சிந்தையால் கேள்

Friday, February 1, 2013






ஓலமிடும் தரணியின்
துயர் துடைக்க
சிறியன் நான் என் செய்வேனென
திகைக்கிறாயா நண்பா?

ஒன்றுமில்லை
குருவியின் தலையில்
பனங்காய் சுமக்கத்
தேவையில்லை.

இயன்றதைச் செய்தாலே
இவ்வுலகம் பிழைத்திடும்.

கசக்கி எறிந்து வீணடிக்கும்
ஒவ்வொரு காகிததிலும்
ஒரு மரக் கிளையின்
கண்ணீர் துளியின்
பிசுபிசுப்பு உணர்.

விசிறியடிக்கும்
ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
பூமித் தாயின் மூச்சுக் குழாய்
அடைக்கிறது.
புரி!

நிறைய கனவு காண்
கள்ளமில்லா காற்று
மாசில்லா நீர்நிலை
கருஞ்சாலை நதியின்
கரையெங்கும்
நிழல் காய்க்கும் மரங்கள்…

கனவோடு நில்லாதே
காரியம் கெடும்.
முயற்சி வடம் பிடித்து
கனவுத் தேர் இழு !

விதைகளைப் பதியனிடு
எதிர்காலம் விருட்சமாகும்.

உன் சந்ததியின்
உயிர் துடிப்பை
தளிர்களின் சலசலப்பில்
கேள் !

தோழா !
போகிக்குக் கொளுத்திட
குப்பைகள்
மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
மனவீட்டின் கொல்லையில்…

பின் எதற்கு தெருக்களில்?
சிந்திப்பாய் …!


குறிப்பு: இக்கவிதையை வெளியிட்ட வல்லமை (01-02-13)
மின்னிதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment