விடுபடும் அத்தருணங்களில்

Sunday, October 10, 2010



வெறும் வார்த்தையாய் மட்டுமறிந்த
பிரிவை வலியாய் உணர்ந்ததுன்னை
வழியனுப்பும் போதுதான்.
புகைவண்டியின் சன்னலோர இருக்கையில்
அமர்ந்தபடி உன் கயல்விழிகளால்
என்னிடம் கதைப்பாய்
நானோ சமைந்த சிலையாய்
உன்னருகே வெளியில் நிற்பேன்,
உன் பிஞ்சு விரல்கள் பற்றியபடி...

புறப்படும் தருணத்தில் மெல்ல மெல்ல
விடுபடும் பற்றியிருந்த நம் விரல்கள்.
உன் உள்ளங்கைகளின் வெம்மையை
என்னிடம் விடுத்து
என் விரல்கள் வழியே உயிரை மட்டும்
உருவிச் செல்வாய் உன்னோடு.

பார்வையினின்று என்னுருவம் மறையும் வரை
எட்டி எட்டிப் பார்த்தபடி இருக்குமுன்
வாடிய முகத்தின் பிம்பம்
என் விழிநீர் வழி காண்கையில்
நீச்சலடித்துக் கொண்டிருக்கும்.

சக பயணிகளின் இருப்பால் உதடு கடித்து
அழுகையைக் கரைப்பாய் உனக்குள்ளேயே...
நானோ நடைபாதை இருளில்
என் கண்ணீரைத் தொலைப்பேன்.

பிரிதொரு நாளில் உன் வரவை
எதிர்நோக்கிய என் காத்திருக்கும் தருணம்
மனக்கடலில் தரை தட்டும்...
அது மலர்த்திடும் புன்னகையை
இதழ்களில் ஒட்டி வீடடைவேன்.


தருணங்கள்: சில கணங்களும் கடந்து போன தருணங்களும் நமது நினைவு அறைகளில் என்றென்றும் வாசம் செய்பவை.
அவற்றை வார்த்தைப் பெட்டிகளில் பத்திரப் படுத்த வேண்டுமென்ற ஒரு பேராவலின் விளைவே இவ்வரிகள். இதனை கவிதை என்ற வகைப்பாட்டியலுக்குள் கொண்டு வர முடியாது. வசன நடையில் உள்ளதால் வசன கவிதை என்று வகைப் படுத்தலாம். ஆனால் சில நுட்பமான உணர்வுகள் ததும்பும் ஒரு தருணத்தை இது காட்சிப் படுத்துவதால் இதனை “காட்சிக் கவிதை” என்றழைக்க விரும்புகிறேன்.

4 comments:

R. Gopi said...

சூப்பர் பாஸ்

Anonymous said...

பிரிவின் மொழியும்.. காத்திருப்பின் தருணங்களும் ரணம் தான்...
வார்த்தை கோர்ப்பில் வலி ஊடுருவுகிறது வருணன்.

//என் விரல்கள் வழியே உயிரை மட்டும்
உருவிச் செல்வாய் உன்னோடு.//

வலியின் உச்சம் :(
நல்லாயிருக்கு நண்பா!

Unknown said...

காட்சி கவிதை, எல்லோரையும் ஏதோ ஒரு சாயலில் பயணப்படவைக்கிறது வரிகள்.. இவ்வரிகளை படிக்கையில் எனக்கு வேலைக்காலங்களில் ஊரனுப்ப ரயில் நிலையம் வரும் என் தந்தையின் முகம் கண்ணில் வந்து போகிறது.. இதுவும் காதல் தானே... வார்த்தைகளை பயணப்பட வைத்து பயணக் கால அனுபவங்களை கவிதையாக்கிவிட்டது கூடுதல் அழகு.. வாழ்த்துகள்

வருணன் said...

நன்றி ரேவா. அன்பின் வேறு பெயர்தான் காதல். நிச்சயம் தந்தையையுடனானது காதலே. புரிதல் இன்றி சிலர் தவறென நினைப்பர். கவலை இல்லை, இக்கவிதை என் வாழ்வில் ஒரு நாள். :)

Post a Comment