Mother ! (2017) | Darren Aronofsky | English

Thursday, September 13, 2018



தொடர்ந்து சுதந்திர சினிமாக்கள் எடுத்து வரும் அமேரிக்க இயக்குனர் டேரன் அரொனொஃப்ஸ்கியின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் மதர்! டேரனின் புனைவுலகம் சீரணிக்க கடினமானது. தீவிரமான இறை மறுப்பாளரான இவரது சில படங்களில் மதம் குறித்த விசாரணை ஊடிழையாக ஓடிக் கொண்டே இருக்கும். 2014 ஆம் வருடம் இவரது இயக்கிய முதல் ஸ்டுடியோ தயாரிப்புத் திரைப்படமான Noah அப்படிப்பட்ட சுவாரசியமான ஒரு படைப்பு. ஒரு இறைமறுப்பாளர் விவிலியத்தின் மிகப் பிரபலமான ஒரு தொன்மக் கதையை எப்படித்தான் படமாக்கி இருக்கிறார் என்ற சுவாரசியமே அப்படத்தைப் பார்க்க பலரைத் தூண்டியது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு அம்சமும் இவரது படங்களில் உண்டு. ஆன்மீக விசாரணைகளைத் தாண்டி. ஏறக்குறைய அவரது எல்லா படங்களும் மனித வாழ்வின் அபத்தங்களைக் குறித்துப் பேசுபவை. அவரது படைப்புகள் அதீத மன அழுத்தத்தைத் தரக் கூடியவை. அவலச் சுவை உடையவை. மேற்சொன்ன அம்சங்களினாலேயே இவரது படங்களை ஒரு சாரார் மோசம் என விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களாலும் கூட, அப்புனைவுகள் முன்வைத்திடும் ஒப்பனைகள் அற்ற வாழ்வின் அசல் தன்மையை மறுத்து கடந்துவிட முடியாது. அசலான உண்மை எப்போதும் சஞ்சலப்படுத்தும் தானே?

பொதுவாக திரில்லர் வகை படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள், Plot twist வகைத் திரைப்படங்களை பெரிதும் விரும்புவர். படத்தின் இறுதியில் வருகின்ற ஒரு மிக முக்கியமான திருப்பம் மொத்த கதையோட்டத்தையும், ஏன் அதுவரை நாம் பார்த்த மொத்த கதையையுமே புரட்டிப் போடப்படுவதையுமே நாம் ப்ளாட் டுவிஸ்ட் என்போம். இப்படத்தில் படத்திற்குள் அப்படிப்பட்ட எதுவும் இல்லை. ஆனால் இப்படம் குறித்த ஒரு நேர்காணலில் கதையின் நாயகி சொல்லிய ஒரு விசயம், மொத்தப் படத்தின் தன்மையையுமே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. 



முதலில் கதை:

ஒரு கவிஞர் தனது மனைவியுடன் ஒரு தனித்த வீட்டில் வசித்து வருகிறார். நல்ல படைப்பாளியான அவர் தற்சமயம் மனத்தடையின் காரணமாக எழுத முடியாமல் தவிக்கிறார் (Writer’s Block). அப்படியொரு தருணத்தில், அவரது வீட்டிற்கு அடைக்கலம் தேடி அவரது தீவிர வாசகர் வருகிறார். தீரா நோயினால் அவதியுறும் அவருக்கு இரங்கி கவி தனது இல்லத்தில் இடம் தருகிறார், மனைவிக்கு அதில் விருப்பமில்லை என தெரிந்திடினும். அம்மனிதரைத் தொடர்ந்து அவரது மனைவியும், பின்னர் அவரது இரு மைந்தர்களும் வர, கவியின் மனைவிக்கோ இந்த அன்னியர்களின் இருப்பு துளியும் பிடிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் நாயகி கருவுறுகிறாள். முதலில் அண்ட இடம் தந்தவர்கள் இப்போது தன்னையே ஆதிக்கம் செலுத்தத் துவங்குகின்றனர் என அவள் உணருகிறாள். ஆனால் கவிஞரோ எந்த கவலையுமின்றி நடப்பவை எல்லாம் இயல்பானவை என்பது போன்ற மனநிலையில் இருக்கிறார். ஒரு கட்டத்தில்     அத்தம்பதிகள் செய்த ஒரு செயல் கவிஞரை மிகவும் பாதித்திட கடும் சினமுறும் நாயகி அவர்களை வெளியே துரத்துகிறாள். அச்சமயம் அத்தம்பதிகளின் இரு மகன்களும் வீட்டிற்கு வர, இருவருக்குமிடையே மூளும் வாக்குவாதத்தில் மூத்தவன் இளையவனைக் கொன்று விடுகிறான். கடும் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகிறாள் நாயகி. 

