இணையப் பயன்பாடு - II

Monday, September 10, 2012





மின்னஞ்சல் :

தகவல் பரிமாற்றங்களில் அதிமுக்கியமான ஒரு வகை கடிதப் போக்குவரத்து. இந்த அஞ்சல் இணையத்தின் கைவண்ணத்தால் மின் அஞ்சல் ஆனது. இப்பொது உலகின் எந்த மூலைக்கும் எதனை வேண்டுமாயினும் ( கோப்புகள், படங்கள், துண்டு படக்காட்சிகள், ஒலி என கடிதத்தோடு இணைத்தும்) கணப்பொழுதில் அனுப்பலாம், பெறலாம். அதுவும் இலவசமாக. இத்துறையில் இருக்கும் ஜாம்பவான்கள் ஹாட் மெயில், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் ஆகிய மூன்றுமே. இக்கட்டுரையையே நான் வல்லமைக்கு மின்னஞ்சல் தான் செய்தேன்.

வெறும் கடிதப் பரிவர்த்தனையோடு இச்சேவைகள் நின்று விடுவதில்லை. ஒரே நேரத்தில் ஒருவருடனோ அல்லது பலருடனோ உரையாடும் வசதியை, ஏன், ஒரு வெப் காமிரா இருந்தால் வீடியோ மூலம் உரையாடுகின்ற வசதியையும் அளிக்கின்றன. இது பயண காலத்தையும் அதனால் ஏற்படும் மிக அதிக பொருட்செலவையும் முற்றிலும் தேவையற்தாக்குகின்றன. இதனால் ஒரு முதுகலை கல்லூரி மாணவர் வேறு கண்டத்திலுள்ள ஒரு பேராசிரியரின் கீழ் தனது ஆராய்ச்சியை செய்ய முடியும், அவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்காமலேயே. இவ்வசதியை  பயன்படுத்தி இணையத்தில் ஆன்லைன் தனிப்பயிற்சி (Online Tuition) இணையதளங்கள் சக்கை போடு போடுகின்றன.

கற்றல் விளையாட்டு :

கற்கிற ஆர்வமும், கற்றுக் கொள்ள நேரமும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு இணையம் ஒரு கேட்டதை வரமாய் தரும் கடவுள்;அதுவும் தவமேதும் செய்யாமலேயே!  சில வருடங்களுக்கு முன்னர் ஒரு துறையை பற்றி கற்றுக் கொள்ள நாம் அது சார்ந்த கட்டுரைகளாக மட்டுமே வாசிக்கக் கிடைத்தது.

இதற்கு பல இணைய தளங்கள் பற்றி ஒருவருக்கு தெரிய வேண்டும். அது கூட தேடல் பொறியின் தயவால் எளிதானது தான். ஆனால் பெரும்பாலும் நமக்கு ஒரு துறை குறித்த புத்தங்களே முதலில் தெரியும். யாரையாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து கேட்டால் நிச்சயம் அந்நபர் இதற்கு இன்னார் எழுதிய இன்ன பெயர் கொண்ட புத்தகத்தை வாசியுங்கள் என்று தானே சிபாரிசு செய்வார். ஒரு வேளை அப்புத்தகத்தினை-அது உலகில் எந்த மூலையிலுள்ள நூலகமாக இருப்பினும்- அதன் மென்பதிப்பு வடிவில் (Soft Copy )  வாசிக்க முடிந்தால், அதுவும் காசில்லாமல்? இந்நினைப்பே புத்தக ஆர்வலர்களை வாய் பிளக்க வைத்துவிடும். இக்கனவினை உண்மையாக்கும் முயற்சியை கூகுள் பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி விட்டது, தனது கூகுள் நூலகம் திட்டத்தின் மூலமாக. அக்டோபர் 2004ல்,பிராங்ஃபொர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் செய்தது. மேலும் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் நூலகங்களின் புத்தகங்களை இணையத்தில் அனைவரும் வாசிக்கும் விதமாக வரிக்கண்ணோட்டம் (Scanning) செய்ய அக்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு அப்பணியை இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றது கூகுள். மார்ச் 2012 வரையிலும் ஏறக்குறைய 2 கோடி புத்தகங்கள் வரிகண்ணோட்டமிடப்பட்டுள்ளன.

கற்கும் பாடத்தின் புரிதல் ஆழப்பட வாசிப்புடன் சேர்த்து  அதனுடன் தொடர்புடைய படக் காட்சிகளை பார்ப்பது சிறந்தது. அதற்கு தான் யூ-டியூப். இன்று உலகின் அதி முக்கிய, புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என அனைத்து கல்வி சார்ந்த நிறுவனங்களும் தங்களுக்கென பிரத்தியேகமான அதிகாரப்பூர்வ தடங்களை (Official Channels) வைத்திருக்கின்றன. இன்றைய சூழலில் ஒரு இந்திய பேராசிரியரின் வகுப்பில் நாம் இங்கிலாந்தில் இருந்தபடியே பங்கு கொள்வது சாத்தியம்.

எனது தோழரின் தேடலில் அவருக்கு கிடைத்தவற்றை தங்களோடு பகிர்கின்றேன்.



யாவரும் கலைஞராக... : 

2005ல் காதலர் தினத்தன்று உலகிற்கு கிடைத்த ஒரு சிறப்பு பரிசு யூ-டியூப் எனும் வீடியோ பகிரும் தளம். PayPal  நிறுவனத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆரம்பித்தது இத்தளம். இத்தளத்தில் பயனர் கணக்கு (User Account) ஒன்றை துவக்கி யார் வேண்டுமாயினும் வீடியோ படக் காட்சிகளை பதிவேற்றலாம். அது அந்த நபரே கூட எடுத்த குறும்படமாக இருக்கலாம். படைக்கிற ஆவலும் திரைப்படமெடுக்கும் கனவும் உடையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தங்களின் படங்களுக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் கிடைப்பது என்றால் சும்மாவா?! அதுவும் படைப்பு குறித்த அவர்களுடைய எதிர்வினையை பின்னூட்டமாக தெரிந்து கொள்ளும் வசதியும் கூடவே இருந்தால்.... !

வாசிப்பு ஒரு மனிதனைப் பண்படுத்தும். வாசிக்க ஆரம்பிக்கும் பலர் தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை சீக்கிரமே கண்டுகொள்வர். ஆனால் அப்படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ள ஒரு தக்க மேடை அவசியம். முன்னெல்லாம் இதற்கு ஒரே வழி பத்திரிக்கைகள் தான். ஆனால் படைப்புகள் வெளியீட்டிற்கு தேர்வாகும் என்பது நிச்சயமில்லை. எல்லாரையும் படைப்பாளிகளாக்குகிறது வலையுலகம்.

1999ல் Pyra Labs எனும் நிறுவனத்தால் துவக்கப்பட்ட போதும், 2003ல் பிளாகர் (Blogger)  தளத்தை கூகுள் வாங்கிய பிறகுதான் அது பிரபலமடைய ஆரம்பித்தது. அதற்கு முதன்மையான காரணம் கூகுளுக்கு கைமாறிய பிறகே அத்தளத்தின்  சேவைகள் அனைத்தும்  இலவசமாக வழங்கப்பட்டன. வலைப்பூக்கள் என அழகு தமிழில் அழைக்கப்படும் இவை தேடல் உள்ள யாரும் படைப்பாளியாகவோ அல்லது இதழியல் துறையில் தடம் பதிக்கவும் கதவுகள் திறக்கிறது. தமிழ் உள்பட ஐம்பது மொழிகளில் இத்தளத்தில் தமக்கென யார் வேண்டுமானாலும் ஒரு வலை பக்கம் துவங்கலாம். ஒவ்வொரு தனி மனிதனின் அபிப்ராயங்களுக்கும், சமூக நிலை  குறித்த அவரது நிலைப்பாடுகளுக்கும், இங்கு இடமுண்டு. தணிக்கை கிடையாது என்பதே இதன் மாபெரும் பலம். கருத்து சுதந்திரம் முறையாக பயன்படுத்தப் படும்பொழுது வலைப்பூ மாபெரும் சிந்தனை எழுச்சியை உருவாக்க வல்ல களமாக மாறும்.

No comments:

Post a Comment