பிரிவு- III
Sunday, January 30, 2011
Posted by வருணன் at 1:27 PMதேவதை கதைகளில் மட்டுமே
இப்போதெல்லாம் உன்னை
கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.
நிர்பந்திக்கும் பணி நிமித்தமாய்
பல மைல்களுக்கப்பால்
நீயும் நானும்.
நமக்கு ஒரு சேர வாய்த்திருக்கும்
பிடிவாதத்தினாலும், அசாத்திய
பொறுமையினாலும் நம்மிடையெ
உள்ள தொலைவினை
அளந்தபடி நாம்.
நம்மிடையேயானை இருப்பை
சொல்லும் போது மட்டும் பிரிவென்னும்
வார்த்தை வாக்கியமாய் வளர்கிறது.
நாள்தோறும் விசித்திர விளையாட்டுகளை
காட்டியபடி தானிருக்கிறது
நம்மிடையேயுள்ள தூரம்.
தொலைவாய் செல்லச் செல்ல
என்னுள்ளே ஊடுருவிக் கலக்கும்
முரண் புதிராய்...
என் தீவின் கரைதனில் கன்னங்களில்
கைகள் பதித்தபடி நான்...
ஏதோ ஒரு நாள் வரக்கூடிய உன்
தோனியின் வரவை எதிர்நோக்கியபடி.
பிரிவு- II
Friday, January 28, 2011
Posted by வருணன் at 6:53 AMதுவக்கத்தில்
புடைசூழதான் இருந்தேன்.
காலஞ் செல்லச் செல்ல
ஒவ்வொருவராய் இடம் பெயர
என்னைச் சுற்றி வெற்றிடங்கள்.
யார் கொண்டும் நிரப்பிட மனமில்லை
அவ்விடங்களை
வெறுமைகளை காணச் சகியாது
புலம் பெயர்ந்தவர்க்கும் எனக்குமிருந்த
உறவுகள் குறித்த சிறுகுறிப்புகள்
வெற்றிட நிரப்பிகளாய்...
என்றாவதொரு நாள்
எனதுடலும் என்னைப் பிரியுமே!
அப்போததன் வெறுமை நிறைக்க
யார் குறிப்பெழுதுவார்?
தேவபாஷை
Monday, January 24, 2011
Posted by வருணன் at 10:09 PMகுதூகலித்து குரலெழுப்பி
துள்ளி வந்தது மழலையொன்று
கோவிலுக்குள்
முழந்தால் படியிட்டு
உருகியுருகி
வணங்கிக் கொண்டிருந்த
கிழவர் ஒருவரும்
முக்காடிட்டு அமர்ந்திருந்த
குடும்பத் தலைவியும்
ஒரு சேர அதட்டினர்
உஷ்... என்று.
அவர்களுடன் அதுவரை மழலையில்
உரையாடிய கடவுள்
பேச்சை நிறுத்தினார்.
அவருக்கு தெரிந்திருந்தது
மாந்தர் ஒரு போதும்
தன் குரலை இனங்கண்டு
செவிசாய்க்க மாட்டாரென...
சிலையாய் தொங்கி
சிலுவையில் அமைதியானார்
கடவுள்.
உறைந்த கணங்கள்
Monday, January 10, 2011
Posted by வருணன் at 7:09 PMகருப்பு வெள்ளைகளில்
உறைந்து கிடக்கும் மரித்த
கணங்கள் பார்ப்பாரின்றி
உறங்குகின்றன அலமாரிகளிலும்
தூசுகளுண்ணும் பரண்களிலும்.
கணிணிகளின் முகத்தில்
உறைந்த நினைவுகளைச்
சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன
வண்ணம் துறந்த அந்நினைவுகள்.
பாட பாரங்கள் அழுத்தாத
விடுமுறை காலங்களில்
குழந்தைகள் விடாது நச்சரிக்கின்றன
விளையாட்டு காட்டும் அக்காள்களிடமும்
கதை சொல்லும் பாட்டிகளிடமும்
அப்பழைய கணங்களை காட்டுமாறு
காலாவதியானதாய் தம்மைக் கருதிய
அவை மீண்டும் உயிர்க்கின்றன
அம்மழலைகளின் பார்வைகளுரசும்,
தளிர்கரங்கள் வருடி சிலாகித்திடும்
ஒவ்வொரு முறையும்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (09.01.11) இணைய தளத்திற்கு நன்றி.
பிரத்தியேக சிப்பிகள்
Wednesday, January 5, 2011
Posted by வருணன் at 10:07 PMநம்முடைய இதயங்கள் விளக்குகள்
அன்பென்னும் தீ எரிகின்றதவற்றில்
எரியுமச் சோதி நம்மிதயங்களை
ஓர் இதயமாய், ஓர் ஆன்மாவாய் மாற்றுகிறது.
பொங்கும் நேசத்தை எப்படி
பரிமாறிக் கொள்வதெனப் புரியாது
எதையாவது பேசியபடியே நாம்.
விடைபெறும் தருணம் வரும்
ஒவ்வொரு நாளும் என்னுதட்டில்
இருக்கும் புன்னகையை உன்னிதழில்
ஒட்டி வர முனைகிறேன்.
நீயோ ஒற்றை பார்வையில்
உன் கண்களில் தேக்கிய
பிரிவின் கணத்தை என் விழிகளுக்குள்
இடம்பெயரச் செய்து விடுகிறாய்!
உனக்காய் நான் தயாரிக்கும்
வார்த்தைகள் அன்பின் கரையில்
தன் தோழிக்காய் சிறுவனொருவன்
சேகரிக்கும் சிப்பிகளைப் போன்றவை.
பிரத்தியேகமானவை...
அவற்றின் ஆழம்
நமக்கு மட்டுமே புரியும்.
ஓயாத காற்று
Tuesday, January 4, 2011
Posted by வருணன் at 7:44 AMநெடி நிரந்தரமாய் தங்கிவிட்டது காற்றில்
படைகள் வெல்ல ஆயுதம் தேவை
படைக்கலன்களோ பழுது நிலையில்
நம்பிக்கை முனை மழுக்கிய
மனித வாட்கள்
காத்துக் கிடக்கின்றன- துரிதமாய்,
லாவகமாய் இயக்கும் கைகளுக்காய்
எதிரியின் கைகளில் யந்திரத் துப்பாக்கி
பெரும் குடிகார சிறு ரவைகள்
தனியாத் தாகத்துடன் பருகுகின்றன
வெதுவெதுப்பான இளரத்தத்தை
பால்கட்டிய தாய்மாரின் தனங்கள்
இறந்த குழந்தைகளுக்காய் கனக்கின்றன
உயிர் செய்யும் சூட்சுமங்கள்
தடம் மாறி சமாதியாக்குகின்றது
உயிருடன்
வடிவான மகளிரை
கொன்றவனின் குறியறுக்கச்
சபதமேற்றுப் புறப்படும்
யுவனின் வெஞ்சினத்தில் உருவெடுத்த
பெருந்தனலில் உருகிக் கிடக்கும்
மலட்டுக் காட்டில்
அவநம்பிக்கையின் சாம்பல் மேட்டினின்று
துளிர்க்கிறது நம்பிக்கையின் தளிரொன்று.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(02.01.11) இணைய தளத்திற்கு நன்றி.
Subscribe to:
Posts (Atom)