வெறுமையின் கோப்பைகளில்
பெயர் தெரியா திரவம் போல
தளும்பத் தளும்ப தனிமை
உடன் பருகிட துணையின்றி
நானே பருகித் திளைத்து
போதையேறி களைத்து
கண்ணயர்கின்றேன் அன்றாடம்
குழப்பமேறிய கனவொன்றில்
செவ்விந்தியர்களின் நடனம் கண்டு
பாதியில் கலைந்தது
மூன்றாம் யாமத்தில் துவங்கிய
அயர்ச்சித் தூக்கம்-எரியும் கண்களோடு
உதட்டின் பிளவுகளை
இணைத்தது சிகரெட்
மடிக்கணினியின் கீழ் வலது ஓரத்தில்
இன்னும் திட்டியபடியே அந்த கிளேயண்ட்
வழமை போல
தொன்னூறு சதம் தரவிறங்கியிருக்கிறது
அந்த ஸ்பானியத் திரைப்படம்
மகிழ்ச்சி
தூரத்தில் எரியும் ஏழை விவசாயியின்
வயிற்றின் வாசனையை
சமன் செய்து மழுங்கடிக்கிறது
எரியும் சிகரெட்டின்
சுழல் புகை
காலை உணவிற்கு
பர்கர் இருந்தால் நல்லது.
குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை
(27-08-12) இணைய இதழுக்கு நன்றி.
1 comment:
Nice
Post a Comment