சே VIII- இறுதி கணங்கள்

Friday, May 20, 2011

சே எனும் ஆளுமையை விட்டு வைத்தால் எங்கே இதுவரை சுதந்திர உணர்வற்ற அனைவரின் உள்ளத்திலும் அவர் புரட்சித் தீயை மூட்டி விடுவாரோ என்ற அச்சம் அமெரிக்காவிற்கு மிக அதிகமாகவே இருந்தது. அப்புறம் எல்லா நாடுகளும் தன்னுணர்வு பெற்றுவிட்டால், பிறகு யாரைச் சுரண்டி அமெரிக்கா பிழைப்பதாம்! அதனால் சேயின் வாழ்க்கையின் இறுதிப் பக்கங்களை எழுதிட கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருந்தது. சிங்கம் இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம் தானே. ஏற்கனவே பொலிவியக் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த சேவை ஆஸ்மா வாட்டியெடுத்து அவரை உடலளவில் பலவீனப்படுத்தியிருந்தது. இது எதிரிகளுக்கு சாதகமானது.

சேவை உயிருடன் பிடிக்கவே சி.ஐ.ஏ. முயன்றது. ஆனால் பொலிவிய ராணுவம் அதற்கு இடமளிக்கவில்லை என அமெரிக்கா சமாளித்தாலும், அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். சே பிடிபட்ட போது காட்டுக்குள் அவரோடு இருந்தவர்கள் வெகு சிலரே. அவரை நீண்ட நாள் தாடியுடன், மெலிந்த தேகத்துடன் கண்ட வீரர்கள் சற்றே ஆச்சரியமடைந்தனர். அசைக்க முடியா வல்லரசாக விளங்கிய அமெரிக்காவிற்கே சவால் விட்ட மாவீரன் இப்படி இருந்தால் ஆச்சரியம் தானே வரும். சொல்லப் போனால் அவர்களுக்கு அவரை அடையாளமே தெரியவில்லை. சேவே தன்னை துப்பாக்கி முனையில் அறிமுகப்படித்திட வேண்டிய அவலம்.


சேவைப் பிடிக்க 1800 வீரர்கள் கொண்ட படை காட்டிற்குள் சென்றது. தனது துப்பாக்கியும் உபயோகமற்றுப் போன தருணத்தில், சே கைகளை உயர்த்தி “ நான் தான் சே! என்னை நீங்கள் கொல்வதை விட உயிருடன் பிடிப்பது உங்களுக்கு லாபகரமானது” என கூறியதாக சொல்லப் படுகிறது. அக்டோபர் 7 ஆம் நாள் சே பிடிபட்டார். அன்றே கைவிலங்கிடப்பட்ட நிலையில் அவர் அருகிலிருந்த ‘லா ஹிகுரா’ எனும் கிராமத்திலிருந்த ஒரு பள்ளிக் கூடத்தில் அடைக்கப்பட்டார். பொலிவிய அதிகாரிகள் யாருடனும் பேசிட சே மறுத்து விட்டார். ராணுவ வீரர்களிடம் மட்டும் பேசியதாக அவர்களே நினைவு கூர்கின்றனர்.

அவர்களிடம் புகைப்பதற்கு அவர் புகையிலை கேட்க அவர்களும் பரிதாபப் பட்டு கொடுத்தனர். ஒன்றரை நாட்கள் அவர் அங்கிருந்தார். அப்போது அவர் அந்த பள்ளியின் ஆசிரியரை சந்திக்க விரும்பினார். ஜூலியா கார்டஸ் எனும் 22 வயது ஆசிரியை அவரை சந்தித்தார். சேவின் கண்கள் மிகவும் தீர்க்கமாக இருந்ததாகவும், தன்னால் அவரது கண்களை நேராக எதிர் கொள்ள முடியவில்லை எனவும் அவர் பின்னால் தெரிவித்தார். சே ஜூலியாவிடம் பள்ளிக் கட்டத்தின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இந்நிலையில் எப்படி குழந்தைகள் அப்படி கல்வி கற்கிறார்கள் என ஆதங்கப்பட்டார். தான் சாகப் போவது சர்வ நிச்சயமாய் ஒரு மனிதனுக்கு தெரிந்த பின்னரும் எப்படி அவனால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து, சமூகத்தின் பால் அக்கறைப் பட முடிகிறது என எண்ணிய வேளையில் அடக்க முடியாமல் குமுறி அழுதார் ஜூலியா.




