சே IV- கியூப புரட்சி-I

Tuesday, May 3, 2011



கியூப புரட்சியானது பிடலின் தலைமையில் ஜூலை 26 இயக்கத்தின், அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ”படிஸ்டா”வை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதப் போரட்டம். படிஸ்டா கிட்டத்தட்ட அமெரிக்காவின் கைப்பாவை. அவரது தலைமையில் ஒரு பொம்மை அரசின் பின்னால் இருந்து ஆட்டுவித்தது என்னவோ அமெரிக்கா தான். பிடலின் படையினருக்கு இது சீக்கிரம் கிடைத்த வெற்றியல்ல. சொல்லப் போனால் புரட்சி, மான்கடா ராணுவக் குடியிருப்பைத் தாக்கிய தருணத்திலிருந்தே, துவங்கி விட்டது. அத்தாக்குதல் நடந்த அன்றே சிலர் பிடிபட்டனர். அவர்களுள் ஒருவரான தளபதி ஏபல் சான்டாமரியா, துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் பிடலும் அவரது தம்பியும் பிடிபட்டனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பிடல் தங்கள் தரப்பின் சார்பாக நான்கு மணி நேரம் வாதாடினார். எதற்கும் பலனில்லை. பிடலுக்கு 15 ஆண்டு சிறையும், தம்பி ரால்ப்-க்கு 13 வருட சிறை தண்டனையும் கிடத்தது. ஒரு எழுச்சியுடன் துவங்கிய ஒரு புரட்சி அப்படியே நீர்த்துப் போனது போல ஆனது. கனவுக் கோட்டைகள் தகர்ந்த கணங்கள் அவை. (அப்பொதெல்லாம் சே பிடலை சந்தித்திருக்கவில்லை).

ஆனால் நல்ல வேளையாக அரசியல் நிர்பந்தம் காரணமாக 1955ல் படிஸ்டா அரசியல் கைதிகளை விடுவித்தார். வெளிவந்த உடனே காஸ்ட்ரோ சகோதரர்கள், படிஸ்டாவிற்கு எதிரான புரட்சியின் அடுத்த கட்ட ஆயத்ததிற்காக மெக்ஸிகோ சென்றனர். அங்கே ஸ்பானிய புரட்சியில் பங்கு பெற்ற அல்பெர்டோ பெயோ [Alberto Bayo]வின் கீழ் பயிற்சி பெற்றனர். இந்த சூழலில் தான் சே பிடலை சந்தித்தார்.





பயிற்சிக்குப் பிறகு அடுத்த தாக்குதலுக்கு தயாரானது புரட்சிப் படை. வெறும் 82 வீரர்களுடன் டிசம்பர் 2, 1956ல் “கிரான்மா” என்ற படகில் கியூபத் தீவை நோக்கி புறப்பட்டனர். ஒரு தேசத்தின் மொத்த ராணுவத்தை எதிர்கொள்ள இவ்வளவு சொற்ப எண்ணிக்கையிலான வீரர்களுடன், எந்த தைரியத்தில் அவர்கள் கிளம்பினார்கள் என்பது அதிசயம் தான். பெயருக்கு ஏற்றார் போல படகு மிகவும் வயதாகி ஒழுகிக் கொண்டிருந்தது. கிரான்மா கிளம்பியது.

படகு, திட்டப்படி சேர வேண்டிய காலத்திற்கு 2 நாட்கள் பிந்தியே சேர முடிந்தது. அதனால் அங்கு இருந்த மற்றொரு குழுவுடன் இவர்களால் இணைய முடியவில்லை. கிரான்மா கரை சேர, வந்தவர்கள் யாவரும், சியரா மாஸ்ட்ரா மலைப் பகுதிக்குள் புகுந்தனர். ஆனால் படிஸ்டாவின் படையோ இவர்களை துவம்சம் செய்தது. சிதறி ஓடியவர்களுள், வெறும் 22 பேர் மட்டுமே திரும்பவும் சந்தித்தனர். இருந்ததே குறைவான வீரர்கள். அவர்கள் மேலும் தற்போது குறைந்து விட்டனர். இக்கட்டான காலம். இதற்கிடயே மாணவ படையினர் வேறு ஜோஸ் ஆண்டோனியோ எனும் மாணவர் தலைமையில் நடந்திய முற்றுக்கை முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

