கனவையுண்ணும் நதி

Tuesday, February 19, 2013
முன்னரே தோற்றவனும்
பின்னர் தோற்கவிருப்பவனும்
சந்தித்துக் கொண்டனர்
நதியிடை பாய்ந்த
பாலத்தின் நடை பாதையில்.

முன்னவன் மௌனித்திருக்க
பின்னவன் பேசிக் கொண்டேயிருந்தான்
தொகுப்பாளினி யுவதி போல்

கடிதங்கள் நிழற்படங்கள்
வாழ்த்து அட்டைகளில்
முத்தமிட்ட இதழ்களின் முத்திரைகள்
பிறக்கப் போவதாய் கனாக் கண்டிருக்கும்
மழலைக்கான கிங்கிணியென
யாவற்றையும் காட்டினான்

தன்னிலை மாறா முன்னவனோ
கழிந்த காலத்தில் இதைப் போலவே
தானுளரிய கதைகளை
விசிறியெறிந்த நதியை பார்த்தான்
இதழிலரும்பிய புன்னகையோடு

தோற்றவனிடம் தோற்பவன் காட்டிய
யாவும் போலொன்றை
முன்னொரு நாளில் விழுங்கிய நதியோ
தீரா பசியுடன் அசைவாடியது.


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை(18-02-13)
மின்னிதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment