவிகள் - பகுதி - I

Sunday, August 11, 2013








மனித மனம் நுட்மானது. பிடிக்குள் அடங்காதது. பல தருணங்களில் அதனை ஒரு காட்டு விலங்கை பழக்குவது போல பழக்க வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு உள்ளது. மனித மனத்தில் எழும் அக சிக்கல்கள் பெரும்பாலும் செயற்கையானதே. இல்லாதவற்றை இருப்பதாய் எண்ணிக் கொள்ளும் பாவனைகளில் இருந்தே பெரும்பாலான செயற்கைத்தனங்கள் தொடங்குகின்றன. தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனம் அதிலிருந்து தப்பிக் கொள்ள தன்னை மையப்படுத்திய ஒரு மாய உலகை புனைந்து கொள்கிறது. கசக்கும் உண்மையை விட இக்கனவுகளால் கட்டமைக்கப்பட்ட மாய வெளியே சிறந்ததென முடிவுக்கு வருகிறது.

சினிமா கலை தோன்றியது முதலே கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. வெறும் அசையும் பிம்பங்களை காட்சிபடுத்துவதில் துவங்கி பின்னர் கதைகள் சொல்லும் அதன் பயணம், தொழில்நுட்ப ரீதியிலும் கதை சொல்லும் முறைமைகளிலும் தொடர்ந்து பரிணமித்துக் கொண்டேதான் இருக்கிறது. சினிமா எனும் மாபெரும் கனவு தேசம் எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. அது ஒரு பிரம்மாண்ட களம். ஆனால் துளியும் இரக்கமற்றது. நமது பார்வைக்கு இக்களத்தின் உச்சத்தில் இருப்பவரைப் பற்றிய செய்திகள் மட்டுமே வருகிறது. அதாவது இப்பந்தய களத்தில் அப்போதைக்கு முன்னால் ஓடும் குதிரைகளின் மீது மட்டுமே எல்லோர் கவனமும்.  ஓடும் வரை மட்டுமே குதிரைகளைக் கொண்டாடிடும் உலகம். பந்தயத்தில் பின் தங்கும் குதிரைகள் யோசனைகளின்றி மறுதலிக்கப்படும். சினிமாவினால் வாழ்க்கை ஏணியின் உச்சத்தைத் தொட்டவர்களின் சரித்திரங்களை மட்டுமே நாம் அறிவோம். அல்லது அதனை மட்டுமே தெரிந்து கொள்ள நாம் பிரியப்படுகிறோம். கணக்கின்றி தோற்றவர் மத்தியில் வெல்பவரின் எண்ணிக்கை வெகு சொற்பமே திரையுலகில். வென்றவரின் வரலாறு மட்டுமே எழுதப்படுகின்றது என்ற போதிலும், கால வெள்ளத்தில், உச்சத்தில் இருக்கும் ஆளுமைகள் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கினால் அவர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கும் நேரமில்லை. மறுயோசனைகள் இன்றி அவர்கள் அங்கேயே கைவிடப்படுவர். அவர்களின் வளர்பிறை வாழ்க்கையின் அந்திமம் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்பிறையாகும் யார் பார்வைக்கும் வரமாலேயே.

ஒரு காலத்தில் உச்சத்திலிருக்கையில் செல்லுமிடமெல்லாம் கொண்டாடப்படும் ஆளுமையாய் வலம் வந்த திரை நட்சத்திரங்கள் தங்களது அந்திம காலத்தில் கடும் அக நெருக்கடிக்கும், மனச்சிதைவுக்கும் ஆட்படுகின்றனர். சினிமா மௌனப்பட யுகத்தில் இருந்து பேசும் பட யுகத்திற்கு நகர்ந்த போது அது மாபெரும் பாய்ச்சலாக இருந்தது. மௌனப்படங்களின் பெரு நட்சட்த்திரங்கள் பலர் இந்த மாற்றத்தால் ஏககால       த்தில் முகவரி இழந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் பேசும் படங்களுக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள இயலாதவர்களாய் இருந்தனர். பேசும் பட யுகம் ஏறக்குறைய மௌன யுகத்தின் நடிகர்களை முற்றாக ஓரங்கட்டிவிட்டு புதிய பல நட்சத்திரங்களை தந்தது. பெரு வேட்கையோடு கேளிக்கை மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு புதிய ஆளுமைகளை கண்டுபிடிப்பதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டது சினிமா உலகம்.

மௌன யுகத்தின் ஒரு மகத்தான ஆளுமையாய் இருந்த  நோர்மா டெஸ்மோண்ட்எனும் நடிகையின் அந்திம காலத்தை பற்றியும், அவளது  வாழ்க்கையில் தற்செயாலாய் குறுக்கிடும் ஹாலிவுட் கனவுலகில் திரைக் காதாசிரியனாகிட கனாக் காணும் ஜோ கில்லிஸ்எனும் இளைஞனுடைய வாழ்க்கையைப் பற்றியும் சொல்கிறது Sunset Blvd (1950) எனும் திரைப்படம். இத்திரைப்படத்தை பில்லி வைல்டர் ( Billy Wilder) இயக்கியிருந்தார்.

சன்செட் பொலிவார்ட் (Sunset Blvd) என்பது அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தெருவின் பெயர். (Boulevard எனும் சொல்லுக்கு அர்த்தம் ஒரு அகலமான தெரு என்பதாகும்.) ஹாலிவுட் திரைநட்சத்திரங்களின் வீடுகள் அங்கே அமைந்துள்ளதால் அது மிகப் பிரபலமான பகுதியாகவும், ஹாலிவுட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் விளங்கியது. இத்திரைப்படத்திலும் இன்னும் சில படங்களிலும் இவ்விடம் அப்படியே உள்ளபடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment