வெயில்

Thursday, October 28, 2010



நேற்றைக்கு முளை விட்ட
சிறுவிதையின் இருப்பு
சுவடின்றி பிடுங்கப்படுகிறது
இன்றொரு சூறைக்காற்றால்
கருவறையில் சுமந்திடும் கணக்கற்ற
பிள்ளைகளோடு முனங்கிக் கொண்டேயிருக்கிறது
பெருங்கடலொன்று அலை அலையாய்
மேகம் இழுத்து தாகம் தணித்திட
மேலெழும்பும் கோடையின் வெம்மை
தோற்று திரும்புகிறது
வறண்ட நிலத்தின் சுருக்கங்களை
முத்தமிட மீண்டுமொரு முறை
புழுக்கம் நிறைந்த அனாதை ராவொன்றில்
மனதின் ரணங்களை நக்கியபடி அலைகின்றன
நாலைந்து நினைவு நாய்கள்
உறங்காத என் தலையணையைச் சுற்றியபடி.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10) இணைய தளத்திற்கு நன்றி.

தந்தையாதல்

Tuesday, October 26, 2010




அகால வேளைகளில்
தொந்தி சரிய அயர்ந்துறங்கும்
துணைவியினுள்ளே துள்ளல்
காணும் கணங்களில்
அவளை துயிலெழுப்பாமல்
வருடும் நடுங்கும் விரல்கள்.

தாயாகும் பூரிப்பினிடையே
பயங்கள் மிதக்கும்
மிரட்சிக் கண்களுருளும்
முகத்தை ஆதரவாய்
வருடும் கரங்கள்

வேறெப்போதிலும் தராத
பயத்தின் வர்ணங்களை
வரிந்து கொள்ளும்
மருத்துவமனையின் வெண்மை

குறுக்கும் நெடுக்குமாய்
ஆஸ்பத்திரி செவிலிகள்
பயணிப்பர் தடதடக்குமென்
இதயத் தண்டவாளத்தின் மேலே
பதிலேதும் சொல்லாமல்

எப்போதுமில்லாமல்
மனம் அரற்றியபடி
ஏங்கிக் கிடக்கும்
ஒற்றை அலறலுக்கும்
அதைத் தொடரும் அழுகுரலுக்கும்.

தவிப்புகளுக்கு மத்தியில்
தந்தையாதலும் மறுபிறப்பே
மங்கையின்
தலைப் பிரசவத்தைப் போல.


இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(24.10.10)இணைய இதழுக்கு நன்றி

மௌன ராகம் - I

Sunday, October 24, 2010



கடற்கரையில் அமர்ந்திருக்கும்
என்னருகேயிருந்து
முடிவின்றி நீள்கின்றதுன்
பாதச் சுவடுகள்,
உன்னிலிருந்து கிளை பரப்பிய
ஒவ்வொரு ஊடலின் இறுதியிலும்
அதன் விதைகள் குறித்து
என்னுள் எழும் கேள்விகளைப் போல.
உலகப் பெருங்கவியாயினும்
உன்னைப் பற்றியெனின்
ஒரு ஆச்சரியக் குறியைத் தவிர
வேறேதும் எழுதப் போவதில்லை;
அதுவே என்னைக் குறித்தென்றால்
அந்த குறியின் நிமிர்ந்த தலை வளைத்து
கொக்கியாக்கி எனைக் கண்டு நகைப்பான்
என்றேன் – இதில்
எது உன்னை கோபத்திலாழ்த்தியது ?

மனப்பெட்டி

Thursday, October 21, 2010



பழைய பொருட்களால் சூல் கொண்ட
மரப்பெட்டி போல்
நினைவுகள் தேக்கிக் கிடக்கிறதென்
மனப்பெட்டி.

எதிர்வீட்டு பாலுவின் பச்சைப் பம்பரம்
முன்னா வீட்டில் பார்த்த பொம்மைப் படம்
பூப்போட்ட சிவப்புச் சட்டை
தாத்தா கதைகளில் வரும் ஈனாப் பூச்சிகள்
நம்மைத் துரத்தும்முன் ஓடிவிடலாம்
என் வயது பத்து.

