இணையப் பயன்பாடு - III

Tuesday, September 11, 2012பார்த்திராத நண்பன்:

ஒத்த கருத்துள்ளவரை ஒருங்கிணைக்கிறது சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites). பேனா நண்பர்கள் சென்ற நூற்றாண்டின் வரலாறாகிப் போனார்கள். மாறி வரும் இயந்திர வாழ்வில் மனிதன் உறவிற்காய் ஏங்குகிறான். தூரங்கள் பிரிக்கும் மனித மனங்களை பசை போட்டு பிணைக்கின்றன சமூக வலை தளங்கள். இவற்றின் சுருக்கமான வரலாறை நாம் கீழ்கண்ட முகவரியில் வாசிக்கலாம்.

ஆனால் ஏனோ இதில் ஆர்குட் குறித்த தகவல் மட்டும் இல்லை.
வெறும் நண்பர்களைப் தொடர்பில் வைத்துக் கொள்ள எனும் நோக்குடன் முதலில் செயல்படத் துவங்கிய இத்தளங்கள், பின்னர் அவகளுக்கு இருக்கும் இன்ன பிற மகத்தான சாத்தியங்களை உணரத் துவங்கியுள்ளன. வாடிக்கையாளரைப் பிடிக்கும் மகத்தான வாய்ப்பை வழங்குகின்றன இத்தளங்கள். ஒவ்வொரு வணிக நிறுவனமும், தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதிலிருந்து, அவற்றை நுகர்வோர் மத்தியில் பிரபலப் படுத்துவது வரை துணை நிற்கின்றன இத்தளங்கள்.

இதுமட்டுமே இத்தளங்களினால் ஆகப் பெரிய நன்மையாக கருதப்பட்டது 2010 வரை. ஆனால் ஒரு சரித்திரத்தையே மாற்றி எழுதும் வல்லமை படைத்தவை இத்தளங்கள் என்பது எகிப்து தேசத்தில் 30 வருட சார்வாதிகாரத்தை எதிர்த்த மக்களை ஒன்றிணைப்பதில் அளப்பரிய பங்காற்றியவை முகநூல் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களே. அவ்வருடத்தில் எகிப்தில் பற்றிய மக்கள் எழுச்சித் தீ மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவிய போதும் இத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இது குறித்த தகவல்களை இங்கு வாசிக்கலாம்.


இது போலவே பெறுநிறுவனங்களின் பேராசையை எதிர்த்து செப்டம்பர் 17,2011ல் ஆரம்பித்தது வால் ஸ்டீர்ட்டை நிரப்புவோம்  எனும் மக்கள் எழுச்சிப் போராட்டம். இப்போராட்டம் சமூகத்தின் சமத்துவமின்மையையும், அதிகாரத்தின் வல்லாதிக்கத்தையும் எதிர்க்கும் மனிதர்களின் ஒட்டு மொத்த குரலாக ஏகாதிபத்திய அமெரிக்க அரசை ஆட்டி எடுத்து வருகின்றது. போராட்டக்காரர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், தமக்கு மேலும் ஆதரவு திரட்டவும் மிக அதிகமாக பயன்படுத்தி வருவது சமூக வலை தளங்களைத்தாம். சொல்லப் போனால் “Occupy Wall Street “ எனும் இவ்வியக்கம் முதலில் டுவிட்டர் தளத்தில் ஒரு சோதனை முயற்சியாகவே துவங்கியது. ஆனால் அது மாபெரும் எழுச்சியை உண்டாக்கி விட்டது. இது குறித்த செய்திகளை மேலும் வாசிக்க


என்ற முகவரியை சொடுக்கவும்.

