கோடுகளின்றி வெறும்
வண்ணங்களாய் மட்டுமே
உன் வாழ்க்கை.
உன் உணர்வுகளின்
சவக் குழியாய்
நின் தேகம்.
இரை தேடும் வேடருக்கு
இனித்திடும் - உன்
அதே தேகம்.
காலை மலர்ந்த மலர்
பூசையறையில்
அந்தியில் ஆடவர் மிதித்திட
புழுதியில் .
உனக்கும் கண்டிப்பாய்
இருக்கும்
ஒரு குடும்பம்.
உடன் குடித்தனம் நடத்தும்
சில நாழிகை கணவர்களுக்கும்
இது தெரிந்தேயிருக்கும்.
கிளையாய் நீயிருக்க
வாசம் செய்யும் மந்திகள்
மட்டும் மாறிக்கொண்டே !
பெண்டிரனைவருக்கும்
தாய்மையோர் வ்ரம்
உனக்கோ பாரம்
உன் மகவுக்கோ பிறப்பிலேயே
பழிச்சொல்
இலவச இணைப்பாய்.
உன் வாழ்வுதனில்
வசந்தமென்பது வெறும்
வார்த்தை … அவ்வளவே!
வனப்பு எண்ணெய்
தேக விளக்கில் உள்ளவரை
எரியும் சுடர் தேடி உன்னை
மொய்க்கும் சில்வண்டுகள்
சுடரில் வீழும்
வண்டுகள் வாழ
சுடர் அணையும் முரண்
உன்னுலகில் மட்டும் சாத்தியம்
நீ உண்ண- நாடுவோர்க்கு
உணவாய் தருகிறாய் நின்னையே
அணைவதற்கென்றே ஏற்றப்படும்
அதிசய சுடர் நீ !
இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (12-09-12)
மின்னிதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment