இணையப் பயன்பாடு- I

Sunday, September 9, 2012

                        வல்லமை மின்னிதழ் தனது மூன்றாம் ஆண்டினை முன்னிட்டு அறிவித்திருந்த, “ இணையத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் எனது கட்டுரை முதற்பரிசு பெற்றுள்ளது என்பதை வலையுலக நண்பர்களாகிய உங்களுடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். கட்டுரை சற்றே அளவில் பெரியது என்பதால் அதனை மூன்று பகுதிகளாக பதிவிடுகின்றேன். இனி கட்டுரை.
இணையப் பயன்பாடு (முதல் பகுதி)


உலகின் மக்களெல்லாம் இனத்தாலும், நிறத்தாலும், மொழியாலும், கலாச்சாரத்தாலும் பிரிந்து கிடப்பினும் மானுடர் அனைவரையும் இணைத்துக் கட்ட வல்லதாக இருக்கிறது இணையமெனும் மாய வலை. 1960களில் ஆராய்ச்சியாக ஆரம்பமாகி 90களில் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது முதல் கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவாய் மாறிவருகின்றது இணையம். அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துக் இருப்பது இறை மட்டுமல்ல இன்று; இணையமும் தான். உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ( அதாவது 2.2 பில்லியன்) மக்கள் இணையப் பயனீட்டாளர்களாய் இருக்கின்றனர்.  

ஒவ்வொரு யுகங்களாக கடந்து வந்த மனித இனம் தற்போது இருப்பது தகவல் யுகம் (Age of Information)  கணினிகளின் வரவு, இந்த தகவல் யுகத்தின் உச்சத்தைத் தொடும் மாபெரும் கனவின்,  பாதிக் கிணறைத் தாண்டிட உதவின. மீதி தூரத்தைத் தாவி ஏற இணைய ஏணி உதவியது. ஆயிற்று. கிணறை ஒரு வழியாய் கடந்தாகி விட்டது. இங்குதான் நாம் எதிபார்த்திராத ஒரு புதிய ஆட்டம் களை கட்டத் துவங்கியது. ஆம். பந்தயக் களத்தின் முடிவுக் கோட்டிலிருந்து ஆரம்பித்த அதிசயக் விளையாட்டாகிப் போனது இணையப் பயன்பாடு. துவக்கத்தில் இத்தகவல் யுகத்தின் முக்கிய சாராம்சமான எல்லோரையும் இணைப்பதுவே இணையத்தின் உச்சகட்ட பயன்பாடு என நம்பப்பட்டது. ஆனால் பிணைப்பதோடு மட்டும் நில்லாமல் பல்வேறு பிற சாத்தியங்களுக்கு கதவுகளை அகலத் திறந்திருகிறது இணையம்.

வெறும் அறிவியல் துறை அறிஞர்களுக்கும், ஆராய்ச்சி வல்லுனர்களுக்கு மட்டுமென்று இருந்த கணினியை வீடுகளுக்குள் கொண்டு வந்தது IBM நிறுவனத்தின்  PC ( Personal Computer).  1981ல் நடந்தேறிய இந்நிகழ்வு ஒரு மாபெரும் புரட்சியே. அதன் அடுத்த கட்டமாக இணையத்தை எல்லோருக்குமான பயன்பாட்டிற்கு எளிமையாக்கியது NETSCAPE எனும் உலாவி (Browser). அது ஆகஸ்டு 9, 1995 முதல் பயன்பாட்டிற்கு வந்தது. உலகம் மற்றுமொரு அசுர மாற்றத்திற்கான முதல் அடியையும் அன்றுதான் இதன் வழியாக  வைத்தது. அன்று முதல் இன்று வரை, ஏன் இக்கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணத்தில் கூட எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் தன்னை புதுப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது இணையம். இந்த இணையச் சிகரத்தில் ஏறும் லாவகம் தெரிந்து விட்டால் எல்லாமே தொட்டு விடும் தூரம் தான்.

புதையல் இலவசம்:

 இணையம் முதன்முதலாய் உருவாக்கபட்ட போது , தகவல்களை உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைத்து, திரட்டப்பட்ட அனைத்து தரவுகளையும் முறையாக ஒன்றிணைத்து அனைவருக்கும் வழங்குவதே அதன் அடிப்படை குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. நம்மில் பெரும்பாலானோர் இணையத்தை அணுகுவது தேவைப்படும் தகவல்களைப் பெறவதற்கே. 1995ல் இருந்து இணைய தளங்களின் எண்ணிக்கை, ஏதோ உலக மக்கள் தொகையை விஞ்சி விடும் வேட்கையோடு வளருவது போல், கற்பனை செய்ததைக் காட்டிலும் மகா பெரிய எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன. இன்னும் சில வருடங்களில் உங்கள் தெருவில் தோசை மாவு விற்பனை செய்யும் சரஸ்வதி அக்காள் தனக்கென ஒரு இணைய தளம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

ஒரு காலத்தில் நமக்கு தேவைப்படும் தகவலைகளைப் பெற
நமக்கு இருந்த ஒரே வழி நூலகம் தான். அதிலும் நாம் தேடும் தகவல் குறித்த புத்தகம் அங்கு கிடைக்குமென்பது நிச்சயமில்லை.
ஆனால் இச்சூழலை தலைகீழாய் புரட்டிப் போட்டிருக்கிறது இணைய வசதி. இன்று நம்மிடையே நிலவுவது தகவல் மீப்பெருக்கமே (Information Explosion) . கொட்டிக் கிடக்கும் கணக்கற்ற இணைய பக்கங்களில் பயனாளருக்குத் தேவைப்படும் தகவலைத் தேடுவது தேடல் பொறிகளால் (Search Engines) மிக எளிதாகி விட்டது. எலியத்தின் ஒற்றைச் சொடுக்கில் கேட்டதற்கு மேலேயே தகவல்களைப் பெறும் காலமிது.

