இரவல் இரவுகள்
Tuesday, March 8, 2011
Posted by வருணன் at 6:38 AMதினம் தினம்
போராட முடியவில்லை
எம் இரவுகளோடு
பற்கள் முளைத்த
கோரப் பசி காமுகர்
கையில் சித்ரவதைகள்
அன்றாடம்.
நிம்மதியாய் மூச்சு விட்டு
ஆயிற்று நாட்கள் பல.
மீளும் வழியும் தெரியவில்லை
இப்புதைகுழியினின்று.
சீவி சிங்காரிக்கப்பட்டு
காட்சிப் பொருளாய் நிற்கிறேன்,
கடந்து செல்லும் பார்வைகள்
என்னைப் பலவாறாய்
கழுவிச் செல்ல...
மோகப் பார்வைகள் சில;
அருவருத்து நகரும்
குடும்பப் பெண்டிரின்
வசவுகளுடன் சேர்த்தே
இன்னும் சில...
மிருகங்களுக்காய்
காத்துக் கிடக்கும்
இரை நான்.
நித்தமும் தேடுகிறேன்
ஏதோ ஓர் இமையோரம்
கசிந்து வரும்
இரக்கப் பார்வையை...
தொடர்கிறது தேடல்...
முடியவில்லை என்னால் !
யாராகிலும் கைகொடுங்கள்
இந்நரகத்தினின்று மீள
ஆவலாயுள்ளது.
அது சங்கடமாயிருப்பின்
உங்கள் இரவுகளையாகிலும்
இரவல் கொடுங்கள்
இம்சைகளினின்று தற்காலிக
விடுதலையாகினும் கிட்டட்டும்
குறைந்தபட்சம்...
மகளிர் தினத்தில் நாம் நம் தோழியருடன், சகோதரிகளுடன் வாழ்த்து பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் விளிம்பு நிலையில் உழலும் இது போன்ற கணக்கற்ற மகளிரை நாம் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே, ஒரு உடலை விற்கும் பெண்ணின் கண்ணீர் துளிகள் தங்களின் கவனம் கோரி நிற்கின்றது சில வரிகளாய் இங்கு...இந்த சிறப்பான நாளில் !
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
nice poem..
மனசை நெருடுகிற வரிகள்.அசிங்கப்படுத்துவார்களே தவிர ஆதங்கப்பட்டுக் கை கொடுப்பவர்கள் மிகச் சிலரே !
நன்றி ரியாஸ்.
நன்றி ஹேமா... நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள அதே ஆதங்கத்தில் தான் இக்கவிதையை நான் எழுத நேர்ந்தது...
இரவுகளை இரவல் கேட்கும் சிலுவையில் அறையப்பட்ட அந்த பெண்களின் வலி ஆணியாய் இறங்கியது.
நன்றி சிவா... இன்னும் நிறைய ஆணிகள் நம் மனதில் இறங்கி நாம் இது போல விளிம்பு நிலை மனிதருக்கு உதவ வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருத்தல் வேண்டும்...
பற்கள் முளைத்த
கோரப் பசி காமுகர்
கையில் சித்ரவதைகள்
அன்றாடம்.//
இவ் இடத்தில் வார்த்தைப் பிரிப்புக் இருந்திருந்தால் பொருள் நன்கு புலப்படும்.
கவிதையில் வாழ்வினைத் தொலைத்து விட்டு வாழ்வுக்காக ஏங்கும் மகளிரைப் பற்றிப் பாடியுள்ளீர்கள். மனதைக் கனக்கச் செய்து, ஒரு கணம் நெஞ்சை உருகச் செய்யும் கவி வரிகள். வலைப் பதிவில் இம் மாதிரியான சமூக மாற்றம் வேண்டி நான் படித்த முதல் கவிதை இதுவே!
மிருகங்களுக்காய்
காத்துக் கிடக்கும்
இரை நான்.//
இந்த உவமான அணி தான் கவிதையின் உயர்விற்குக் காரணம். இப்போது உங்கள் கவிதைகள் ஆரம்ப காலத்திலிருந்து வேறுபட்டனவாக தோற்றமளிக்கின்றன. இன்னும் நிறையக் கவிதைகளைப் புனைய வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
நன்றி நிரூபன். சமூக அவலங்களை அவதானித்து அதனை எதிர்த்து எழும் முதல் குரல் ஒரு கவிஞனுடையதாகவே இருக்கும். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள வரிகள் எழுதும் போதே என் மனதை அழுத்தியவை. இக்கவிதை நான் 4 வருடங்களுக்கு முன் எழுதியது. இப்போது மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் போது, நந்தலாலா திரைப்படத்தில் அப்பெண் தனது தடம் பிறழ்ந்த வாழ்வு பற்றி உடனிருப்போரிடம், ஒரு மழை நாளில் பகிரும் காட்சி ஏனோ மனதில் நிழலாடுகிறது. நான் மனம் நொந்து விம்மியழுத காட்சிகளுள் இதுவு ஒன்று...
மற்றபடி தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள இடத்தில் வார்த்தைப் பிரிப்பு குறித்து சரிவர விளங்கவில்லை... சற்று விளக்கினால் நலம்...
நிரூபன் said...
பற்கள் முளைத்த
கோரப் பசி காமுகர்
கையில் சித்ரவதைகள்
அன்றாடம்.//
நண்பா, இவ் இடத்தில் கோரப் பசிக்குப் பற்கள் முளைத்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பற்கள் இருந்தால் தானே பசியெடுக்கும் போது சாப்பிட முடியும்.
இங்கே ’பற்கள் முளைத்த கோரப்பசி’ என பசியை ஒரு படி உயர்த்தி, அழுத்தமாக கூறும் நீங்கள் அடுத்த வரியில் கவிதையின் பொருளை கொஞ்சம் தாழ்த்துகிறீர்கள் போல இருக்கிறது.
காரணம்
‘’கோரப் பசி காமுகர்
கையில் சித்ரவதைகள்
அன்றாடம்//
பற்கள் முளைத்த என்ற வசனத்துடன் கோரப் பசியைப் பொருத்திப் படிக்கும் போது நிறையப் பொருள் தரும்.
ஆனால்
பற்கள் முளைத்த
கோரப் பசி காமுகர்
கையில் சித்ரவதைகள்
அன்றாடம்’’
என நீங்கள் குறிப்பிடுவது கோரப்பசியுள்ள காமுகரையா? அல்லது அக் காமுகர் கையில் சித்திரவதைகளா எனும் பொருளில் தொக்கி நிற்கிறது. ஆகவே அவ் இடத்தில்
‘பற்கள் முளைத்த
கோரப் பசி,
காமுகர் கையில் சித்ரவதைகள்
அன்றாடம்!
எனப் போட்டிருந்தால்- காமுகர் கையில் அகப்படும் பெண்களுக்குச் சித்திரவதைகள் ஏராளம் எனும் வகையில் நிறைவான பொருளைத் தரும்.
Post a Comment