ஆடைகளுக்கிடையினின்று வரும் அழைப்புகள்

Friday, June 15, 2012

உனைக் காணும் ஆவலில்
யாசித்த வார்த்தைகளின்
ஆவலைப் பூர்த்தி செய்ய
ஒரு சிறுமழை யிரவில்
மென்சாரல் பெய்யும் யன்னல்களுக்கு
மத்தியிலிருந்த அறைதனில் அமர்ந்தவைகளை
சேகரிக்கத் துவங்கினேன்.

மழையிரவின் பெருங்குளிரில்
விரைந்து நிறைந்தன
பெருங்கூட்டமாய் வார்த்தைகள்
காகிதப் பரப்பெங்கும்
நெருங்கியமர்ந்து குளிர்காய்ந்தபடி

வெள்ளைக் குளத்தில்
நீலக்கொக்குகளாய் தவமிருக்கின்றன
அவ்வார்த்தைகள் கால்களுமின்றி

எழுதியவற்றை அழைத்து வந்து
அறிமுகம் செய்விக்க வலுவின்றி
ஒளித்து வைத்திருக்கிறேன்
ஆடைகளுக்கிடையே அலமாரியில்

அன்றாடம் உடை மாற்ற கடை திறக்கையில்
அக்காகிதச் சமவெளியினின்று
பெருங்குரலெடுத்துக் கத்துகின்றன
அவ்வார்த்தைகள் முக்திக்காய்.


இக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு( 15-06-12) நன்றி.
http://www.vallamai.com/literature/poems/21976/

No comments:

Post a Comment