இறப்பினால் தம்பதிகளின் மீதான கோபம் தணியப் பெற்ற கவிஞர், அவர்களது இறந்த மகனுக்கான நினைவேந்தலுக்கு தனது வீட்டிலேயே ஏற்பாடு செய்கிறார். நினைவேந்தலுக்கு வருகை தரும் பலரில், இவரது தீவிர வாசகர்களும் சேர்ந்து கொள்கின்றனர். சாரை சாரையாக பெருந்திரளாய் மனிதர்கள் வரத் துவங்குவதைப் பார்த்த நிறைமாத கர்ப்பிணியான நாயகி, மேலும் மேலும் கவலையுறுகிறாள்.
ஒரு படைப்பாளியின் வாசகர்களென வருபவர்கள் ஒரு கட்டத்தில் கூட்டத்தின் போக்கே மாற்றம் கண்டிட வீட்டை துவம்சம் செய்யத் துவங்க பித்து நிலைக்கு செல்கிறாள் நாயகி. கவிஞரோ புகழின் போதையில் கிறங்கி நிகழும் அனைத்தையும் அங்கீகரிக்கிறார். இறுதியில் பிறந்த தனது பிஞ்சுக் குழந்தையை ஆராதிப்பதான பாவனையில் கூட்டம் கொன்றுவிட அதற்கு மேலும் பொறுக்கவியலாத நாயகி யாவரையும் சேர்த்து அவ்வீட்டோடு கொளுத்துகிறாள். ஒரு நெருப்புப் பிரளயத்தில் எல்லாம் எரிந்து கருகிய பிறகு தனது தவறை உணரும் கவிஞர் நாயகியை தான் இன்னும் பரிபூரணமாக அன்பு செய்வதாகவும், பதிலுக்கு அவளும் தன் அன்பை ஏற்றுக் கொள்ளுமாறு இறைஞ்சுகிறார். இத்தனைக்குப் பிறகும் பேரன்போடு நாயகி மீண்டும் இளகுகிறாள். பேரன்பும் தேக்கிய தனது இருதயத்தை அவர் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறாள் அந்த அன்னை.

கதை முடிவற்று தொக்கி நிற்பதைப் போல பார்வையாளர்கள் எல்லோருக்கும் தோன்றுவது நியாயமே. ஆனால் நாம் எல்லோரும் இதனை ஒரு கவிஞரின் கதையாகப் பார்ப்பதால் தான் இப்படித் தோன்றும்.

அது சரி ! நாயகி (Jenifer Lawrence) அப்படி என்ன தான் சொன்னார்? 

”எனது பாத்திரம் பூமித் தாயையும், கவிஞராக வருகிற ஜாவியர் பாத்திரம் கடவுளை/ படைப்பாளரையும் குறிக்கிறது. நாங்கள் வசிக்கிற தனித்த வீடு விவிலியத் தொன்மக் கதையில் வருகிற சிங்கார வனத்தையும் (Garden of Eden) வருகை தரும் தம்பதிகள் ஆதாம் மற்றும் ஏவாளையும், அவர்களது மகன்கள் காயின் ஆபேலையும் குறிக்கிறது.”

மொத்தக் கதையும் இப்போது புதிதாய் மனதிற்குள் மறுநிர்மாணம் கொள்ளத் துவங்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

கொஞ்சம் அதீதமான வன்முறை காட்சிகளில் வெளிப்படுவதால் ( இது டேரனின் படைப்புகளின் காண முடிகிற இன்னொரு பொது அம்சம்.) பார்க்க விரும்புபவர்கள் அதனை நினைவில் கொள்வது நல்லது.