மின்னாட்சி :

முடியாட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டில் மின்னாட்சி கால் பதிக்கத் துவங்கியிருக்கிறது. மின்னாட்சி எனப்படும்               e-Governance எனப்படுவது அரசு இயந்திரம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனக்குள்ளேயும், தன் மக்களோடும், நிறுவனங்களோடும், ஏனைய அரசுகளோடும் கொள்ளும் தொடர்பு என வரையறுக்கப்படுகிறது. கணினிகளின் வரவு அரசின் பரிவர்த்தனைகளை ஓரளவு மாற்றியிருந்த போதிலும், இணையமே அதன் உண்மையான திறனை, முழுப் பரிமாணத்துடன் வெளிக்கொணர்கின்றது. மின்னாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது பிரிட்டன். அவர்களுடைய மின்னாட்சி குறித்த கொள்கைளையும் அதன் நடைமுறைகளைக் குறித்தும், அதனால் அந்நாட்டில் ஆரோக்கியமான மாற்றங்களும், சாத்தியப்படும் முன்னேற்றேங்களும் பற்றிய ஒரு முழுமையான தகவலை கீழ் கண்ட இணைப்பை சொடுக்கி வாசிக்கலாம்.


மின்னாட்சி அரசின் இயங்குவதை அதிகமான வெளிப்படை தன்மையோடு இருப்பதை சாத்தியமாக்குகின்றது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் தேர்ந்த அரசு எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய உரிமையுள்ளவன். இவ்வுரிமையை மின்னாட்சி நிலைனாட்டுகிறது. இணையத் தொடர்புகள் வழியே சாத்தியப்படும் அரசில் எல்லா மட்டங்களிலும் தொடர்புகள் எளிமையாகின்றன. பிரிட்டன் அரசே தனது மக்களை வங்கி பரிவர்த்தனைகள், பல்வேறு கட்டணங்களை செலுத்துதல் என சகலத்தையும் இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்துகிறது. மேலும் 2020 க்குள் எல்லா பரிமாற்றங்களையும் இணையத்தின் வழியே நடத்த திட்டமிட்டுள்ளது. மின்னாட்சியின் வெளிப்படைத்தன்மை ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இந்தியாவில் மின்னாட்சி குறித்து நாம் அறிந்து கொள்ள கீழ்கண்ட ஆய்வறிக்கை உதவும் என நம்புகின்றேன்.
மின்வர்த்தகம்:

இணைய வழி நடைபெறும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் மின் வர்த்தகம் என்று அழைக்கப் படுகிறது. கடைகளைத் தேடி பொருட்களை பார்த்து வாங்கும் காலம் மெல்ல மலையேறத் துவங்கியுள்ளது. வேண்டிய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ எலியத்தில் ஒரு சில சொடுக்ககள் போதும். வேலை முடிந்தது. வர்த்தக விதிகளை மாற்றி எழுத வேண்டிய நிலையை உருவாக்கி வருகின்றது வளர்ந்து வரும் மின்வர்த்தகம்.

இதில் அப்படி என்னதான் சிறப்பு? பொதுவாக நாம் நடைமுறையில் சரக்குகளை நேரிடையாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குவதில்லை. மாறாக அது அதற்குரிய கடைகளில் இருந்தே வாங்குகின்றோம். ஆனால் மின்வர்த்தகத்தில் நாமே எந்த இடைத்தரகரும் இல்லாமல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்தே வாங்க முடிகின்றது. இது வாங்கும் பொருளின் விலையை கணிசமான அளவு குறைக்கும் என்பதே அதன் சிறப்பம்சம். கீழ்கண்ட இணைப்பில் உலக அளவில் மின்வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் இணைய தள நிறுவனங்களின் பட்டியலைக் காணலாம்.


நமது நாட்டிலும் மின்வர்த்தகம் பொது வர்த்தகத்துக்கு இணையான பங்கு வகிக்க ஆரம்பித்துள்ளது. இங்கே தரப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி இந்திய அளவில் சிறந்து விளங்கும் தளங்களின் பட்டியலைக் காணலாம்.


இதில் சந்தையில் இருக்கும் இந்நிறுவனங்களுக்கிடையே தொழில் போட்டி வேறு. அப்புறமென்ன? வருடம் முழுவதும் இத்தளங்களில் ஆடி தள்ளுபடி தான். வாடிக்கையாளர்களாகிய நமக்கு கொண்டாட்டம் தான். 


