குறிப்பறிந்து பொருளுணர்க

Friday, March 22, 2013









பொங்கி நுரைத்தபடி
பெருங்கடல் அலை சீற்றம்
அடையத் துடிக்கிறது கரையை

எல்லைகள் கடந்து வேலிகள் உடைத்து
புலம் பெயர்கின்றன
பெயரறியா பறவைகள்

முடிந்து விட்டதாய் மறந்து போன
நிலம் முட்டி முளைக்கின்றதொரு
சிறு தளிர்

உடைமைகள் சிதைத்து
உடையவர் உயிர் குடித்தடங்கும்
புயலுக்குப் பின் வருகிறதோர் அமைதி

இயற்கை தரும்
வாழ்க்கை பாடங்கள்
குறிப்பறிந்து பொருளுணர்க.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(22-03-13)
இணைய இதழுக்கு நன்றி.

கனவுதிர்காலம்

Wednesday, March 20, 2013


ஆழ்நித்திரையிலிருந்த
கனவுகளனைத்தையும் துயிலெழுப்பி
வரிசைக்கிரமமாய் அடுக்கியாயிற்று
குறுங்கனவுகள் முன்வரிசையில்
நீள்கனவுகள் பின்வரிசையில்
இடைச் செருகலாய் பகற் கனாக்கள் சில
நாளுக்கு ஒன்றென
உதிரும் கனவு மரத்தின் இலைகள்
அதிவிரைவில் காணவிருக்கும்
இலைகளற்ற கிளைகள் குறித்த
வெறுங்கனவோடு சேர்ந்து
நகர்கிறது இந்த இரவும்.

குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(18-03-13)
மின்னிதழுக்கு நன்றி. 


இன்றைக்கான குடிமக்கள்

Wednesday, March 13, 2013

எதிர்காலத்தைப் பொதி சுமக்கும்
பள்ளிக் குழந்தைகள்

அடிமை வாழ்வை அங்கலாய்க்கும்
இறந்த காலத்தில்
பெண்டிரில் பாதி
சமத்துவக் கனாக்களோடு மீதி
      
நாளைக்கான அதிகார வாட்களை
கூர்தீட்டியபடி ஆடவரில் பாதி
கையாலாகாமல் தம் குரல்வளைகளை
இசைவாக காட்டியபடி பயத்தில் மீதி

இருளிடம் தோற்று பகல் தன்னைக்
கையளித்த அந்தி வரையிலும்
தேடியாயிற்று

இன்றைக்கான குடிமக்கள் எவருமில்லை
நாடெங்கும் பிணங்கள் திரிய
இன்றுகள் எல்லாம் சாகின்றன
ஒவ்வொரு இரவும்
மீட்பாரின்றி.

குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட அரும்பு (மார்ச்’13)
மாத இதழுக்கு நன்றி. 



என்னைப் போலவே

Saturday, March 9, 2013



விசித்திரமானதென் வீடு
வாசல்களற்றது
மேற்கூரையில் சன்னல்கள்

பகலில் இருளும் இரவில் ஒளிரும்
அதன் அறைகள்
தமக்குள்ளே உரையாடும்
மௌனத்தில்

வழிந்து கொண்டேயிருக்கும்
இசையில்லாத பாடலொன்றும்
வார்த்தைகளில்லா கவிதையொன்றும்

முன்னோக்கி மட்டுமே
நகர வேண்டிய நிர்பந்தம் துறந்த
நாட்காட்டி

வீட்டிற்கு வெளியே
இருந்து கொண்டேயிருக்கிறது
எல்லையில்லா வேலியொன்று
இன்னமும்

விசித்திரமானதென் வீடு
என்னைப் போலவே
என் அகத்தைப் போலவே.


குறிப்பு : இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (08-03-13)
இணைய இதழுக்கு நன்றி.