நல்ல வேளையாக, அமெரிக்க அண்ணாச்சி தனது உதவிகளை கொஞ்சம் படிஸ்டாவின் அரசுக்கு குறைத்துக் கொண்டார். மேலும் கியூப தேசத்தின் மீது சில வாணிபத் தடைகளை அறிவித்தது. இது படிஸ்டாவிற்கு பெருத்த பின்னடைவானது. உள்ளூரில் இருந்த கம்யூனிஸ்டுகளும் தங்களது நீண்ட கால ஆதரவை 1958ன் மத்தியில் விலக்கிக் கொள்ள அவர் நிலை இன்னும் மோசமானது.




பிடல் முதலில் தாங்கள் இருந்த மலை பிரதேசம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் முதலில் கொண்டு வந்தனர். இதற்கு அவர் தம்பி ரால்பும், சேவும் பக்க பலமாக இருந்தனர். இக்கால கட்டத்தில் தான் சேவின் திட்டமிடும் திறனையும், சமயோசிதத்தையும், யுத்த அறிவையும் பிடல் புரிந்து கொண்டார். சே மெல்ல மெல்ல பிடலின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவரானார். இக்காலத்தில் பிடலின் எதிர்ப்பாளர்கள், படிஸ்டாவின் ஆதரவாளர்கள் பலரை கொல்ல வேண்டியதாயிற்று. ராணுவத்தை எதிர்க்க அவர்கள் தேர்ந்தெடுத்தது கொரில்லப் போர் முறை. அது கை மேல் பலனளித்தது. சேவிற்கு இதனை பற்றிய நுணுக்கங்கள் அத்துப்படி. அவரே முன்னின்று தனது சகாக்களுக்கு பயிற்சி அளித்தார்.

புரட்சியாளர்கள் தங்களுக்கென ஒரு வானோலி அலைவரிசையை நடத்தி, அரசுக்கு இன்னும் நெருக்கடியை கொடுத்தனர். அப்பொது அவர்களது படையில் ஏறக்குறைய 200 பேர் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய படையினரோ 30,000-40,000 என அளவில் பிரம்மாண்டமானது. ஆயினும் புரட்சிப் படையை எதிர் கொண்ட ஒவ்வொரு தருணத்திலும், படிஸ்டாவின் படையினர் பின் வாங்க வேண்டியதாயிற்று. எண்ணிக்கையில் மிகுந்திருந்தாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சியற்றவர்களாகவே இருந்தனர். புரட்சிப் படையொ கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் இல்லை.

வாணிபத் தடை படிஸ்டா அரசுக்கு பெரும் இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றது. போர் விமானங்கள் பழுதடைந்தன. அவற்றை சரி செய்ய உதிரி பாகங்கள் அமெரிக்காவிடம் இருந்துதான் பெறப்பட வேண்டும். நாட்கள் நகர நகர கியூப வான் படை வலுவிழந்தது. அதனால் மலைப் பிரதேசத்தில் இருந்த புரட்சிப் படையை எதிர்க்க முடியாமல் திணறிப் போனார் படிஸ்டா.



படங்கள் : 01. படிஸ்டா
02. அல்பர்டோ பேயோ
03. புரட்சியாளர்களுடன் பிடல்

2 comments:

Prabu Krishna said...

தெரியாத தகவல் இது. தொடருங்கள்.

வருணன் said...

நன்றி பிரபு. தெரியாத தகவலாக இருப்பின் சொல்ல முடிந்தது குறித்து மகிழ்ச்சியே... :)

Post a Comment