சே VII – காங்கோ தோல்விக்குப் பின்

Wednesday, May 18, 2011




எதிர்பார்த்தது போல வாழ்க்கையில் எல்லாமே நடப்பதில்லை. காங்கோவில் புரட்சி சே எதிர்பார்பிற்கு எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் மன அழுத்தத்தாலும், கவலையாலும் நொந்து போயிருந்த சேவின் மீது ஆஸ்மா அரக்கன் தனது பிடியை மேலும் இறுக்கினான். நவம்பர் 20,1965ல் சே தனது சொற்ப எண்ணிக்கையிலான வீரர்களுடன் காங்கோவை விட்டு வெளியேறினார். தோல்வியோடு கியூபா திரும்ப சேவுக்கு மனமே இல்லை. ஆயினும் அவர் மீண்டும் திரும்ப பெருமுயற்சி எடுத்தது பிடலே. சே “ ஒரு தேசத்தை அதன் விருப்பமில்லாமல் நாம் என்றுமே புரட்சியின் மூலமாக விடுதலை அடையச் செய்ய முடியாது”, என மிக வருத்தத்துடன் கூறினார். ஒரு கட்டத்தில் மற்ற வீரர்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் தனியாக சாகும் வரை போரிடவும் துணிந்தார். அதுவே ஒரு புரட்சியாளனுக்கு அழகு என அவர் கருதினார். அதற்கு காரணமிருந்தது. காங்கோவிற்கு கிளம்பும் முன்னர் சே தான் வெல்லாமல் திரும்பப் போவது இல்லையென பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தார். வீராப்பாக சொல்லி விட்டு தற்போது முகத்தில் தோல்வியின் சாயம் பூசியபடி மக்கள் முன்னே செல்ல அவரது தன்மானம் இடம் தரவில்லை.

இதனாலேயே சே ஒரு ஆறு மாதங்கள் ப்ரேக் நாட்டிலேயே தங்கி விட்டார். இந்த கால கட்டத்தில் அவர் மேலும் இரு புத்தகங்களை எழுதினார். மேலும் கியூப உளவுத் துறை தயாரித்தளித்த போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, முதலில் சோத்னை முயற்சியாக ஐரோப்பிய தேசங்களுக்கும், பின்னர் தென் அமெரிக்க தேசங்களுக்கும் பயணப்படலானார். அப்போது ஒரு முறை அவர் பிடலையும் தனது குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக கியூபா வந்தார். அப்போது தனது ஐந்து குழந்தைகளுக்கு- தனது மரணத்தின் போது வாசிக்கப்பட- ஒரு இறுதிக் கடிதத்தை எழுதியிருந்தார். அக்கடிதம் இவ்வார்த்தைகளோடு முடிந்திருந்தது.

“... எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் எந்த மூலையில் மக்களுக்கெதிராக அநீதி நடந்தாலும் அது குறித்து அக்கறை கொள்பவர்களாக இருங்கள். அதுவே ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய ஒரு மிக அழகான குணாதிசயம்.”


1966ல் சே பொலிவியா சென்றதாகவும் அங்கு அவர் மொசாம்பிகியூ விடுதலை இயக்கத்துடன் இணைந்து புரட்சிக்குத் தயாராவதாகவும் தகவல்கள் கசிந்தன. இத்தகவல்கள் மறுக்கப்படன. கடைசியில் 1967ல் தொழிலாளர் தினத்தன்று, ஹவானாவில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய ராணுவ அமைச்சர், தளபதி அல்மேடா, சே லத்தீன் அமேரிக்க கண்டத்தில் எங்கோ ஒரு இடத்தில் புரட்சியில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.




பொலிவியாவுக்கு சே, தாடியில்லாமல், அடால்போ கொண்ஸாலஸ் எனும் நபராக சென்றார். தன்னை உருகுவே நாட்டைச் சேர்ந்த வியாபாரியாக கூறிக்கொண்டார். அவர் அங்கு சுமார் 50 பேர் கொண்ட கொரில்லப் படையோடு சேர்ந்து போராடத் துவங்கினார். முதலில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னர் அவர்கள் பொலிவிய ராணுவத்தை எதிர் கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தனர். காங்கோவின் தோல்வி இப்பொது மீண்டும் வராது என சே உறுதியாக நம்பினார். இவர்களுக்குச் சாதகமாக சென்று கொண்டிருந்த புரட்சி திடீரேன திசை மாறியது.




நேரடியாக மோதுகின்ற ஒரு எதிரியை எதிர்கொள்வது ஒரு வீரனுக்கு எளிது. ஆனால் மறைமுகமாக தாக்கும் கோழைத்தனமான எதிரியை என்ன செய்வது? அதிக பயிற்சி இல்லாத பொலிவிய ராணுவத்தை எதிர்ப்பது ஒரு சிரமமே இல்லை என சே நினைத்தார். ஆனால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. --வின் ஒரு குழு சேவின் கதையை முடிக்க கிளம்பி இருப்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. அவர்கள் பொலிவிய ராணுவத்திற்கு பயிற்சி அளித்ததோடு மட்டுமல்லாமல், ஆயுத உதவிவும் செய்தனர். மேலும் சே எதிர்பார்த்தது போல அவருக்கு உள்நாட்டில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக பொலிவிய கம்யூனிசக் கட்சியிடமிருந்து. மேலும் ஒரு சோதனையாக, ஹவானாவோடு தொடர்பிலிருக்க, பிடல் அளித்திருந்த இரண்டு தனி அலைவரிசை ரேடியோ தொடர்பு சாதனங்களும் பழுதடைந்தன. பொலிவியக் காட்டிற்குள் சே தனிமைப் படுத்தப்பட்டார்.


படங்கள்:01. காங்கோவில் சே
02. மாறுவேடத்தில் சே
03. பொலிவியாவில் சே

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

. எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் எந்த மூலையில் மக்களுக்கெதிராக அநீதி நடந்தாலும் அது குறித்து அக்கறை கொள்பவர்களாக இருங்கள். அதுவே ஒரு புரட்சியாளனுக்கு இருக்க வேண்டிய ஒரு மிக அழகான குணாதிசயம்.”//
nice...

வருணன் said...

தனது குழந்தைகளுக்கு எழுதிய இறுதி கடிதத்தில் கூட இப்படி ஒரு சிந்தனையை அவர்கள் மனதில் விதைக்க நினைத்திடும் வைர மனம் எல்லோருக்கும் அமைவதில்லை...

நன்றி இராஜேஸ்வரி.

Post a Comment