விதிவிலக்கு

Wednesday, September 29, 2010



காலனுடைய
வாழ்வியல்
அன்றாடங்களினின்று
விதிவிலக்கு அளிக்கப்பட்டதாகவே
தோன்றுகிறது.

மகிழ்ந்திருக்கையில்
அன்னையின் அரவணைப்பில்
காதலியின் கதகதப்பில்
அடுத்தவரிடம் அன்பாய் குலாவையில்
காலன் இளமையுடன்

நோயில் ஓய்ந்திருக்கையில்
கவலை கொள்கையில்
எதற்காவது காத்திருக்கையில்
போர்த் தருணங்களில்
காலன் திடீரென
வயோதிகனாய்.

புறப்பாடு

Thursday, September 23, 2010



நெடுங்காலம் ஆகிவிட்டது
நானுறங்கி
உறங்கவே இல்லையென
பொருள் கொள்ள வேண்டாம்
உறக்கத்தினின்று
எழவே இல்லையென
பொருள் கொள்க.

திடீரென ஒரு நாள்
விழிக்கதவு திறந்தது
இல்லை... இல்லை...
உடலெங்கும் விழிகள்
இருக்குமா என்ன?

தேகத்துள் எனக்கே தெரியாது
ஒளிந்து கிடந்த
ஒரு கோடி தாள்கள்
ஒரு சேர திறந்தது போல்...

மறைந்து கிடந்த ஆன்மப் பறவை
மாபெரும் சிறகுகளை
தன் உடல் சிலிர்த்து விரித்து
எதை நோக்கியோ
எங்கோ பறக்கவாரம்பித்தது.

வானுயர்ந்த தருணத்திலே
ஏதேட்சையாய் கீழ்நோக்கினால்
எனைச் சுற்றியமர்ந்து
கண்ணீர் உகுக்கின்றார் சிலர்..!

இதுவரையில் இருந்தது
உறக்கத்திலா? மயக்கத்தில்லா?
யாமறியேன்.

நான் யார்?

Tuesday, September 21, 2010



எல்லையற்ற கருணை கமழும்
அகத்தே ஒரு பொழுதில்
வெறிகொண்டு தசை திண்ணத்
துடிக்கும் ஆறாத வேட்கையொன்று
பிறிதொரு பொழுதில்
எங்கோ நிகழும் ஏதோ ஒரு
கொடுமைக்காய் கசிந்துருகும்
மலர் மனது
இரவின் வெம்மையில் தகிக்கும்
தனிமை புணர்ந்தடங்கும்
வேட்கைகள் வளர்த்தெடுத்த
அரூபமான பெண்மையொன்றை
மிருகம் தணிந்து மனிதம் என்னுள்
மீண்டும் மலருமந்த தருணத்தில்
மடிந்து உயிர்ப்பேன் இன்னொரு முறை
அடங்கும் வரை அசரீரியாய்
உள்ளிருந்து ஒலிக்குமந்த ஒற்றை
கேள்வி எல்லா தருணங்களிலும்.

முடிந்ததாய் நினைத்திட்ட இடத்தினின்று

Sunday, September 19, 2010



ஆழமாய் சுவாசிப்பேன்
உன் முகவரியாகும் வாசனைகள்
நாசிக்கு பரிச்சயமாகையில்
உனக்கேயான பிரத்தியேக
மென்மையுடன் எக்கரங்கள்
வருடினாலும்
அனிச்சையாய் பற்றிக் கொள்வேன்
அவற்றை இறுக்கமாய்
வெறும் ஊனாய் மட்டுமே
இவன் மூளையிலமர்ந்துள்ளேனோ
என்றயங்கொள்ளாதே
ஊன் தாண்டியுன் சுயத்தைச்
சுகிக்கமுடியுமென்னால்
எங்கே முடிகின்றதென நீ
நினைக்கிறாயோ
அங்கிருந்து பிரவாகமெடுக்கிறது
உன் மீதான என் பிரியங்கள்.

சாத்தியமோ !

Friday, September 17, 2010



1
வானத்தை விடவும்
பெரிய வானவில்
சாத்தியமா என்ன?
என்னை விடவும்
பெரிதாக எனக்குள்
நீதான் இருக்கிறாய் !

2

மேகத்தை விட மென்மயானதொன்று
நிலவின் ஒளியினும் குளுமையானதொன்று
மழைத் தூறலை விட மயக்கும்
இசை ஒன்று
தாயின் அன்பை விஞ்சும் அன்பொன்று
மழலையின் சிரிப்பை தாண்டிய
பரிசுத்தமொன்று
புல்நுனி பனித்துளியை விட
அழகானதொரு கவிதை
இவைகள் கூட சாத்தியப்படலாம்.
உன்னைவிடவும் மனதுக்கு
இதமான
இணக்கமான
ஒருத்தி...
ம்... !?

