முடிவும் பிறகும்

Wednesday, February 23, 2011கட்டுப்பாடுகளின் மலைமுகட்டின் விளிம்பில்
செய்வதறியாது திகைப்பிலென் பெருங்காமம்
கைகள் முறிபட்ட கடிகாரமொன்று
காலம் நிறுத்தி அருகே ஓய்ந்திருக்கிறது.
காலில் கட்டப்பட்ட சல்லாபப் பாறை
நற்கற்பிதங்கள் மோதி எதிரொலித்து
அதிரச் செய்கிறது மலையை
நம்பிக்கையின் கடைசித் துளி
சொட்டுகிறது நாவில்
நாசிகளில் தீய்ந்த நெடியேற்றி
அபிப்பிராயக் கயிறு
மூர்க்கமாய் பின்னிழுக்கிறது
மனக்களிரின் திமிறும் கால்களை
காமம் வடிந்த கணப்பொழுதில்
சருகான உடம்பு உதிர்கிறது முகட்டினின்று
கீழிருக்கும் பச்சை அடர்வனத்தில் முடியும்
அந்தரச் சாலை வழியே
வானெழுகிறது முகிலோடு காதல் கொண்ட
வெள்ளொளி ஒன்று.இக்கவிதை பிப்’2011 "உயிர் எழுத்து" இலக்கிய இதழில்
வெளிவந்துள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

1 comment:

Post a Comment