பகற் கனா

Monday, August 8, 2011




மோன நிலையோ யோக நிலையோ
நானறியேன்.
இமை விரித்துப் பார்க்கையிலே
தடாகமொன்றின் கரைதனிலே
தலைகுப்புற நான் கிடந்தேன் தனியனாய்
என் விழி நீர்க் கண்ணாடியின்
பிம்பத்தை வருடிச் செல்கிறது
அதன் ஒரு ஜோடி விழிகளுக்குள்
உறைந்த நிழற்படம் போல நீ...
தங்க மீன்கள் என் விழிகளுக்குள்
துள்ளிக் குதிக்கின்றன.
உன்னையவை உண்ண எத்தனிக்கையில்
என் கைகளுயர்த்தி கண்ணாடியை நானுடைக்க
நீ நீரோடு கரைந்து என் மீது
தெரித்துச் சிதறினாய்.
பிம்பமாய் கிடந்த நீ மீண்டுமொருமுறை
வழிந்து என் மீதே உறையத் தொடங்குகிறாய்.

2 comments:

Anonymous said...

இன்னைக்குத்தான் உங்கள் தளத்தை முதல் தடவை பார்க்குறேன், எல்லா கவிதையையும் படிச்சேன், மிக அருமை, எப்படி கவிதை நடையில் எழுதுறதுனு சொல்றீங்களா?

வருணன் said...

வந்ததற்கும் வாசித்ததற்கும் நன்றி நண்பா... நானெல்லாம் கவியுலகில் ரொம்ப சின்ன பையன் நண்பா...

முதலில் நிறைய கவிதைகளை வாசியுங்கள். பல கவிஞர்கள் எதையெல்லாம் பாடு பொருளாகக் கொண்டு கவிதை எழுதிகிறார்கள் என இதனால் நமக்கு புரியும். உயிர் எழுத்து[ மிக அதிகமாக கவிதைகளுக்கு இடமளிக்கிறது], தீராநதி போன்ற இலக்கிய இதழ்களை வாசியுங்கள். இது நமது தமிழ் மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும். நாளாக நாளாக கவிதை நீங்களே எழுத ஆரம்பித்து விடுவீர்கள். ஆனால், எடுத்தவுடன் தேர்ந்த கவிஞர்களைப் போல ஆக நினைத்தால் அது பேராசை. எனது மின்னஞ்சல் முகவரி இந்த வலைபூவிலேயே உள்ளது. பிரியப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். இன்னும் பகிர்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Post a Comment