உறைந்த கணங்கள்

Monday, January 10, 2011



கருப்பு வெள்ளைகளில்
உறைந்து கிடக்கும் மரித்த
கணங்கள் பார்ப்பாரின்றி
உறங்குகின்றன அலமாரிகளிலும்
தூசுகளுண்ணும் பரண்களிலும்.

கணிணிகளின் முகத்தில்
உறைந்த நினைவுகளைச்
சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன
வண்ணம் துறந்த அந்நினைவுகள்.

பாட பாரங்கள் அழுத்தாத
விடுமுறை காலங்களில்
குழந்தைகள் விடாது நச்சரிக்கின்றன
விளையாட்டு காட்டும் அக்காள்களிடமும்
கதை சொல்லும் பாட்டிகளிடமும்
அப்பழைய கணங்களை காட்டுமாறு

காலாவதியானதாய் தம்மைக் கருதிய
அவை மீண்டும் உயிர்க்கின்றன
அம்மழலைகளின் பார்வைகளுரசும்,
தளிர்கரங்கள் வருடி சிலாகித்திடும்
ஒவ்வொரு முறையும்.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (09.01.11) இணைய தளத்திற்கு நன்றி.

6 comments:

Anonymous said...

நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை வருடங்கள் கழித்து பார்க்கும் பொது ஏற்படும் உணர்வு ஒரு அலாதியானது. அந்த உணர்வை அழகாக படைப்பில் கொண்டு வந்திடீங்க வருணன் :)

வருணன் said...

நன்றி பாலா.சில பழைய நினைவுகள் என்றுமே சுகம் தான், நினைக்க நினைக்க...

ஆர்வா said...

எத்தனையோவாட்டி நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப்பார்த்து என் கண்கள் தானாய் கண்ணீர் சிந்தி இருக்கிறது.. இதோ இப்போது உங்களால் மறுமுறை...

வருணன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கவிதை காதலன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை.. பழைய வாழ்வு மீண்டும் கிடைக்குமா என்று எம் வாழ்வின் கடசிவரை ஏக்கம் இருக்கும்..

வருணன் said...

நன்றி தோழி... கடந்து போன வாழ்க்கைக்காய் ஏங்காதவரும் உளரோ?

Post a Comment