ஆடைகளுக்கிடையினின்று வரும் அழைப்புகள்

Friday, June 15, 2012

உனைக் காணும் ஆவலில்
யாசித்த வார்த்தைகளின்
ஆவலைப் பூர்த்தி செய்ய
ஒரு சிறுமழை யிரவில்
மென்சாரல் பெய்யும் யன்னல்களுக்கு
மத்தியிலிருந்த அறைதனில் அமர்ந்தவைகளை
சேகரிக்கத் துவங்கினேன்.

மழையிரவின் பெருங்குளிரில்
விரைந்து நிறைந்தன
பெருங்கூட்டமாய் வார்த்தைகள்
காகிதப் பரப்பெங்கும்
நெருங்கியமர்ந்து குளிர்காய்ந்தபடி

வெள்ளைக் குளத்தில்
நீலக்கொக்குகளாய் தவமிருக்கின்றன
அவ்வார்த்தைகள் கால்களுமின்றி

எழுதியவற்றை அழைத்து வந்து
அறிமுகம் செய்விக்க வலுவின்றி
ஒளித்து வைத்திருக்கிறேன்
ஆடைகளுக்கிடையே அலமாரியில்

அன்றாடம் உடை மாற்ற கடை திறக்கையில்
அக்காகிதச் சமவெளியினின்று
பெருங்குரலெடுத்துக் கத்துகின்றன
அவ்வார்த்தைகள் முக்திக்காய்.


இக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு( 15-06-12) நன்றி.
http://www.vallamai.com/literature/poems/21976/

பெரு மழை

Saturday, June 9, 2012

போர்முரசாய் எக்காளமிட்டு
இடி இடிக்குமென் மெல்லிதயத்தில்

நாசிகள் புடைக்க அதரம் துடிக்க
வெளிவரும் சூறைக்காற்று

வான் விழிகளின் ஓரங்களில் துளிர்க்கும்
பெருமழையின் துவக்கமாய் சிறு தூரல்
கணங்கள் கரைய வெடித்துச் சிதறும்

அருவியினூடே தீற்றலடிக்கும்
சிவப்பு மின்னல்கள் கிளைகள் பிரிந்து

அடைமழையொன்று என்
கன்ன நிலங்களையும் மீசை வயல்களையும்
தாண்டி கழுத்துப் பள்ளத்தாக்கில்
கரணம் அடிக்கும்...

மழை ஓய நேரமாகலாம்.


இக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு ( 06-06-12)
மனமார்ந்த நன்றி.  
பட உதவி : 
புகைப்படத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgre0Ube9jj1ZP-RBPTas__XB5sj0FPJK5ZPAd4lOUEfu5czwlP7Ae0CinxNaRGbrO2Pzdgla4VROjXJHCspgmgfmHFZ7_J-MjZMe231mObyk8y7QL2lF8v5KlIsVelf8veVECt9OVisOQ/s1600/tears4.jpg




ஆலிவ் இலைகள்

Wednesday, June 6, 2012







ஒற்றை மஞ்ச கிரகத்தின்
ஒரே மானுட இணையாய்
சூரிய நட்சத்திரங்களோடு
ஆதிக் குடிபோல் மறைப்பின்றிக்
கிடக்கிறோம் ரகசியங்களற்று
அன்றலர்ந்த மலர் போன்ற
நின் வளைகரங்களின்
தீண்டல்களில்
பற்றிக் கொள்கிறது
கற்பூரக் காமம்
தேகமெங்கும்
என் விரல் புரவிகளின்
ஓட்டத்தால் செம்புழுதியப்பிய நிலமாய்
செந்நிறம் விரவும்
உன் வெண்தோல் போர்த்திய
சோலையெங்கும்
தோள் தாங்குமுன் பரிதிகளின்
இடை சுரக்கும் நீர்ச்சுனையில்
நீந்திடப் பேராவலுடன்
வீழுமென் நா அரவம்.
ஊன் மேகத்தில்
உயிர் பிரவாகிக்கும்
வெண் மழையோ கீழிருந்து
மேலெழும்பும்
முக்தி யாசிக்கும்
ஆன்மச் சுடர் போல
துடிக்கும் நம் உடல்களோ
வேர்களற்ற ஓர் ஆலிவ் கிளையின்
இரண்டே இலைகளாய்
எதிரெதிரே வளைந்தபடி.

இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை மின்னிதழுக்கு (04-06-12) நன்றி.

நினைவு நாசினி

Sunday, June 3, 2012







பிரிவின் கடைசி தருணத்தில்
மென்கரம் பற்றி அனிச்சையாய்
உளறின உதடுகள்
காலத்தை விட சிறந்த
நினைவு நாசினி யில்லை கண்மனி!
காலம் கரையும்...
நினைவுகள் நிலைக்கட்டும்
பழைய புத்தகத்தினுள் வைத்த
மயிலிறகைப் போல; நம்
மன அலமாரிகளை
பஞ்சு பொதித்த பொம்மையாய்
அலங்கரிக்கட்டும்
நேசமூறிய அக்காலங்கள்.