சேவை என்ன செய்வது என இன்னும் முடிவாகியிருக்கவில்லை. இறுதியில் அக்டோபர் 9 காலையில் பொலிவிய அதிபர் சேவைக் கொல்ல ஆணை பிறப்பித்தார். அதனை நிறைவேற்றிடும் பணி, ’ஃபெலிஸ் ரொட்ரிகுஸ்’-க்கு அளிக்கப் பட்டது. அவர் சேவின் இறுதி கணங்களை பற்றி பின்வருமாறு சொல்கிறார்.

“ சே காலிற்கு ஷூ கூட அணிந்திருக்கவில்லை. லெதரை காலைச் சுற்றி கட்டிக் கொண்டிருந்தார்.(நம்மூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவோர் காலில் கட்டி இருப்பார்களே, அது போல) ஒரு சக மனிதனாக அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. சில சங்கேத வார்த்தைகள் எங்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. 500 என்பது சே, 600 என்பது கொல் என்றும், 700 என்பது உயிருடன் பிடி என்பதுமாக இருந்தது. அக்டோபர் 9 காலை, அந்த கிராமத்திலிருந்த ஒரே தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. வந்த செய்தி 500-600.

’மாரியோ டெரன்’ எனும் ராணுவ வீரனுக்கு சேவிற்கு மரண தண்டனை நிறைவெற்றும் பணி வழங்கப்பட்டது. அவனது நண்பர்கள் மூவரும் சேவின் கொரில்லப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தனர். ஆகவே தனிபட்ட வகையில் இது அவனுக்கு ஒரு பழி தீர்க்கும் வாய்ப்பு. கதவைத் திறந்து அவன் வந்தவுடனே சேவிற்கு புரிந்து விட்டது. அவன் சேவிடம்,” நீ உனது அமரத்துவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிராயா?”, எனக் கேட்க அதற்கு சே,” இல்லை! நான் புரட்சியின் அமரத்துவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்’, என தாமதமின்றி பதிலளித்தார்.





5 முறை கால்களிலும், வலது தோளிலும் கையிலும் தலா ஒரு முறையும், மார்பில் ஒரு முறையும், இறுதியாக தொண்டையிலுமாக சே ஒன்பது முறை சுடப்பட்டார். அதற்கு காரணமிருந்தது. அவர் பொலிவிய படையினருடன் நடந்த சண்டையின் போது சுட்டுக் கொல்லப் பட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தவே அப்படி செய்யப்பட்டது. சே சுடப்படுவதற்கு முன் சுடும் வீரனை பார்த்து சொன்ன வார்த்தைகள் “ கோழையே ! சுடு, நீ சுடப்போவது ஒரு மனிதனைத்தான் “.







அக்டோபர் 10, சே கொல்லப் பட்ட மறுநாள் அவரது உடல் உலகின் பார்வைக்கு ’வாலே கிரானடா’ நகரில் ஒரு மருத்துவமனையில் வைக்கப் பட்டது. ’பிரடி ஆல்பர்டோ’ எடுத்த அப்புகைப்படம் பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்றது.





படங்கள்:01. சாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பெலிக்ஸுடன் சே.
02. கொல்லப்பட்ட சிறிது நேரத்தில்
03. ஆல்பர்டோவின் புகழ் பெற்ற புகைப்படம்
04. சேவின் முகம்- மரணத்திற்கு பின்

No comments:

Post a Comment