இளவரசி

Wednesday, September 15, 2010



மதில்கள் அணைத்த மாடக்கூடங்கள்
ரோஜா இதழ்கள் மிதக்கும் குளியல் குளம்
முழுமதி நனைத்த புல்வெளி
அறுசுவையுணவு
தளும்பும் மதுவால்
தள்ளாடும் கோப்பைகள்
அணிகளும், பட்டுப் பீதாம்பரங்களும்,
பூப்பந்து விளையாட தோழியரும்...
ஏவலாட்கள் அழைப்பிற்காய் தவங்கிடக்க
இன்னிசையூற்று எங்கும் வழியும்.
விடியலின் கதிர்கள் முகம் நனைக்க
சுயநினைவோடு எழுவாள்
உடலொட்டிய தெருப்புழுதியை
தட்டிவிட்டபடி- கனவுகள்
அவளை என்று மேமாற்றியதில்லை;
மகிழ்வூட்டுவதில்
பாரபட்சம் பாராதவை கனவுகள்.

முடிவற்றதொரு கடிதம்

Monday, September 13, 2010



எழுதிக்கொண்டேயிருக்கிறேன்
உனக்கு அனுப்பாத கடிதத்தை
எவ்வளவு எழுதிய பிறகும்
சொல்வதற்கு ஏதோவொன்று
மிச்சமாய் இன்னும்…
முடித்திட முடிவு செய்யும்
ஒவ்வொரு கணத்திலும்
தொடுவானில் புள்ளி பிம்பமாய்
மினுக்கும் உன்னிடம்
சேர்ப்பிப்பது பற்றிய
என் ஐயங்களுக்கு
பதில் தேட முனையாது
எழுதியபடியே இருக்கிறேன்.

சாட்சி

Saturday, September 11, 2010



நாம் அமர்ந்திருக்கும்
அறையின் மின்விசிறியின்
மெல்லிய சுழற்சி
நம் மௌனத்தால்
அரவை இயந்திரத்தின்
ஒலிபோல் இம்சிக்கிறது

ஒளியை உமிழும்
குழல் விளக்கினைக்
காட்டிலும்
மேம்பட்ட பிராகாசத்தைக்
காண முடிகிறது
உன் விழிகளில்

கால் விரல்களால்
தரையில் கோலமிடுவதும்
கைகளை பிசைந்தபடியும்
அவ்வப்போது நகம் கடித்தபடியும்
கரைக்கின்றாய் காலத்தை

உன்னருகே
அமர்ந்தபடி நானுன்னை
உற்று பார்க்கிறேன்.

ஒத்திகை

Wednesday, September 8, 2010



நிரந்தர உறக்கத்திற்கான
ஒத்திகையாகவும்
முன்தயாரிப்பாகவும்
ஒவ்வொரு இரவின்
நித்திரை.

இருப்பது, வளர்வது

Sunday, September 5, 2010




வயல் வரப்பில் நடந்து
செல்பவனிடம்
ஏற்றிக் கட்டிய உள்பாவாடையுடன்
பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருக்கும்
பருவப் பெண் கபடமற்று கேட்கிறாள்
“ஏப்பண்ணே ஊர்ல இருந்து வந்த?
நல்லா இருக்கியா?”
அவளுக்குள் மனுஷி இருக்கிறாள்
மனிதம் வளர்கிறது.
“நல்லா இருக்கேன் தங்கச்சி”,
உதட்டளவில் வார்த்தை பேசி
மனதினுள் அவளவையங்களை
மேய்ந்து எச்சில் விடுகிறவனிடமும்
மனிதன் இருக்கிறான்...
மிருகம் வளர்கிறது.

மன்மதலீலை

Friday, September 3, 2010



கடவுளுக்கு தெரிந்திருக்கிறது
ஆடவரின் ஆணவமடக்க
சாட்டைகள் தேவையில்லை
சடைகளே போதுமென்பது

காமத்தை மெழுகாக்கி
ஊற்றினால் தானே
யாக்கைத் திரி செய்து
அதில் காதல் சுடரை
ஏற்ற முடிகிறது

இது ஏதெனத்
தெரிந்து கொள்வதில்
எத்துணை ஆர்வமும்
தேடலும் !

நிற,இன,மொழி பேதங்களைத்
தாண்டி யுகயுகமாய்
மனிதகுலத்தை சுண்டியிழுத்து
வசீகரிக்கிறது காமம்

வெறும் இனவிருத்திக்காய்
உருவானது
அழகழகாய் ஆட பல மாற்றி
வேடம் பல பூண்டு
ஒய்யாரமாய் நடை பயில்கிறது

சுரப்பிகளின் சூட்சுமமென
தெரிந்திடினும்
காளையரையும் பெண்டிரையும்
கட்டியாள்கிறது.

ஒவ்வொருவர் வாழ்விலும்
தென்றலாய் பூத்து
புயலாய் அடித்து
பதியன் போடுகிறது
அடுத்த தலைமுறைக்கான
விதைகளை.

ஒரு வேளை
காமத்தைத்தான் மனிதன்
நாகரிகத்தில் தொய்த்தெடுத்து
காதலென கொண்டாடுகிறானோ?

இருக்கலாம்... ஒரு வேளை
எதற்கும் என் காதலியிடம்
கேட்டுவிட்டுச் சொல்கிறேன் !