எழுத்தோவியம்
Friday, December 31, 2010
Posted by வருணன் at 1:57 PMஉன்னருகே அமர்ந்துன்னை
வார்த்தைகளால்
வரைந்து கொண்டிருக்கிறேன்.
ஏனிப்படி பார்க்கின்றாயென
நீ எழுப்பா கேள்விக்கும்
பதில் தயார் நிலையில்
என் வசம்.
புருவமுயர்த்தி கண்கள் இடுக்கி
உதடு சுழித்து
யோசிக்கும் நாழிகையில்
உன் நாடிகளில் தாளமிடுமந்த
மென்விரல்களின் லயமும்
அனிச்சையாய் அவ்வப்போது
முன் வழிகிற சிகை திருத்தும்
லாவகமும்
பரிகசித்து பொய் கோபம் காட்டி
கழுத்துக் காம்பொடித்து
முகமலர் தாழ்த்தி
போவென சொல்லுமந்த நளினங்களும்
வசப்படுகின்றன வார்த்தைகளுக்குள்
கொஞ்சமேனும்.
இவையெல்லாம் அழகுதான்
Wednesday, December 29, 2010
Posted by வருணன் at 12:04 PMகுழந்தைகளின் உலகங்கள்
Monday, December 20, 2010
Posted by வருணன் at 9:51 PMகுழந்தைகளின்
உலகங்கள் விசித்திரமானவை
அவர்கள் சொல்லும் கதைகளைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் வித்தியாசமானவை
நடவடிக்கைகள் வேண்டாத
அவர்களின் புகார்களைப் போலவே
குழந்தைகளின்
உலகங்கள் ஆச்சரியமானவை
காரணமற்ற பேரழுகைக்குப் பிந்தைய
அவர்களின் - கணப்பொழுதில் மலரும்-
ஆழ் அமைதியையும் அதைத் தொடரும்
குறும்புன்னகையைப் போலவே
குழந்தைகளின் உலகங்களை
நமக்கென்று ஒன்றாய் வைத்துக்கொள்ள
நகலெடுத்திட முடிவதேயில்லை
ஒருபோதும்
பிரதியெடுக்கவியலா
அவர்களது பரிசுத்தங்களைப் போலவே.
இக்கவிதையை வெளியிட்ட உயிரோசை(20.12.10) இணைய தளத்திற்கு நன்றி.
கேள்விகளால் வாழும் மரணம்
Monday, December 13, 2010
Posted by வருணன் at 10:15 PMவாசல் இல்லாத வீடு
இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை
அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும்
படரும் இருட்டில் பதுங்கும் குரோதம்
ஷெல்லடித்தல் செத்துப் போனதாம்
துப்பாக்கி ரவைகள் நித்திரை கொள்ளுதாம்
நம்பித் தொலைப்போம்
வழியேது?
இனியாகிலும் காக்கட்டும் சாக்கிய முனி
மாக்களிடமிருந்து
எம் பெண்டிரின் யோனிகளை
‘பிரபா... நீ என்னை தேடியிருப்பேனு தெரியும்...’
கசிகிறது பண்பலையில் பாடல்
இன்னா செய்தாரை ஒருத்தல்...
முடிவதில்லை எல்லா தருணங்களிலும்.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (12.12.10) இணைய தளத்திற்கு நன்றி.
மடி வீழ்தல்
Thursday, December 9, 2010
Posted by வருணன் at 7:10 AMபெண்ணால் அழிந்த ராஜ்ஜியங்கள்
குறித்த சரித்திர உண்மைகள் புரிகிறது
உன் மடி வீழ்தலின் போது
மர்மம் தளும்பும் உன் அக உலகங்களின்
தாழ் திறந்து கதைக்கிறாய்
ஓசைகளில்லா விழி மொழியில்.
என் பிரம்மச்சரியப் பயணத்தின்
வேகத் தடைகளை சுமந்தவாறு
பின்புறம் கைகளூன்றி அமர்ந்திருக்கிறாய் நீ.
காது மடல்களில் வெம்மைகூட்டும் உன்
நாசிகளைத் தொடர்ந்து
ஈரமான குளிர் நாவின் தீண்டல்கள்
சிருஷ்டிக்கின்றன என் பிரபஞ்சத்தில்
எண்ணவியலா நட்சத்திரங்களை
கணப்பொழுதில்.
இயற்பியல் விதிகளை உடைத்தெறிகிறாய்
பனி முத்தங்களால் என்னை
சூடேற்றும் ஒவ்வொரு முறையும்.
கடந்தமுறை தவறவிட்ட
சொர்க்கத்திற்கு வழி காட்டும்
நகக்குறி வரைபடங்களை
மீண்டும் வரையத் துவங்குகிறாய்.
நானோ சிறகு விரித்து
தயாராகிறேன்
இன்னுமொரு பெரும் பயணத்திற்கு.
அவனறியா பொழுதில்
Monday, December 6, 2010
Posted by வருணன் at 8:18 PMஅவனுக்கும் வனாந்தரத்திற்கும்
தீராத போட்டி
ஆக்கிரமிப்பதில்
பேராசை வாளெடுத்து
மூளை கூர்தீட்டி
ஆட்கொண்டான் வனம் முழுவதையும்
ஒரு மரமும்
ஒரு கிளையும்
ஒரு இலையும் தப்பவில்லை.
ஒரு புல் கூட...
தாக்குப் பிடிக்கத் திராணியற்றுப் போனாயென
பழிப்புக் காட்டி நகைத்தான்
மீதமிருந்த வனமதிர
எதிர்க்காதது போலிருந்த வனமோ
தன் மாய இருள் நிறைத்து
அரூபமான தன் கிளைகள் பரப்பி
வேர் பிடித்து
செழிக்க ஆரம்பித்திருந்தது
அவன் அகத்தே
அவனறியா கணம் தொட்டே.
இக்கவிதையை வெளியிட்ட திண்ணை (05.12.10) இணைய தளத்திற்கு நன்றி.
நறுமணமான பாடலொன்று
Wednesday, December 1, 2010
Posted by வருணன் at 10:51 PM
Subscribe to:
Posts (Atom)