நம்மோடு
நம்மிடையே
வாழ்கின்றன நம் கேள்விகளும்
பேருந்துப் படிக்கட்டுகளில்
தொங்கியபடி சில
மின்சார ரயில்களில்
அருகமர்ந்தபடி சில
மழையில் நனைய மறுத்து
நாம் ஒதுங்கும் நிழற்குடைக்குள்
ஒண்டியபடி சில
கேள்விகள் நம்மிடையே
வாழ்ந்து கொண்டேதானிருக்கின்றன
அவைகளின் இருப்பை அறியாதார் நாமே
மனிதரின் வாழ்விடங்களையெல்லாம்
அவை தம்முடையதாக்கிக் கொள்கின்றன
தாயைத் தொலைத்த மகவைப் போல சில
மாந்தரே வாழா இடங்களிலும் வாழ்கின்றன
தம்மைப் பெற்றவர் யாரெனும்
ரகசியம் தெரியாமலேயே.
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(09-09-12)
இணைய இதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment