சே V- கியூப புரட்சி-II

Sunday, May 8, 2011

வலுவிழந்த நிலையிலும் படிஸ்டா தைரியமாக இருந்ததற்கு ஒரு காரணம் அவரிடம் அதிக எண்ணிக்கையில் இருந்த படை வீரர்கள் தான். “ஆபரேஷன் வெரானோ” என்ற பெயரில் 12,000 வீரர்கள் சியரா மாஸ்டரா மலைப் பகுதியை சுற்றி வளைத்தனர். வெறும் சில நூறு வீரர்களை மட்டும் வைத்து அவர்களை எதிர் கொள்ள வேண்டிய நிர்பந்தம் பிடலுக்கு. ஆனால் வெறும் என்ணிக்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? ஆம். படிஸ்டாவின் படையினருள் பாதிப் பேர் போதிய பயிற்சியோ, போர் வீரருக்கான மனவலிமையோ இல்லாதவர்களாக இருந்தனர். நமது பாஷையில் சொல்வதானால் உப்புக்கு சப்பானி.

ஏற்கனவே முறையான பயிற்சியோடு இருந்த புரட்சிப் படையினர் இவர்களை ஒரு கை பார்த்து விட்டனர். 11ஜூலை 1958ல் துவங்கிய இப்போர் ( லா பிளாட்டா என அது அழைக்கப்பட்டது.) ஆரம்பம் முதலே புரட்சிப் படையினரின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் போர்களில் தான் எதிர்பாராத திருப்பங்கள் சகஜம் ஆயிற்றே. போர் துவங்கி 19 நாட்களுக்குள் வெற்றிக் காற்று அரசுப் படையின் திசையில் வீசத் துவங்கியது. இறுதியில் பிடலின் சிறிய படை சிதறடிக்கப்பட்டது. வழியின்றி பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டது பிடலின் படை. சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் முடிவாகவில்லை அதில். (எந்தப் பேச்சு வார்த்தையில் தான் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது?!)
ஒன்றும் உதவாது எனத் தெரிந்ததும் படைவீரர்கள் மெதுவாக மீண்டும் மலைப் பகுதிக்கே திரும்பினர். மறுபடியும் பதுங்கல் வாழ்க்கை...

இரு மாத திட்டமிடலுக்குப் பிறகு மீண்டும் 21 ஆகஸ்டு 1958ல் வீரர்கள் நேரிடையாக நாட்டிற்குள்ளேயே களமிறங்கினர். ஆனால் கடந்த முறை அடைந்த தோல்விலிருந்து பாடம் கற்றிருந்தனர். அதனால் கொரில்லப் போர்த் தந்திரங்களை பயன்படுத்தினர். அது பிரிந்து தாக்குதல். நான்கு அணிகளாக பிரிந்து முன்னேறினர். அடுத்தடுத்த வெற்றி அவர்களுக்கு உற்சாகமளிக்க உத்வேகத்துடன் முன்னேறினர்.

சே இந்த கபளீகரம் நடந்த போது என்னப்பா செய்து கொண்டிருந்தார் என நீங்கள் கேட்பது புரிகிறது. சியரா மாஸ்டரா மலை பகுதியில் வாழ்ந்த மலைவாசிகளுக்கு ஒன்றுமே இல்லாததை கண்டார். அவர்களுக்கு பள்ளிகள், மின்சாரம், மருத்துவமனை என எதுவுமில்லை. அவற்றை நிர்மாணிக்க வேண்டிய அவசியத்தை பிடலுக்குப் புரிய வைத்தார். மேலும் ஆயுதக்கள் தயாரிப்பதற்குத் தேவையான சிறிய தொழிற்சாலைகளை கட்டியதோடு படையினருக்குப் கொரில்லப் போர் நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார். படையின் நான்கு அணியும் வெற்றியோடு முன்னெறிக் கொண்டிருந்த அதே வேளையில், சே தலைமையில் 3 அணி வரிசை [coloumns] சாண்டா கிளாரா நகரை நோக்கி முன்னெறியது. வழியில் மற்றுமொரு புரட்சிப் படையினரோடு முதலில் முட்டிக் கொண்ட போதும், பிறகு ஒன்றிணைந்து பொது எதிரியான படிஸ்டாவை எதிர்த்தனர்.
31 டிசம்பர் 1958ல் நடந்த சாண்டா கிளாரா போர் [Battle of Santa Clara] மிகவும் முக்கியமானது. கூட்டுப் படையின் அதிரடித் தாக்குதலால் நிலைகுலைந்த படிஸ்டா கூடாரத்தை காலி செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டமெடுத்தார். கியூபாவிற்கு புதிய வருடமும் ஒரு புதிய வாழ்க்கையும் சேர்ந்தே பிறந்தது.

சேவுடனான கூட்டுப் படையிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் படிஸ்டா ஓடியது குறித்து கேள்விப்பட்ட மாத்திரத்தில் பிடலின் வேலை மிக எளிதானது. ஆயன் இல்லாத ஆடுகளாக முழித்தபடி திண்டாடிக் கொண்டிருந்தது அரசுப் படை. ஆங்காங்கே இருந்த படையினரை வழி நடத்திய தளபதிகளிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினார் பிடல். அவருக்கு வழி விடுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை பாவம். வருடத்தின் 2ஆம் நாளே சுமூகமாக அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறின. அவர்கள் அனைவரும் கியூபத் தலைநகரை நோக்கிப் புறப்பட்டனர். இத்தருணத்தில் சேவும் சரியாக அங்கு வந்து ஹவானாவில் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.
படங்கள்: 01. சாண்டா கிளாரா போருக்குப் பின் சே

02. ஹவானா நகரில் வெற்றிக்குப் பின்

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

வருணன் said...

நன்றி ராஜேஸ்வரி. தங்களின் தொடர் வருகையும், வாசிப்பும் உற்சாகம் அளிக்கிறது...

வருணன் said...

நன்றி இராஜேஸ்வரி... தாமதமாக தங்கள் பின்னூட்டத்திற்கு எதிர் வினையாற்றியதற்கு மன்னிக்கவும்.

Post a Comment