சே VI- அரசியல் வாழ்க்கை

Saturday, May 14, 2011

பிடலின் படைகளோடு சேர்ந்து சே மாபெரும் யுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும் அதனை ருசிக்க முடியாமல் அவரது ஆஸ்மா அவரை வாட்டியது. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சகாக்கள் கேட்டுக் கொண்டனர். பிடலும் சேவிற்கு ஓய்வு தேவை என வலியுறுத்தினார். முடிவில் டராரா நகரில் அவர் தங்க சம்மதித்தார்.





பெயருக்குத்தான் ஓய்வு. எர்னஸ்டோவால் சும்மா இருக்கவே முடியவில்லை. பொழுதை வெட்டியாகக் கழிப்பதாகவே அவருக்குப் பட்டது. அதனால் அவர் புதியதாக மலர்ந்துள்ள கியூப தேசத்தின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நலப்பணிகள், அவசியமாக கொணரப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் போன்றவற்றிற்கான திட்டங்களை வகுப்பதில் தனது காலத்தைச் செலவழித்தார். இக்கால கட்டத்தில் தான் சே தனது புகழ் பெற்ற புத்தகமான “கொரில்லப் போர்முறை” யை எழுதத் துவங்கினார்.

1958 பிப்ரவரியில் சேவுக்கு, போரில் அவரது அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு கியூப தேசத்துக் குடியுரிமை வழங்கப்பட்டது. தனது முதல் மனைவியிடம் சே தான் ஜூலை 26 இயக்கத்தின் ஒரு பெண் போராளியின் [அலைடா மார்ச்] மீது காதல் வயப்பட்டதை தெரிவித்தார். இருவரும் பரஸ்பர விருப்பத்துடன் பிரிந்தனர். ஜூன்2,1959ல், சே அலைடாவை மணந்தார்.

புதிய அரசுக்கு பிடிபட்ட படிஸ்டா படையினரை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். வழக்கம் போல போர் குற்றவாளிகளை எடுத்த மாத்திரத்தில் கொன்று விடாமல் அவர்களை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நடந்ததைப் போல சட்டத்தின் முன் நிறுத்தி பின்னர் முடிவெடுக்கலாம் என்ற கருத்தை மக்களுக்குப் புரிய வைத்து செயல் படுத்த ஆரம்பித்தது கியூப அரசின் நீதித்துறை. போர்க் கைதிகளின் மனுக்களைப் பரிசீலிக்கும் முக்கிய பொறுப்பு சேவிற்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய 55-164 பேர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டிருக்கலாம் என தெரிகிறது.
[ஆய்வாளர்கள் சற்று தங்களுக்குள் எண்ணிக்கை குறித்து வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருக்கின்றனர்.] அவருடன் இருந்தவர்கள், சே தன்னால் முடிந்த வரை அவர்களில் பலரை மன்னிக்கவே பெரு முயற்சி செய்தார் என நினைவு கூறுகின்றனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதனை நன்கு புரிந்து கொண்டனர் பிடலும், சேவும். நாட்டின் விவசாயிகளுக்கு நலன் பயக்கும் [நமது தெசத்தைப் போலவே கியூபாவும் ஒரு விவசாய நாடே. அதுவே உலகின் சர்க்கரைக் கிண்ணம்.] நில சீர்திருத்தங்களுக்கு அடுத்தபடியாக, அவர்கள் கவனித்தது கல்வித் துறையை. ஏனெனில் உயர்கல்விக்காக மாணவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. அந்நிர்பந்தத்திலிருந்து விடுபட ஒரு வழி உள்நாட்டில் உயர் கல்வித் துறையை மேம்படுத்துவது தான். 1959 க்கு முன்னர் 50-76% இருந்த கற்றவர் எண்ணிக்கை 1961 வாக்கில் 96% என உச்சம் தொட்டது.





இக்கால கட்டத்தில் தான் தான் வகித்து வந்த தொழிற் துறை அமைச்சர் பதவியோடு சேர்த்து அவருக்கு நிதித் துறையும் வழங்கப்பட்டது. அவர்- ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்ற- கியூப மத்திய வங்கிக்கு தலைவரானார். அத்தோடு நில்லாமல் அவர் உலகின் பிற நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் விதமாக, அரசு முறைப் பயணங்களை அனேக நாடுகளுக்கு மேற்கொண்டார். இப்பயணங்கள் அவரை உலகளாவிய அளவிற்கு அவரது ஆளுமையை எடுத்துச் சென்றது. உலக அளவில் சே முக்கியத்துவம் பெறத் துவங்கினார். 1964 டிசம்பர் மாதம் நியூயார்க்கில் நடை பெற்ற ஐக்கிய சபைகளின் கூட்டத்தில் கியூப பிரதினிதிக் குழுவுக்கு தலைமையெற்றுச் சென்றார். அங்கு அவர் சிறிதும் பயமின்றி ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளையும் அதனைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாத ஐக்கிய சபையின் கையாலாகாத தனத்தை கிழிகிழியேன கிழித்தார். உலகத் தலைவர்கள் இந்த இளைஞனின் துணிவைக் கண்டு வாயடத்துப் போயினர். ஆனால் கூடவே அமெரிக்காவின் வெறுப்பையும் சே சம்பாதித்துக் கொண்டார். சி.ஐ.ஏ.வின் கழுகுப் பார்வை இவரை வட்டமிட ஆரம்பித்தது.

1965ன் துவக்கத்தில் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள காங்கோ தேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு மக்களின் அடிமைத்தனமான அவல நிலை கண்டு உள்ளம் குமுறிப் போனார். அவர்களை ஒருங்கிணைத்து பயிற்றுவித்தால் அங்கு ஒரு கொரில்லப் புரட்சி சாத்தியம் என நம்பினார். அவரது நண்பரான எகிப்த்தின் அதிபர் கமால் நாசரோ, அந்த யோசனை சே நினைப்பதைப் போல நடந்திடும் நடைமுறை சாத்தியங்கள் குறைவு எனவும், வெற்றி வாய்ப்பு அற்றது எனவும் எச்சரித்தார். ஆனால் தனது கனவு நனவாகும் என முழுமையாக நம்பினார் சே. தனது முடிவில் பின்வாங்கவில்லை சே. ஒரு போராளியின் வரலாற்றின் பக்கங்களில் தோல்வியின் சரித்திரம் முதன் முதலாக எழுதப்படவிருப்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

2 comments:

jesheela said...

Thotarnthu elutha vazhathukal varunan.

வருணன் said...

நன்றி ஷீலா. :)

Post a Comment