எனது கல்லூரி நாட்களில் தகவல் களஞ்சியத்தில் ஏதேனும் குறிப்பெடுக்க கல்லூரி நூலகம் தான் ஒரே வழி. வீட்டில் ஒரு பிரதி இருக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் விலை தான் விழி பிதுங்கச் செய்யும். ஆனால் மக்களால் மக்களுக்கான ஒரு மாபெரும் தகவல் சுரங்கத்தை உருவாக்கும் பெருங்கனவோடு ஜனவரி 15, 2001ல் ஜிம்மி வேல்ஸ் மற்றும் லேரி சாங்கர் ஆகியோரால் துவங்கப்பட்டதுவே விக்கிபீடியா இணைய தளம்( www.wikipedia.org). இன்று மிக நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் வழங்கியாக இதுவே சுட்டப்படுகிறது. இங்கு தற்போது 285 உலக மொழிகளில் பற்பல தலைப்புகளில் கட்டுரைகள் நாம் வாசிக்கக் கிடைக்கின்றன.

அதுமட்டுமல்லாது நமக்கு துளியும் முன்அறிமுகம் இல்லாத ஆனால் முறையாக தெரிந்து கொள்ளும் நாட்டமிருப்பின் அத்துறையின் அடிப்படையினின்று சுயமாகக் கற்றுக் கொள்ள இத்தளத்தின் விக்கிவர்சிட்டி (Wikiversity)  எனும் விக்கி அமைப்பின் துணைத் திட்டம். வசதி செய்கிறது. இத்தளத்தில் மிக முக்கியமான சிறப்பம்சங்கள் என பலர் கருதுவது இரண்டு விஷயங்கள் தான். முதலாவது இது பயனீட்டாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைப்பது. அடுத்ததாக இத்தளத்திலுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தினை முறையான வழியில் யார் வேண்டுமாயினும் திருத்த முடியும் என்பதே. இந்த இரண்டாவது சிறப்பம்சம் எந்த சார்ப்பும் அற்ற நடுனிலையான தகவல்களை உள்ளடக்கத்தினைக் கொண்ட கட்டுரைகள் வருவதனை உறுதி செய்கின்றன.
பத்தின் அடுக்கு நூறு :

இந்த உபதலைப்பு சற்று வித்தியாசமாக, ஏன், இவ்விடத்திற்கு தொடர்பில்லாதது போல தோன்றலாம். ஆனால் இதனை அர்த்தமாகக் கொண்ட வார்த்தையின் பெயருடைய தளமே உலகிலேயே அதிக நபர்களால் தினமும் வருகை தளமாக இருப்பதாக அலெக்ஸா நிறுவனம் ( இது அமேசான் இணையதள நிறுவனத்தின்- தளங்களுள் பயனர்களின் இணையப் போக்குவரத்தை ஆய்வு செய்யும்- ஒரு துணை நிறுவனம்.) தெரிவிக்கிறது. ஆம், அது நம்மில் பெரும்பாலான பயனர்கள் இணையத்தினுள்ளெ காலடி எடுத்து வைத்ததும் சொடுக்கும் கூகுல் தளமே அது. ஏறக்குறைய தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நபர்களுக்கு கூகுள் தான் கடவுள்.

இணையப் பயனீட்டை,ஒற்றை நிறுவனமாக, நமது கற்பனைக்கும் மேலாக சாத்தியப்படுத்தியபடியே இருக்கும் கூகுள் உண்மையில் இந்நூற்றாண்டின் வளர்ச்சியில் ஒப்புமை கூறவியலாத பங்காற்றிக் கொண்டிருக்கிறது. லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் எனும் இரு ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கருக் கொண்ட கனவு, கூகுள் தேடற் பொறியாக, ஒரு இணைய தளமாக செப்டம்பர் 4, 1998 அன்று நனவானது. அது இன்று பலரின் ஒன்று பட்ட உழைப்பில் விருட்சமாக வளர்ந்து, இன்னும் இன்னும் அன்றாடம் கிளைகள் பரப்பியபடி, நிற்கிறது. இக்கட்டுரையில் நாம் கருத்தில் கொள்ளப் போகும் பல இணையப் பயன்பாடுகளை  வழங்கி வரும் பல தளங்கள் கூகுளுக்கு சொந்தமானவையே.

1 comment:

மணிவானதி said...

அருமையான தகவல் நண்பரே. பாராட்டுக்கள்

Post a Comment