பயம் படியென்ன விலை
வாழ்க்கையே திருவிழாவாய்...
அப்பக்கம் பாராதிருங்கள்
என் இச்சைகளின் எச்சங்களங்கே
மண்டிக்கிடக்கின்றன.
வயது பதினெட்டு.

கரைந்து போன கனவுலகம்
திணறடிக்கும்
யதார்த்த உலகின் இயலாமைகள்
அதோ கொடிகளில் காயுமென்
நம்பிக்கைச் சட்டைகள்...
முப்பத்தியைந்து.

சற்றே பொறுங்கள்
கதைத்ததில் மறந்தே போனேன்.
எனக்கு இன்சுலின் குத்த வரும்
செவிலியின் வருகையை...
அறுபது.

கனவு கலைப்பு

Monday, October 18, 2010



கருக்கலைப்புகள் குறித்து
கவலை கொள்ளும் நெஞ்சங்கள்
அவதானிப்பதில்லை
அதனை விஞ்சும்
கனவு கலைப்புகள் குறித்து

மருத்துவனாக மனக்கோட்டை கட்டியவன்
மாதக்கணக்கு எழுதுகிறான்.
கவிஞனாய் கனவில் சஞ்சரித்தவன்
கடைகளில் வேலை செய்கிறான்.
இராணுவ வீரனாக ஆசைப்பட்டவன்
நாளை அடியாளாய் திரியலாம்...
யார் கண்டது?!

விதி செய்யும் விளையாட்டில்
திசையறியாது எகிறும் பந்துகளாய்
எல்லோர் வாழ்க்கையும்.

நான், நீ, காமம்

Friday, October 15, 2010



உன்னையும் என்னையும்
இணைக்கும் பசை

நீட்சியுரும் யாமத்திலும்
தொடர்ந்திடும் ஒரே விளையாட்டு

ஒரே உடல்தான் எனக்கு
அது போலவே உனக்கும்...

ஆயினும் ஒவ்வொரு முறையும்
புதிய கதவுகளை திறந்தபடியே

உன்னையும் என்னையும்
மெத்தையில் சமைத்து
நமக்கு நாமே பரிமாறி
உண்டு களிக்கிறோம்.

விருந்தும் நாமே
விருந்தினரும் நாமே...
அதிசயம் தான் !

உன்னுடல் வழியே
உன்னுயிர் சேரும் நான்
என்னுடல் வழியே
என் சுயம் சேரும் நீ

காமம்
நம்மைப் பிணைக்கும்
மாயச் சங்கிலி.

தவறிய முகவரி

Wednesday, October 13, 2010



முப்பதடி உயரத்தினின்று
குதித்து காலொடிந்து
நான் கிடக்க
படம் பார்த்து வெளிவரும்
ரசிகன் குதூகலிக்கிறான்
மைக் ஏந்திய
தொலைக்காட்சி யுவதியிடம்
“தலவர் ஸ்டண்ட்ல பின்னிட்டார்!”

விடுபடும் அத்தருணங்களில்

Sunday, October 10, 2010



வெறும் வார்த்தையாய் மட்டுமறிந்த
பிரிவை வலியாய் உணர்ந்ததுன்னை
வழியனுப்பும் போதுதான்.
புகைவண்டியின் சன்னலோர இருக்கையில்
அமர்ந்தபடி உன் கயல்விழிகளால்
என்னிடம் கதைப்பாய்
நானோ சமைந்த சிலையாய்
உன்னருகே வெளியில் நிற்பேன்,
உன் பிஞ்சு விரல்கள் பற்றியபடி...

புறப்படும் தருணத்தில் மெல்ல மெல்ல
விடுபடும் பற்றியிருந்த நம் விரல்கள்.
உன் உள்ளங்கைகளின் வெம்மையை
என்னிடம் விடுத்து
என் விரல்கள் வழியே உயிரை மட்டும்
உருவிச் செல்வாய் உன்னோடு.

பார்வையினின்று என்னுருவம் மறையும் வரை
எட்டி எட்டிப் பார்த்தபடி இருக்குமுன்
வாடிய முகத்தின் பிம்பம்
என் விழிநீர் வழி காண்கையில்
நீச்சலடித்துக் கொண்டிருக்கும்.

சக பயணிகளின் இருப்பால் உதடு கடித்து
அழுகையைக் கரைப்பாய் உனக்குள்ளேயே...
நானோ நடைபாதை இருளில்
என் கண்ணீரைத் தொலைப்பேன்.

பிரிதொரு நாளில் உன் வரவை
எதிர்நோக்கிய என் காத்திருக்கும் தருணம்
மனக்கடலில் தரை தட்டும்...
அது மலர்த்திடும் புன்னகையை
இதழ்களில் ஒட்டி வீடடைவேன்.


தருணங்கள்: சில கணங்களும் கடந்து போன தருணங்களும் நமது நினைவு அறைகளில் என்றென்றும் வாசம் செய்பவை.
அவற்றை வார்த்தைப் பெட்டிகளில் பத்திரப் படுத்த வேண்டுமென்ற ஒரு பேராவலின் விளைவே இவ்வரிகள். இதனை கவிதை என்ற வகைப்பாட்டியலுக்குள் கொண்டு வர முடியாது. வசன நடையில் உள்ளதால் வசன கவிதை என்று வகைப் படுத்தலாம். ஆனால் சில நுட்பமான உணர்வுகள் ததும்பும் ஒரு தருணத்தை இது காட்சிப் படுத்துவதால் இதனை “காட்சிக் கவிதை” என்றழைக்க விரும்புகிறேன்.

பசி

Friday, October 8, 2010



1


இலட்சிய வேட்கையையும்
சாதிக்கும் தாகத்தையும்
பல அவயங்களில்
விஞ்சி நிற்கிறது
பாழாய் போன
பசி !




2


இந்த ஏழையின் மீது இரங்கி
இறை கேட்டான்,
’என்ன வேண்டுமானலும்
கேள் தருகிறேன்’, என்று.
ஒன்றே கேட்டேன்
‘பசி வேண்டா‘.
சிலகண மௌனத்துக்குப் பின்
மன்னித்துவிடு என்பது போல்
பார்த்து
ஈரத்துணி தந்தான் இறைவன்.

3


நான் இயங்க வேண்டிய
தளங்கள் வேறு
பயணிக்க வேண்டிய திசைகள் வேறு

இதயெல்லாம் விடுத்து
தெரிந்தே செல்கிறேன்
எனக்கு ஒவ்வாதவொரு திசையில்

இயங்கிக் கொண்டிருக்கிறேன்
முற்றிலும் மாறுபட்டதொரு தளத்தில்
ஒன்றே ஒன்றிற்காய்...

வயிறு .

என் கனவுகள் எனக்கு நிஜம்

Tuesday, October 5, 2010



கோடி கோடி இரவுகள் கழிகின்றன
என் ஒற்றை இரவில்
உலக மாந்தரனைவரின் கனவுகளனைத்தையும்
தனியொருவனாய் காண்கிறேன்.
பீரங்கி வாயினுள் மலர்க் கொத்து
தெரித்து விழும் துப்பாக்கி ரவைகள் பூக்களாய்
சித்தனைப் போல் பாடல்கள்
பாடிக் களிக்கின்றேன்- இனி
சிந்தும் செந்துளி இயற்கைக்கு
அபிஷேகமாய்
புரட்சி விதை விழுந்து
விருட்சமாய் கிளர்ந்தெழும்
வெள்ளைப் பூக்களை தன்னகத்தே
பூத்தபடி...
வெண்புறாக்களதில் வாசம் செய்யும்.
நிசத்தின் பிம்பம் பிரதிபலிக்காத
கண்ணாடி மதில்கள் என் கனவுகள்
மாயை இவையென நீ கூறுவது
கேட்கத்தான் செய்கிறது.
போகட்டும் விடு, என்னை இப்படியே...
என் கனவுகள் எனக்கு நிஜம்.

மூலம்

Friday, October 1, 2010



எனது தன்னம்பிக்கை
உன் நெற்றிக்குக் கீழ்
ஆரம்பித்து
உன் பாதத்தில்
முடிவடைகிறது.