ஆறாம் அறிவு :  

Popular Science எனும் பிரபல அமெரிக்க அறிவியல் இதழ் 2009ல், சிறந்த கண்டுபிடிப்பு எனும் தலைப்பில் ஒரு போட்டி நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒரு இந்திய இளைஞர் உலகை தன் கண்டுபிடிப்பால் வாய் பிளக்க வைத்தார்.அவர் பிரனவ் மிஸ்திரி என்ற குஜராத்தி இளைஞர். அவரது ஆறாம் அறிவு தொழில்நுட்பம் அவருக்கு சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதை மட்டும் வாங்கித் தந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கால இணையப் பயன்பாட்டின் போக்கினை நிர்ணயிக்க வல்ல ஒரு வித்து இதனுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூல முன் மாதிரியில் (Prototype) வன்பொருளாக மொத்தம் இருப்பதே   ஒரு கையடக்க ப்ரொஜெக்டர், ஒரு கண்ணாடி மற்றும் ஒரு காமிரா; கூடவே பிரவின் தொழில்நுட்பத்தின் மூளையான அவ்ரது மென்பொருள். இதில் அப்படி என்னதான் இருக்கிறது? நமக்கும் இணையத்திற்குமான தொடர்பை மறுவரையறை செய்கிறது இது.
சுருங்கச் சொன்னால் நமது சுவாசத்தை போல இணையத்தினை நமது உடலின் ஒரு மெய்நிகர் அங்கமாகவே ஆக்கிட வல்லதே இந்த ஆறாம் அறிவு தொழில்நுட்பம். இதனைப் பற்றியும், இதன் சாத்தியங்களையும் நான் சொல்வதை விட அதன் பிரம்மா பிரனவே விளக்கினால் தான் நன்றாக இருக்கும் இல்லையா? அதனால் அவருக்கு வழிவிட்டு நான் அமைதி காப்பதே சிறந்தது.முடிவுரை:

இணையத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? எனும் தலைப்பை வாசித்தவுடன் எப்படி கட்டுரையின் உள்ளடக்கத்தை அமைப்பது என ஒரு சிறு குழப்பம் இருந்தது. தனி மனித வாழ்வில் இணையப் பயன்பாடு பற்றிய பார்வையில் மட்டுமே முழு கட்டுரையும் அமைப்பதா அல்லது இணையம் எனும் பெருவிருட்சம் ஒட்டு மொத்த மனிதகுல மேம்பாட்டிற்கு கொண்டிருக்கும் சாத்தியங்கள் குறித்து அவதானிப்பதா எனும் குழப்பமே அது. இது போன்ற ஒரு தலைப்பில் இந்த இரண்டு கண்ணோட்டத்திலுமே கருப்பொருளை அமைக்கலாம். ஆகவே இவ்விரண்டு பார்வைகளையும் கலந்து எழுதுவது என்று முடிவு செய்து எழுதியுள்ளேன். இன்னோரு முக்கிய செய்தியையும் இங்கு சொல்லியாக வேண்டும். பல பல இணையப் பயன்பாடுகளை பற்றி எழுதவில்லை தான் வானத்தை முழுமையாய் ஒரு சன்னலின் வழியே அதன் முழு பரிமாணத்தோடும் காண்பது எப்படி சாத்தியமற்றதோ, அது போலவே இணையமெனும் பெருங்கடலை இந்த சிறு கட்டுரை கட்டுமரத்திலேயே சுற்றி வர முடியாது என்பது யதார்த்தம். இறுதியாக இன்னொரு கருத்து. இணையம் எனும் மாயச் சுரங்கம் நாம் கனவிலும் நினைத்திராத வைரங்களை தர வல்லதுதான். அதே வேளையில் அச்சுரங்கத்தில் எண்ணற்ற புதைகுழிகளும், திரும்ப முடியாது தொலைந்து போகக் கூடிய இடங்களும் ஏராளம் இங்கே.      

தரவுகள் மற்றும் உதவிய நூல்கள் :

- கட்டுரையினூடேயே ஆங்காங்கே எனக்கு உதவிய தரவுகள், இணைய தளங்கள் என அனைத்தைப் பற்றியும் தங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். குறிப்பாக விக்கிபீடியா தளம் பல செய்திகளைப் பெறுவதில் பேருதவியாக இருந்தது.

- ‘The World is Flat- A Brief History of the Globalized World in 21st Century, By Thomas Friedman, 2005, Penguin Publications.  

No comments:

Post a Comment